Published : 10 May 2016 09:20 AM
Last Updated : 10 May 2016 09:20 AM

அறிக்கைகளில் தலித் - பழங்குடிகள்

தேர்தல் அறிக்கைகளில் பட்டியல் சாதியினர், பழங்குடியினருக்குப் புதிய திட்டங்கள் எதுவும் கிடையாது

நமது ஜனநாயகம் பட்டியல்சாதியினர், பழங்குடியினர் நலனுக்கு முக்கியத்துவம் தருகிறது. இது பற்றித் தேர்தல் அறிக்கைகள் என்ன சொல்கின்றன?

இடஒதுக்கீடு அடிப்படையில் ஒதுக்கப்பட்டுள்ள அரசுப் பணிகளின் காலியிடங்கள் நிரப்பப்படவில்லை என்றால், வருடக்கணக்கில் தேங்கிக் குவியும். அவையே பின்னடைவுக் காலியிடங்கள். ஆட்சிக்கு வந்தால் அவற்றை உடனடியாக நிரப்புவோம் என்கின்றன திமுக, மக்கள் நலக் கூட்டணி, காங்கிரஸ் கட்சிகள்.

வேலையும் கல்வியும்

திமுகவைப் பொறுத்தவரை இது மனமறிந்து சொல்லும் பொய். ஆதிதிராவிடர் - பழங்குடியினர் நலத் துறைச் செயலராக நான் 1997-ல் பணியாற்றினேன். அப்போது பின்னடைவுக் காலியிடங்கள் பற்றிய முழுமையான அறிக்கை தயாரித்தேன். அதை அரசு வெளியிட மறுத்தது. அதற்குப் பதிலாக, தமிழகத்தில் வெறும் 24,000 காலிப் பணியிடங்கள் மட்டும்தான் இருக்கின்றன என்ற போலி அறிக்கையை திமுக அரசு வெளியிட்டது. அவற்றையும்கூட நிரப்ப திமுக முயலவில்லை. அஇஅதிமுக ஆட்சிக் காலத்திலும் காலிப் பணியிடங்களை நிரப்ப உயர் நீதிமன்றம் இரண்டு முறை ஆணை பிறப்பித்தது. அஇஅதிமுக அதைப் பின்பற்றவில்லை.

கிராமப்புறங்களில் விவசாயக் கூலித் தொழிலாளர்களாக உள்ள தலித் - பழங்குடிகளில் உருவாகும் முதல் தலைமுறைப் பெண் பட்டதாரிகள் மருத்துவம், பொறியியல் படிக்க அரசுக் கல்லூரிகளில் அரசு செலவில் கல்வியும், தங்கும் விடுதியும் தரப்படும் என்கிறது திமுக தேர்தல் அறிக்கை.

தமிழ்நாட்டில் அரசுக் கல்லூரிகளில் மட்டுமல்ல, 2012 முதலாக சுயநிதி மருத்துவம் மற்றும் பொறியியல் கல்லூரிகளிலும் பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடி மாணவர்களுக்குக் கட்டணம், விடுதி, உணவு அனைத்தும் 100% அரசால் வழங்கப்படுகிறது. (அரசாணை எண்:92, அரசாணை எண்: 6) இந்த விவரமே திமுகவுக்குத் தெரியவில்லை என்பதை இந்த வாக்குறுதி தெரிவிக்கிறது.

ஆதிதிராவிடர் - பழங்குடியின மாணவர்களுக்கு வழங்கப்படும் கல்வி உதவித்தொகை உயர்த்தி வழங்கப்படும் என்கிறது திமுக. அதற்கான நிதி ஒதுக்கீடு 50% அதிகரிக்கப்படும் என்கிறது பாமக.

