Last Updated : 02 May, 2016 09:08 AM

 

Published : 02 May 2016 09:08 AM
Last Updated : 02 May 2016 09:08 AM

விஜயகாந்தின் சிரிப்பு!

மதுரை அபிராமி தியேட்டர் அருகே நடந்த விஜயகாந்த் கூட்டத்துக்குப் போனேன்.

* எம்ஜிஆரின் பிரச்சார வேனை வாங்கி, தமிழக மூலைமுடுக்கெல்லாம் பிரச்சாரம் செய்த விஜயகாந்த், இப்போது அதிகமாக திறந்த வேன் பிரச்சாரம் செய்வதில்லை. மாவட்டத்துக்கு இரண்டு, மூன்று இடத்தில் மட்டும் பொதுக்கூட்டம் போட்டுப் பேசுகிறார். அதிகபட்சம் அரை மணி நேரம்தான் பேச்சு.

* மாலை 7 மணி கூட்டத்துக்கு 3.30 மணிக்குத்தான் பிளாஸ்டிக் நாற்காலிகள் வந்தன. மேடையில் இருப்போருக்கும் சரி, கீழே தொண்டர்களுக்கும் சரி எல்லாமே கையில்லாத பிளாஸ்டிக் நாற்காலிகள்தான். கூட்டச் செலவைக் கணக்கிடுவதற்காக, எத்தனை சேர்? எத்தனை பல்பு? எத்தனை ஸ்பீக்கர் என்று தேர்தல் கமிஷன் ஆட்கள் கறாராக எண்ணிக்கொண்டிருந்தார்கள். அவர்களுக்கு பவ்யமாகப் பதில் சொல்லிக்கொண்டிருந்தார்கள் தேமுதிகவினர். மதுரையில் ஜெயலலிதா கூட்டம் நடந்த இடத்தில் இவ்வளவு கெடுபிடியைப் பார்க்க முடியவில்லை. பழுதடைந்த மின்கம்பம், மின்கம்பிகளை எல்லாம் அரசாங்க செலவில் மாற்றியதைக் கண்டுகொள்ளக்கூட ஆளில்லை.

* முதல்வர் ஜெயலலிதாவின் பிரச்சாரக் கூட்டத்துக்கு 15 நாட்களுக்கு முன்பே ஏற்பாடுகள் தொடங்கிவிடும்! விஜயகாந்த் கூட்ட ஏற்பாடுகள் முந்தைய நாள் மாலையில்தான் தொடங்குகின்றன. கூட்டத்துக்கு என பொதுவான ஃபார்முலா எதுவும் இல்லை. எல்லாவற்றையும் தீர்மானிப்பது உள்ளூர் நிர்வாகிகள்தான்.

* 30 அடி நீளம், 16 அடி அகலம். இதுதான் மேடை. பின்னணியில் 30-க்கு 15 அடிக்கு ஒரு ஃபிளக்ஸ். அதில் நடுநாயகமாக விஜயகாந்த் சிரிக்க.. இடதுபுறம் இடதுசாரித் தலைவர்களான ஜி.ஆர்., முத்தரசனும் ஜி.கே.வாசனும் வலது புறம் வைகோவும் திருமாவளவனும் சிரித்தபடி இருந்தார்கள்.

* ‘தேமுதிக- மக்கள் நலக் கூட்டணி -தமாகா கூட்டணி’ சார்பாக மதுரை மாவட்ட வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டம் என்றது பேனர். மக்களுக்கு சிறு குழப்பத்தை ஏற்படுத்தியது அந்த பேனர். “தக்காளி ரசம்னுதானே சொல்வோம். இதென்ன தக்காளி, வத்தல், மிளகு, பூண்டு, கறிவேப்பிலை, கொத்துமல்லி, உப்பு, தண்ணி ரசம்னு சொல்றாங்க” என்று சிரித்தார்கள் அவர்கள்.

* மேடையில் 3 வரிசையாக 40 நாற்காலிகள் போடப்பட்டன. பக்கத்துக்கு ஒன்றாக 2 ஏர்கூலர்களும், 2 டேபிள் ஃபேன்களும் மட்டுமே வைக்கப்பட்டிருந்தன. நிர்வாகிகள் மேடையேறிய பிறகு, குளிர்ந்த காற்று எட்டாததால், புழுக்கத்தோடு பேசிச் சென்றார் கேப்டன்.

