Last Updated : 19 May, 2016 07:55 AM

 

Published : 19 May 2016 07:55 AM
Last Updated : 19 May 2016 07:55 AM

கேள்வி கேட்கும் தகுதி உண்டா?

வாக்களிப்பின் மூலம்தான் மாற்றம் நிகழும்; வாய்ப் பேச்சின் மூலம் அல்ல

வாக்குப் பதிவைக் கணிசமாக உயர்த்துவதற்கான முயற்சிகள் வரலாறு காணாத அளவில் நடந்தன. தேர்தல் ஆணையமும் ஊடகங்களும் பிற அமைப்புகளும் திரைப்பட நட்சத்திரங்கள் உள்ளிட்ட பிரபலங்களும் எடுத்துக்கொண்ட முயற்சிகள், பிரச்சாரங்கள் ஆகியவை அந்த அளவுக்கு அதிகமாக இருந்தன. படைப்பூக்கம் மிகுந்த விழிப்புணர்வுப் பிரச்சாரங்களை ஆணையமும் ஊடகங்களும் மேற்கொண்டன. வாக்குகளைக் கோரும் கட்சிகளின் பிரச்சாரத்துக்கு இணையாக, தேர்தல் ஆணையத்தின் வாக்களிக்கக் கோரும் பிரச்சாரங்கள் இருந்தன. இவற்றையெல்லாம் பார்க்கும்போது இந்த முறை வாக்குப் பதிவு 80%-ஐத் தாண்டும் என்று கணிக்கக்கூடிய நிலை இருந்தது.

நடந்தது வேறு. தமிழகம் முழுவதும் 73.76% வாக்குகள் பதிவாகியிருக்கின்றன. 2011 சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழகத்தில் பதிவான வாக்குகளைவிட இது குறைவு. சென்னை, காஞ்சிபுரம், கன்னியாகுமரி மாவட்டங்களில் 70%-க்கும் குறைவு. சென்னை மாவட்டத்தில்தான் மிகக் குறைவாக 60.99% வாக்குகள் மட்டுமே பதிவாகியிருக்கின்றன.

காரணம் என்ன?

வாக்குரிமை என்பது வாக்களிக்கும் உரிமையை மட்டுமல்ல; வாக்களிக்க மறுக்கும் உரிமையையும் உள்ளடக்கியது என்பதில் ஐயமில்லை. தேர்தலைப் புறக்கணிப்பது என்பது ஜனநாயகபூர்வமான போராட்ட வழிமுறைகளில் ஒன்று என்பதிலும் மறுப்பில்லை. ஆனால், பொதுவாக வாக்குகள் குறைவாகப் பதிவானதற்கும் தலைநகரில் மாநிலத்திலேயே குறைவான அளவில் வாக்குகள் பதிவானதற்கும் சம்பந்தம் இருப்பதாகத் தெரியவில்லை.

தேர்தல் புறக்கணிப்பு என்னும் போராட்ட வழிமுறையை மேற்கொள்வது என்றால், அரசு அமைப்புகள் மீதும் கட்சிகள் மீதும் கோபமும் அதிருப்தியும் கொண்டவர்கள் சிலர் ஒன்றாகச் சேர்ந்து தேர்தலைப் புறக்கணிப்பதாக அறிவிப்பார்கள். குறிப்பிட்ட தொகுதி அல்லது பகுதி, அல்லது குறைந்தபட்சம் ஒரு தெருவைச் சேர்ந்தவர்களாவது அப்படி அறிவிக்க முடியும். ஊடகங்கள் மூலம் வெளி உலகுக்கு இது தெரியவரும். அதன் மூலம் அவர்களது அதிருப்திக்கான காரணங்கள் விவாதத்துக்கு உள்ளாகும். தேர்தல் நேரத்தில் தங்கள் கோரிக்கையை அரசியல்வாதிகளிடம் நேரடியாகச் சொல்வதற்கு இதை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்திக்கொள்ள முடியும். ஆனால், படித்தவர்களும், ஊடகங்களுடனான தொடர்பை ஒப்பீட்டளவில் அதிகம் கொண்டவர்களுமான சென்னை நகர மக்கள் அப்படி எதுவும் செய்துவிடவில்லை. ஆகவே, தேர்தல் புறக்கணிப்பு என்னும் அரசியல் ஆயுதத்தை அவர்கள் கையில் எடுத்ததாகக் கொள்ள முடியாது.

எந்த உரிமையில் கேள்வி?