கல்வி உதவித்தொகையாக 100% கட்டணமும் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்பதற்காக டாக்டர் அம்பேத்கர் வகுத்த அந்தக் காலத் திட்டம் இது. மத்திய அரசின் திட்டம். இந்தக் கல்வி உதவித்தொகையைக் கூட்டவோ குறைக்கவோ மாநில அரசுகளுக்கு எந்த அதிகாரமும் இல்லை. ஆனாலும் என்ன.. வாக்குறுதிகள்தானே என்று இவை சொல்லப்படுகிறதா தெரியவில்லை.

சிறப்புக் கூறுத் திட்டம்

இது தலித் மக்களுக்கான தனியான சிறப்புத் திட்டம். “சிறப்புக் கூறுத் திட்டத்தை முறையாகச் செயல்படுத்தி அதன் முழுப் பலன்களும் அந்தச் சமுதாய மக்களுக்கு உரிய காலத்தில் சேர்வதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்’’ என்கிறது திமுக.

திமுக ஆட்சியில்தான் முதன்முதலாக 1998-99-ல் சிறப்புக் கூறுத் திட்டத்துக்கு நிதி ஒதுக்குவது ஆரம்பமானது. மீண்டும் திமுக ஆட்சியில்தான் 2008-2009-ல் சிறப்புக் கூறுத் திட்டத்துக்கு முழுமையான நிதி ஒதுக்கீடு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. இதற்காக திமுக அரசைப் பாராட்டலாம். அஇஅதிமுக ஆட்சியிலும் நிதி ஒதுக்கீடு தொடர்கிறது.

முழு நிதி ஒதுக்கியும் திமுக தேர்தல் அறிக்கை குறிப்பிடுகிறபடி பட்டியல் சாதியினர் முழுப் பயன் அடையாமல் இருப்பதற்குக் காரணம் என்ன? அதிமுக, திமுக ஆட்சிகள் இந்த நிதியைப் பொதுத் திட்டங்களுக்குத் திருப்பிவிட்டு வெற்றுக் கணக்குக் காட்டுகிறார்கள். அதைத்தான் மறைமுகமாக திமுக அறிக்கை ஒப்புக்கொள்கிறது.

சிறப்புக் கூறுத் திட்டம் பற்றி நாம் தமிழர் கட்சியும், அந்தத் திட்டத்தை முறையாக அமலாக்க சட்டம் உருவாக்க வேண்டும் என்று மக்கள் நலக் கூட்டணியும் பேசுகின்றன. வரவேற்கிறோம். பாராட்டுகிறோம். ஆனால், சிறப்புக் கூறுத் திட்டத்தைப் பற்றி எதுவும் பேசாமல் அதிமுக அறிக்கை மவுனம் காக்கிறது.

சில வெற்று வார்த்தைகள்

வனவள உரிமைச் சட்டம் 2008-ஐ முழுமையாக நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுப்போம் என்கிறது நாம் தமிழர் கட்சி. அந்தப் பெயரில் ஒரு சட்டமே இல்லை. பழங்குடி வன உரிமைச் சட்டம்- 2006ஐத்தான் சொல்கிறார்கள் போலத் தெரிகிறது.

பஞ்சமி நில மீட்பு ஆணையத்தை மீண்டும் செயல்படுத்துவோம் என்கிறது திமுக. இது ஒரு புரட்டு. 2006-ல் 58 லட்சம் ஏக்கர் நிலங்களைத் தலித்துகளுக்கு வழங்குவோம் என்று தேர்தல் அறிக்கை தந்தனர். ஆட்சிக்கு வந்த பிறகு, அரசிடம் நிலமே இல்லை என்று கையை விரித்தனர். ஆங்கிலேயர் காலத்தில் ஒதுக்கப்பட்ட பஞ்சமி வகை நிலங்கள் எவ்வளவு இருக்கின்றன என்ற அறிக்கையைக்கூட 26 ஆண்டுகளாக வெளியிட மனம் இல்லாதவர்கள் திமுகவும் அஇஅதிமுகவும். எந்தக் காலத்திலும் பஞ்சமி நிலங்களை மீட்டுக்கொடுக்க மாட்டார்கள். இவை வெற்றுவார்த்தைகளே.

