Published : 05 Oct 2016 09:14 AM
Last Updated : 05 Oct 2016 09:14 AM

உயர் கல்வியில் மாநிலங்களை ஈடுபடுத்துவது அவசியம்

கட்டுப்பாடுகள் அற்றதாகவும் பரந்துபட்டதாகவும் கல்வி இருக்க வேண்டும்

உலக அளவில் இந்தியக் கல்வி நிலையங்கள் தரத்தில் மேலும் மேலும் உயர வேண்டும், பல்கலைக்கழகங்களின் ஆய்வுகளும் வெளியீடுகளும் அதிகரிக்க வேண்டும், ஆய்வுக்கான விருதுகள் பெருக வேண்டும் என்று ஒவ்வொரு ஆண்டும் இந்தியா கனவு காண்கிறது. இந்தியக் கல்லூரிகளிலிருந்தும் பல்கலைக்கழகங்களிலிருந்தும் படித்து முடித்துப் பட்டம் பெற்று வெளியேறுவோரில் 75% பேர், தாங்கள் படிக்கும் உயர் கல்வியில் தரம் இல்லாததால், ஆய்வுத் துறைகளிலோ புதிய கண்டுபிடிப்புகளிலோ ஏதும் சாதித்துவிடுவதில்லை என்று அறிக்கைகள் கூறும்நிலையில்கூட, அரசு இப்படிக் கனவு காண்கிறது.

இந்தப் பிரச்சினைக்கு மத்திய அரசு எளிய ஒரு தீர்வை வைத்திருக்கிறது. தன்னுடைய கட்டுப்பாட்டில் உள்ள இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகம், மருத்துவ அறிவியல் கழகம் ஆகியவற்றின் எண்ணிக்கையை ஆண்டுதோறும் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இப்படிச் செய்தால் தானாகவே தரம் உயர்ந்துவிடும் என்று நம்புகிறது. இப்படிச் செய்வதன் மூலம் கல்வி மற்றும் ஆய்வின் தரத்தைக் கூட்டுவதில் தனக்குள்ள பொறுப்பைக் குறைத்துக்கொள்கிறது. மத்திய அரசின் பொறுப்பில் உள்ள உயர் கல்வி நிறுவனங்கள் வாயிலாக ஆண்டுதோறும் பட்டம் பெறும் மாணவர்களின் எண்ணிக்கை மொத்த மாணவர்களின் எண்ணிக்கையுடன் ஒப்பிட்டால் வெறும் 1% தான்.

அதிகரிக்கும் இடைவெளி

மாநிலங்களில் உள்ள பல்கலைக் கழகங்கள் அனைத்தும் சேர்ந்து 95% பட்டதாரிகளை உருவாக்குகின்றன. நேரடியா கவும் இணைவுபெற்ற கல்லூரிகள் மூலமும் இவர்கள் படிக்கின்றனர். அப்படியிருந்தும் கல்விக் கழகங்களை நிர்வகிக்கும் அமைப்புகளிலும் அவற்றுக்கு நிதி வழங்கும் உயர் குழுவிலும், கொள்கைகளை வகிக்கும் இடங்களிலும் பல்கலைக்கழகங்களுக்கான பிரதிநிதித்துவம் அறவே இல்லாமலும், மிகக் குறைவாகவுமே இருக்கின்றன. மத்திய அரசு எடுக்கும் எல்லா பெரிய முடிவுகளும் மத்திய கல்விக் கழகங்களை மனதில் கொண்டே எடுக்கப்படுகின்றன. தனியார் பல்கலைக்கழகங்கள் மீது மத்திய அரசு நம்பிக்கை வைக்கிறது. அவற்றில் சிலவோ அரசியல் அரவணைப்பையும் பண பலத்தையுமே நம்பியுள்ளன. மத்திய, மாநில அரசு கல்வி நிலையங்களுக்கிடையே தரத்திலும் ஆய்வு நடவடிக்கைகளிலும் வேறுபாடு அதிகரித்துக்கொண்டே வருகிறது.

உலகுக்கே வளர்ச்சி மற்றும் ஆராய்ச்சிக்கான மையமாக இந்தியா திகழ வேண்டும், உற்பத்தித் துறை வளர்ச்சி பெற வேண்டும், ஆண்டுக்கு ஒரு கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும், உலகுக்கே அறிவை வழங்குவதில் வல்லரசு நாடாக இருக்க வேண்டும் என்றெல்லாம் இந்திய அரசு கனவு காண்கிறது. ஆனால், நமது பெரும்பாலான பல்கலைக்கழகங்களின் நிலைமையைப் பார்க்கும்போது இவை நிறைவேறுவது சாத்தியமில்லை என்ற எண்ணமே ஏற்படுகிறது.

இந்தப் பிரச்சினையின் ஆழத்தை மாநிலங்களும் உணர்ந்திருக்கவில்லை. அடுத்த தொழில்நுட்பக் கல்விக் கழகத்தைத் தங்களுடைய மாநிலத்தில் எங்கே நிறுவ வேண்டும் என்று கேட்பதில்தான் அவை அக்கறை செலுத்துகின்றன. உயர் கல்வியில் தங்களுடைய பங்களிப்பு எப்படி இருக்க வேண்டும் என்பதை மாநில அரசுகள்தான் தீர்மானிக்க வேண்டும்.

