Published : 01 Apr 2016 08:38 AM
Last Updated : 01 Apr 2016 08:38 AM

தேர்தல்.. கொள்கை.. கூட்டணி!- இங்கும் அங்குமாய் இடதுசாரிகள்!

நெருக்கடி நிலைக்குப் பின்னர் மத்தியில் ஆட்சியைப் பிடித்த ஜனதாவுக்குள் ஏற்பட்ட குழப்பங்களின் பலனாக 1980-ல் மக்களவைக்குத் தேர்தல் வந்தது. நெருக்கடி நிலை கசப்புகளை மறந்து திமுகவும் இந்திரா காங்கிரஸும் கைகோத்தன. இடதுசாரிகள் இருவரும் அதிமுகவை நோக்கி அணிவகுத்தனர். அவர்களுக்குத் தலா 3 இடங்கள் தரப்பட்டன. இந்திய அளவில் இந்திரா காங்கிரஸையும் தமிழக அளவில் திமுகவையும் விமரிசித்த இடதுசாரிகளுக்குத் தேர்தலின் முடிவில் ஓரிடம்கூடக் கிடைக்கவில்லை.

மீண்டும் பிரதமரான இந்திரா, தமிழ்நாடு உள்ளிட்ட சில மாநில அரசு களைக் கலைத்தார். அதன் விளைவாக 1980 மே மாதம் தமிழக சட்டமன்றத்துக்குத் தேர்தல் வந்தது. அதிமுக அணியில் நீடித்த இரு கம்யூனிஸ்ட்டுகளுக்கும் தலா 16 தொகுதிகள் கொடுத்தார் எம்ஜிஆர். ஆட்சிக் கலைப்புக்கு நியாயம் கேட்டு மக்களைச் சந்தித்த எம்ஜிஆருக்கு இடதுசாரிகள் தோள் கொடுத்தனர். தேர்தலின் முடிவில் மார்க்சிஸ்ட் கட்சிக்கு 11 எம்எல்ஏக்களும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 10 எம்எல்ஏக்களும் கிடைத்தனர்.

என்னதான் சட்டமன்றத்துக்கு உள்ளும் புறமும் மக்கள் பிரச்சினைகளுக்காகப் போராடினாலும், தேர்தல் தருணத் தில் திமுக/அதிமுகவுடன் அணிசேர வேண்டிய நிர்ப்பந்தம் இடதுசாரிகளுக்கு. 1984 பொதுத் தேர்தலில் அதிமுகவும் இந்திரா காங்கிரஸும் கூட்டணி அமைக்கவே, இரு இடதுசாரிகளும் திமுக அணிக்கு மாறினர். அங்கே இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 17 சட்டமன்றத் தொகுதிகள், மார்க்சிஸ்ட் கட்சிக்கு 16 சட்டமன்றத் தொகுதிகள் தரப்பட்டன. இரு கட்சிகளுக்கும் தலா 3 மக்களவைத் தொகுதிகள் தரப்பட்டன.

இந்திரா படுகொலை, எம்ஜிஆர் உடல்நிலை தொடர்பான வீடியோக்கள் தேர்தல் களத்தைத் தீர்மானித்தன. மத்தியில் ராஜீவும் மாநிலத்தில் எம்ஜிஆரும் வெற்றிபெற்றனர். திமுக அணியில் இடம்பெற்ற மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் வி.பி.சிந்தன் உள்ளிட்ட ஐவரும் இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் சுப்பராயன் உள்ளிட்ட இருவரும் வெற்றிபெற்றனர்.

கடந்த 3 தேர்தல்களாக ஒரே அணியில் இருந்த இடதுசாரிகளை 1989 சட்டமன்றத் தேர்தல் பிரித்தது. திமுக அணியில் நீடித்த மார்க்சிஸ்ட் கட்சிக்கு 20 தொகுதிகள் தரப்பட்டன. அதிமுக (ஜெ) அணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 12 இடங்கள் ஒதுக்கப்பட்டன. நான்குமுனைப் போட்டியின் முடிவில் திமுக வென்றது. அந்த அணியில் இடம்பெற்ற மார்க்சிஸ்ட் கட்சி 15 தொகுதிகளை வென்றது. அதிமுக (ஜெ) அணியில் இடம்பெற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 3 தொகுதிகள் கிடைத்தன.

டெல்லியில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்களின் எதிரொலியாக மக்களவைக்குத் தேர்தல் வந்தது. கடந்த தேர்தலில் அதிமுக (ஜெ) அணியில் இடம்பெற்ற இந்திய கம்யூனிஸ்ட் மீண்டும் திமுக அணிக்கு வந்தது. மார்க்சிஸ்ட் கட்சிக்கு 4 தொகுதிகளும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 2 தொகுதிகளும் தரப்பட்டன. நாடு தழுவிய அளவில் வீசிய ‘போஃபர்ஸ்’ புயலில் காங்கிரஸை வீழ்த்தி தேசிய முன்னணி ஆட்சியைப் பிடித்தது. ஆனால், தமிழ்நாட்டில் தேசிய முன்னணிக்குப் படுதோல்வி. அந்த அணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மட்டும் ஒற்றைத் தொகுதியில் (நாகப்பட்டினம்) வென்றது.

தொண்ணூறுகளுக்குப் பிறகு இடதுசாரிகளின் தேர்தல் நிலையைத் தீர்மானிக்க ஒரு புதிய சக்தி வந்தது. அது, பாஜக!

- கட்டுரையாளர் ‘கச்சத்தீவு’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர். தொடர்புக்கு: writermuthukumar@gmail.com (கோஷம் போடுவோம்)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x