Last Updated : 19 Oct, 2016 09:38 AM

 

Published : 19 Oct 2016 09:38 AM
Last Updated : 19 Oct 2016 09:38 AM

இலங்கை ராணுவத்தின் போர்க் கொள்ளை!

அழிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டால், கண்ணில் படும் அனைத்தையும் நாசப்படுத்த வேண்டும் எனும் உள்ளுணர்வு உருவாகிவிடும்போலும்!

என்னுடைய ராணுவ வாழ்க்கையின் போக்கைத் தீர்மானித்த மிக முக்கியமான தருணம் அது. வடக்குத் தீவுகளில் உள்ள காரைநகரில், 1991-ல் நாங்கள் நடத்திய ராணுவ நடவடிக்கையைத் தொடர்ந்து நடந்த சம்பவம். நோய்வாய்ப்பட்ட, பலவீனமான மக்களை எதிர்கொள்ளும்போது போரின் பாதிப்புகளை உங்களால் உணர முடியும்.

கடைசியாக எட்டு ஆண்டுகளுக்கு முன்னர் வடக்குப் பகுதியில் பணிபுரிந்த நான், அந்த ஆண்டின் ஏப்ரல் மாதம் யாழ்ப்பாணத்துக்கு மாறுதலுக்காகக் காத்திருந்தேன். காரைநகரின் கடற்படைத் தளம் முற்றுகையிடப்பட்டிருந்ததால், ஒரு மாதத்துக்கு முன்பாகவே எனக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அந்த உத்தரவைப் பெற்ற சமயத்தில், நான் இருந்த முகாம் விடுதலைப் புலிகளால் தாக்கப்படவிருந்த செய்தி கிழக்குப் பகுதியில் கிடைத்தது. கடல் வழியைத் தவிர, மற்ற அனைத்தும் முற்றுகைக்குள்ளாகியிருந்தன.

மரணத்தின் நிழல்

இரவில் தளத்தின் மீது கடுமையான மோர்ட்டர் (சிறுபீரங்கி) குண்டுத் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக வானொலியில் செய்தி கிடைத்தது. திரிகோணமலையிலிருந்து கிளம்பியபோது, சக கடற்படை அதிகாரிகள் எனக்குக் கைகொடுத்து வாழ்த்துத் தெரிவிக்கக்கூட விரும்பவில்லை. நான் நிச்சயம் சாகத்தான் போகிறேன் என்றே அவர்கள் கருதினார்கள்.

இரவில் நாங்கள் பீரங்கி பொருத்தப்பட்ட படகில் அங்கிருந்து கிளம்பி, கிழக்குக் கடற்கரை வழியாகவும், தீவின் தலைப்பகுதியைச் சுற்றிக்கொண்டும் பயணம் செய்தோம். திரிகோணமலையிலிருந்து முல்லைத்தீவைக் கடந்து, பருத்தித் துறைக்குச் சென்று காலையில் காரைநகரை அடைந்தோம். கடல் மார்க்கமாக வந்தது பாதுகாப்பானதாக இருந்தது. காரைநகர் கடல் வழியில் இலங்கைக் கடற்படை ரோந்து வந்தது. நாங்கள் தளத்தை அடைந்தபோது, காயமடைந்தவர்கள் அங்கிருந்து அருகில் உள்ள பலாலி விமானப்படை தளத்துக்குக் கொண்டுசெல்லப்பட்டனர்.

இரவு நேரப் பணியில் இருந்த வீரர்கள் தங்கள் பணியை முடித்துக்கொண்டு கிளம்பிக் கொண்டிருந்தார்கள். முதல் நாள் இரவு, பல முறை வெடிகுண்டுத் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகவும் அன்றைய நாள் இரவில் இன்னும் அதிகத் தாக்குதல்களை எதிர்பார்க்கலாம் என்றும் அங்கிருந்து கிளம்பிக்கொண்டிருந்த வீரர்கள் எங்களிடம் தெரிவித்தனர். தளத்தில் இரண்டாம் நிலை அதிகாரியாக எனக்குப் பணி வழங்கப்பட்டிருந்தது.