கட்டுப்பாடற்றது கல்வி

தங்களுடைய பொறுப்பில் உள்ள மத்திய கல்வி நிலையங்களில் மட்டுமல்ல, பொதுவாகவே நாட்டின் உயர் கல்வி நிலையங்களின் தரம் மற்றும் ஆய்வுகளை மேம்படுத்த வேண்டும் என்ற பொறுப்பை மத்திய அரசு அப்பட்டமாகக் கைவிடுகிறது. இந்நிலையில் மாநிலங்கள்தான் கல்வியின் தரத்தைக் கூட்டுவதற்கு அதிகப் பொறுப்புகளை ஏற்க வேண்டும். அதற்குப் பொருளாதார திட்டமிடல், அடித்தளக் கட்டமைப்பு மேம்பாடு ஆகியவற்றுடன் உயர் கல்வியையும் மேம்படுத்துவதை இணைக்க வேண்டும். மாநிலங்களின் தொழில், உற்பத்தி உள்ளிட்ட நடவடிக்கைகளுக்கு நேரடியாகத் தொடர்புள்ளதாக பொறியியல், மேலாண்மைக் கல்வி அமைய வேண்டும். இதைச் செய்வதற்குப் பல வழிகள் உள்ளன.

உதாரணத்துக்கு, ஒரு பொறியியல் கல்லூரியில் அருங்காட்சியகம் அல்லது கண்காட்சியகம் இருப்பதாகக் கற்பனை செய்வோம். அந்தக் கல்லூரி இருக்கும் இடத்துக்குச் சுற்றுவட்டாரத்தில் 25 கி.மீ. பகுதியில் கிடைக்கும் கனிம வளங்கள், இயற்கைவள ஆதாரங்கள், எரியன்கள், சுற்றுச்சூழல், தொழில்துறை - வேளாண்துறைப் பொருட்கள், சேவைகள், மனிதத் திறன்கள், தொழில்நுட்பங்கள் ஆகியவை அதில் இடம் பெற வேண்டும். அக்கல்லூரியின் பாடத்திட்டமும் ஆய்வும் அப்பகுதியின் வேளாண்மை, தொழில்களை மையமாகக் கொண்டு அமைய வேண்டும். அந்த கல்விக்கூடமும் அதன் செயல்திட்டங்களும் அப்பகுதியின் பொருளாதார, தொழில்துறை தேவைகளுக்குத் தீர்வு காண்பதாக இருக்க வேண்டும். அப்படிச் சொல்வதால் அனைத்துமே உள்ளூர் சூழலை மட்டுமே மையமாகக் கொண்டு இருக்க வேண்டும் என்பதில்லை. உலக அளவில் நடைபெறும் மாற்றங்களையும் சந்தையின் தேவைகளையும் புறக்கணித்துவிடக் கூடாது. கல்வி என்பது கட்டுப்பாடுகள் அற்றதாகவும் பரந்துபட்டதாகவும் இருக்க வேண்டும்.

தனியார் துறை பங்கேற்பு

அத்தகைய முயற்சிகளுக்கான நிதிக்கு மாநிலங்கள் என்ன செய்யும்? மாநிலங்கள் தங்களுடைய பங்களிப்பை அதிகரிக்கச் செய்ய வேண்டும். இத்துறையில் மத்திய அரசும் அதிக நிதி ஒதுக்க வேண்டும். தனியார் துறையும் வெளிநாடு வாழ் இந்தியர்களும் உயர் கல்வி, ஆராய்ச்சிக்கு நிதி தர வேண்டும். மாநிலக் கல்வி நிலையங்கள் தனியாரிடமிருந்தும் வெளிநாடு வாழ் இந்தியரிடமிருந்தும் எளிதாக நிதி பெற வகை செய்யப்பட வேண்டும். அரசும் தனியார் துறையும் இணைந்து செயல்படுவது சாத்தியமாகும். ஆனால், ஒரே விதமான மாதிரியை அனைவர் மீதும் திணிக்க முடியாது. ஒரே விதமான விதிகளும் கட்டுப்பாடுகளும் உள்ளூர் முயற்சிகளையும் ஆர்வங்களையும் அழித்துவிடும்.

மாநிலங்கள் பற்றி ஏற்பட்டுள்ள கண்ணோட்டம் மாற வேண்டும். தரமுள்ள கல்வி, ஆராய்ச்சியில் மாநில அரசுகள் கவனம் செலுத்த வேண்டும். உயர் கல்வியிலும் ஆராய்ச்சியிலும் தனியார் பங்கேற்பு என்பது இப்போது இருக்கும் விதத்தில் கூடாது. தொழில்துறையின் லாப நோக்கத்துக்காக மட்டும் ஆய்வுகள் நடைபெறக் கூடாது. வளர்ச்சி, தொழில்நுட்ப முன்னேற்றத்துக்கானதாக இருக்க வேண்டும். அப்படிப்பட்ட மாற்றத்தைக் கொண்டுவரும் பொறுப்பு அரசுக்கும் தொழில்துறைக்கும் இருக்கிறது. தொழில்துறையில் சிறியது, பெரியது என்று இரண்டுமே இதில் ஈடுபாடு காட்ட வேண்டும். அத்துடன் கல்வி நிலையங்கள், அறிவுஜீவிகள், மாநிலங்களின் ஊடகங்களும் இதில் பங்கேற்க வேண்டும். உயர் கல்வியிலும் ஆராய்ச்சியிலும் மாநில அரசுகள் தீவிரப் பங்களிப்பைச் செலுத்தவில்லை என்றால், நாட்டின் உயர் கல்வித் துறையும் ஆய்வுத் துறையும் சரிவையே சந்திக்கும்.

சுருக்கமாகத் தமிழில்: சாரி, © ‘தி இந்து’ ஆங்கிலம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x