Published : 14 Apr 2022 08:43 AM
Last Updated : 14 Apr 2022 08:43 AM

ஷெபாஸ் ஷெரீப்: கடந்த காலமும் எதிர்காலமும்

பாகிஸ்தானின் புதிய பிரதமராகக் கடந்த ஏப்ரல் 11 அன்று பதவியேற்றுக்கொண்டார் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சியின் ஷெபாஸ் ஷெரீப். நாடாளுமன்றத்தில் இம்ரான் கான் தலைமையிலான ஆட்சி பெரும்பான்மையை இழந்ததை அடுத்து அவருக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் வெற்றியடைந்தது. இதையடுத்து, 342 உறுப்பினர்களைக் கொண்ட பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் 174 உறுப்பினர்களின் ஆதரவுடன் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார் ஷெபாஸ் ஷெரீப்.

இரண்டாம் ‘தலை’

பாகிஸ்தானில் எஃகு வணிகத்தில் மிகப் பெரிய ஜாம்பவானான முகமது ஷெரீபின் இளைய மகன் ஷெபாஸ் ஷெரீப். பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சியைத் தொடங்கியவரும் மூன்று முறை அந்நாட்டின் பிரதமராகப் பதவி வகித்தவருமான நவாஸ் ஷெரீப் இவருடைய அண்ணன். லாகூரில் உள்ள அரசுக் கல்லூரியில் பட்டப் படிப்பை முடித்தவுடன் குடும்ப வணிகத்துக்குள் நுழைந்து, அண்ணனின் வழியில் அரசியலிலும் தடம்பதித்தார். 1988-ல் பஞ்சாப் மாகாண சட்டமன்றத் தேர்தலில் முஸ்லிம் லீக் கட்சி வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றிபெற்றார்.

1997-ல் பஞ்சாபின் முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1999-ல் ராணுவ ஜெனரல் பர்வேஸ் முஷரஃப் தொடங்கிய ராணுவப் புரட்சியின் மூலம், நவாஸ் ஷெரீப் அரசு கவிழ்க்கப்பட்டு, ஷெரீப் குடும்பம் சவுதி அரேபியாவில் தஞ்சம் புகுந்தது. 2007-ல் தங்கள்மீது சுமத்தப்பட்ட ஊழல் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படாததை அடுத்து, ஷெரீப் குடும்பம் மீண்டும் தாய் மண் திரும்பியது. அடுத்த ஆண்டே மீண்டும் பஞ்சாப் முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஷெபாஸ், தொடர்ந்து இரண்டு பதவிக் காலங்களை முழுமையாக நிறைவுசெய்தார். 2017-ல் ஊழல் குற்றச்சாட்டுகளின் காரணமாகப் பிரதமர் பதவியை இழந்த நவாஸ் ஷெரீப், எந்த ஒரு அரசமைப்புப் பதவியிலும் நீடிக்கக் கூடாது என்று, அந்நாட்டு உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதையடுத்து, பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சியின் தலைவரானார் ஷெபாஸ் ஷெரீப்.

அண்ணனின் விசுவாசி

இதற்கு முன்பே பாகிஸ்தானின் பிரதமராவதற்கான வாய்ப்புகளை இரண்டு முறை நிராகரித்தவர் ஷெபாஸ் ஷெரீப். 1999-ல் கார்கில் தோல்வியின் காரணமாக ராணுவத் தலைவர் பர்வேஸ் முஷரஃபை நீக்க அப்போதைய பிரதமர் நவாஸ் ஷெரீப் முயன்றுகொண்டிருந்தார். அப்போது ஷெபாஸைச் சந்தித்து, ராணுவத்தின் உதவியுடன் அவரைப் பிரதமராக்குவதாகக் கூறினார் முஷரஃப். அதற்கும் முன்பு 1992-ல் ஷெபாஸ் நாடாளுமன்ற உறுப்பினரான புதிதில், நவாஸை நீக்கிவிட்டு அவரைப் பிரதமராக்க முயன்றார் அன்றைய அதிபர் குலாம் இஷக் கான். ராணுவம், அதிபர் ஆகிய இரண்டு அதிகார மையங்களின் ஆசை வார்த்தைக்கும் அழுத்தத்துக்கும் அடிபணிய மறுத்துவிட்டார் ஷெபாஸ். அதோடு, 1995-ல் ஷெபாஸைக் கைதுசெய்து, நவாஸுக்கு எதிரான ஊழல் வழக்கில் அவருக்கு எதிராகச் சாட்சி சொல்ல ஷெபாஸை வற்புறுத்தியது பெனாசிர் புட்டோ அரசு. அப்போதும் அண்ணனுக்குத் துரோகம் செய்ய மறுத்துவிட்டார் ஷெபாஸ் ஷெரீப்.