இந்த நிகழ்வுகளில் ஒரு ஒழுங்கு இருந்தது. சண்டையின்போது பொதுவாகப் பகல் நேரத்தில் இடையில் சற்று நேரம் ஓய்வு கடைப்பிடிக்கப்பட்டது. இரவில் விமானம் வழியாகப் பார்க்க முடியாத அளவுக்கு இருளில் இருந்த விடுதலைப் புலிகளுக்கு நல்ல பாதுகாப்பு கிடைத்தது. அதனால், பொதுவாக அவர்கள் இரவு நேரங்களிலேயே தாக்குதல் நடத்தினர். ‘பாஸிலான் 5000’, ‘பாஸிலான் 2000’ என்று அழைக்கப்படும் உள்ளூர் தயாரிப்பு மோர்ட்டர் குண்டுகள் மூலம் விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்திக்கொண்டிருந்தார்கள். எத்தனை மோர்ட்டர்கள் பயன்படுத்தப்பட்டன என்பதை அந்தக் குண்டுகளுக்குள் இருந்த பெல்லட்டுகளின் எண்ணிக்கை உணர்த்தின. இவை புலிகள் பிரத்யேகமாகத் தயாரிக்கும் வெடிகுண்டுகள். பஸ்களின் நடைப்பகுதியில் உள்ள அலுமினியத்தைக் கொண்டு தயாரிக்கப்பட்டவை. ஆனால், இந்தக் குண்டுகள், அவற்றின் கூர்முனை கீழே படும்படி நேரடியாகத் தரையில் விழுந்தால்தான் வெடிக்கும். வெடிக்காத குண்டுகளைக் காலை நேரங்களில் நாங்கள் சேகரித்தோம். உண்மையில், பல குண்டுகள் வீணடிக்கப்பட்டிருந்தன. போகப்போகத் தங்கள் தொழில்நுட்பத்தைப் புலிகள் மேம்படுத்தினார்கள்.

முடிவுக்கு வந்த முற்றுகை

எனக்கு நினைவு தெரிந்து, பல வாரங்களுக்கு இரவில்தான் பெரும்பாலும் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. ஏப்ரல் மாத இறுதியில் நாங்கள் பதில் தாக்குதல்களைத் தொடங்கினோம். அதிகாலையில், விமானப் படைகள் ராணுவ தளத்தைச் சுற்றியுள்ள இடங்களில் குண்டுகளை வீசி, ராணுவத்தினருக்கு வழி ஏற்படுத்திக் கொடுத்தன. ஆயுதம் தாங்கிய வாகனங்களில் சென்ற ராணுவத்தினர், புலிகளின் தற்காப்பு வியூகங்களைத் தகர்த்தபடி முன்னேறிச் சென்றனர். அவற்றைத் தொடர்ந்து காலாட்படை வீரர்கள் சென்றனர். தரைப் பகுதிகளை ராணுவத்தினர் கைப்பற்றியவுடன், கடற்படைத் துருப்புகள் அந்தப் பகுதிகளில் நிலைபெறத் தொடங்கின. எங்கள் தரப்பில் சில வீரர்கள் உயிரிழந்தனர். சிலருக்குக் காயம் ஏற்பட்டது. கடற்படைத் தளத்தை இழந்துவிடக் கூடாது என்பது வியூகரீதியாக முக்கியமாக இருந்தது. பதில் தாக்குதல் நடவடிக்கைகள் முடிவுற்றதும், நாங்கள் தளத்தை விட்டு வெளியில் வந்தோம். புலிகளின் தாக்குதல் அத்தனை மோசமான பாதிப்பை ஏற்படுத்திவிடவில்லை என்பதை எங்களால் உணர முடிந்தது. மோர்ட்டர் தாக்குதலில் ஈடுபட்டவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்திருக்கும் என்று என்னால் சொல்ல முடியவில்லை. ஆனால், வேறுவிதமான அழிவுகள் ஏற்பட்டிருந்ததைப் பார்க்க முடிந்தது.

