Published : 09 Nov 2016 08:41 AM
Last Updated : 09 Nov 2016 08:41 AM

கடலோடிகள் பிரச்சினையை தொலைநோக்கோடு அணுகுங்கள்!

இரு நாடுகளுக்கு இடையிலான கடலோடிகள் பிரச்சினைக்குத் தீர்வுகாண கூட்டுச் செயல் குழு அமைப்பது என்று இந்தியாவும் இலங்கையும் முடிவுசெய்துள்ளன. இந்த ஏற்பாடு சில ஆண்டுகளுக்கு முன்னர்கூடக் கையாளப்பட்டதுதான். ஆனால், பிரச்சினைகள் தீரவில்லை. இந்த முறை இரு நாடுகளின் மீனவர் பிரதிநிதிகளும் அரசுப் பிரதிநிதிகளும் டெல்லியில் நடத்திய பேச்சில் இணக்கமான முடிவு ஏற்படாவிட்டாலும், சில முக்கிய முடிவுகளை இரு நாட்டு அரசுப் பிரதிநிதிகளும் எடுத்துள்ளனர். “இரு நாடுகளின் கடலோரக் காவல் படையினரும் ‘ஹாட்-லைன்’ என்று அழைக்கப்படும் நேரடித் தொலைபேசி வசதியை ஏற்படுத்திக்கொள்வர். கூட்டுச் செயல்குழு உறுப்பினர்கள் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை கூடி, இரு நாடுகளின் மீனவர் பிரச்சினைகள் தொடர்பாக ஆலோசனை நடத்துவர். இரு நாடுகளின் மீனளத் துறை அமைச்சர்கள் 6 மாதங்களுக்கு ஒரு முறை சந்தித்து, இதே போன்ற ஆலோசனைகளை மேற்கொள்வர். இருதரப்பும் வன்செயல்களில் ஈடுபடக் கூடாது, கடலோடிகள் உயிரிழப்புக்குக் காரணமாக இருந்துவிடக் கூடாது” என்றெல்லாம் ஒப்புக்கொண்டுள்ளனர். இவை வரவேற்கப்பட வேண்டியவை.

இலங்கைக் கடலோடிகள் தம் தரப்பிலிருந்து சில பிரச்சினைகளைத் தீவிரமாக விவாதித்துள்ளனர். தமிழகக் கடலோடிகள் இரட்டைமடி சுருக்கு வலைகளையும் இழுவை வலைகளையும் பயன்படுத்தி கடல் தொழிலில் ஈடுபடுவதால், தங்களுக்குப் பெரும் பாதிப்பு ஏற்படுவதுடன் கடல் வளமும் நாசமாகிறது, சூழல் கெடுகிறது என்பதை வலுவான குரலில் தெரிவித்திருக்கின்றனர். மேலும், இந்தப் பிரச்சினைக்கான சட்டபூர்வத் தீர்வுக்குப் பின்னரே தமிழகக் கடலோடிகளிடமிருந்து கைப்பற்றப்பட்ட மீன்பிடிப் படகுகளைத் திரும்ப ஒப்படைக்க முடியும் என்றும் தெரிவித்திருக்கிறனர். மேலும், இப்போதைய வழக்கமான மீன்பிடிப் பாதையில் ஆண்டுக்கு 85 நாட்கள் என்று மூன்று ஆண்டுகளுக்குத் தொழிலைத் தொடர அனுமதி வேண்டும் என்று இந்தியக் கடலோடிகள் விடுத்த கோரிக்கையையும் இலங்கைக் கடலோடிகள் ஏற்க மறுத்துவிட்டனர்.

வெறும் பேச்சுவார்த்தைகள் என்பதைத் தாண்டி, இருதரப்புக் கடலோடிகளின் வாழ்வாதாரப் பிரச்சினை எனும் அளவில், தொலைநோக்கோடு இந்திய அரசு அணுக வேண்டிய பிரச்சினை இது. இந்தியத் தரப்பில் எல்லை தாண்டிச் செல்வதைத் தடுக்கவும் முறையற்ற மீன்பிடி முறைகளைத் தவிர்க்கவும் ஆழ்கடல் மீன் தொழிலை நம்மவர்கள் மத்தியில் வளர்த்தெடுக்க வேண்டும். இதற்கான பயிற்சி, நவீன சாதனங்கள், குறிப்பிட்ட காலம் வரையிலான பொருளாதார உதவிக்கு நம்முடைய அரசு ஏற்பாடு செய்ய வேண்டும். இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடைப்பட்ட கடல் பரப்பில் அவரவருக்கு உரிய பகுதியில் மீன் பிடிப்பதற்கு இரு நாட்டுக் கடலோடிகளுக்கும் உள்ள உரிமையை அங்கீகரிக்கும் அதே வேளையில், இரு நாட்டுக் கடலோடிகளின் உயிர், உடைமைகளுக்கும் பாதுகாப்பான தொழில் சூழலுக்கும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x