Published : 14 Apr 2022 08:50 AM
Last Updated : 14 Apr 2022 08:50 AM

நிலைநாட்டப்பட வேண்டும் சுதேசிக் கப்பல் உரிமை

ஆர்.என்.ஜோ டி குருஸ்

உலகின் மிக வேகமாக வளர்ந்துவரும் பொருளாதார நாடுகளுள் ஒன்றாக இந்தியா கணிக்கப்பட்டிருக்கிறது. பல்வேறு துறைகளில் உற்பத்தி வளர்ச்சியும், சாதகமான சூழலும், ஸ்திரமான ஆட்சியமைப்புமே அதற்கான அடிப்படைக் காரணிகள். இந்தச் சூழலைப் பயன்படுத்தி, வல்லரசு நோக்கிய பயணத்தை இந்தியா உறுதிசெய்வதற்கு, அனைத்துத் துறைகளிலும் தன்னிறைவு பெற்ற வளர்ச்சியைச் சாத்தியப்படுத்த வேண்டும்.

ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் அதன் கப்பல் உரிமைக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதை உலக வரலாறு நமக்கு உணர்த்தியிருக்கிறது. முதலாம் உலகப் போருக்கு முந்திய இங்கிலாந்தின் வர்த்தகம், உலக வர்த்தகத்தில் ஏறத்தாழ 40 சதவீத அளவுக்கு இருந்ததற்கு முக்கியக் காரணம், அவர்களுடைய கப்பல்களின் எண்ணிக்கையும் உலக அளவில் 40 சதவீதத்துக்கும் அதிகமாக இருந்ததே.

இந்த நிலையைப் பின்னாளில் ஜப்பான் எட்டிப்பிடித்ததற்கும், அவர்களின் சுதேசிக் கப்பல் உரிமைக் கொள்கையே காரணம். சர்வதேச வர்த்தகத்தில் கொடுப்பளவு சமநிலையை உறுதிசெய்து மேம்படுத்துவதற்குக் கப்பல் துறையின் பங்கு கணிசமானது. தன்னளவில் எது அந்நியச் செலாவணி விரயத்தின் காரணியோ அதுவே பெரும் கப்பலோட்டும் தொழிலுக்கான வாய்ப்பு என்பதைப் புரிந்துகொண்டால், அந்நியச் செலவாணிச் சேமிப்பின் காரணியாக மாறிவிடும். குறிப்பிட்ட காலக்கெடுவில் பெருமளவு சரக்கு இடப்பெயர்ச்சி, எரிபொருள் சிக்கனம், காற்றுமாசு குறைதல், சாலை நெருக்கடி தவிர்ப்பு போன்றவை கப்பலோட்டத்தின் இதர பயன்கள்.

வாகனங்களில் சரக்கு இடப்பெயர்ச்சி செய்வதற்கு, பல்வேறுபட்ட வாகனங்கள், கையாளும் கட்டமைப்பு வசதி, சாலை உருவாக்கம், பராமரிப்பு போன்றவை மிகவும் முக்கியமான தேவை. வாகன ஓட்டத்துக்காக நாளுக்கு நாள் அதிகரிக்கும் சுங்கக் கட்டணங்கள் நம்மைப் பயமுறுத்தியபடியே இருக்கின்றன. கடலில் பயணிக்கும் கப்பல்களுக்கோ, சாலை உருவாக்கம், அதன் பராமரிப்பு என்ற தேவையே இல்லை.

இந்தியக் கப்பல்களின் எண்ணிக்கையும் திறனும் 2019-ல் இருந்ததைவிட (1,429 கப்பல்கள்) 2021-ல் (1,463 கப்பல்கள்) கூடியிருக்கின்றன. தொழில் வளர்ச்சியைக் கணக்கில் கொண்டால், கப்பல்களின் எண்ணிக்கை இன்னும் கூடியிருக்க வேண்டும். காரணம், இன்றும் இந்தியாவுக்கான ஏற்றுமதிச் சரக்கையும் இறக்குமதிச் சரக்கையும் 93% விதேசிக் கப்பல்களும் சரக்குப் பெட்டகங்களுமே சுமந்து செல்கின்றன. ஒவ்வொரு நாளும் பல லட்சம் டாலர்கள் சரக்குக் கட்டணமாக விதேசிகளுக்குச் செல்கின்றன. இந்த நிலையை சாதாரண புள்ளிவிவரமாகக் கடந்துவிட முடியாது. விதேசிக் கப்பல் உரிமையாளர்களை இப்படி அதீதமாகச் சார்ந்திருப்பது வளரும் பொருளாதாரத்துக்கு ஏற்புடையதல்ல. நாட்டுப் பொருளாதாரத்திலிருந்து கரைபுரண்டு ஓடும், இந்த அந்நியச் செலாவணி வெள்ளத்தை அடைப்பதற்குப் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள் தேவை.