புதிய அறிவிப்புகள்

அரசு ஒப்பந்தங்களிலும் குத்தகைகளிலும் தலித் மக்களுக்குக் குறிப்பிட்ட சதவீதம் ஒதுக்கப்படும் என்கின்றன, நாம் தமிழர் கட்சியும் மக்கள் நலக் கூட்டணியும். மலைவாழ் மக்கள் கூடுதலாக வசிக்கும் மாவட்டங்களில் மாதம்தோறும் மலைவாழ் மக்கள் குறைதீர் கூட்டம் நடத்தப்படும் என்கிறது மக்கள் நலக் கூட்டணி.

கல்வராயன் மலை, ஜவ்வாது மலையில் புதிய கலைக் கல்லூரிகள் துவங்கப்படும் என்கிறது மக்கள் நலக் கூட்டணி. நீலகிரி, குமரி மாவட்ட மக்களைப் பாதிக்கும் தனியார் காடுகள் பாதுகாப்புச் சட்டம் ரத்து செய்யப்படும் என்கிறது மக்கள் நலக் கூட்டணி. பட்டியல் சாதியினருக்கு 5 மருத்துவக் கல்லூரிகளைத் தொடங்குவோம் என்கிறது மக்கள் நலக் கூட்டணி.

தொழில் தொடங்க நிதி வழங்கப்படும். பட்டியல் சாதியினருக்கான மாவட்ட வேலைவாய்ப்பு மையங்கள் ஏற்படுத்தப்படும். டாக்டர் அம்பேத்கர் பவுண்டேஷன் நிறுவப்படும் என்கிறது அஇஅதிமுக. பட்டியல் சாதியினருக்கான தனி வங்கி தொடங்குவோம் என்கிறது தமிழக காங்கிரஸ்.

மக்கள் நலக் கூட்டணி தேர்தல் அறிக்கை மட்டும், பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியினரின் உணர்வுகளை அறிந்ததாக உள்ளது. இந்தக் கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் இருப்பதால் பட்டியல் சாதியினருடன் விரிவான கலந்தாய்வு நடந்திருப்பது வெளிப்படுகிறது. பிற கட்சிகள் யாவும் அவர்களுக்கு என்ன தோன்றுகிறதோ அதைத்தான் சொல்லியிருக்கிறார்கள். பல்வேறு தரப்பினரைச் சந்தித்துக் குறைகள் கேட்ட மு.க.ஸ்டாலின் கூட தலித் - பழங்குடிகள் பிரதிநிதிகளை அழைத்து அவர்களிடம் குறைகள் கேட்கவில்லை.

மக்கள் நலக் கூட்டணி உட்பட பல்வேறு கட்சிகளும் தந்துள்ள பல வாக்குறுதிகள் ஏற்கெனவே நடைமுறையில் உள்ள திட்டங்கள்தான். புதியவை அல்ல. பள்ளிகள், விடுதிகள், நிலம் அளித்தல், வீடு கட்டித் தருதல், கல்வி உதவித்தொகை, வழிபாட்டுத் தலங்கள், மயானங்கள், வன்கொடுமைத் தடுப்புச் சட்டம், சிறப்புக் கூறுத் திட்டம் எனப்படும் பட்டியல் சாதியினர் துணைத் திட்டம், பணியில் ஒதுக்கீடு, பின்னடைவுப் பணியிடங்கள் மற்றும் அருந்ததியர் உள்ஒதுக்கீடு உள்ளிட்டவை யாவும் ஏற்கெனவே நடைமுறையில் உள்ள திட்டங்களே.

அதனால், அரசியல் கட்சிகளின் தேர்தல் அறிக்கைகளில் பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடி மக்களுக்கு என்று புதிய திட்டங்களோ, புதிய அணுகுமுறைகளோ எதுவும் கிடையாது என்று கூறலாம்.

- கட்டுரையாளர், தமிழக அரசின் முன்னாள் கூடுதல் தலைமைச் செயலர்

தொடர்புக்கு: rcg1952@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x