Last Updated : 10 Apr, 2016 12:40 PM

 

Published : 10 Apr 2016 12:40 PM
Last Updated : 10 Apr 2016 12:40 PM

மாவோயிஸ்ட்டுகள் ஏன் காந்தியைப் படிக்க வேண்டும்?

மகாத்மா காந்தியின் தொகுப்பு நூல்களைப் படிப்பதிலேயே கடந்த ஆண்டின் பெரும்பகுதியைச் செலவிட்டேன். காந்திஜியின் சிந்தனைகள் தெளிவானவை, எழுத்து நடை எளிமையானது. அவர் தொட்டுச் செல்லும் துறைகள் அநேகம் என்பதால் சிரமம் இருந்தாலும் படிக்கப் படிக்க உற்சாகம் குறைவதே இல்லை. காந்தியின் கருத்துகளில் சில அவரது காலத்துக்கும் சூழலுக்கும் மட்டுமே பொருத்தமானவையாகத் தோன்றுகின்றன. வரலாற்றாசிரியர்களுக்கு மட்டுமே அவை பயன்படக்கூடும். இவை நீங்கலாக அவர் கூறிய, எழுதிய பெரும்பாலான விஷயங்கள் எந்தக்காலத்துக்கும் பொருத்தமானவையாக இருக்கின்றன.

எந்தக்காலத்துக்கும் பொருந்தக்கூடிய ஒரு கட்டுரை, 1930-ல் காந்தி தொடங்கிய ‘யங் இந்தியா’பத்திரிகையின் முதல் இதழில் இடம் பெற்றிருந்தது. அது, ‘வெடிகுண்டு கலாச்சாரம்’ பற்றியது. 1928, 1929 ஆண்டுகளில் பிரிட்டிஷ் அதிகாரிகளைக் கொல்ல அடுத்தடுத்துப் பல முயற்சிகள் நடந்தன. இவற்றில் முக்கியமானது 1929 டிசம்பர் 23-ல் நடந்தது. வைஸ்ராய் இர்வின் பிரபுவை ஏற்றிச் சென்ற சிறப்பு ரயிலைக் கவிழ்க்க புது டெல்லி ரயில்நிலையத்துக்கு வெகு அருகில் வெடிகுண்டு வைத்து ரயில் பாதை தகர்க்கப்பட்டது. அந்த அதிர்ச்சியில் 2 பெட்டிகள் தடம் புரண்டன. இர்வின் காயமின்றித் தப்பினார்.

அப்போது காந்தியையும் வேறு சில தேசியவாதி களையும் பார்ப்பதற்காக புது டெல்லிக்கு வந்துகொண்டி ருந்தார் இர்வின். அன்று பிற்பகலிலேயே இருவரும் சந்தித்தபோது வைஸ்ராயின் ரயில் மீது தாக்குதல் நடத்தப்பட்டது குறித்துத் தனது அதிர்ச்சியைத் தெரிவித்தார் காந்தி. இந்திய தேசிய காங்கிரஸின் வருடாந்திர கூட்டத்துக்காக புதுடெல்லியிலிருந்து லாகூருக்குப் புறப்பட்டார் காந்தி. ஏப்ரல் மாதம் நாடாளுமன்றத்தின் மீது நடத்திய குண்டுவெடிப்புத் தாக்குதலுக்காக சிறையில் அடைக்கப்பட்ட பகத்சிங்கின் சொந்த ஊர் லாகூர். பகத் சிங்கும் அவருடைய புரட்சிகர சிந்தனையுள்ள தோழர்களும் உறுப்பினர்களாக இருந்த ‘இந்துஸ்தான் ரிபப்ளிகன் சோஷலிஸ்ட் அசோசியேஷன்’ (எச்.எஸ்.ஆர்.ஏ.) என்ற இயக்கத்தின் கோட்டையாகவும் இருந்தது லாகூர்.