காலனியாதிக்கக் காலத்தில், விதேசிகள் மிதக்கும் கடல் சொத்தான கப்பல்களையும், அவற்றைக் கையாளுவதற்கான துறைமுக அமைவையும் கடல்வழி வணிகம் என்ற ஒரே புள்ளியில் சமநிலையில் இணைத்துச் செயல்பட்டார்கள். அதனாலேயே பெரும் பொருள் ஈட்டினார்கள். ஆதிக்க மனப்பான்மையோடு நடந்து, நமது சுதேசிக் கப்பல் உரிமை முயற்சிகளை அழித்தார்கள். சுதேசித் தொழிலதிபர்களைத் திசைதிருப்பி, அவர்களை விதேசிக் கப்பல் உரிமையாளர்களின் முகவர்களாக்கி வேடிக்கைபார்த்தார்கள். விதேசிகள் நாட்டை விட்டுப் போன பிறகும் நமது நடவடிக்கைகளில் மாற்றம் இல்லை. விதேசிக் கப்பல் உரிமையாளர்களின், சரக்குப் பெட்டக உரிமையாளர்களின், பிரைட் ஃபார்வேர்டர்களின் முகவர்களாகவே நாம் நீடிக்க விரும்புகிறோமே அல்லாது சுதேசிச் சிந்தனை மேலோங்கவே இல்லை.

தப்பித் தவறி நடந்த ஒருசில சுதேச முயற்சிகளும் பெரும் சிக்கல்களோடே தொடர்ந்தபடி இருக்கின்றன. காரணம், விதேசி மனநிலையை உள்வாங்கிய சுதந்திரத்துக்குப் பிறகான அதிகார வர்க்கம். கப்பலோட்டும் தொழிலில் இழந்த மாண்பை மீட்டெடுக்க வேண்டுமானால், கப்பல் உரிமை மீட்டெடுக்கப்பட வேண்டும். அந்த நிலையில்தான் நமக்கான சரக்குகளை நமது கடலோடிகளே, நமது கப்பல்களில் சுமந்து சென்று நாட்டின் பொருளாதாரத்தைக் காக்க முடியும். இந்தியாவில் வருடம்தோறும் கப்பல் சிப்பந்திகளின் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது என்பதைக் காட்டிலும், அவர்களில் எத்தனை பேரை சுதேசிக் கப்பல்களிலேயே பணியமர்த்தி நமது திறமையை நாமே பயன்படுத்திக்கொள்கிறோம் என்பது முக்கியம்.

கரோனா பெருந்தொற்றுக் காலத்திலும் அதற்குப் பிறகான இன்றைய நிலையிலும், கடல் சரக்குப் பயணக் கட்டணங்கள் பல மடங்கு உயர்ந்திருக்கின்றன. ஒருவகையில் நமது ஏற்றுமதி, இறக்குமதி செலவீனத்தை இந்தக் கடல் பயணக் கட்டண உயர்வு பாதித்திருந்தாலும், சுதேசிக் கப்பலோட்டம் என்ற நமது பூர்விகத் தொழிலின் அத்தியாவசியத் தேவையை உணர்த்தியிருக்கிறது. பழைய கப்பல்களை உடைக்கும் தொழிலில் உலக அளவில் முன்னணியில் உள்ள ஐந்து நாடுகளில் ஒன்றாக இருக்கும் இந்தியா கப்பல் கட்டும் தொழிலிலும் அதன் இணைத் தொழில்களை உருவாக்கும் திறனிலும் அக்கறை காட்டாமல் இருப்பது வருத்தமளிக்கிறது.

நாட்டின் கப்பல் துறை வளர்ச்சி என்பது, பயன்பாட்டில் இருக்கும் கப்பல்களின் எண்ணிக்கையும், அவற்றைக் கையாள உதவும் ஒருங்கிணைந்த துறைமுக அமைவும்தான். ஒன்றை விடுத்து மற்றொன்றை ஊக்குவிப்பதல்ல. சாகர்மாலா திட்டத்துக்குக் கொடுக்கப்படும் முக்கியத்துவம், கப்பல் உரிமைக்கும் கொடுக்கப்பட வேண்டும். தாராள மானியங்கள் வழங்கிக் கப்பல் ஓட்டத் தொழிலதிபர்களை ஊக்குவிக்க வேண்டும். சிக்கலான பழைய நடைமுறைக்கு ஒவ்வாத சட்டங்களைத் திருத்தி, கரைக்கடல் கப்பலோட்டத்தில் பாய்மரக் கப்பலோட்டிகளைப் பயன்படுத்த வேண்டும். இதைச் செய்வதற்குத் தவறினால், கிடைக்கும் வாய்ப்பைப் பயன்படுத்தத் தயங்காத நவீன காலனியாதிக்கவாதிகளான விதேசிக் கப்பல் உரிமையாளர்கள், நமது பொருளாதாரத்தைச் சூறையாடிவிடுவார்கள்.

- ஆர்.என்.ஜோ டி குருஸ்,
‘கொற்கை’ உள்ளிட்ட நாவல்களின் ஆசிரியர். தொடர்புக்கு: rnjoedcruz@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x