Published : 17 Mar 2022 06:49 AM
Last Updated : 17 Mar 2022 06:49 AM

இயற்கை வேளாண்மை... சில பாடங்கள்!

செ.சரத்

ஒன்றிய நிதித் துறை அமைச்சர் 2022-23-ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்தபோது, நாடு முழுவதும் இயற்கை வேளாண்மையை அதிகரிக்க அரசு திட்டமிட்டுள்ளது என்றும், முதலில் கங்கைக் கரையோரம் இருக்கும் வேளாண் நிலங்களில் இயற்கை வேளாண்மையை ஊக்குவிக்கத் திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்றும் அறிவித்தார். இது எந்த அளவுக்குக் கைகொடுக்கும் என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

ஆயினும் இயற்கை வேளாண்மையை முன்னிறுத்தும் பணியில், இந்திய வேளாண்மை மற்றும் உழவர் நலத் துறை அமைச்சகம் மும்முரமாக இறங்கியுள்ளது. அதற்கு உறுதுணையாக இருந்து உதவிபுரிய இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகம் 2019-ல் 16 பேர் கொண்ட ஒரு குழுவை அமைத்தது. அந்தக் குழு இயற்கை வேளாண்மை சார்ந்த பணிகளையும், அது சம்பந்தப்பட்ட ஆராய்ச்சி முடிவுகளையும் அண்மையில் வெளியிட்டது.

அக்குழுவின் தலைவர் ராவ் வெளியிட்டுள்ள அறிக்கையில், இயற்கை வேளாண்மை சார்ந்த சுமார் 1,400 ஆய்வுக் கட்டுரைகளைப் பரிசீலித்தும், ஜீரோ பட்ஜெட் இயற்கை வேளாண்மையை ஏழு மாநிலங்களில் மேற்கொள்ளும் சில விவசாயிகளிடமும் கலந்துரையாடல் மேற்கொண்டதிலிருந்து, விளைச்சலும் உற்பத்தியும் போதிய அளவுக்கு இருக்காது என்பதைக் கண்டறிந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

அத்துடன் இயற்கை வேளாண்மையை விரிவான அளவில் எடுத்துச்சென்றால், இந்தியாவின் உணவு உற்பத்தி பாதிக்கப்படும் என்றும் கூறியுள்ளார். எனினும் மானாவாரி நிலங்களில் இயற்கை வேளாண்மை முறையைப் பரிசோதித்தபோது, அதிக அளவிலான விளைச்சல் இருந்தது என்றும் ஒருங்கிணைந்த உர மேலாண்மை, பயிர்ச் சுழற்சி முறை, பண்ணை எரு இடுதல், ஊடுபயிர் போன்ற முறைகளை விவசாயிகள் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் அக்குழு கேட்டுக்கொண்டுள்ளது.

ஒருபக்கம் பசுமைப் புரட்சியின் வாயிலாக வந்த ரசாயன வேளாண்மை மூலம் மண்ணின் வளம் குறைந்துவருகிறது என்கிற குற்றச்சாட்டை மறுத்துவிட முடியாது. உதாரணத்துக்கு விவசாயிகள் வரைமுறையின்றி ரசாயன உரங்களைப் பயன்படுத்தியதன் விளைவாக, மண்ணில் இருக்கும் கரிம வளம் வெகுவாகக் குறைந்துவிட்டதுடன், நுண்ணுயிரிகளின் அளவும் குறைந்துவிட்டது. 1970-ல் ஒரு கிலோ தழைச்சத்து, மணிச்சத்து, சாம்பல் சத்து உரங்களை மண்ணில் இட்டால் 13.4 கிலோ அளவில் இருந்த தானிய உற்பத்தி, 2005-ல் 3.7 கிலோவாகக் குறைந்துபோனது. மேலும், மண்ணில் இடப்படும் ரசாயன உரங்களின் பயன்பாடு அதிகரிக்க அதிகரிக்க, தானிய உற்பத்திப் பெருக்கம் குறைந்துவருவதை இது காட்டுகிறது. இதனையே பொருளாதார ஆய்வறிக்கையும் வழிமொழிந்ததுடன் ஒருங்கிணைந்த உர மேலாண்மையைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தியிருந்தது.

அதே வேளையில், மற்றொரு பக்கம் பசுமைப் புரட்சிக்குப் பின் உணவு உற்பத்திப் பெருக்கம் அதிகரித்ததுடன் விவசாயிகளுக்கும் நல்லதொரு லாபத்தையும் உண்டாக்கித் தந்திருக்கிறது என்கிறார் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆதித்யா தாஸ்குப்தா. மேலும் அவர் தனது ஆராய்ச்சிக் கட்டுரையில், 1970 வாக்கில் பசுமைப் புரட்சியின் தாக்கத்தால் விவசாயம் சார்ந்த கழகங்கள் எதிரணியாக உருவெடுத்து, காங்கிரஸ் கட்சியின் வாக்கு வங்கியைப் பாதித்துவிட்டதாகக் குறிப்பிடுகிறார்.

