Published : 10 Nov 2016 09:35 AM
Last Updated : 10 Nov 2016 09:35 AM

தமிழகம் என்ன நினைக்கிறது?

ஆர். முத்துக்குமார்

நேற்று ஏழரை மணிக்கு மேல் “பிரதமர் நாட்டு மக்களுக்கு முக்கியமான அறிவிப்பை வெளியிடப்போகிறார்” என்று ஊடகங்கள் செய்தி வெளியிட்ட நொடியில் என்னவாக இருக்கும் என்று நீங்கள் நினைத்தீர்கள்?

நான் பாகிஸ்தானுடனான யுத்த அறிவிப்பு அல்லது நெருக்கடிநிலை அறிவிப்பாக இருக்கும் என்று நினைத்தேன்.

சுகுணா திவாகர்

இந்த 500 ரூபாயில் கடலை மடிக்கிற போட்டோவை எல்லா வாட்ஸ் அப் குரூப்பிலும் அனுப்பி வைக்காதீங்கய்யா. இருக்கிற கடுப்பில் இது வேற!

சந்திரமௌலீஸ்வரன் விஸ்வநாதன்

கொஞ்சம் சிரமம்தான். கைவசம் உள்ள உடனடித் தேவைக்கான பணம் எல்லாம் ரூ. 500 நோட்டுகள். நாளைக்கு ஊருக்கு வேறு செல்கிறேன். இரண்டு நாள் சிரமம்தான். ஆனாலும், எங்கள் பிரதமரே உங்களுக்கு கோடி வந்தனங்கள்!

தனபால் பத்மநாபன்

மத்திய அரசின் அறிவிப்பால் பெரிய அளவில் பாதிக்கப்பட்டிருப்பது திரைத் துறைதான். இன்னும் இரண்டு வாரங்களுக்குப் புதிய படங்கள் வெளியீடு இருக்காது என்று ஏற்கெனவே சில தகவல்கள் சுற்றிவருகின்றன. ஒட்டுமொத்த திரையுலகமும் அதிர்ச்சியில் உறைந்திருக்கிறது. கருப்புப் பணத்தில் திரைத்துறை செழிக்கிறது என்பது பகிரங்கமான உண்மை. இனி, இந்தத் துறையுடன் தொடர்புடைய ஆயிரக்கணக்கான மக்கள் வேலை இழப்பார்கள். பணப் பரிமாற்றமும் இனி இருக்காது. இப்படி ஒவ்வொரு துறையிலும் அதனதன் தன்மைக்கு ஏற்ற தாக்கம் ஏற்பட்டிருப்பதைக் கவனிக்க முடிகிறது!

ஆழி செந்தில்நாதன்

மோடியின் பிரம்மாஸ்திரத்தின் விளைவுகளை அறிய சற்றுப் பொறுத்திருக்க வேண்டும். ஆனால் இது எதைச் சாதிக்கப்போகிறதோ இல்லையோ பின்வரும் இரண்டு விஷயங்களைச் சாதிக்கும். 1. இந்தியாவிலுள்ள அரசியல் கட்சிகள் எல்லாவற்றினுடைய கருப்புப் பொருளாதாரப் பலத்தையும் இது ஆட்டிப் பார்க்கும். (பாஜக ஏற்கனவே வேறு மாடலுக்கு மாறியிருக்கும் என்பதை அறிக). 2. இந்தியாவின் இடைநிலைப் பொருளாதாரம் (கார்ப்பரேட் பொருளாதாரத்துக்கும் அடிநிலை பொருள்தாரத்துக்கும் இடையில் உள்ள) கடுமையாக அடிபட்டு, அந்த இடத்தை கார்ப்பரேட் பொருளாதாரம் நிரப்ப வழி ஏற்படும். கார்ப்பரேட் பெருமுதலைகளைப் பொறுத்தவரை அவர்கள் சட்டபூர்வமாகவே கொள்ளை அடிப்பவர்கள். கருப்புப் பணம் இருந்தாலும் வெவ்வேறு அவதாரங்களில் அது இருக்கும். பாவம், அவர்களுக்குச் சில்லரை பிரச்சினை வேண்டுமானால் வரலாம். ஆனால் வர்த்தகர்கள், ரியல் எஸ்டேட்காரர்கள், தரகர்கள், கான்ட்ராக்டர்கள் என உள்ளூர் அரசியல் நெட்வொர்க்கில் ‘பணப்புழக்கத்தில்’ திளைத்தவர்கள் மீண்டும் ‘சகஜநிலை’க்கு வர நீண்ட காலம் பிடிக்கும்.

முத்தையா மருதவாணன்

இன்று இரவு முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் நாற்பது நூறு திவ்யப் பிரபந்தம் என அழைக்கப்படும் !

அனுஷ்

எத்தனை சொல்லியும் குழந்தைகளுக்கு இன்றைய இரவின் அசாதாரண சூழ்நிலையை புரியவைக்க முடியவில்லை. நிச்சயம் குழந்தைகளாகவே இருப்பதென்பது ஒரு வரம்தான்!

பார்த்தீபன் குமார்

பட்ட காலிலேயே படும், கெட்ட குடியே கெடும் என்பதுபோல இந்த அரவக்குறிச்சி, தஞ்சாவூர் தொகுதி வேட்பாளர்கள் ரொம்ப பாவம்!

