Last Updated : 14 Nov, 2016 09:54 AM

 

Published : 14 Nov 2016 09:54 AM
Last Updated : 14 Nov 2016 09:54 AM

வதையரசு!

இந்தத் திட்டத்தால் கிடைக்கும் பயன், இதன் விளைவாக ஏற்படும் நஷ்டங்களைவிட மிகக் குறைவாகவே இருக்கும்

ரூபாய் 500, 1,000 நோட்டு விஷயத்தில் ஏன் இவ்வளவு பதற்றப்படுகிறீர்கள் என்று கேட்டார் ஒரு நண்பர். அவர் மோடியின் ஆதரவாளர். அதற்காக அவருடைய கருத்தை நிராகரிக்க மாட்டேன். இந்தத் திட்டத்தால் பலனே கிடைக்காது என்பது அல்ல. மாறாக, கிடைக்கும் பயன், இதன் விளைவாக ஏற்படும் நஷ்டங்களைவிட மிகக் குறைவாகவே இருக்கும் என்பதே என் உறுதியான கருத்து. அதைத் தர்க்கரீதியாக முன்வைக்கிறேன்.

இந்த நடவடிக்கைக்கு ஆதரவாக எழுதுகிறவர்கள் பலரிடமும் ஒரு விஷயத்தைப் பொதுவாகப் பார்க்கிறேன். “எதற்கு இவ்வளவு பதற்றம்? பொறுமையாக இருக்கலாமே? காசு இல்லாவிட்டால் என்ன? இணையத்தில் வாங்கலாமே? கிரெடிட் கார்டு இல்லையா, டெபிட் கார்டு இல்லையா?”

உண்மை வேறு

மளிகையையும் காய்கறிகளையும் பாலையும் இணையத்தில் வாங்கக் கூடியவர்கள் எத்தனை பேர் நம் நாட்டில் இருக்கிறார்கள்? 2015 கணக்கின்படி, இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்பவர்கள் 53%. பண அட்டை வைத்திருப்பவர்கள் 22.1%. கடன் அட்டை வைத்திருப்பவர்கள் 3.4%. அவசரத் தேவைக்கு நண்பர்கள் அல்லது உறவினரிடமிருந்து கடன் பெறுவோர் 32%. வங்கிகள் அல்லாத தனிநபர்களிடமிருந்து (கந்து வட்டி) கடன் பெறுவோர் 12.6%. எதையும் பேசும் முன் உண்மைக்குக் கொஞ்சம் முகம் கொடுக்க வேண்டாமா?

இன்னொருவர் சொன்னார், “தள்ளுவண்டி கள்ல காய்கறிகள் வித்துட்டுதான் இருக்காங்க. மக்கள் வாங்கிட்டுதான் இருக்காங்க. பெரிய அளவுக்குப் பிரச்சினை இல்லையே!” போய் அந்தத் தள்ளுவண்டிக்காரரிடம் பேசிப்பாருங்கள். உண்மையும் வலியும் புரியும்!

பதிலற்ற கேள்விகள்

என்னிடம் ஒரே ஒரு 2,000 ரூபாய் நோட்டு இருக்கிறது. லேசர் பிரிண்டரில் டோனர் காலியாகிவிட்டது. அதை நிரப்ப வருவார் மெக்கானிக். அவருக்கு ரூ. 400 தர வேண்டும். சில்லறை இல்லை. “காசு தர மாட்டேன், வந்து நிரப்பிவிட்டுப் போ” என்று சொல்லிவிட்டேன். பல்லாண்டு கால உறவு என்பதால், அவரும் ஓகே சொல்லிவிட்டார். ஆனால், அவருக்கு டோனர் வாங்க எங்கிருந்து காசு வரும்? வாடிக்கையாளர்களுக்கு மூன்று புத்தகங்களை அச்சாக்கித் தர வேண்டும்.

ரூ. 350-க்கு ‘ஏ4’ காகிதம் வாங்க வேண்டும். மூன்று நாட்களாக முடியவில்லை. வாடிக்கையாளரின் திட்டுகளை வாங்க வேண்டும். இனி எப்போது முடியும் என்றும் தெரியவில்லை. ஈசிஜி எடுக்க வேண்டும் என்று சொன்னார் மருத்துவர். போவதற்குக் கையில் சில்லறை நோட்டுகள் இல்லை.

என்னுடைய பிரச்சினை ஒருபக்கம் இருக்க, என்னைப் போலப் பலர் போகாதிருப்பதால், அந்தப் பரிசோதனை மையத்துக்கு வருவாய் குறைந்திருக்காதா? இதுபோல எத்தனை கோடிப் பேரின் தொழில்கள் முடங்கியிருக்கும்? அந்த நஷ்டத்தின் மதிப்பு என்ன? இவைதான் நான் கேட்கும் கேள்விகள். கேள்விகளுக்கு யாரிடமும் பதில் இல்லை!

தெளிவு வேண்டாமா அரசுக்கு?

இது முன்கூட்டியே மதிப்பிட்டு நடவடிக்கை எடுக்கக் கூடிய திறமையற்ற - ‘டிரையல் அண்டு எரர்’- அரசாக இருக்கிறது என்று தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது. கறுப்புப் பணம் ஆங்காங்கே ஒளிந்துகொண்டு இருக்கவே செய்யும். அது இந்த அறிவிப்புக்குப் பின் கள்ளத்தனமாக வெளிவரப் பார்க்கும். எந்தெந்த வழிகளில் வரக்கூடும் என்று முன்னரே கணக்குப் போட்டிருக்க வேண்டாமா?

