Published : 21 May 2022 03:51 PM
Last Updated : 21 May 2022 03:51 PM

இலங்கையில் பிரதமர் மாறினாலும் தொடரும் போராட்டம்! - ராஜபக்ச குடும்ப ஆட்சி முடிவுக்கு வருமா?

மா.சண்முகம், எஸ். முஹம்மது ராஃபி

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான நட்புறவு தொன்று தொட்டு நிலவி வருகிறது. இலங்கையின் மொழி, சமயம், சமூக, பண்பாடு, அரசியல் உள்ளிட்ட அனைத்துப் பிரிவுகளிலும் இந்தியாவின் தாக்கம் உண்டு. இராமாயணத் தொடர்புடைய நுவரெலியா சீதை அம்மன் கோயில், ராம்பொட அனுமன் கோயில், சிலாபம் முன்னேசுவரம் சிவன் கோயில்களுக்கு இந்தியாவிலிருந்து பக்தர்கள் ஆன்மிகப் பயணங்களை மேற்கொண்டு வருகின்றனர்.

அதுபோல இந்தியாவில் பிறந்த பௌத்த மதம் பெருமளவில் பின்பற்றப்படும் நாடுகளில் இலங்கை முதன்மையானது. இலங்கையில் பௌத்தர்கள் விமரிசையாக கொண்டாடும் வைசாக் திருவிழாவிற்கு இந்தியாவிலிருந்து பௌத்த புனித சின்னங்கள் கொண்டு செல்லப்படுகின்றன. மேலும் இலங்கையை ஆண்ட நிசங்கமல்லன் மற்றும் பராக்கிரமபாகு ஆகிய சிங்கள மன்னர்கள் ராமேசுவரத்தில் உள்ள ராமநாதசுவாமி கோவிலுக்கு திருப்பணிகள் செய்துள்ளனர்.

இலங்கையில் 1983 ஆம் ஆண்டு தமிழ் மக்கள் மீதான இனப்படுகொலைகளைத் தொடர்ந்து உண்டான உள்நாட்டு போர் தீவிரமடைந்ததையடுத்து வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலிருந்து லட்சக்கணக்கான தமிழ் மக்கள் புலம்பெயர்ந்த போது இந்தியாவில் தமிழகம் அடைக்கலம் தந்தது. இலங்கையில் ராணுவத்துக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையேயான உள்நாட்டுப் போர் மகிந்த ராஜபக்ச ஆட்சியில் முடிவுக்கு வந்ததால் அந்த நாட்டின் முடிசூடா மன்னராக பௌத்த, சிங்கள மக்களால் அவர் கொண்டாடப்பட்டார். அதனால் 2010 ஆம் ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலில் அமோக வெற்றி பெற்று மீண்டும் அதிபரானார்.

இலங்கை நாட்டின் அரசியல் சாசன விதிகளின்படி இரண்டு முறை மட்டுமே அதிபராக பதவி வகிக்க முடியும் என்ற சட்டத்தில் திருத்தம் செய்து 3-வது முறையாக மீண்டும் 2015-ஆம் ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலில் போட்டியிட்டார். ஆனால் மகிந்த ராஜபக்சவின் இனவாத ஆட்சியும், அவருடைய ஊழல்களினாலும் அதிபர் தேர்தலில் மைத்திரிபால சிறிசேனாவிடம் தோல்வி அடைந்தார். கடந்த 21.04.2019 இலங்கையில் ஐ.எஸ். பயங்கரவாதிகளால் நடத்தப்பட்ட தற்கொலை தாக்குதலில் 250க்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் உயிரிழந்தனர். 500க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த தாக்குதலைத் தொடர்ந்து தமிழர்களை மட்டுமின்றி தமிழை தாய் மொழியாகக் கொண்ட முஸ்லிம்களையும் இலங்கையில் சந்தேகக் கண் கொண்டு நோக்கும் நிலைமை உருவானது.