கடந்த டிசம்பர் மாதம் வெள்ளம் சென்னையைப் புரட்டி எடுத்தபோது, நகரமெங்கும் பரவலாக அதிருப்தி எழுந்தது. மக்கள், கிடைத்த வாய்ப்பு எதையும் நழுவவிடாமல் ஊடகங்களில் தங்கள் ஆற்றாமையைப் பதிவுசெய்தார்கள். சமூக ஊடகங்களில் சிலர் தொடர் பிரச்சாரங்களையே நடத்தினார்கள். இவர்கள் அரசை நோக்கியும் அரசின் பல்வேறு அமைப்புகளையும் அந்த அமைப்புகளின் பல்வேறு பிரதிநிதிகளை நோக்கியும் பேசினார்கள்.

மக்கள் எந்த உரிமையில் அரசைப் பார்த்துக் கேள்விகளை எழுப்புகிறார்கள்? அரசாங்கம் செயல்படுவதற்கான ஆதாரங்களில் ஒன்றான வரிப் பணம் மக்களிடமிருந்தே வருவதால், அரசைக் கேள்வி கேட்கும் உரிமை அவர்களுக்கு இயல்பாகவே இருக்கிறது. ஆனால், வரிப் பணத்தால் செயல்படுத்தப்படும் பல்வேறு சேவைகளின் பலன்களையும் மக்கள் அன்றாடம் பெற்றுவருகிறார்கள். தவிர, வரி செலுத்துவது மட்டும்தான் கேள்வி கேட்பதற்கான தகுதி என்றால், அதிக வரி செலுத்துபவர்களுக்கு அதிகத் தகுதி வந்துவிடும். அதாவது, குடிமக்களின் கேள்வி கேட்கும் உரிமையில் சமத்துவம் இருக்காது.

நியாயமான எதிர்பார்ப்பு

தங்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசும் அதன் அமைப்புகளும் தங்கள் கடமையைச் செய்ய வேண்டும் என்னும் நியாயமான எதிர்பார்ப்பு இந்தக் கேள்விகளுக்குப் பின்னால் இருக்கிறது. அப்படியானால், அந்தத் தேர்வில் கேள்வி கேட்பவர்களின் பங்கு என்ன என்னும் கேள்வி எழுகிறது. தங்கள் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்கத் தங்களுக்கு இருக்கும் உரிமையைப் பயன்படுத்தாதவர்கள், திறமையான, நேர்மையான பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுப்பதில் தங்களுக்கு இருக்கும் கடமையை ஆற்றாதவர்கள் அவர்களைக் கேள்வி கேட்கும் தார்மிகத் தகுதியை இழந்துவிடுகிறார்கள். அரசு அமைப்புகளை, ஆட்சியாளர்களைக் கேள்வி கேட்கும் சந்தர்ப்பங்களில், இந்த அமைப்பைக் கட்டி எழுப்புவதில் தமக்குள்ள பங்கை நிறைவேற்றினோமா என்னும் கேள்வியைக் குடிமக்கள் தங்களுக்குள் எழுப்பிக்கொள்ள வேண்டும்.

தேர்தல் மூலம் அமையும் அரசு, தன்னை ஆதரித்து, எதிர்த்து வாக்களித்தவர்களுக்கு மட்டுமல்ல; யாருக்குமே வாக்களிக்காதவர்களுக்கும் உரிய அரசுதான். அப்படித்தான் நமது அரசியல் சாசனம் சொல்கிறது. அரசின் சேவைகள், சலுகைகள் ஆகியவை வாக்களிப்பை அடிப்படையாக வைத்துத் தரப்படுவதில்லை. அரசியல் சாசனம் தன் குடிமக்களின் உரிமைகளை அந்த அளவுக்கு மதிக்கிறது. ஆனால், இந்த அரசியல் சாசனம் தரும் உரிமைகளைப் பயன்படுத்திக்கொள்ளும் வாக்காளர்கள், அது தம்மிடம் எதிர்பார்க்கும் கடமையைச் செய்கிறார்களா? அது அளிக்கும் அடிப்படையான உரிமைகளில் ஒன்றான வாக்குரிமையைப் பயன்படுத்திக்கொள்கிறார்களா? கேள்வி கேட்பதற்கும் எல்லோரையும் விமர்சித்துப் பதிவுகள் போடுவதற்கும் தயாராக இருக்கும் வாக்காளர்கள் வாக்களிக்க ஏன் தவறுகிறார்கள்?