அகிம்சையின் பிரகடனம்

“அப்பாவிகள் மீது குண்டுகளை வீசுவதன் மூலம் ஒருபோதும் சுதந்திரம் கிடைத்துவிடாது. அதை மிக மோசமான குற்றமாகவே கருதுகிறேன்” என்று லாகூரில் அறிவித்தார் காந்தி. அகமதாபாதுக்கு ரயிலில் திரும்பியபோது ‘வெடிகுண்டுக் கலாச்சாரம்’ என்ற கட்டுரையை எழுதினார். அகிம்சையை வலியுறுத்திய மிக முக்கியமான பிரகடனம் அது. ‘நம்மைச் சுற்றியுள்ள வட்டத்தில் இப்போது வன்முறை அதிகமாகிவிட்டது. அரசியல் சிந்தனை மிகுந்துவரும் இந்தியாவில், இங்கும் அங்கும் குண்டுகள் வீசப்படுவது யாரையும் சலனப்படுத்தவில்லை. சிலருக்கு உள்ளூர மகிழ்ச்சிகூட ஏற்பட்டிருக்கிறது. ஆனால், நாம் சுதந்திரம் பெற வேண்டும் என்று நினைக்கும் மக்களில் பெரும்பாலானவர்களை இந்த வன்முறைச் சித்தாந்தம் ஆட்கொள்ளவில்லை’ என்று சுட்டிக்காட்டுகிறார் காந்தி.

சுதந்திரப் போராட்ட வீரர்கள் வன்முறையைக் கையாள்வதற்கு எதிராக - தார்மிகம் சார்ந்தல்ல, நடைமுறை சார்ந்து - இரண்டு வாதங்களை முன்வைக்கிறார். ‘வன்முறையில் ஈடுபடுவதால் ஆட்சியாளர்கள் அடக்குமுறையை அதிகப்படுத்து கிறார்கள். வன்முறை கையாளப்படும் ஒவ்வொரு முறையும் நமக்குப் பெருத்த இழப்பு ஏற்படுகிறது. ராணுவச் செலவும் அதிகமாகிக்கொண்டே வருகிறது. இரண்டாவதாக, எந்தச் சமூகம் வன்முறைக் கலாச்சாரத்தை வளர்க்கிறதோ அதன் மீதே அந்தக் கலாச்சாரம் பாய்கிறது. அந்நிய ஆட்சியாளர் மீது பாயும் வன்முறை பிறகு நாட்டின் வளர்ச்சிக்குத் தடையாக இருக்கின்றனர் என்று நாம் நினைக்கும் நம்முடைய மக்கள் மீதே பாய்வது எளிதான வழிமுறையாகிவிடும். நம்முடைய வளர்ச்சிக்குத் தடையாக இருப்பவை என்று கருதும் அம்சங்கள் அனைத்தையும் அழித்துவிட வேண்டும் என்ற நினைப்பால் துயரங்களைப் பெருக்கிக்கொண்டே செல்வோம். அதனால், சுதந்திரம் கிடைப்பது மேலும் தள்ளிப்போகும்’என்கிறார் காந்தி.

‘வன்முறை மூலம் ஆங்கிலேயர்களை விரட்ட முற்படுவது சுதந்திரத்துக்கு வழிவகுக்காது. மாறாக, குழப்பத்துக்கே இட்டுச்செல்லும். நாம் நமக்குள் ஒத்திசைவை ஏற்படுத்திக்கொண்டு, ஆட்சியாளர்களின் மூளைக்கும் இதயத்துக்கும் சென்று சேர்கிற வகையில் நம்முடைய கருத்துகளை எடுத்து வைத்து, இயற்கையாகவே நமக்குள் ஒற்றுமையை ஏற்படுத்திக்கொண்டு, நமக்குத் தடையாக இருப்பார்கள் என்று நினைப்பவர்களை அச்சப்படுத்தியோ, வன்செயல்களால் தாக்கியோ வழிக்குக் கொண்டுவர நினைக்காமல், எதிராளியை நம் வழிக்குத் திருப்பி…” என்று சுதந்திரம் அடைவதற்கான வழியை விவரிக்கிறார்.

