Published : 26 Oct 2016 08:53 AM
Last Updated : 26 Oct 2016 08:53 AM

ஹிலாரியை ‘அம்பலப்படுத்தியமைக்கு’ நன்றி புதின்!

விக்கிலீக்ஸுக்காக நன்றி கடவுளே! நான் ஒப்புக்கொள்கிறேன்... உண்மையில் ஹிலாரி கிளிண்டனின் நிலைப்பாடுதான் என்ன என்றே தொடக்கத்தில் குழப்பத்திலிருந்தேன். ஆனால், விக்கிலீக்ஸின் புண்ணியத்தில், கோல்டுமேன் ஷாக்ஸ் மற்றும் மற்ற வங்கிகளுடனான அவர் உரைகளைப் படிக்க வாய்ப்பு கிடைத்ததிலிருந்து, இன்றைக்கு அமெரிக்காவுக்குத் தேவையான அதிபராக அவர் ஆகலாம் என்று உறுதியாக நம்புகிறேன்.

உண்மையில், அந்த உரைகள் மிகச் சிறப்பானவை. நல்ல பார்வை, செயல்களைச் செய்து முடிப்பதற்கான நடைமுறை அணுகுமுறை, நமது சமூகப் பாதுகாப்பு வலைப்பின்னலை வலுப்படுத்துவதற்கான தேவையையும், சமூகத் திட்டங்களைத் தொடர்ந்து மேற்கொள்வதற்குத் தேவையான வளர்ச்சியை உருவாக்குவதற்கு அமெரிக்க வணிக உலகத்தைக் கட்டவிழ்த்துவிடுவதையும் சமன்செய்யும் அளவுக்கு ஆரோக்கியமான உள்ளுணர்வு ஆகியவை அந்த உரைகளில் வெளிப்படுகின்றன.

எனவே, நன்றி விளாடிமிர் புதின் - ஆட்சி நடத்துவதில் ஹிலாரிக்கு இருக்கும் நம்பிக்கையை வெளிப்படுத்தியமைக்கு. அதே ஹிலாரியே தேர்தல் பிரச்சாரங்களில் அதிகம் வெளிப்பட்டிருக்க வேண்டும் என்றும், அவர் உறுதியாக நம்பும் விஷயங்களுக்காகவே அவருக்குப் பெரும்பான்மை கிடைக்க வேண்டும் என்றும் விரும்புகிறேன்.

‘விக்கிஹிலாரி’ என்கிறீர்களா? நான் அவர் பக்கம்தான்.

யதார்த்தக் கனவு

ஏன்? 2013 மே மாதம் பிரேசிலின் பான்கோ இடாவ் நகரில் நடந்த நிகழ்ச்சியில் அவர் பேசிய வார்த்தைகள் என்று விக்கிலீக்ஸ் குறிப்பிட்டிருக்கும் உரையிலிருந்தே தொடங்கு வோம்: “வர்த்தகத்தை அதிகரிக்க நம்மிடம் ஒரு ஒருங்கிணைந்த திட்டம் தேவை என்று நினைக்கிறேன். மேலும், இறக்குமதிப் பொருட்கள் மீது சுங்கவரி விதிக்கும் பாதுகாப்புவாதத்தையும், சந்தை, வர்த்தகத்தின் மீதான தடைகளையும் கட்டுப்படுத்த வேண்டும்” என்று ஹிலாரி பேசியிருக்கிறார்.

“திறந்த வர்த்தகம், திறந்த எல்லைகள், நீடித்த வளம் கொண்ட, எதிர்காலம் கொண்ட ஒரு ஒரு பிராந்தியப் பொதுச் சந்தைதான் எனது கனவு. அந்தப் பிராந்தியத்தில் ஒவ்வொருவருக்கும் வாய்ப்பு இருக்க வேண்டும்” என்றும் அவர் கூறியிருக்கிறார்.

கேட்கவே இனிமையாக இருக்கிறது. நாடுகள் ஒன்றுக்கொன்று வர்த்தகம் செய்துகொள்கின்ற, பணி, படிப்பு, சுற்றுலா, வணிகம் ஆகியவை தொடர்பாகப் பல்வேறு தரப்பினர் தங்களுக்குள் ஒத்துழைப்புடன் செயல்படுகின்ற ஒரு பிராந்தியம். குறைவான முரண்பாடுகள், அதிகமான வளத்துடன் கூடிய வளர்ச்சி குறிப்பாக, புதுப்பிக்கத் தக்க ஆற்றலின் அடிப்படையிலான வளர்ச்சி கொண்ட பிராந்தியம்.

நமது பிராந்தியத்தை அல்லது ஐரோப்பிய ஒன்றியத்தை அல்லது ஆசிய வர்த்தக நாடுகளை - வர்த்தகம், சுற்றுலா, அறிவு, உழைப்பாளர்கள் ஆகியவற்றின் போக்குகள் கட்டுப்படுத்தப்படும் நிலையில் உள்ள மத்தியக் கிழக்குப் பிராந்தியத்துடன் ஒப்பிட்டுப் பார்த்தால், ஹிலாரியின் பார்வை எத்தனை இயல்பானது என்று தெரியும்.

சுதந்திர வர்த்தகம் மற்றும் தொழிலாளர் இயக்கங்களால் பாதிக்கப்பட்டிருக்கும் சிறுபான்மை அமெரிக்கர்களுக்கு இழப்பீடு கிடைக்கும் வகையிலும், நல்ல முறையில் அவர்கள் பாதுகாக்கப்படும் வகையிலும் நாம் சில சமரசங்கள் செய்ய வேண்டியிருக்குமா? அதற்குப் பெயர் பிரச்சினையைச் சரிசெய்தல்.

