Published : 01 Nov 2016 08:57 AM
Last Updated : 01 Nov 2016 08:57 AM

என்ன நினைக்கிறது உலகம்?- ஐஎஸ் அமைப்பின் விஷ வியூகம்!

கத்தார் ஊடகம்



மோசூல் நகரை ஐஎஸ் பயங்கரவாதி களிடமிருந்து விடுவிப்பதற்கான நடவடிக்கைகள் முடிவுக்கு வருகின்றன என்பதை உணர முடிகிறது. என்றைக்காவது ஒருநாள் எதிர்த் தாக்குதல் நடத்தலாம் என்று ஐஎஸ் அமைப்பினரும், ஒரு கட்டத்தில் சிதறிச் சென்றுவிடுவார்கள் என்று சிலரும் கருதுகிறார்கள்.

ஆனால், கடந்த சில நாட்களில் 100-க்கும் மேற்பட்ட ஐஎஸ் தற்கொலைப் படையினர் தாக்குதலில் ஈடுபட்டதையும், அல்-மிஷ்ராக் சல்ஃபர் தொழிற்சாலையில் அந்த அமைப்பினர் தீவைத்ததையும் பார்க்கும்போது, அத்தனை எளிதில் மோசூலை இழக்க அவர்கள் விரும்பவில்லை என்று தெரிகிறது. தங்களிடம் இருக்கும் எதையும் வைத்து ஐஎஸ் அமைப்பினர் போரிடுவார்கள் என்பதுதான் இனி நேரவிருக்கும் பேரழிவாகும். கடுமையான ரசாயன ஆயுதங்களையும் அவர்கள் பயன்படுத்தவிருக்கிறார்கள்.

கடுகு வாயுவையும், தொழிற் சாலை நச்சு ரசாயனங்களையும் பயன்படுத்தி நவீன ரசாயன ஆயுதங்களை உருவாக்குவதில் ஐஎஸ் ஈடுபட்டிருக்கிறது. இராக்கிய குர்திஸ்தான் பிராந்தியத்தின் பெஷ்மெர்கா ராணுவத்தின் மீது இவற்றைப் பயன்படுத்தித் தாக்குதலும் நடத்தியிருக்கிறது.

கடந்த ஓராண்டில், பெஷ்மெர்கா படைகள் மீது கடுகு வாயு மற்றும் குளோரின் கலந்த ரசாயன ஆயுதங்களால் தாக்குதல் நடத்தியிருக்கிறது ஐஎஸ். கடுகு வாயுவும், குளோரினும் முதல் உலகப் போரின்போதுதான் முதன்முதலில் பயன்படுத்தப்பட்டன. தகுந்த முகக் கவசம் அணியவில்லை என்றால், இவை இரண்டும் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும்.

குர்து இனத்தவருக்கு இந்த ரசாயன ஆயுதங்கள் பற்றி ஏற்கெனவே தெரியும். 1980-களில் இவர்களை அழிக்க சரின் விஷ வாயுக் குண்டுகளைப் பயன்படுத்தியது சதாம் உசேன்தான். ஒரு லட்சம் குர்து இன மக்கள் இப்படிக் கொல்லப்பட்டனர். 1988 மார்ச் 16 அன்று - ஒரே நாளில் மட்டும் சரின் விஷ வாயுக் குண்டுத் தாக்குதலில் 5,000 பேர் கொல்லப்பட்டார்கள்.

சிரியாவின் கோவ்தா நகரில் 2013 ஆகஸ்ட் 21-ல் இதேபோன்ற ரசாயன ஆயுதத் தாக்குதலை பஷார் அல் அசாத் அரசு மேற்கொண்டது. சதாம் உசேன் நிர்வாகத்தில் இருந்த விஞ்ஞானிகள்தான் இப்போது ஐஎஸ் அமைப்புக்கு ரசாயன ஆயுதங்களை உருவாக்கித் தருகிறார்கள். இந்த இரண்டு சம்பவங்களிலும் உயிரிழப்புகள் அதிகமாக இருந்தன. ஏனெனில், தாக்குதலுக்கு உள்ளான அப்பாவிப் பொதுமக்கள் இந்த ஆயுதங்களைப் பற்றியோ அவற்றிலிருந்து தங்களைக் காத்துக்கொள்வது எப்படி என்பது பற்றியோ அறிந்திருக்கவில்லை.

ஐஎஸ் அமைப்பினரும் மோசூலைத் தக்க வைத்துக்கொள்ள இப்படியான தாக்குதலில் இறங்குவார்கள் என்பதில் சந்தேகமில்லை. ஐஎஸ் அமைப்பினரின் பயங்கரவாதத்தைக் குறைத்து மதிப்பிடுவது தவறு. ரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்திப் போரிடும் விஷயத்தில் அந்த அமைப்பினரைக் குறைத்து மதிப்பிடுவது பெரும் தவறு.

ஐஎஸ் அமைப்பின் கொடுமைகளிலிருந்து தப்பிச் செல்லும் மக்களுக்குத் தேவையான உணவு, உடை கொடுக்கவில்லையென்றால், குடிநீர், மின்சார வசதி ஏற்படுத்தித் தரவில்லை என்றால், ஐஎஸ் உருவாக்கி வரும் ரசாயனப் பேரழிவுச் சூழலைத் தடுத்து நிறுத்தவில்லை என்றால், அவர்களது ஆன்மா நம்மை மன்னிக்கவே மன்னிக்காது.

தமிழில் சுருக்கமாக: வெ.சந்திரமோகன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x