காரைநகரில், கண்ணில் பட்ட அனைத்துமே சேதப்படுத்தப்பட்டிருந்தன. அப்பகுதியைக் கடந்து சென்ற ராணுவ வீரர்களால் 90% வீடுகள் வலுக்கட்டாயமாக உடைத்துத் திறக்கப்பட்டிருக்க வேண்டும் என்று தோன்றியது. தமிழர்களின் கிராமத்தின் வழியே செல்லும்போது, சிங்கள ராணுவம் எந்த மாதிரியான மனப்பான்மையுடன் நடந்துகொள்ளும் என்பதை நான் நேரில் பார்த்தது அங்குதான். பார்வையில் என்ன பட்டாலும் அதைச் சேதப்படுத்தினார்கள். அலமாரிகள் திறந்துகிடந்தன. ஆடைகள் கலைக்கப்பட்டுக் கிடந்தன. குடும்பப் புகைப்படங்கள் நொறுக்கப் பட்டிருந்தன. கட்டப்பட்டிருந்த ஆடு, மாடுகள் அவிழ்த்து விடப்பட்டிருந்தன. சில வீடுகளுக்குள் பசுக்கள் இருந்ததைப் பார்த்தேன். அங்கிருந்து வெளியேறியவர்கள் ஒரு முறைக்கு இரு முறை யோசித்துப் பார்த்தார்கள் என்றால், மீண்டும் தங்கள் வீடுகளுக்குத் திரும்ப மாட்டார்கள் என்று தோன்றியது. ஒருவேளை, அவர்கள் இளைஞர்களாக இருந்தால், விடுதலைப் புலிகள் அமைப்பில் சேர்ந்துவிடுவார்கள் என்றும் தோன்றியது.

அதிகாரத்தின் அச்சுறுத்தல்

கோயில்களுக்குச் சென்றுவிடும்படி மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டிருந்தது. ராணுவம்தான் அப்படி அறிவித்தது. எந்த ஒரு ராணுவம் அணிவகுத்துச் செல்லும்போதும், வீடுகளுக்குள் ஏதேனும் அசைவு தென்பட்டால், கொஞ்சம்கூடத் தயங்காமல் சுட்டுவிடுவார்கள். ஆனால், வழிபாட்டுத் தலங்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தக் கூடாது என்பது ஒரு விதி. எனவே, கோயில்களுக்குச் சென்றுவிடுமாறு மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. பிற்பாடு, சோதனை நடத்துவதற்கும் அது எளிய வழியாக இருந்தது.

ஒரு சில நாட்களிலேயே, அந்தத் தீவு ராணுவத்தின் தரைப்படை கட்டுப்பாட்டில் வந்தது. மக்களைச் சோதனையிடும் பொறுப்பும் அவர்கள் வசம் வந்தது; புலிகள் மக்களிடையே ஊடுருவியிருக்கிறார்களா என்பதைக் கண்டறிய! ஆனால், வேறு வகையான அராஜகங்களையும் என்னால் கவனிக்க முடிந்தது. அதனால்தான், ஆண்களையும் பெண்களையும் தனித்தனியாகப் பிரித்து நிறுத்துமாறு ராணுவத்தினர் சொன்னபோது நான் ஆட்சேபித்தேன். அப்பெண்களுக்கு என்ன நேருமோ எனும் அச்சம் என்னிடம் இருந்தது.

இவ்விஷயத்தில் கடற்படை தலையிட வேண்டும் என்று வடக்குப் பகுதி தளபதியான எனது மேலதிகாரியிடம் சொன்னேன். இறுதிப் பொறுப்பு நம்முடையதுதான். எனவே, இப்போது நாம் தலையிட்டாக வேண்டும் என்றேன். ராணுவ நடவடிக்கைகளுக்கு ராணுவம்தான் பொறுப்பு என்றாலும், மக்களின் பாதுகாப்புக்கும், நலனுக்கும் கடற்படைதான் பொறுப்பு. ராணுவத்தினரின் செய்கைகள் நமக்குத்தான் பிரச்சினையை ஏற்படுத்தும். எனவே, முதலிலிருந்தே நாம் இவ்விஷயத்தில் பொறுப்பெடுத்துக்கொள்ள வேண்டும் என்றேன். என்ன ஆனாலும் சரி, குடும்பங்கள் ஒன்றாகவே வைக்கப்பட வேண்டும் என்று கூறினேன். குடும்பத்துடன் இருந்தால் மக்கள் பாதுகாப்பாக உணர்வார்கள். அண்டை வீட்டுக்காரர்களுடன் இருந்தால்கூட அப்படி உணர மாட்டார்கள் என்று கருதுகிறேன். இதையடுத்து, பொதுமக்கள் தொடர்பான இறுதி முடிவுகளை கடற்படை பொறுப்பு தளபதிதான் எடுப்பார் என்று முடிவெடுக்கப்பட்டது.