கடந்த 2015ம் ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலில் தமிழ், முஸ்லிம், மலையக தமிழர் வாக்குகளே மகிந்த ராஜபக்சவை தோற்கடித்து மைத்திரிபால சிறிசேனாவை தேர்வு செய்ய பெருமளவில் உதவியது. ஆனால் 2019 ஏப்ரலில் நடைபெற்ற ஈஸ்டர் குண்டுவெடிப்பு ராஜபக்ச குடும்பத்தினருக்கு சாதகமாக நிலைமைகளைத் திருப்பியது. நாட்டுக்கு சர்வாதிகாரி போன்றவர்கள் தேவை என்ற உணர்வை அது பௌத்த, சிங்கள மக்கள் மத்தியில் அதிகப்படுத்தியது. இதனால் இலங்கையில் அதிபரை தேர்வு செய்வதற்கு தமிழ், முஸ்லிம் மற்றும் சிறுபான்மையின வாக்குகள் தேவை இல்லை என்ற நிலையும் உருவாக்கப்பட்டது.

இதற்காக உள்நாட்டுப் போரின் போது விடுதலைப் புலிகளுக்கு எதிராக பணியாற்றிய அப்போதைய பாதுகாப்புச் செயலாளரும் மகிந்த ராஜபக்ச, சமல் ராஜபக்ச, பசில் ராஜபக்ச ஆகியோரின் இளைய சகோதருமான கோத்தபய ராஜபக்சவால் தான் இலங்கையில் மீண்டும் தலையெடுத்துள்ள தீவிரவாதத்தை ஒழித்துவிட முடியும் என்று இலங்கையின் பெருன்பான்மை சிங்கள பெளத்த மக்களை மகிந்த ராஜபக்சவின் தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனாவின் கட்சி நம்ப வைத்து 2019 நவம்பரில் நடைபெற்ற தேர்தலில் கோத்தபய ராஜபக்சவை அதிபர் வேட்பாளராக்கியது.கோத்தபய ராஜபக்ச வெற்றி பெற்று அதிபரானார். மகிந்த ராஜபக்ச பிரதமரானார். ஆனால் நாட்டை வளர்ச்சிப் பாதையில் ராஜபக்ச குடும்பத்தினர் அழைத்துச் செல்வார் என்று எதிர்பார்த்த பௌத்த, சிங்கள மக்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

கரோனா பரவல் காரணமாக இலங்கையில் ஏற்பட்ட கடும் பொருளாதார வீழ்ச்சியினால் டாலர் கையிருப்பு பற்றாக்குறை, பெட்ரோல், டீசல், எரிவாயு தட்டுப்பாடு, உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் கடும் விலை உயர்வினால் ராஜபக்சே குடும்பத்தினர் பதவி விலகக்கோரி பௌத்த, சிங்கள மக்களால் தலைநகர் கொழும்பில் நடத்திய தொடர் போராட்டங்கள், தனித்தீவுகளாக இருந்த தமிழர்கள் மற்றும் முஸ்லிம்களின் ஆதரவோடு இலங்கை முழுவதும் பரவி வெற்றி பெற்றது. போராட்டத்தின் ஒரு பகுதி வெற்றியாக ரணில் விக்ரமசிங்கே புதிய பிரதமராக பதவியேற்றுள்ளார். பொருளாதார நிலையை சரிசெய்வேன் என்று அவர் அந்நாட்டு மக்களுக்கு உறுதி அளித்துள்ளார். இலங்கைக்கு தேவையான பல்வேறு உதவிகளையும் இந்தியா செய்து வருகிறது. இந்தாண்டு மட்டும் 3.5 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான உதவிகளை வழங்கியுள்ளது.

ரணில் விக்ரமசிங்கேவுக்கும் கோத்தபய ராஜபக்சவுக்கும் இடையே ஒப்பந்தம் நடந்துள்ளது. இதை ஏற்க மாட்டோம் என்று எதிர்க்கட்சியினரும் போராட்டம் நடத்திவரும் மக்களும் கூறிவருகின்றனர். ராஜபக்ச குடும்ப ஆட்சி முடிவுக்கு வரும்வரை போராட்டம் தொடரும் என்று அவர்கள் அறிவித்துள்ளனர். அங்குள்ள நிலைமை எப்படி இருந்தாலும் இந்தியா என்றைக்குமே இலங்கையின் மூத்த சகோதரனாகவே இருந்தது, இனிமேலும் இருக்கும்.