2013 ஏப்ரல் 18-ல் மார்கன் ஸ்டான்லி குழு முன்னர் நிகழ்த்திய உரையில், சிம்ஸன் பெளல்ஸ் ஆணையம் பரிந்துரைத்த பற்றாக் குறை குறைப்புத் திட்டத்தைப் புகழ்ந்தார் ‘விக்கி’ ஹிலாரி. வரி அமைப்பில் சீர்திருத்தம் கொண்டுவருவது முதல், முதலீடுகளை அதிகரிப்பது, தொழில் முனைவோர்களை ஊக்குவிப்பது, குறிப்பிட்ட சில வரிகளை அதிகரிப்பது, சில செலவுகளைக் குறைப்பது போன்ற பரிந்துரைகளைக் கொண்ட திட்டம் அது.

பெரும் பேரம் எனும் திட்டத்தின் இறுதி வடிவம் பல வடிவங்களை எடுக்கலாம் என்று ஹிலாரி சொன்னார். எனினும், தனிப்பட்ட முறையில் பேசும்போது, “சிம்ஸன் பெளல்ஸ் ஆணையம் சரியான வரைவுத் திட்டத்தை முன்வைத்திருக்கிறது. உதாரணத்துக்கு, நாம் செலவுகளைக் கட்டுப்படுத்த வேண்டும்; நம்மிடம் போதுமான வருமானம் இருக்க வேண்டும்; மேலும் வளர்ச்சியை அதிகரிக்க வேண்டும். இது மூன்று பாகங்கள் கொண்ட சூத்திரம்” என்றார்.

அவர் சொன்னது சரிதான். வணிகம் - சமூகத் துறைகள், ஜனநாயகக் கட்சியினர் குடியரசுக் கட்சியினர் என்று தேய்ந்துபோன பொருளாதாரப் பாதையிலிருந்து வெளிவருவதும், எதிர்காலத் தலைமுறையினரைக் காப்பதும் அவசியம்.

சுற்றுச்சூழலில் அக்கறை

2013 அக்டோபரில் ‘கோல்டுமேன் ஷாக்ஸ்’ நிகழ்ச்சியில் பேசிய ஹிலாரி, 2010-ல் நிறைவேற்றப்பட்ட ‘டாட் பிராங்க் வால் ஸ்ட்ரீட் சீர்திருத்தம் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம்’ வங்கிகள் மீது விதித்திருக்கும் கட்டுப்பாடுகளை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று பேசியிருக்கிறார் போலும். அத்தனை சட்டங்களையும் விட்டொழிப்பது என்பதல்ல அவரது கருத்து. சிறிய அளவிலான வணிகத்துக்கும், புதிய தொழில்களுக்கும் அவை தேவையில்லாத பாரமாக இருக்கக் கூடாது என்பதை உறுதிசெய்வதுதான் அவரது எண்ணம்.

ஹிலாரி தொடர்பாகப் படிக்கும்போது, திறமையான, நடைமுறைக்கேற்ற, மத்திய இடது அரசியல் தலைவராகவும், வர்த்தக விரிவாக்கம், தொழில் வளர்ச்சி, உலகளாவிய ஒருங்கிணைப்பு ஆகியவற்றை நோக்கி அமெரிக்காவைக் கொண்டு செல்லக் கூடிய வகையில் வணிகச் சமூகத்துடனும், குடியரசுக் கட்சியினருடனும் இணைந்து பணியாற்றக் கூடிய தலைவராகவும் எனக்குப் படுகிறார். இந்தக் கொள்கைகளில் உள்ள குறைகளால் தொழிலாளர்கள் பாதிக்கப்படாத வகையிலான நடவடிக்கைகளை இரட்டிப்பாக்கும் தலைவராகவும்!

வெற்றிக்குப் பங்கமில்லை

உண்மையில், ’விக்கிலீக்ஸ்’ மூலம் தெரியவந்திருக்கும் ஹிலாரியாகவே, தேர்தல் பிரச்சாரத்தின்போதும் தன்னை முன்னிறுத்தியிருந்தால், பெரும்பான்மை வாக்குகள் கிடைக்காது என்ற எண்ணத்திலேயே தனது பிரச்சாரங்களை அவர் அமைத்துக்கொண்டார். அதில் எனக்கு வருத்தம்தான். உண்மையைத் துணிச்சலாகப் பேசுவதற்காகவும், தலைமைப் பண்பை வெளிப்படுத்துவதற்காகவும் அவரது மதிப்புதான் உயர்ந்திருக்கும். வாக்குகள் குறைந்துவிடாது.

எல்லாவற்றையும் தாண்டி, விக்கிலீக்ஸுக்கு நன்றி. நான் அதிகம் அக்கறை கொண்டிருக்கும் விஷயங்களில் சரியான சமநிலை கொண்ட உள்ளுணர்வு அவரிடம் உண்டு என்று நான் உறுதிசெய்துகொண்டேன். எனவே, மீண்டும் நன்றி புதின் அத்தகைய ஹிலாரியை ‘அம்பலப்படுத்தியதற்கு’!

‘தி நியூயார்க் டைம்ஸ்’

தமிழில்: வெ.சந்திரமோகன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x