Published : 03 Oct 2016 09:18 AM
Last Updated : 03 Oct 2016 09:18 AM

அது என்ன காய்ச்சல்?

நோயை ஒழிப்பதற்குப் பதில், நோயை மறைக்கப் பழக்குவது என்ன மாதிரியான நோய்?

எனக்கு ஒரு மகன், மகள். கடந்த வாரம் பாப்பாவுக்குக் காய்ச்சல் வந்தது. வீட்டில் இருப்பு வைக்கப்பட்டிருந்த பாரசிட்டமால் சிரப்பைக் கொடுத்துச் சமாளிக்க முயன்றார் என் மனைவி. காய்ச்சல் தீர்ந்தபாடில்லை. அன்றிரவே தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றேன். ‘சாதாரண சளிக் காய்ச்சல்தான்’ என்றார் மருத்துவர்.

நிம்மதியாக வீடு திரும்பிய எங்களுக்குக் காலையில் அடுத்த அதிர்ச்சி காத்திருந்தது. பையனுக்கும் காய்ச்சல். அதே மருத்துவ மனைக்குச் சென்றோம். ‘பாப்பாவுக்கு வந்த தால் பையனுக்கும் காய்ச்சல் வந்துள்ளது, பயப்படும்படி ஒன்றுமில்லை’ என்றார் மருத்துவர். வீடு திரும்பினோம். அடுத்த நாள் மனைவி காய்ச்சலில் விழுந்தார். நான் பதறிப்போனேன்.

சங்கேத வார்த்தைகள்

ஒட்டுமொத்தக் குடும்பமே காய்ச்சலுக்கு உள்ளானதால், மருத்துவமனைக்கும் வீட்டுக்கும் அலைந்தோம். இதனிடையே பாப்பாவுக்கும், மனைவிக்கும் காய்ச்சல் கொஞ்சம் கொஞ்சமாகக் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. பையனுக்கோ தொடர்ந்து கொதித்தது. ரொம்பவும் தளர்ந்துவிட்டான். ஒரு வாய்கூடச் சாப்பிடவில்லை. எழுந்து நடக்க முடியவில்லை அடுத்தடுத்த நாட்களில், ‘கை, கால், காது வலிக்குது’ என்று அவன் அழ ஆரம்பித்தபோது, மொத்தக் குடும்பமும் பரிதவித்தோம்.

அன்று மாலை பையனைத் தூக்கிக் கொண்டு மீண்டும் மருத்துவரிடம் ஓடினோம். உடனே ரத்தப் பரிசோதனை செய்து பார்த் தவர், “உங்க பையனுக்கு ரத்தத் தட்டுகள் (பிளேட்லெட்ஸ்) எண்ணிக்கை குறைவா இருக்கு. டெங்கு காய்ச்சலா இருக்கலாம். மருந்து எழுதுறேன். மீறி ஏதாவது பிரச் சினைன்னா, அரசு மருத்துவமனையில் சேர்த் துடுங்க” என்றார். அவர் சொன்ன தொனியே பயமுறுத்தியது. இரவு அவர் சொன்னது போலவே விபரீதங்கள் தொடங்கின. பையன் அடுத்தடுத்து வாந்தி எடுத்து மயங்கி விழுந்தான். தூக்கிக்கொண்டு ஓடி மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தோம்.

அரசு மருத்துவமனையில் மீண்டும் ரத்தப் பரிசோதனை செய்து பார்த்தனர். ஆரோக்கியமான உடலில், ரத்தத்தில் 1.5 லட்சம் முதல் 4.5 லட்சம் வரையில் ரத்தத்தட்டுகள் இருக்க வேண்டும். ஆனால், அவனுக்கு ஒரு லட்சம் மட்டுமே இருந்தது. பையனை உடனே தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்த்தனர். என் மனைவி அழ ஆரம்பிக்க, மருத்துவர்களை நெருங்கி “டெங்குவா சார்?” என்றேன். ஏறிட்டுப் பார்த்தவர்கள், “இப்போதைக்கு எதுவும் சொல்ல முடியாது, பையனுக்கு நல்லா தண்ணீர், ஜூஸ் கொடுங்கள்” என்று பட்டும் படாமல் சொல்லிவிட்டு நகர்ந்துகொண்டனர்.

அடுத்தடுத்த நாட்களில் எண்ணிக்கை மேலும் குறைந்தது. மருத்துவர்கள் குழுவாக வருவார்கள். சோதிப்பார்கள். குசுகுசுவென்று பேசுவார்கள். நகர்ந்துவிடுவார்கள். என் கேள்விக்குப் பதில் கிடைத்தபாடில்லை. மருத்துவச் சீட்டை ரகசியமாக ஆராய்ந்தபோது, பையனுக்கு என்ன காய்ச்சல் என்று அதில் குறிப்பு ஏதும் இல்லை. மருத்துவர்கள், மருத் துவப் பணியாளர்களுக்கு மட்டும் புரியும் வண்ணம் ரத்தத்தட்டுகளின் எண்ணிக்கை யையும் அதன் அருகே ‘வெரி அர்ஜென்ட்’ என்ற குறிப்பையும் ஏதோ சங்கேத வார்த்தைகளைப் போலப் பயன்படுத்தியிருந்தனர்.

