Published : 10 Apr 2022 06:25 AM
Last Updated : 10 Apr 2022 06:25 AM

மேடையேறிய இமையத்தின் நான்கு கதைகள்

எழுத்தாளர் இமையத்தின் நான்கு சிறுகதைகள் - ‘ஆஃபர்’, ‘மணலூரின் கதை’, ‘வீடும் கதவும்’, ‘நன்மாறன் கோட்டை’-- சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள ‘மேடை’ அரங்கில் நாடகமாக அரங்கேற்றப்பட்டன. இந்த நான்கு சிறுகதைகளை ‘கதையல்ல வாழ்க்கை’ என்னும் பொதுத் தலைப்பில் இயக்கி, தயாரித்திருந்தார் ப்ரஸன்னா ராமஸ்வாமி.

தனியார் பள்ளிகளின் அதீத லாப நோக்கத்தையும் தனியார் பள்ளிகள் மீதான பெற்றோரின் மோகத்தையும் பகடியாகச் சித்தரிக்கிறது முதல் கதையான ‘ஆஃபர்’. ‘மணலூரின் கதை’ 24 மணி நேரமும் ஏதேனும் ஒரு பரபரப்பான நிகழ்ச்சியை ஒளிபரப்ப வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் செய்தி - தொலைக்காட்சி ஊடகங்களுக்கு நிகழ்ச்சி தயாரிப்போர், கதைகளைப் புனைந்து உண்மைபோல் ஒளிபரப்பும் ஊடகவியல் சீரழிவை அம்பலப்படுத்துகிறது. கல்விப் பரவலாக்கம், நவீன சிந்தனைப் போக்கு, உலகமயமாக்கல் ஆகியவற்றால் பெண்களுக்குக் கிடைத்துவிட்டதாக நாம் நம்பிக்கொண்டிருக்கும் பொருளாதாரச் சுதந்திரமும் அரசியல் அதிகாரமும் வெறும் பெயரளவிலானதாக நீடிப்பதை ஆசிரியையாகவும் பஞ்சாயத்துத் தலைவராகவும் இருக்கும் நடுத்தர வயதுப் பெண்கள் இருவரின் உரையாடல் வழியே பேசுகிறது, ‘வீடும் கதவும்’. ‘நன்மாறன் கோட்டைக் கதை’ இப்படியெல்லாம்கூட நடக்குமா என்று நம்புவதற்கே கடினமாக இருக்கும் கொடுமைகள் எல்லாம் சாதியத்தின் பெயரால் நடந்துகொண்டிருப்பதை மனிதநேயம் கொண்ட எவரையும் வேதனையும் குற்ற உணர்ச்சியும் அடையச் செய்யும் வகையில் பதிவுசெய்கிறது.

நான்கு கதைகளின் ஆன்மாவைச் சிதைக்காமல் அவற்றை நாடகப் பிரதியாக்கியிருக்கிறார் மூத்த நாடக இயக்குநர் ப்ரஸன்னா ராமஸ்வாமி. அதே நேரம், நாடகம் என்னும் வடிவத்துக்குத் தேவையான மாற்றங்களை மேற்கொள்ளும் சுதந்திரத்தையும் அவர் விட்டுக்கொடுக்கவில்லை. நடிகர்கள் அனைவருமே அர்ப்பணிப்புடன் பங்காற்றினார்கள். ‘ஆஃபர்’ கதையில் தனியார் பள்ளி ஆசிரியை சொல்பவற்றைக் கேட்டுக் கிண்டலடித்தாலும் மனைவியின் இழுப்புக்கு இணங்க வேண்டிய கணவனாகவும் ‘மணலூரின் கதை’யில் சாமர்த்தியமும் சுயநலமும் மிக்க ஊடகவியலராகவும், ‘நன்மாறன் கோட்டைக் கதை’யில் தலைமையாசிரியராகப் பொறுப்பேற்ற முதல் நாளில், ஒரு தர்மசங்கடமான சூழலை எதிர்கொள்ளும் அலுப்பையும் அதைத் தொடர்ந்து அவர் கேள்விப்படும் சம்பவம் தரும் அதிர்ச்சியையும் சரியாகக் கடத்தும் பிரசன்னா ராம்குமார் மூன்று வெவ்வேறு பரிமாணங்களில் சிறப்பாக வெளிப்பட்டுள்ளார். ‘ஆஃபர்’ கதையில் பள்ளியின் சலுகைகளை விளக்கி, பெற்றோரை மூளைச்சலவை செய்யும் முகவராகக் கவனம் ஈர்க்கும் மெலடி டார்கஸ் ‘நன்மாறன் கோட்டைக் கதை’யில் கணவன் கொல்லப்படுவதைக் கண்முன் காணும் மரண வலியை ஆக்ரோஷமாக வெளிப்படுத்தும் இளம் பெண்ணாகப் பேருரு கொள்கிறார். ‘வீடும் கதவும்’ கதையில் பொருளாதாரச் சுதந்திரம் மறுக்கப்பட்ட பெண்ணின் வலியை அழுத்தமாக உணரவைத்திருக்கிறார் ஜானகி சுரேஷ். சார்லஸின் ஒளி வடிவமைப்பு உணர்வுபூர்வமான காட்சிகளின் தாக்கத்தை மேம்படுத்துகிறது.

இன்னும் பல முக்கியமான இலக்கியப் படைப்புகள் நாடகம் உள்ளிட்ட பிற கலை வடிவங்களுக்கேற்ப உருமாற்றம் அடைவதை நம்பிக்கையுடன் எதிர்நோக்க வைக்கும் வகையில் ‘கதையல்ல வாழ்க்கை’ நாடகம் அமைந்திருக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x