2500 ஆண்டு கால உறவு

இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையே உள்ள உறவு 2,500 ஆண்டுகளுக்கும் முந்தையது. அறிவுப்பூர்வ, கலாச்சார, மத, மொழி, வர்த்தகரீதியான உறவுகளை இரு நாடுகளும் கொண்டுள்ளன. கடந்த 2009-ம் ஆண்டு இலங்கையில் உள்நாட்டுப் போர் முடிவடைந்த பிறகு, அந்நாட்டை சீரமைக்கவும், பாதிக்கப்பட்ட 3 லட்சத்துக்கும் அதிகமான தமிழர்கள் தங்கள் வாழ்வாதாரங்களை கட்டமைக்கவும் இந்தியா பல உதவிகளைச் செய்துள்ளது.

‘சார்க்’ கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் நாடுகளில் இரண்டாவது பெரிய வர்த்தக உறவை இந்தியாவுடன் அந்நாடு கொண்டுள்ளது. இலங்கையில் முதலீடு செய்யும் முதல் நான்கு நாடுகளில் இந்தியாவும் ஒன்று. பெட்ரோல் விற்பனை, தகவல் தொழில்நுட்பம், நிதிச்சேவைகள், நிலவணிகம், தொலைத்தொடர்பு, சுற்றுலா, வங்கிகள், உணவு பதப்படுத்துதல், உலோகம், டயர், சிமென்ட், வாகனம் என பல துறைகளில் 100 கோடி அமெரிக்க டாலர்களுக்கும் அதிகமான வர்த்தகத்தை இந்தியா மேற்கொண்டு வருகிறது. அந்நாட்டிற்கு ஏராளமான கடனுதவிகளையும் வழங்கி வருகிறது. புத்தர் ஞானம் பெற்ற 2,600-வது ஆண்டைக் குறிக்கும் வகையில் நடந்த ‘சம்புத்த த்வ ஜெயந்தி’ நிகழ்ச்சி இருநாட்டு உறவை வளர்க்கும் கலாச்சார நிகழ்ச்சியாக நடந்த து குறிப்பிடத்தக்கது.

இலங்கையின் மத்திய, உவா, சப்ரகமுவா மாகாணங்களில் தேயிலை மற்றும் ரப்பர் தோட்டங்களில் 16 லட்சத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் வசிக்கின்றனர். இதுதவிர, சிந்தி, போரா, குஜராத்தி, மேமன், பார்சி, மலையாளி, தெலுங்கு மக்கள் கணிசமான அளவில் வர்த்தகத்தில் ஈடுபட்டு இந்திய – இலங்கை இடையேயான உறவை வலுப்படுத்தி வருகின்றனர்.

விடுதலைப் புலிகளின் தாக்கம்

இலங்கை அரசியலில் விடுதலைப்புலிகளின் தாக்கம் மறுக்க முடியாத ஒன்றாகும். இலங்கையில் போராளிகள் இயக்கம் 1970-ம் ஆண்டுகளில் துவங்கியது. அப்போது போராளிகளில் ஒருவராக உருவெடுத்த வேலுப்பிள்ளை பிரபாகரன் 1976-ம் ஆண்டு விடுதலைப் புலிகள் இயக்கத்தை தோற்றுவித்தார். அவரது இயக்கம் உலகிலேயே அதிநவீன ஆயதங்களைக் கொண்ட, கொரில்லா இயக்கமாகும்.

கடந்த 1983-ம் ஆண்டு அவர்கள் நடத்திய தாக்குதலில் 13 சிங்கள ராணுவத்தினர் கொல்லப்பட்டது, அதற்கு ராணுவம் பதில் தாக்குதல் நடத்தியது உலகை அவர்கள் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்தது. 1985-ம்ஆண்டு விடுதலைப் புலிகள் இயக்கம் யாழ்ப்பாணத்தையும், யாழ்ப்பாண தீபகற்பத்தின் பெரும்பகுதியையும் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தது. 1987-ம் ஆண்டு வாக்கில் மற்ற போராளி இயக்கங்களை விடுதலைப்புலிகள் அழித்தனர். இயக்கத்திற்கு நிதி சேர்ப்பதற்காக வங்கிகளை கொள்ளையடித்தது, போதை மருந்து கடத்தல், வர்த்தகர்களை மிரட்டி பணம் பறித்தல் போன்ற செயல்களில் ஈடுபட்டதாகவும் அவர்கள் மீது குற்றச்சாட்டு உண்டு. பிடிபடும்போது கழுத்தில் அணிந்திருக்கும் சயனைடு குப்பியை விழுங்கி தற்கொலை செய்து கொள்வது விடுதலைப்புலிகளின் வாடிக்கை. இந்திய அமைதிப்படை இலங்கை சென்றபோது அக்டோபர் 1987-ல் விடுதலைப்புலிகள் யாழ்ப்பாணத்தின் கட்டுப்பாட்டை இழந்தனர்.