திட்டமிட்ட திருட்டு

கொஞ்சம் கொஞ்சமாக அந்தத் தீவை விட்டு, தரைப்படை வீரர்கள் வெளியேறத் தொடங்கினார்கள். வீரர்கள் அங்கிருந்த வீடுகளில் பொருட்களைத் திருடியது, அவர்கள் வெளியேறிச் சென்ற பிறகு தெரியவந்தது. தங்கள் வீரர்களைக் கட்டுப்பாட்டுடன் வைத்திருக்க வேண்டும் என்று ராணுவ அதிகாரிகளிடம் சொன்னேன்.

மிகவும் கவனமாகத் திட்டமிட்டு நடத்தப்பட்ட கொள்ளை அது. பூஜை அறையில்தான் பொதுவாகக் குடும்பங்களின் நகை, பணம் வைக்கப்பட்டிருக்கும் என்பது ராணுவ வீரர்களுக்குத் தெரியும். அதற்காகத்தான் கதவுகளை உடைத்து உள்ளே நுழைந்தார்கள் - தங்க நகைகளைத் தேடி. இதுபோன்ற கொள்ளைகளைப் பற்றி நான் ஏற்கெனவே கேள்விப்பட்டிருந்தேன். ஆனால், நேரில் பார்த்தது அதுதான் முதல் முறை.

நினைத்துப் பாருங்கள்… இன்றைக்கு உங்கள் வீடு நல்ல நிலையில் இருக்கிறது. திடீரென்று வீட்டை விட்டு வெளியேறி, வேறு எங்காவது போக வேண்டும் என்று உங்களுக்குச் சொல்லப்படுகிறது. சில வாரங்கள் கழித்து, திரும்பி வந்து பார்த்தால் உங்கள் வீடு சூறையாடப்பட்டிருக்கிறது. உங்களுக்கு எப்படி இருக்கும்? அது உங்கள் வாழ்நாள் சேமிப்பாக இருக்கும். எல்லாம் போய்விட்டிருக்கும். தலைமுறை தலைமுறையாகச் சேகரிக்கப்பட்ட உழைப்பின் பலன் அனைத்தும் நாசப்படுத்தப்பட்டிருக்கும்.

ஒரு குடும்பத்தின் புகைப்பட ஆல்பத்தைப் பற்றி ஒரு அந்நியருக்கு என்ன கவலை. ஆனால், அந்தக் குடும்பத்தைப் பொறுத்தவரை அது ஒரு பொக்கிஷம். அந்த ஆல்பத்தில் பல நினைவுகளின் தொகுப்பு பாதுகாப்பாகச் சேகரிக்கப்பட்டிருக்கும். இப்போது அந்த நினைவுகள் அத்தனையும் அலங்கோலமாகியிருக்கும்.

ஒருமுறை இரவு உணவு முடிந்தவுடன், “ஏன் இத்தனை கொள்ளைச் சம்பவங்கள் நடக்கின்றன?” என்று சில இளம் அதிகாரிகளிடம் கேட்டேன். படையினர் இப்படிச் செய்ய எப்படி அனுமதிக்கப்படுகிறார்கள் என்றேன். இப்படியெல்லாம் செய்வது விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுக்குச் சாதகமாக அமைந்துவிடுமே என்றும் கேட்டேன். உடனே, வீரர்கள் கண்ணிவெடித் தாக்குதலில் காயமடைந்து கை,கால்களை இழந்தால் அவர்களுக்குக் காப்பீடு தேவைப்படும் என்றெல்லாம் ஒரு நீண்ட கதையைச் சொன்னார்கள். “இதோ பாருங்கள், உங்கள் படை வீரர்களின் கை,கால்களைப் பற்றி நீங்கள் கவலைப்படத் தேவையில்லை. அரசு இருக்கிறது; அமைச்சகம் இருக்கிறது. உங்கள் வீரர்களின் நலனை அவர்கள் பொறுப்புடன் கவனித்துக்கொள்வார்கள். பொதுமக்களிடம் கொள்ளையடிக்க வேண்டியதில்லை” என்று சொன்னேன். போரில் இப்படியெல்லாம் நடக்கத்தான் செய்யும் என்று அவர்கள் வாதிட்டனர். இருக்கலாம். ஆனால், நாம் பயிற்சி பெற்ற, நேர்மையான வீரர்கள் என்றால், நமக்குக் கீழ் பணியாற்றும் படை வீரர்களை முறைப்படுத்த வேண்டும். சிலரால் இதைச் செய்ய முடிந்தாலே அந்த மாற்றத்தை நாம் கொண்டுவந்துவிட முடியும். ஆனால், அதைச் செய்ய யாரும் விரும்புவதில்லை. அதனால் அவர்கள் பலனடைகிறார்களா, அல்லது அதுதான் எளிதான தெரிவாக இருக்கிறதா?