* வேடசந்தூரில் (திண்டுக்கல்) தமிழ்த்தாய் வாழ்த்துடன் பொதுக்கூட்டம் தொடங்கியது. ஆடல் பாடலும் நடைபெற்றது. தேசியக் கொடியுடன் மேடையேறிய சில தொண்டர்கள், 100 % வாக்குப்பதிவை வலியுறுத்திய பேனரையும் கையில் பிடித்திருந்தார்கள். மதுரையிலோ பிரச்சாரப் பாடல்களை மட்டுமே ஒலிபரப்பினார்கள். தேமுதிகவின் தேர்தல் அறிக்கை அத்தனையையும் பாட்டாகவே பாடிவிட்டார்கள். இடையில் கொஞ்ச நேரம் மதிமுக கொள்கை விளக்கப் பாடல்களும் ஒளிபரப்பாகின.

* திறந்த வாகனங்களில் ஆட்களை அழைத்துவர தேர்தல் ஆணையம் தடைவிதித்துள்ளது. இதனால், வேடசந்தூர், மதுரையில் நடந்த விஜயகாந்த் கூட்டங்களுக்கு மினி லாரிகளில் வந்தவர்களை நகர எல்லையிலேயே இறக்கிவிட்டுவிட்டார்கள் போலீஸார். ஆனால், ஜெயலலிதா பிரச்சாரக் கூட்டத்துக்காக, அடிமாடுகளைப் போல ஆட்கள் திறந்த வேனில் அழைத்துவரப்பட்டபோது கேள்வி கேட்க நாதியில்லை.

* இரவு 8 மணிக்கு இருக்கைகள் நிரம்பிவிட்டன. கேப்டன் வரும் வரை உள்ளூர் நிர்வாகிகள் உரையாற்றினார்கள். தேமுதிக மாவட்ட நிர்வாகிகள் நன்றாகவே பேசுகிறார்கள் (விஜயகாந்துடன் ஒப்பிடுகையில்). வேட்பாளர்களில் பெரும்பாலானோர், வாட்ஸ்அப்பில் வந்த கதை, ஃபேஸ்புக் மீம்ஸ் எல்லாவற்றையும் தங்களுடைய சொந்தக் கருத்து மாதிரியே பேசிக் கைத்தட்டல் வாங்கினார்கள்.

* மைக் பிடிச்ச விஜயகாந்த், ஆரம்பத்திலேயே “ஹாஹாஹா…”வென்று இடைவிடாமல் சிரித்தார். அந்தச் சிரிப்புக்குக் காரணம் சொல்லாமல், “பேரன்பு கொண்ட பெரியோர்களே, தாய்மார்களே…” என்று பேச ஆரம்பித்துவிட்டார். வேடசந்தூரில் தொண்டரை அடிக்கப்போன சம்பவத்தை மதுரை கூட்டத்தில் விலாவாரியாக விவரித்தவர் எதிர்க்கட்சிப் பத்திரிகையாளர் அல்ல, சாட்சாத் விஜயகாந்த்தேதான். விஜயகாந்த் கையில எந்தக் குறிப்பும் இல்லை. மனதில் தோன்றுவதைப் பேசுகிறார் என்பது நீங்கள் அறிந்த விஷயம்தான். இந்த முறை எந்த ஊரிலும் வேட்பாளர் பெயரை அவர் மாற்றிச் சொல்லாததற்கு முக்கியக் காரணம், வேட்பாளர்களின் பெயர், கட்சி, சின்னம் போன்றவற்றை மட்டும் நிர்வாகிகள் எழுதிக்கொடுத்தபடியே தவறில்லாமல் வாசித்துவிடுகிறார். அதை வாசிப்பதற்கு மட்டும் மூக்குக் கண்ணாடியைப் பயன்படுத்துகிறார் விஜயகாந்த்.

* திருப்பரங்குன்றம் எம்எல்ஏவான ஏ.கே.டி.ராஜாவின் பேச்சைப் பலர் ரசித்தார்கள். காரணம், மதுரை பாஷை, கோவை இல்லாத பேச்சு எல்லாம் ஏதோ ஒரு விகிதத்தில் ஒன்று சேர்ந்து, அவரது பேச்சு விஜயகாந்த் பேச்சுபோலவே வெளிப்பட்டது. தூரத்தில் இருந்து சத்தத்தை மட்டுமே கேட்டவர்கள் விஜயகாந்த்தான் பேசுகிறார் என்று ஏமாறும் அளவுக்குக் குரல் பொருத்தம் கச்சிதம்.