1990-ம் ஆண்டு இந்திய அமைதிப்படை வாபஸ் ஆனதும் விடுதலைப்புலிகள் பலம் பெற்று மீண்டும் பல்வேறு தாக்குதல்களை நடத்தினர். மே 21, 1991-ல் விடுதலைப்புலிகளின் தற்கொலைப் படையால் தமிழகத்தில் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொல்லப்பட்டார். 92-ம் ஆண்டில் யாழ்ப்பாணத்தில் நடந்த கண்ணிவெடியில் சிக்கி 12 மூத்த சிங்கள ராணுவ அதிகாரிகள் உயிரிழந்தனர். மே 1993-ல் இலங்கை அதிபர் ரணசிங்கே பிரேமதாசா கொலை, ஜனவரி 1996-ல் கொழும்பு மத்திய வங்கி மீதான தற்கொலைப் படை தாக்குதலில் 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு, ஜூலை 2001-ல் கொழும்பு சர்வதேச விமான நிலையம் தகர்ப்பு ஆகியவை குறிப்பிடத்தக்க சம்பவங்கள். ‘கரும்புலிகள்’ அமைப்பின் விமான நிலைய தாக்குதலில் இலங்கையின் 50 சதவீத்திற்கும் அதிகமான பயணியர் விமானங்கள் சேதமைடைந்தன.

டிசம்பர் 2000-ல் விடுதலைப்புலிகள் தன்னிச்சையாக போர்நிறுத்தம் அறிவித்தனர். ஆனால் ஏப்ரலில் சண்டை தொடர்ந்தது. 2002-ல் சிங்கள அரசு மற்றும் விடுதலைப்புலிகள் இடையே சண்டை நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டது. ஆனால், சண்டை ஓயவில்லை. 2006-ம் ஆண்டு ஐரோப்பிய யூனியன் விடுதலைப்புலிகளை தீவிரவாத அமைப்பு பட்டியலில் சேர்த்தது. பின்னர் நடந்த சண்டையில் 1000-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். சண்டை நிறுத்தத்தை சிங்கள அரசு வாபஸ் பெற்றது.

ஜனவரி 2009-ல் விடுதலைப்புலிகளின் நிர்வாக தலைமையகமாக இருந்த கிளிநொச்சி ராணுவத்தின் கட்டுப்பாட்டுக்குள் சென்றது. ஏப்ரலில் பெரும்பகுதி ராணுவத்திடம் சென்றது. விடுதலைப்புலிகளின் ஆதிக்கம் வடகிழக்கு கடற்கரையோரம் சுருங்கியது. மே மாதம் நடந்த இறுதி தாக்குதலில் பிரபாகரன் சுட்டுக் கொல்லப்பட்டார். முழு பிராந்தியத்தை ராணுவம் கைப்பற்றியது. இதன்மூலம் இலங்கையில் 37 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வந்த உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்தது. இந்த போரில் இருதரப்பிலும் ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்திருக்கலாம் என்று ஐ.நா. கணக்கிட்டுள்ளது.

இலங்கை அரசியலில் புத்த பிட்சுகள்

>> இலங்கை அரசியலில் புத்த பிட்சுகளின் தலையீடு 19-ம் நூற்றாண்டின் துவக்கத்தில் இருந்தே காணப்படுகிறது. ஆங்கிலேயர்களிடம் இருந்து இலங்கை விடுதலை பெற்ற 1948-ம் ஆண்டுக்குப் பின் புத்த பிட்சுகள் அரசியலில் தொடர்ந்து ஈடுபட்டு வந்துள்ளனர்.