மேலும், அவர் பசுமைப் புரட்சியின் மூன்று தாக்கங்களைப் பின்வருமாறு கூறுகிறார். முதலாவது, பசுமைப் புரட்சியானது கீழ்நிலை மற்றும் இடைநிலையில் உள்ள விவசாயச் சாதியினருக்கு வலுசேர்த்து, அவர்களை அரசியலில் பங்குபெறச் செய்ததாகவும், இரண்டாவதாக விவசாயிகள் அனைவரும் அதிக விளைச்சல் தரும் ரகங்களைப் பயிரிடுவதற்கு அதன் இடுபொருட்கள் மற்றும் மானியங்களுக்கு அரசாங்கத்தைச் சார்ந்து இருந்தமையால், அவர்களின் அரசியல் போக்கு ஊக்கம் பெற்றதாகவும், மூன்றாவதாக, பசுமைப் புரட்சியால் தானியங்களின் உற்பத்தி பெருகி விலை குறைந்துபோனதால், அது விவசாயிகளை ஒன்றிணைத்து அரசியலில் அவர்களை உருப்பெறச் செய்ததாகக் கூறுகிறார்.

இப்படிப் பசுமைப் புரட்சியானது விளைச்சல், உற்பத்தி மட்டுமின்றி அரசியலிலும் தனது ஆதிக்கத்தைச் செலுத்தியுள்ளது என்பது காலம் கடந்த உண்மை. இப்படி வழிகோலிய விவசாய முறையை அவ்வளவு எளிதாக விவசாயிகளிடத்திலிருந்து பிரித்துவிட முடியாது. அப்படி முயன்றால், அதனால் விளையும் விபரீதத்தை அனுபவிக்க வேண்டும் என்பதற்கு இலங்கை அரசாங்கத்தின் முடிவு ஒரு முன்னுதாரணம்.

கடந்த ஆண்டின் மே மாதம் இலங்கைப் பிரதமர் மகிந்த ராஜபக்ச ஒரு திடீர் அறிவிப்பை வெளியிட்டார். இனி, ரசாயன உரங்களைத் தவிர்த்து விவசாயிகள் அங்கக வேளாண்மை (organic farming - இயற்கை வேளாண்மையிலிருந்து மாறுபட்ட ஒன்றாகும். அதாவது பண்ணை எரு, உயிரி உரங்களை வெளியிலிருந்து வாங்கிப் பயன்படுத்தும் முறை) முறைக்கு உடனடியாக மாற வேண்டும் என்று அறிவித்த சில வாரங்களில், இலங்கையில் பெரும் ரசாயன உரத் தட்டுப்பாடு நிலவியது. இதனால் நெல் சாகுபடி செய்திருந்த விவசாயிகள் முதற்கொண்டு தேயிலை எஸ்டேட் வைத்திருக்கும் முதலாளிகள் வரை அனைவரும் பெரும் பாதிப்புக்கு உள்ளானார்கள். அதைத் தொடர்ந்து, உணவுப் பொருட்களின் விலையும் உயர ஆரம்பித்தது. பின் என்ன செய்வதென்று அறியாத இலங்கை அரசாங்கம் அத்தியாவசிய உணவுப் பொருள் விநியோகத்துக்கான அவசர கால விதிமுறைகளை அறிவித்தது.

அதற்குப் பிறகு மேற்கொண்ட வெரைட் ஆய்வின் முடிவுப்படி, 85% விவசாயிகள் ரசாயன உரங்களின் தடையால் தங்களின் பயிர்களை அறுவடை செய்வதில் பாதிப்பு ஏற்படும் என்றும், 50% விவசாயிகள் 40% வரை உற்பத்தி குறையும் என்றும் தெரிவித்ததாகக் கூறியுள்ளது. அதற்கு ஏற்றாற்போல் தேயிலை வளர்ப்பில் நிபுணராக இருக்கும் ஹேர்மேனும் தேயிலை வளர்ப்பை முழுவதும் அங்கக வேளாண்மை முறைக்கு மாற்றினால், உற்பத்தி 50% குறையும் என்று தெரிவித்துள்ளார். ஆகவே, இயற்கை/அங்கக வேளாண்மையை மட்டுமே தூக்கிப்பிடிப்பது பொருந்தாத ஒன்று என்பது இதன்மூலம் புலப்படுகிறது.

எனவே, முதலில் ஒரு முறையிலிருந்து மற்றொரு முறைக்கு விவசாயிகளை மாற அறிவுறுத்தும்போது, அங்கு போதிய அளவிலான மாற்று வழிகளைக் கையாளும் வகையில் வசதிகள் இருக்க வேண்டும். அத்துடன் சிறு, குறு விவசாயிகளுக்கு அங்கக அல்லது இயற்கை வழி வேளாண்மை எந்த அளவுக்குப் பொருந்திவரும் என்பதற்கு இதுவரை போதிய அளவில் ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்படவில்லை. ஆகவே, மண்ணின் வளம் காக்கப்பட்டு, வேளாண் உற்பத்தியும் சிறந்து விளங்க வேண்டுமானால், ஒருங்கிணைந்த வேளாண் முறையே சாலச்சிறந்த ஒன்றாகும்.

- செ.சரத், வேளாண் ஆராய்ச்சியாளர், ‘ஏர்நாடி’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர். தொடர்புக்கு: saraths1995@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x