அழிவின் கோர முகம்

ஒரு இடத்திலிருந்து வெளியேறுவதற்கு முன்னர், வீரர்களிடம் ஏதேனும் திருட்டுப் பொருட்கள் இருக்கின்றனவா என்று சோதிப்பது கடற்படையில் வழக்கமான நடைமுறை. தங்கள் நம்பகத்தன்மை கேள்விக்குள்ளாக்கப்படுவதாக வீரர்கள் புகார் சொல்வதுண்டு. ஆனால், துப்பாக்கிகளைப் பரிசோதிப்பதுபோல் இதுவும் ஒரு பயிற்சிதான். துப்பாக்கி சுடும் பயிற்சி முடிந்தவுடன், துப்பாக்கியும் உங்கள் ‘பாக்கெட்’டும் காலியாகத்தான் இருக்கின்றன என்பதை நிரூபித்தாக வேண்டும். இது பாதுகாப்பு தொடர்பானது. வருத்தம் கொள்வதற்கு அதில் ஏதும் இல்லை. போர்ச் சூழலில் இருக்கிறோம் என்று காரணம் காட்டி, காலப்போக்கில் இந்த நடைமுறைகள் குறைக்கப்பட்டுவிட்டன. ஆனால், நீங்கள் அமைதிச் சூழலில் இருந்தாலும் சரி; போர்ச் சூழலாக இருந்தாலும் சரி, தவறு தவறுதான்!

என்னால் கொள்ளையைத் தடுக்க முடியவில்லை. ஆனால், திருடிய பொருட்களுடன் தீவை விட்டு வீரர்கள் வெளியேறுவதைத் தடுக்க முடிந்தது. தரைப்படை வீரர்கள் கடற்படைப் படகுகளில்தான் பயணித்தாக வேண்டும். எனவே, வீரர்களின் உடைமைகளைத் தவிர வேறு பொருட்களுக்குப் படகுகளில் அனுமதி இல்லை என்று ஒரு உத்தரவு பிறப்பித்தேன். திருடப்பட்ட பொருட்கள் அத்தனையும் நடைபாதை மேடை மீது குவித்து வைக்கப்பட வேண்டியதாயிற்று!

அங்கு குவிக்கப்பட்டிருந்த பொருட்களில் ‘ஃபிரேம்’செய்யப்பட்ட திருமணப் புகைப்படங்களும் இருந்தன. அவை யாரோ சிலரின் புகைப்படங்கள்; யாருடைய வீடுகளிலிருந்தோ எடுக்கப்பட்டிருந்தன. அதாவது, பணம் மட்டும் விஷயமல்ல. இதை எப்படி விளக்க முடியும் என்று தெரியவில்லை. குழந்தைகள் பயன்படுத்திய பொம்மைகள், சைக்கிள்கள் என்று என்னென்னவோ பொருட்கள் இருந்தன. ஆரம்பத்தில் அது சாதாரணமான திருட்டைப் போல்தான் இருந்தது. அப்புறம்தான் அது முற்றிலும் வேறு மாதிரியானது என்று தெரிந்தது. அதாவது, போர் வெற்றிச் சின்னங்களைச் சேகரிப்பது. அழிக்க வேண்டும் என்று உங்களுக்கு உத்தரவிடப்பட்டால், கண்ணில் படும் அனைத்தையும் நாசப்படுத்த வேண்டும் எனும் உள்ளுணர்வு உங்களுக்குள் உருவாகிவிடும்போலும்!

இலங்கைக் கடற்படையில் ‘கொமடோர்’ பதவியில் இருந்த அஜித் போயகொடவின் ‘எ லாங் வாட்ச்: வார், கேப்டிவிட்டி அண்ட் ரிட்டர்ன் இன் லங்கா’ புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்டது. அஜித் போயகொட சொல்ல, கேட்டு எழுதியவர் சுனிலா கலப்பட்டி.

© ‘தி கார்டியன்’

தமிழில்: வெ.சந்திரமோகன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x