சகோதர யுத்தம் எளிதில் வளர்ந்துவிடக் கூடிய அரசியல் களத்தில், முப்பதாண்டுகள் நீடித்தபோதிலும் எப்போதும் அண்ணனின் விசுவாசியாகவே நீடித்துவருகிறார் ஷெபாஸ் ஷெரீப். 2018-ல் கட்சியின் தலைவர் பதவியை ஏற்கும்போது, ‘‘முகமது அலி ஜின்னாவின் வாரிசு என்று கருதத்தக்க ஒரே அரசியல் தலைவர்” என்று நவாஸை வானளாவப் புகழ்ந்தார். அதே நேரம், அரசியல் அணுகுமுறையில் அண்ணனை அப்படியே பின்பற்றுகிறவர் இல்லை. பாகிஸ்தானில், அரசுக்கு இணையான செல்வாக்கு மிக்க அதிகார மையம் ராணுவம். ராணுவத்தால் ஆட்சியை இழந்துள்ள நவாஸ், எப்போதும் ராணுவத்துடன் கடுமையான மோதல் போக்கையே கடைப்பிடித்துவந்துள்ளார். ஆனால், ஷெபாஸ் ராணுவத்தை எதிர்கொள்வதில் எப்போதும் மிதவாதப் போக்கை வெளிப்படுத்திவந்துள்ளார்.

ஆட்சியில் விவேகி

ஷெபாஸ் நடைமுறைவாத அணுகுமுறை கொண்ட, அதிரடியான நிர்வாகியாக அறியப்படுகிறார். லாகூர் மெட்ரோ பேருந்தை உள்ளடக்கிய பன்னடுக்குப் போக்குவரத்துத் திட்டம், மேம்பாலங்கள் என பஞ்சாப் மாகாணத்தின் உள்கட்டமைப்பு வளர்ச்சிக்கான பிரம்மாண்டமான திட்டங்கள் அவருடைய ஆட்சிக் காலத்தில் செயல்படுத்தப்பட்டவை. அரசுப் பள்ளிகள், மருத்துவமனைகளுக்குத் திடீர் வருகை தருவது, அதிகாலை நேரத்தில் அதிகாரிகளுடனான கூட்டத்தை நடத்துவது, பின்னிரவு நேரத்தில் சமூக வலைதளங்களின் மூலம் அதிகாரிகளுக்குச் செய்தி அனுப்புவது என சுறுசுறுப்புடனும் நவீன அணுகுமுறையுடனும் செயல்படுகிறவராக அறியப்படுகிறார்.

ஆட்சிப் பொறுப்பேற்று அலுவலகத்துக்கு வந்த முதல் நாளே, அரசு அலுவலகங்களின் வார விடுமுறை நாட்களை இரண்டிலிருந்து ஒன்றாகக் குறைத்தும், காலை 10 மணிக்குப் பதிலாக காலை 8 மணியிலிருந்தே அரசு அலுவலகங்கள் தொடங்கும் என்றும் உத்தரவிட்டுத் தன் அதிரடி பிம்பத்தைத் தக்கவைத்துக்கொண்டுள்ளார். பொது இடங்களில் புரட்சிகரக் கவிதைகளைச் சொல்வது, மைக்குகள் கீழே விழும் அளவுக்குக் கைகால்களை அசைத்து உணர்ச்சிப் பெருக்குடன் பேசுவது உள்ளிட்ட நடவடிக்கைகள் ஷெபாஸ் மீதான ட்ரால்களுக்கும் மீம்களுக்கும் வழிவகுத்துள்ளன.