ஜாக்கி சேகர்

ஏம்பா, அந்த மூணு கண்டெய்னர்ல இருந்த ஐந்நூறு, ஆயிரத்தையெல்லாம் மாத்திட்டீங்களா?

சுகுமாரன் நாராயணன்

எலியைப் பிடிக்க வீட்டை எரிக்கலாம் - புதிய பொருளாதாரக் கொள்கை!

கருப்பு கருணா

அப்பிடியே நெருக்கடி நிலையையும் அறிவிச்சுடுங்க... அது ஒண்ணு மட்டும் குறையா எதுக்கு!

பெருமாள் மணி

எந்த ஐயமும் வேண்டாம் பாஜகவின் பெரிய சாதனை இது. வரலாறு உங்களை மறக்காது மோடி! சரியான நேரத்தில் கள்ளப் பொருளாதாரம் மீது நிகழ்த்தப்பட்ட துல்லியமான தாக்குதல் இது!

மனுஷ்யபுத்திரன்

எங்கள் ஏரியாவில் இரண்டு பெட்ரோல் பங்குகளும் மூடியிருக்கின்றன. ஏடிஎம் மில் பணம் எடுக்க முடியாது. கையில் காசு கிடையாது. சென்னையை வெள்ளம் சூழ்ந்த நாள் போல இருக்கிறது இந்த நாள்!

பென்னேஸ்வரன்

மத்திய அரசின் அதிரடி முடிவினால் இதுவரை சட்டாம்பிகளாக சலம்பிக்கொண்டிருந்த முகநூல் போராளிகள் பலரையும் துரிதமாக அதிரடிப் பொருளாதார நிபுணர்களாக உருமாற்றிக்கொள்ள வாய்ப்பு வழங்கிய மோடிக்கு நாம் அனைவரும் மிகவும் கடமைப்பட்டிருக்கிறோம்.

பி.ஏ.கிருஷ்ணன்

நாம் நமது பிரதமருக்குத் தலைவணங்க வேண்டும். கறுப்புப் பணத்தை ஒழிக்கும் முயற்சியில் ஒரு பெரிய அடி எடுத்து வைக்கப்பட்டிருக்கிறது. இதில் குறைகள் இருக்கும். ஆனால், கறுப்புப் பணம் என்னும் அச்சுறுத்தலை முடிவுக்குக் கொண்டுவர உண்மையிலேயே நாம் விரும்பினால், முழு மனதுடன் பிரதமரை ஆதரிக்க வேண்டும். சபாஷ் மோடி!

விஜயசங்கர் ராமச்சந்திரன்

புதிய இந்தியா பிறந்துவிட்டது, ஜெய் ஹிந்த் : ரஜினிகாந்த் @ அடுத்த படத்துக்கு நான் பத்தாயிரம்தான் சம்பளம் வாங்குவேன். எல்லாமே நூறு ரூபாய் நோட்டா. ஜெய் ஹிந்த்!

கண்ணன்

மோடி அரசு எடுக்கும் எல்லா முடிவுகளையும் மோடியின் காரணமாகவே எதிர்ப்பவர்கள் அவரின் அடிமை ஆதரவாளர்களைப் போலவே கொஞ்சம் ஆபத்தானவர்கள்!

அரவிந்த் சச்சிதானந்தம்

சிறுகதைத் தொகுப்பு வெறும் 500 ருபாய்தான்… வாங்கிக்கிறியா தோஸ்த்?

பிரபு காளிதாஸ்

வீட்டின் அருகில் உள்ள மளிகைக் கடையில் வழக்கத்தைவிட நான்கு மடங்கு கூட்டம். ஒருவர் சில ஆயிரம் ரூபாய் நோட்டுகள் கொடுத்து ஐம்பது கிலோ சீனி வாங்கிச் சென்றார். இன்னொருவர், “கடை நைட்டு எத்தினி மணி வரிக்கும் இருக்கும்?” என்று கேட்டார். குண்டாக ஒரு பெண் பத்து ஆயிரம் ரூபாய் நோட்டுகள் கொடுத்து நூறுகள் கேட்டார். மளிகைக் கடையில் கடன் வைத்திருந்த சிலர் ஆயிரம் ஐந்நூறு கொடுத்து அடைத்தார்கள். என்னிடம் இருந்த ஒரே ஐந்நூறு ரூபாய் நோட்டில் ஒரு கிலோ து.பருப்பு, ஒரு கிலோ பா. பருப்பு, கால் கிலோ பட்ட மிளகாய், மூன்று ஓல்டு சிந்த்தால் (பெரியது) வாங்கிக்கொண்டேன். நாளை பேங்க் பக்கம் தலை வைக்கவே தேவை இல்லை. கையில் காசு இல்லாமல் இருப்பது ஒருவித விடுதலைதான்!

ஷாஜகான். ஆர்

கறுப்புப் பணம்னா ஐந்நூறு, ஆயிரம் ரூபாய் கட்டாதான் வச்சிருப்பாங்கன்னு நம்பற அளவுக்கு அப்பாவி மனசு இருக்கிறது பெரிய வரம். நிம்மதியா தூங்கலாம். இன்னைக்கு எத்தனை லட்சம் வீடுகள்ல குழந்தைகள் உண்டியல் உடைபடப்போகுதோ!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x