>> உலகில் உள்ள மற்ற புத்த துறவிகளிடம் இருந்து இலங்கையில் உள்ள புத்த துறவிகள் வேறுபட்டவர்கள். ஆசை உள்ளிட்ட அனைத்து உலக பிடிமானங்களையும் விட்டொழிக்க வேண்டும் என்பதே புத்த மதத்தின் போதனை. ஆனால், இலங்கை புத்தமதம் அதிலிருந்து மாறுபட்டது. சமூகத்தை நல்லவழியில் நடத்திச் செல்ல அரசியலில் தலையிடுவது அவசியம் என்பதே அவர்களது கொள்கை.

>> இலங்கையில் உள்ள புத்த பிட்சுகள் வித்யாலங்காரா பிரிவு, வித்யோதயா பிரிவு என இரண்டு தரப்பாக உள்ளனர். இதில், வித்யோதயா பிரிவினர் சமூக நலன் மற்றும் பொருளாதார விஷயங்களில் மட்டுமே கவனம் செலுத்தி வந்தனர். வித்யாலங்காரா பிரிவினர் அரசியலில் கவனம் செலுத்தினர்.

1947-ல் வித்யாலங்காரா பிரிவினர் லங்கா சம சமாஜ கட்சி(எல்எஸ்எஸ்பி)-க்கு ஆதரவாக பிரச்சாரத்தில் ஈடுபட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து மற்றொரு பிரிவினர் ஐக்கிய தேசிய கட்சி(யுஎன்பி)-க்கு ஆதரவு தெரிவித்தனர். அப்போது முதல் புத்த பிட்சுகள் இலங்கை அரசியலில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

1990-ம் ஆண்டு சந்திரிகா ஆட்சியில் புத்த பிட்சுகள் மிகுந்த செல்வாக்குடன் இருந்தனர். கடந்த 2004-ம் ஆண்டு முதன்முறையாக நாடாளுமன்ற உறுப்பினராக அவர்கள் நுழைந்தது முக்கிய கட்டமாக பார்க்கப்படுகிறது.

>> இலங்கையில் கடந்த ஏப்ரல் 9-ம் முதல் அரசுக்கு எதிராக துவங்கி நடந்துவரும் போராட்டத்திலும் புத்த பிட்சுகளின் பங்கு முக்கியமானது. இடைக்கால அரசை நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தவர்களும் புத்த பிட்சுகளே.

தற்போது மால்வாது, அஸ்கிரி, அமரபுரா, ராமன்யா ஆகிய நான்கு பிரிவுகளைச் சேர்ந்த புத்த பிட்சுகள் இலங்கை அரசியலில் முக்கிய பங்கு வகிக்கின்றனர்.

இதுவரை இலங்கையை ஆண்ட பிரதமர்கள்

ஸ்டீபன் சேனநாயக்கா
1947-52
டட்லி சேனநாயக்கா
1952-53
ஜான் கொத்தலாவலை
1953-56
பண்டாரநாயக்கா
1956-59
விஜயானந்த தகநாயக்கா
1959-1960
டட்லி சேனநாயக்கா
மார்ச் 1960 – ஜூலை 1960
சிறிமாவோ பண்டாரநாயக்கா
1960-1965
டட்லி சேனநாயக்கா
1965-1970
சிறிமாவோ பண்டாரநாயக்கா
1970-77
ரிச்சர்டு ஜயவர்தனா
1977-78
ரணசிங்கே பிரேமதாசா
1978-1989
டிங்கிரி பண்ட விஜேதுங்க
1989-1993
ரணில் விக்ரமசிங்கே
1993-1994
சந்திரிகா குமாரதுங்கா
ஆக.1994 - நவ. 1994
சிறிமாவோ பண்டாரநாயக்கா
1994-2000
ரத்னசிறி விக்ரமநாயக்கே
2000-2001
ரணில் விக்ரமசிங்கே
2001-2004
மகிந்த ராஜபக்ச
2004-2005
ரத்னசிறி விக்ரமநாயக்கே
2005-2010
திசநாயக்க ஜெயரத்ன
2010-2015
ரணில் விக்ரமசிங்கே
2015-2018
மகிந்த ராஜபக்ச
அக். 2018 – டிச.2018
ரணில் விக்ரமசிங்கே
2018-2019
மகிந்த ராஜபக்ச
2019 – 2022
ரணில் விக்ரமசிங்கே
2022 - .......

- மா.சண்முகம், எஸ். முஹம்மது ராஃபி

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x