பலர் இரவோடு இரவாகத் தங்கம் வாங்கப் போன பிறகுதான் இப்படியொரு வழி இருப்பதே அரசுக்குத் தெரிந்தது. தொலைதூர ரயிலில் முதல் வகுப்பு ஏசி டிக்கெட்டுகளை மொத்தமாக புக் செய்த பிறகுதான் இந்த வழியும் தெரியவந்தது. இன்னும் இதுபோல எத்தனை எத்தனை வழிகளில் கறுப்புப் பணம் வெள்ளை ஆகியிருக்க முடியும். இதெல்லாம் முன்னரே யோசிக்காத அரசு என்ன அரசு?

டெல்லி வதந்தி

டெல்லியில் உப்பு கிலோ ரூ.400. வதந்திகளை நம்பாதீர்கள் என்று கூறுகிறது அரசு. ரூ.400 கொடுத்தாலும் உப்பு ஸ்டாக் இல்லை என்கிறார் பக்கத்து வீட்டு மளிகைக் கடைக்காரர். நேற்று கடைசியாக 500 ரூபாய் நோட்டு வாங்கிக்கொண்டு அரிசி கொடுத்தார். இனி, 500 ரூபாய் நோட்டு வாங்க முடியாது. கரன்ட் அக்கவுன்ட்டிலும் இனி 500, 1000 ரூபாய் நோட்டுகளைச் செலுத்த முடியாது என்று பேங்கில் சொல்லிவிட்டதாகச் சொல்லிச் சென்றார்.

இதுபோன்ற சிக்கல்கள் வரும் என்று தெரியாத அரசு என்ன அரசு? இதையெல்லாம் ஊகிக்க முடியாதவர்கள் என்ன பொருளாதார வல்லுநர்கள், நிர்வாகிகள்?

நவம்பர் 10-ம் தேதி முதல் டிசம்பர் வரையான காலத்தில் ரூ.2.5 லட்சம் செலுத்தப்பட்ட கணக்குகளைக் கண்டறிந்து, அவர்களின் பெயர்களை வருமான வரித் துறைக்குத் தெரிவித்து, நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவித்தார்கள். என்னே புத்திசாலித்தனம். உண்மையிலேயே அறிவாளிகளாக இருந்தால், சொல்லாமல் கமுக்கமாகச் செய்திருக்க வேண்டாமா? இப்போது எல்லாரும் விழித்துக் கொண்டார்கள்.

நேற்று இன்னொரு அறிக்கை வருகிறது - அதெல்லாம் இல்லை, இரண்டரை லட்சம் போடுகிறவர்கள் மீது வருமான வரி நடவடிக்கைகள் ஏதும் இருக்காது என்று. எவ்வளவு அபத்தமாக இருக்கிறது இது? இதெல்லாம் உங்கள் கண்களில் படவே இல்லையா? இவ்வளவு மோசமாகச் செயல் படும் அரசுதான் சிறந்த அரசு என்று இன்னமும் நம்புகிறீர்களா?

கடைசியாக ஒரு விஷயம். வங்கிகள், ஏடிஎம்களில் காசுப் பற்றாக்குறை, ஏடிஎம்கள் இன்னும் புதிய நோட்டுகளுக்குத் தயாராகவே இல்லை என்பதையெல்லாம் ஏற்கெனவே நிறையப் பேர் பேசியாயிற்று. இன்னொரு முக்கிய விஷயத்தில் இந்த அரசு எப்படிக் கோட்டைவிட்டது என்பதைக் கவனியுங்கள்.

சிக்கலோ சிக்கல்

இப்போது புதிதாக வந்திருப்பது ரூ. 2,000 நோட்டு. ரூ. 500 நோட்டு இன்னும் விநியோகத்தில் காணவில்லை. பழைய நோட்டுகள் செல்லாது என்பதால் 100 ரூபாய் நோட்டுகளுக்குக் கடும் பற்றாக்குறை. வங்கிகளும் தருவதில்லை. அதைக் கையில் வைத்திருப்பவர்களும் பதுக்கிக்கொள்வதால், அவை புழங்குவதும் இல்லை. ஆக, ஏடிஎம்களில் இப்போது வைக்கக்கூடிய நிலையில் ரூ. 2,000 நோட்டுகள் மட்டுமே பெருமளவில் இருக்கின்றன என்றார் ஒரு வங்கி ஊழிய நண்பர். இந்தச் சிக்கல் காரணமாகவும் ஏடிஎம்கள் இன்னும் முழுமையாக இயங்கவில்லை என்று தெரிகிறது.

இவ்வளவு மோசமாகத் திட்டமிட்டதற்காகக் கூட ஓர் அரசை விமர்சிக்காமல் இருக்கும் அளவுக்குத் தியாக குணம் என்னிடம் இல்லை.

நாட்டின் பொருளாதாரம், இயல்பு வாழ்க்கை மொத்தமாகக் குலைந்திருக்கிறது. மக்களின் போராட்ட குணம் மந்தமடைந்து பல காலம் ஆகி விட்டது என்பதே இந்த ஆட்சியின் அதிர்ஷ்டம். இல்லையேல், இங்கே நடந்திருக்கக் கூடியது முற்றிலும் வேறு!

- ஆர்.ஷாஜஹான், எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர்,

தொடர்புக்கு: shahjahanr@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x