Published : 10 Nov 2016 09:18 AM
Last Updated : 10 Nov 2016 09:18 AM

என்ன சொல்கிறார்கள் பொருளாதார நிபுணர்கள்?

இது கண்துடைப்பு! - ராம. சீனுவாசன்

2014 நாடாளுமன்றத் தேர்தலில் “வெளிநாடுகளில் உள்ள கருப்புப் பணத்தை வெளியே கொண்டுவருவோம் என்றார்கள் பாஜகவினர். அப்படி எதையும் கொண்டுவர முடியவில்லை. அதற்கான பெரிய முயற்சிகள் எதுவும் நடக்கவில்லை. வெளிநாடுகளிலிருந்து பணத்தை இந்தியாவுக்குக் கொண்டுவர நாடுகளுக்கு இடையில் உடன்பாடுகள் இருக்க வேண்டும். அதில் நிறையச் சட்டச் சிக்கல்கள் இருக்கின்றன. இதனால் பாஜக அது கொடுத்த தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என்ற விமர்சனம் இருந்தது. அதைச் சரிசெய்யக் கருப்புப் பணத்தைத் தானாக முன்வந்து கட்டினால் வரி தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவித்தார்கள். அதுவும் முப்பதாயிரம் கோடி ரூபாய்கூட வரவில்லை. அதனால் பாஜகவுக்கு இது ஒரு அரசியல் தோல்வியாக இருந்துவந்தது. இந்நிலையில்தான் இந்த நடவடிக்கையை அரசு எடுத்திருக்கிறது. கள்ளச் சந்தையில் புழங்கும் கருப்புப் பணத்தை இது கட்டுப்படுத்தும். கள்ள நோட்டுகளை முடக்கும். இவை இரண்டும் நல்ல விஷயங்கள். மற்றபடி கருப்புப் பணத்தை முழுமையாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் நிறைய இருக்கின்றன. எனக்கு இந்த நடவடிக்கை கண் துடைப்பாகவும் அரசியல் உள்நோக்கங்கள் அதிகம் கொண்டதாகவுமே தெரிகிறது!

பன்னோக்கு நடவடிக்கைகள் வேண்டும்!- வெங்கடேஷ் ஆத்ரேயா

கருப்புப் பொருளாதாரம் இந்த ஒரு நடவடிக்கையால் மட்டும் சரி செய்துவிடும் சின்ன பிரச்சினை இல்லை. மத்திய அரசு 2012- ல் கருப்புப் பணம் தொடர்பாக ஒரு கமிட்டி அமைத்தது. “அதிகமான கருப்புப் பணம் நிலம் உள்ளிட்ட சொத்துகள் வடிவத்தில் இருக்கிறது. ரூ.500, ரூ.1000 போன்ற அதிக மதிப்புள்ள ரூபாய் நோட்டுகளை ஒழிக்கும் நடவடிக்கைகளால் கருப்புப் பணம் ஒழிந்துவிடும் என்ற கருத்து சரியல்ல” என்பது அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்ட ஒன்று. கருப்புப் பண விவகாரம் வெறுமனே ரூபாய் நோட்டு சம்பந்தப்பட்டது மட்டும் அல்ல. உதாரணமாக, ‘பி நோட்ஸ்’ என்று அழைக்கப்படும் பங்கேற்புப் பத்திரங்கள் எனப்படும் பங்குச்சந்தைச் செயல்பாடுகளில் நூற்றுக்கணக்கான கோடிகள் கருப்புப் பணம் விளையாடுகிறது. அதைத் தடைசெய்ய வேண்டும் என்று பெரிய விவாதங்கள் நடந்தன. ஆனால், எந்த நடவடிக்கையும் அரசால் எடுக்கப்படவில்லை.

எல்லோரையும் வங்கிப் பரிவர்த்தனையின் கீழ் கொண்டுவர எடுக்கப்படும் நடவடிக்கை இது, வருமானவரி கட்டுவோரை அதிகரிக்கச்செய்யும் நடவடிக்கை இது என்றெல்லாம் சொல்கிறார்கள். இந்தியா என்பது லட்சக்கணக்கான கிராமங்களில் விரவிக் கிடப்பது. சாமான்ய மக்களில் பலருக்கு வங்கிக்கணக்குகள் இல்லை. 100 நாள் வேலைத் திட்டத்தில் ஒரு தொழிலாளருக்கு நூறு ரூபாய் சம்பளம் கொடுத்தால் அதை அவரது கையில் கொடுக்க வேண்டும் என்று அவர் கேட்டால், அப்படித்தான் கொடுக்க வேண்டும். உனக்கு வங்கிக்கணக்கு தொடங்கி அதில் போடுவோம். நீ அங்கே போய்தான் எடுத்துக்கொள்ள வேண்டும் என்றால் அதைப் போய் எடுத்துவர அவர் ஒரு நாள் விடுமுறை எடுக்க வேண்டி வரும் என்பதை நாம் நினைத்துப்பார்க்க வேண்டும். எனக்கென்னவோ, அரசின் அதிரடி அறிவிப்பில் பொருளாதார நலனைவிட அரசியல் தொனிதான் அதிகமாகத் தென்படுகிறது!

பொருளாதாரத்தைப் பாதிக்கும்!- சி.பி. சந்திரசேகர்

பயங்கரவாதத்துக்குப் பணம் கிடைப்பது, கருப்புப் பணம், சமூக விரோத சக்திகளின் பணம், ஊழல் பணம் ஆகியவற்றுக்கு எதிரான நடவடிக்கை என்று இது கூறப்படுகிறது. இந்தக் காரணங்களின் பின்னணியில் இந்த நடவடிக்கை சரியா, தவறா என்று காலம்தான் சொல்லும். ஆனால், பொருளாதார நோக்கில் என்னிடம் கருத்துக் கேட்டால், பொருளாதாரத்தை இந்த முடிவு சீரழிக்கிறது என்பேன். கொடுக்கல், வாங்கல்களைச் சில நாள்களுக்கு ஸ்தம்பிக்க வைப்பதோடு இது முடியப்போவதில்லை. பொறுத்திருந்து பாருங்கள்!

பயனுள்ள நடவடிக்கை!- அர்விந்த் விர்மானி

நம்முடைய ரொக்கத்தின் பெரும் பகுதி ரூ.500, ரூ.1,000 நோட்டுகளாகவே இருக்கும் சூழலில், கருப்புப் பணத்தை வெளிக்கொண்டுவர இது ஒரு பயனுள்ள நடவடிக்கை. சில வாரங்களுக்கு இதனால் பொருளாதாரச் செயல்பாடுகள் பாதிப்படையலாம். ஆனால், நீண்ட கால நோக்கில் பயனுடைய நடவடிக்கை.

ஆக்கப்பூர்வமான நடவடிக்கை!- இந்திரா ஹிர்வே

இது ஆக்கப்பூர்வமான நடவடிக்கை. ரியல் எஸ்டேட் போன்ற தொழில்களில் கருப்புப் பணப் புழக்கம் அதிகம். இனி பணத்தைக் கையில் வைத்திருக்கக்கூடாது, வங்கிகள் மூலம்தான் செயல்பட வேண்டும் என்ற எண்ணத்தை மக்களிடம் ஏற்படுத்தும். மறைக்கப்பட்ட பணம் கணக்கில் வரும். விரைவில் ரூ.2,000 நோட்டு புழக்கத்துக்கு வந்துவிடும் என்று சொல்லியிருக்கிறது அரசு. அதுவும் பதுக்கலுக்கு வழிவகுக்கும் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x