வன்முறையில் பிரசுரம்

வெடிகுண்டுக் கலாச்சாரத்துக்கு மாற்று ஒன்றையும் காந்தி அளிக்கிறார். அனைத்து மக்களும் சேர்ந்து அரசுடன் ஒத்துழைக்க மறுக்கும் ஒத்துழையாமை இயக்கத்தை மேற்கொள்ளலாம் என்கிறார். அதைக் கடைப்பிடிக்கவும் அகிம்சை என்ற வன்முறையற்ற வழிமுறையைத்தான் வலியுறுத்துகிறார். அத்துடன், இன்னும் நிதானத்தை இழக்காதவர்கள் இந்த வெடிகுண்டுத் தாக்குதல்களை வெளிப்படையாகக் கண்டிக்க வேண்டும் என்கிறார். அப்படிச் செய்தால்தான் தங்களுடைய வன்முறைக் கொள்கைக்கு ஆதரவும் ஊக்குவிப்பும் இன்றி, பயனற்ற இந்தச் செயலால் செய்யும் பாதகத்தை உணர்ந்து வன்முறையாளர்கள் அதைக் கைவிடுவார்கள் என்கிறார்.

காந்தியின் கட்டுரையை பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த தீவிரவாத இயக்கத்தைச் சேர்ந்த இளைஞர்கள் வாசித்தனர். அவருடைய அறிக்கைக்கு பதிலுக்குப் பதிலாக சூடான அறிக்கையைத் தயாரித்து, அதை ஒரு பிரசுரமாக அச்சிட்டு குஜராத்தில் உள்ள சபர்மதி ஆசிரமத்துக்கும் அனுப்பிவைத்தனர். அந்தத் துண்டுப் பிரசுரம் உணர்ச்சியைத் தூண்டும் வாசகத்துடன் தொடங்குகிறது. சுதந்திரம் என்பது ஆக்கிரமிப்பாளர்களுக்கு எதிரான ஆயுதப் போராட்டத்தின் மூலம்தான் கிடைக்கும் என்று அது கூறுகிறது. “இளைஞர்கள் அமைதியிழந்து காணப்படுகின்றனர், புரட்சிக்கான அறிகுறிகள் ஆரம்பமாகிவிட்டன, சுதந்திரம் பெற்றே தீர வேண்டும் என்ற தணியாத வேட்கை வளர்ந்துகொண்டே போகிறது, ரௌத்திரம் பழகிவிட்ட இளைஞர்கள் ஆக்கிரமிப்பாளர்களைக் கொன்றுவிட்டுத்தான் ஓய்வார்கள். ஆயுதப் போராட்டமானது அடக்கு முறையாளர்களின் இதயங்களில் அச்சத்தை ஏற்படுத்துகிறது, ஒடுக்கப்பட்ட மக்களுக்கு அநீதி இழைத்தால் பழிதீர்க்கப்படும், விமோசனம் கிட்டும் என்ற நம்பிக்கையை ஊட்டுகிறது, ஊசலாடும் மன நிலையில் உள்ள தேசபக்தப் போராளிகளுக்கு அது துணிவையும் தன்னம்பிக்கையையும் தருகிறது, ஆளும் வர்க்கத்தின் அகம்பாவத்தை உடைத்துத் தூளாக்குகிறது, உலக மக்களின் பார்வையில் மக்களைப் பற்றிய உணர்வை உயர்த்துகிறது…” என்கிறது அந்தப் பிரசுரம்.

பிரசுரத்தின் செய்தி

பிறகு, காந்தியை நோக்கித் தன்னுடைய கவனத்தைத் திருப்புகிறது. ‘மக்கள் என்ன நினைக்கிறார்கள் என எனக்குத் தெரியும் என்று பொது மேடையிலிருந்து மக்களைப் பார்ப்பவர்களும், அவர்களுக்குத் தரிசனம் தந்து உபதேசம் செய்பவர்களும் கூற முடியாது. சமீப ஆண்டுகளில் மக்களுடைய சமூக வாழ்க்கையில் காந்தி கலந்திருக்கிறாரா? மாலை நேரத்தில் குளிரைப் போக்க தீயை மூட்டிக் குளிர்காயும் விவசாயியுடன் அமர்ந்து, அவருடைய சிந்தனை என்ன என்று அறிந்திருக்கிறாரா? ஆலைத் தொழிலாளியுடன் ஒரு மாலை நேரத்தையாவது செலவிட்டிருக்கிறாரா, அந்தத் தொழிலாளியின் சபதங்கள் என்ன என்றாவது அவருக்குத் தெரியுமா?’ என்று கேள்விகளை அடுக்குகிறது அந்தப் பிரசுரம்.