ஆயுதத்தின் வலிமை

இதற்குக் காரணம் கோபம் அல்லது அதிருப்தி என்றால், அதை வெளிப்படுத்த அவர்கள் என்ன செய்கிறார்கள்? தங்களுக்குக் கிடைத்துள்ள ஆயுதத்தை அவர்கள் ஏன் பயன்படுத்தவில்லை? அந்த ஆயுதத்தின் வலிமை அவர்களுக்குத் தெரியவில்லை அல்லது அவர்கள் தங்கள் அதிருப்தியை அவ்வளவு தீவிரமாக எடுத்துக்கொள்ளவில்லை என்பதே இதற்கான அர்த்தம்.

இந்தத் தேர்தலில் பல இடங்களில் மும்முனை, நான்முனைப் போட்டிகள் நிலவுகின்றன. பல தொகுதிகளில் வெற்றி - தோல்வியைச் சில வாக்குகளே தீர்மானிக்கக்கூடும். இந்நிலையில், ஒவ்வொரு வாக்கும் முக்கியமானதுதான். சென்னையிலும் கன்னியாகுமரியிலும் இருக்கும் படித்த வாக்காளர்களுக்கு இதெல்லாம் தெரியும். தெரிந்தும் அவர்களில் பலர் வாக்களிக்க வரவில்லை என்றால், அவர்களுடைய மனப்போக்கை எப்படிப் புரிந்துகொள்வது?

2011-ல் நடந்த தேர்தலில் அதிமுக கூட்டணி பெரும் வெற்றி பெற்றது. ஆனால் வெற்றி விகிதம் அவ்வளவு பெரிதல்ல. உதாரணமாக, சைதாப்பேட்டை தொகுதியில் அக்கட்சி வேட்பாளர் செந்தமிழன் 79,856 வாக்குகள் பெற்றார். இரண்டாமிடம் பெற்ற திமுக வேட்பாளர் மகேஷ்குமார் பெற்ற வாக்குகள் 67,785. வித்தியாசம் 12,071. பதிவாகாத வாக்குகள் 1,27,765. வாக்கு வித்தியாசத்தைப் போலச் சுமார் பத்து மடங்கு வாக்குகள் பதிவாகவில்லை. இப்படி அரைகுறையான வாக்குப் பதிவின் மூலம் தேர்ந்த்டுக்கப்படுபவர்களை உண்மையான மக்கள் பிரதிநிதிகள் என்று எப்படிச் சொல்ல முடியும்? இத்தகைய நிலைக்குக் காரணம் வாக்காளர்களா அல்லது அரசியல்வாதிகளா?

இன்றைய நிலவரத்தில் ஒரு நல்ல வேட்பாளர் பரிதாபமாகத் தோற்கலாம். ஆனால், அவர் பெறும் ஒவ்வொரு வாக்கும் அவருக்கான ஆதரவின் வலிமையைக் காட்டுகிறது. நேர்மையான வேட்பாளர்களுக்கான வாக்குகள் அதிகரிப்பது நேர்மையாளர்கள் அதிகமாகத் தேர்தலில் நிற்கவும் அவர்களில் சிலரேனும் என்றேனும் வெற்றிபெறுவதற்கும் வழிவகுக்கும். ஒவ்வொருவரும் தன் தேர்வின் அடிப்படையில் நேர்மையாக வாக்களித்தால்தான் இந்த மாற்றம் நிகழும். வாக்குச் சாவடிப் பக்கம் போகாமல், வாய் வலிக்கப் பேசிக்கொண்டிருப்பதன் மூலம் நிகழாது.

அமைப்பின் மீதான நிராசையும் அவநம்பிக்கையும் இதற்குக் காரணமாக இருக்கலாம். அவநம்பிக்கை வாதிகளுக்கு அதற்கான காரணங்கள் வலுவாக இருக்கக்கூடும் என்பதையும் அந்த அவநம்பிக்கைக்கான காரணமும் இந்த அமைப்பில்தான் இருக்கிறது என்பதையும் மறுக்க முடியாது. ஆனால், அந்த அவநம்பிக்கையைப் போக்குவதற்கான சிறிய வாய்ப்பையேனும் தேர்தல் அளிக்கிறது. அதிருப்தியைப் பதிவுசெய்வதற்கான வாய்ப்பையும் அளிக்கிறது. இதைப் பயன்படுத்திக்கொள்ள மறுப்பவர்கள் இந்த அமைப்பைக் கேள்வி கேட்கும் தார்மிக உரிமையை இழந்துவிடுகிறார்கள்.

தேர்தல் முடிவுகள் நாளை தெரிந்துவிடும். வாக்கு வித்தியாசம் குறைவாக இருக்கும் தொகுதிகளில் வாக்களிக்காமல் இருந்த வாக்காளர்கள் தங்கள் தவற்றை அப்போது உணர்வார்கள்!

தொடர்புக்கு: aravindan.di@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x