* வாகனப் போக்குவரத்துக்கு இடையூறு இருக்கக் கூடாது என்று சாலையின் ஒரு ஓரமாகத்தான் மேடையையும், இருக்கைகளையும் போட்டிருந்தார்கள். ஆனால், விஜயகாந்த் வரும் நேரத்தில் மொத்தத் தெருவும் கூட்டத்தால் நிரம்பிவிட்டது. இரவு 9.15-க்கு திடீரென மேடையின் பின்புறமுள்ள சாலையில் சரவெடியாக பட்டாசு வெடித்தது. வந்தது விஜயகாந்த். சாலையில் குவிந்த தொண்டர்கள், அவரது பிரச்சார வேனையை உற்று நோக்கிக்கொண்டிருந்தார்கள். ஆனால், விஜயகாந்த்தோ சிவப்பு நிற ‘போர்ட் என்டோவர்’காரில் மேடை அருகிலேயே வந்திறங்கினார். கைத்தாங்கலாக மேடையேறிய விஜயகாந்த், தொண்டர்களைப் போலவே கையில்லாத பிளாஸ்டிக் நாற்காலியில் அமர்ந்து கொண்டார்.

* இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் காளிதாஸும், மார்க்ஸிஸ்ட் வாசுகியும் ‘‘மக்கள் நலக் கூட்டணி ஆட்சி வந்தால், தனிநபர் துதி பாடல் இருக்காது, சர்வாதிகாரம் இருக்காது'’ என்று அப்போதுதான் பேசிவிட்டு உட்கார்ந்தார்கள். விஜயகாந்த் மேடைக்கு வந்த குஷியில் மாவட்டச் செயலாளர் ஒருவர் தனிநபர் துதிபாடலின் உச்சத்தைத் தொட்டுவிட்டு “கேப்டனின் பொற்பாதங்களைத் தொட்டு வரவேற்கிறேன்” என்று பேச… நெளிந்தார்கள் கம்யூனிஸ்ட்டுகள்.

* “அடுத்தபடியாக நீங்கள் ஆவலோடு எதிர்பார்த்துக் காத்திருக்கிற மரியாதைக்குரிய கேப்டன் அவர்கள், வேட்பாளர் களை அறிமுகப்படுத்தி உங்கள் முன் உரையாற்றுவார்கள்” என்று சொன்னதும் டீக்கடை, பேக்கரிப் பக்கம் இருந்து திமுதிமுன்னு இளைஞர்கள் கூட்டம் முண்டியடித்துக்கொண்டு முன்வரிசைக்கு முன்னேறியது. விஜயகாந்த் மைக் பிடித்ததும், ‘அண்ணே மறைக்காதீங்க, மறைக்காதீங்க’என்று கெஞ்சிக்கிட்டே, அந்த இளைஞர்கள் செல்போனில் போட்டோ, வீடியோ எடுத்தார்கள். கொடியைத் தூக்கிப் பிடித்து விஜயகாந்தை மறைத்துக்கொண்டிருந்தவர்களை ஆத்திரத்தோடு திட்டினார்கள் அவர்கள். ஆனாலும், சில ‘கொடிகாத்த குமரன்கள்’மணிக்கொடி தாழாது பார்த்துக்கொண்டார்கள். இவ்வளவு ஆர்வமாக இருக்கீங்களே தம்பி, நீங்க எல்லாம் ம.ந.கூ. ஆதரவாளர்களா என்று விசாரித் தேன். “இல்லண்ணே, கேப்டன் போட்டோவை பேஸ்புக்ல போட்டா லைக்ஸ் அள்ளுமில்ல, அதான்” என்றார்கள்.

* “விஜயகாந்த் திக்கித் திக்கிப் பேசுறாரு.. பேசுனதையே பேசுறாரு.. பேச வந்ததையே மறந்துட்டாருன்னு பேப்பர்ல எழுதுறாங்க” என்று சொன்ன விஜயகாந்த், இந்தக் கூட்டத்திலும் அப்படித்தான் பேசினார். பேச்சின் ஆரம்பத்தில் விஜயகாந்த் சிரித்ததன் காரணத்தை, ஒவ்வொருவரும் ஆராய்ச்சி செய்து விதவிதமாகச் சொன்னார்கள். . “உங்களை எல்லாம் பாத்தா எனக்குச் சிரிப்பு சிரிப்பா வருது” என்று விஜயகாந்த் சிரித்தார் என்பது என் நண்பரின் முடிவு. எதிரில் இருந்த பதாகையில் வைகோவின் படத்தைப் பார்த்துத்தான் அவர் சிரித்திருக்க வேண்டும் என்பது என்னுடைய கணிப்பு.

தொடர்புக்கு: magesh.kk@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x