துண்டுப் பிரசுரம் கூறும் குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரங்கள் இல்லை. தென்னாப்பிரிக்காவில் எல்லாத் தரப்பு இந்தியர்களுடனும் உடனிருந்து 20 ஆண்டுகள் பணியாற்றிய நெடிய அனுபவம் காந்திக்கு இருந்தது. அதற்குப் பிறகு இந்தியாவிலும் தொடர்ந்து 15 ஆண்டு களுக்கு நாடு முழுவதும் சுற்றிப்பார்த்து இந்தியர்க ளுடன் பணியாற்றிய அனுபவமும் அவருக்கு இருக்கிறது. இந்தியாவில் அவருடைய முதல் போராட்டம் பிஹார் மாநிலத்தின் சம்பாரண் மாவட்டத்தில் விவசாயிகளுக்காகவும், பிறகு அகமதாபாதில் ஆலைத் தொழிலாளர்களுக்காகவும் நடைபெற்றது.

ஏழைகளும் கிராம மக்களும் எப்படி வாழ்கிறார்கள் என்று காந்திக்குத் தெரியாது. தங்களுக்குத்தான் தெரியும் என்று உரிமை கொண்டாடும் துணிச்சலை அந்தப் புரட்சியாளார்களின் (இள) வயதும் அனுபவமின்மையும் அவர்களுக்குத் தந்திருக்கின்றன. அகிம்சை, எதிரியையும் நேசிக்கும் பண்பு போன்றவற்றை சராசரி மனிதர்களால் புரிந்துகொள்ள முடியாது என்றே அவர்கள் நினைத்தனர். ‘உலகம் இப்படித்தான் இயங்குகிறது; உங்களுக்கு ஒரு நண்பர் இருக்கிறார், அவரை நீங்கள் மிகவும் நேசிக்கிறீர்கள், சில வேளைகளில் அவருக்காக இறக்கவும் தயாராகிறீர்கள். உங்களுக்கு ஒரு எதிரி இருக்கிறார், அவரை உங்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை, அவருக்கு எதிராகச் சண்டையிடுகிறீர்கள், முடியுமென்றால் அவரைக் கொன்றுவிடுகிறீ்ர்கள். ஆதாம் - ஏவாள் காலத்திலிருந்து இதுதான் நடக்கிறது. இதைப் புரிந்துகொள்வதில் யாருக்கும் சிரமம் ஏற்பட்டதே இல்லை. மக்கள் அனைவரும் எங்கள் பின்னால்தான் இருக்கிறார்கள் என்பதை எங்களுடைய சொந்த அனுபவங்களிலிருந்து அறிவோம். புரட்சி வெற்றிபெறுவதற்காக அவர்கள் ஆயிரக்கணக்கில் திரளும் நாள் வெகுதொலைவில் இல்லை’ என்கிறது அந்த துண்டுப் பிரசுரம்.

இன்றைய வன்முறை

இந்த துண்டுப் பிரசுரம் காந்தியைச் சென்றடைந்தது என்பது நிச்சயம். புது டெல்லியில் உள்ள நேரு நினைவு அருங்காட்சியக நூலகத்தில் அது இன்னமும் அவருக்கு வந்த தனிப்பட்ட தபால்களுடன் இருக்கிறது. அதை அவர் நிச்சயம் படித்துப் பார்த்திருப்பார். ஆனால், அதற்கு அவர் பதில் தர வேண்டும் என்று நினைக்கவில்லை. வன்முறைக்கு ஆதரவாக வாதங்கள் அந்தத் துண்டுப் பிரசுரத்தில் வலுவாக இல்லை என்று அவர் நினைத்திருக்கலாம், அல்லது அவர் அடுத்து மேற்கொள்ளவிருந்த உப்பு சத்தியாகிரகத்துக்கான ஏற்பாடுகளில் தீவிரமாக ஈடுபட்டிருந்திருக்கலாம்.