என்னதான் பிரச்சினை?

நாட்கள் நகர, பிள்ளையின் நிலைமை கவலைக்குள்ளாக்க, அந்த மருத்துவர்களில் ஒருவரிடம் ஒருநாள் என் ஆதங்கத்தைக் கொட்டி, “ஐயா, என் குழந்தைக்கு என்னதான் பிரச்சினை?” என்று கதறினேன். முதலில் பதில் சொல்லத் தயங்கியவர், பின் “சார், சிகிச்சையைப் பற்றி கவலைப்படாதீங்க. பையனுக்கு டெங்குன்னுதான் தோணுது. தினமும் இங்கே நாலஞ்சு பேருக்கு டெங்கு இருப்பது உறுதிசெய்யப்படுது. ஆனா, வெளிய சொல்றது இல்லை. மருத்துவப் பதிவேட்டில்கூட டெங்குங்குற வார்த்தையைப் பயன்படுத்தக் கூடாதுங்குறது மேலிடத்து உத்தரவு. அரசை எதிர்த்து மருத்துவர்கள் என்ன செய்ய முடியும்?” என்றார்.

மறுநாள் காலை என் செல்பேசிக்கு ஒரு அழைப்பு வந்தது. ‘‘நான் மாநகராட்சி மேஸ்திரி பேசுறேன், உங்க பையனுக்குக் காய்ச்சல் வந்துருக்காமே, அரசு மருத்துவமனையில் சொன்னாங்க” என்றார். விஷயத்தைப் புரிந்துகொண்ட நான், “காய்ச்சல் எல்லோருக்கும் வருவதுதானே, அதற்கு நீங்க ஏன் சார் கவலைப்படுறீங்க!” என்றேன். “இல்ல சார், உங்க குழந்தையைப் போல மத்தவங்களுக்கு வராமத் தடுக்கணும், உங்க வீடு எங்க இருக்குன்னு சொல்லுங்க” என்றார். முகவரியைச் சொன்ன அடுத்த சில மணி நேரத்தில், மாநகராட்சி ஊழியர்கள் ஒரு குழுவாக வந்து, கொசு மருந்து அடிக்கும் வேலையில் இறங்கினார்கள். குடிநீர்த் தொட்டியைச் சுத்தம் செய்தார்கள். வீட்டில் உள்ள எல்லோருக்கும் நிலவேம்புக் கஷாயம் குடிக்கக் கொடுத்தார்கள். அடுத்து, எங்கள் பகுதி முழுக்க வீடு வீடாகச் சென்று கொசு மருந்து அடித்தார்கள்.

அடிப்படைக் கடமை

அடுத்தடுத்த நாட்களில் என் மகனின் உடல்நிலை மெல்லத் தேறியது. ஒருவழியாகக் குணமடைந்தான். ஆனால், கடைசி வரை அவனுக்கு என்ன பிரச்சினை என்று அதிகாரபூர்வமாகச் சொல்லப்படவில்லை. என் மகன் இருந்த படுக்கைக்கு அடுத்த படுக்கையில், கைக்குழந்தை ஒன்று அவனைப் போன்றே ‘காய்ச்சல்’ சித்ரவதையை அனுபவித்துக்கொண்டிருந்தது. அதன் குடும்பத்துக்கும் அது என்ன காய்ச்சல் என்று சொல்லப்படவில்லை. வெளியில் வந்த இந்த ஒரு வாரத்தில் என் அனுபவத்தைக் கேட்கும் பலர், இதே அனுபவம் தங்கள் குடும்பங் களிலும் நிகழ்ந்ததைச் சொன்னார்கள்.

ஒருவர் என்ன நோயால் பாதிக்கப் பட்டிருக்கிறார் என்பதை அவருக்கும் அவருடைய சுற்றத்தாருக்கும் தெரிவிப்பது மருத்துவத் துறையின் அடிப்படைக் கடமை. மருத்துவர்கள் தவறிழைத்தால் அரசாங்கத்தை நாடலாம். அரசாங்கமே தவறிழைக்கும்போது யாரை நாடுவது?

அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கும் தமிழக முதல் வரும் காய்ச்சல் காரணமாகவே அனுமதிக்கப் பட்டிருப்பதாகச் சொல்கிறார்கள். அது என்ன காய்ச்சல் என்பது மக்களுக்குச் சொல்லப் படவில்லை. அது முதல்வரின் தனிப்பட்ட விருப்பம் / உரிமை என்றுகூடச் சொல்லலாம். ஆனால், என்ன காய்ச்சல் என்று முதல்வரிடமே சொல்லாமல் இருந்தால் எப்படியிருக்கும்? அந்த மனநிலையில்தான் இன்றைக்குப் பல நோயாளிகள் தமிழ்நாட்டில் இருக்கிறார்கள். நோயை ஒழிப்பதற்குப் பதில், நோயை மறைக்கப் பழக்குவது என்ன மாதிரியான நோய்?

- ஒய்.ஆண்டனி செல்வராஜ், தொடர்புக்கு: antonyselvaraj.y@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x