அந்நிய நாடுகளுடன் ஒப்பீட்டளவில் நட்பார்ந்த அணுகுமுறையை ஷெபாஸ் வெளிப்படுத்திவந்துள்ளார். சீனா-பாகிஸ்தான் பொருளாதார வழித்தடத் திட்டத்தை அவர் தீவிரமாக ஆதரித்தார். இந்தியாவிலும் அவருக்குத் தனிப்பட்ட தொடர்புகள் உள்ளன. பாகிஸ்தான் பிரதமராகப் பதவியேற்றுள்ள ஷெபாஸ் ஷெரீபுக்குப் பிரதமர் நரேந்திர மோடி ட்விட்டரில் வாழ்த்துத் தெரிவித்துள்ளார். இதற்கு நன்றி கூறும்போது, இந்தியாவுடன் அமைதியான உறவை நாடுவதாகத் தெரிவித்துள்ள ஷெபாஸ், அதற்கு முன் காஷ்மீர் பிரச்சினை பேசித் தீர்க்கப்பட வேண்டும் என்று ஒரு முட்டுக்கட்டையையும் போட்டுள்ளார். ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அதிகாரம் வழங்கிய அரசமைப்பின் 370-வது பிரிவை இந்திய அரசு நீக்கியதை எதிர்த்ததோடு, அதைத் தன் பிரதமர் பதவியேற்பு உரையிலும் குறிப்பிட்டுள்ளார்.

பல்முனை நெருக்கடிகள்

பாகிஸ்தானின் பொருளாதாரம் மிக மோசமான சரிவைச் சந்தித்துள்ளது. வேலைவாய்ப்பின்மை அதிகரித்துள்ளது, கரோனா பெருந்தொற்றால் ஏற்பட்ட பொருளாதாரச் சீரழிவுகளிலிருந்து அந்நாடு மீண்டுவிடவில்லை. பயங்கரவாதக் குற்றச்சாட்டுகள், இம்ரான் கானின் தாலிபான் ஆதரவுப் போக்கு என சர்வதேச அரசியல் சூழலிலும் பாகிஸ்தான் நல்ல நிலையில் இல்லை. இத்தகைய நெருக்கடியான சூழலில், ஷெபாஸ் ஷெரீப் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுள்ளார். இம்ரான் கானை பிரதமர் பதவியிலிருந்து நீக்குவதற்காகக் கைகோத்த பாகிஸ்தான் எதிர்கட்சிகளின் ஒற்றுமை 2023 ஆகஸ்ட் அல்லது அதற்கு முன்பாகவே நடத்தப்பட சாத்தியமுள்ள நாடாளுமன்றத் தேர்தல் வரை அப்படியே நீடிக்கும் என்று சொல்ல முடியாது.

அதுவும் பாகிஸ்தானின் வரலாற்றில் அதிக காலம் மாறி மாறி ஆட்சி செய்துவந்துள்ள ஷெரீப் குடும்பத்தின் பாகிஸ்தான் முஸ்லிம் லீகுக்கும் புட்டோ குடும்பத்தின் பாகிஸ்தான் மக்கள் கட்சிக்கும் இடையிலான அதிகாரப் போட்டியானது, பொது எதிரி நீங்கிவிட்டால் மீண்டும் தலைதூக்கிவிடும். நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்கத் தவறியுள்ள இம்ரான் கான், தன் கட்சிக்கு இளைஞர்களிடையே இருக்கும் செல்வாக்கைப் பயன்படுத்திக்கொண்டு, புதிதாகப் பொறுப்பேற்ற அரசுக்கு எதிராகப் போராட்டங்களை முன்னெடுக்கத் தொடங்கியுள்ளார்.

மத அடிப்படைவாதத்துடன் அமெரிக்கா உள்ளிட்ட வல்லரசுகளை பாகிஸ்தானின் எதிரிகளாகச் சித்தரிக்கும் அவருடைய அரசியல் பிரச்சாரங்களுக்கு இளைஞர்களிடையே செல்வாக்கு உள்ளது. மேலும், ஷெரீபின் கட்சியிலும் நவாஸின் மகள் மரியத்துக்கும் ஷெபாஸின் மகனும் பஞ்சாப் மாகாண சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான ஹம்ஸாவுக்கும் இடையிலான அதிகாரப் போட்டி ஷெபாஸுக்குத் தலைவலியாக உருவெடுக்கக்கூடும். இந்தச் சவால்களையெல்லாம் தாண்டி, ஷெபாஸ் ஷெரீப் எவ்வளவு காலம் பிரதமர் பதவியில் தாக்குப்பிடிப்பார் என்பது யாருக்கும் விடை தெரியாத கேள்விதான்.

- ச.கோபாலகிருஷ்ணன், தொடர்புக்கு: gopalakrishnan.sn@hindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x