86 ஆண்டுகளுக்குப் பிறகு இவற்றைப் படிக்கும்போது என்ன தோன்றுகிறது என்றால், எதிர்காலத்தில் என்ன நடக்கப் போகிறது என்று புரட்சியை ஆதரித்த அந்த இளைஞர்களைவிட, காந்தி நன்கு ஊகித்திருந்தார் என்பதுதான். இந்தியாவில் இப்போது நடைபெறும் இரண்டு முக்கிய ஆயுதப் போராட்டங்களை ஒரு கணம் நினைத்துப் பார்ப்போம். காஷ்மீரில் போராளிகளும் மத்திய இந்தியாவில் மாவோயிஸ்ட்டுகளும் ஆயுதம் ஏந்திப் போராடுகின்றனர். இரு குழுக்களுமே வன்முறையைத் தூக்கிப் பிடிக்கின்றன. வன்முறை தேவையான ஆயுதம், தவிர்க்க முடியாதது என்றே கருதுகின்றன. காந்தியின் எண்ணங்களையும் வழிமுறைகளையும் இரு குழுக்களுமே வெறுப்புடன் பார்க்கின்றன.

காந்தியின் கணிப்பு

காஷ்மீர் தீவிரவாதிகளும் மாவோயிஸ்ட்டுகளும் அரசு மீது மக்களுக்குள்ள அதிருப்தியைத்தான் மூலதனமாகப் பயன்படுத்துகின்றனர். காஷ்மீர் பள்ளத்தாக்கில் உள்ளவர்களை டெல்லியில் அடுத்தடுத்து ஆட்சிக்கு வந்த அரசுகள், மதிப்புக்குறைவோடும் வெறுப்போடுமே நடத்திவந் துள்ளன. மாவோயிஸ்ட்டுகள் செல்வாக்கு பெற்றிருக்கும் சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், ஆந்திரப் பிரதேசம், மகாராஷ்டிரம் ஆகிய மாநிலங்களிலும் பழங்குடிகளையும் அரசுகள் அப்படியே நடத்துகின்றன.

காஷ்மீர மக்கள், ஆதிவாசிகள் ஆகியோரின் குறைகள் உண்மையானவை, மிகவும் கவனிக்கத் தக்கவை. ஆயுதப் போராட்டம் அவர்களுடைய குறைகளைத் தீர்த்துவிட்டனவா? நிச்சயமாக இல்லை. ஆயுதப் போராட்டத்தின் ஒரு விளைவு என்னவென்றால் (காந்தி முன்னரே எச்சரித்தபடி) அரசின் அடக்குமுறை தீவிரம் அடைந்திருக்கிறது. ஆயிரக்கணக்கான ஜவான்களும் போலீஸ்காரர்களும் கலகக்காரர்களை அடக்க அனுப்பிவைக்கப்படுகின்றனர். அடுத்த விளைவாக, தங்களுடைய வழிமுறைகளை ஏற்காத உள்ளூர்வாசிகளைத் தீவிரவாதிகளே கொல்வதும் (காந்தி கூறியதைப்போலவே) நடைபெறுகிறது. போலீஸாருக்குத் தகவல் தருவோர் என்று தாங்கள் சந்தேகிக்கிறவர்களை மாவோயிஸ்ட்டுகள் அரக்கத்தனமாக கை, கால்களை வெட்டியும் கொலை செய்தும் வீசியுள்ளனர். வெடிகுண்டுகளையும் துப்பாக்கிகளையும் ஏந்துவதைவிட பேச்சுவார்த்தை நடத்தலாம் என்று மிதவாத வழிமுறைகளைக் கூறியவர்களை தீவிரவாதிகள் காஷ்மீரில் படுகொலை செய்துள்ளனர்.

காஷ்மீரில் தீவிரவாதிகளின் ஆயுதப் போராட்டம் 1980-களின் பிற்பகுதியிலிருந்து தொடர்கிறது. மாவோயிஸ்ட்டுகளின் ஆயுதப் போராட்டம் இன்னும் பழமையானது, 1960-களிலிருந்து தொடர்கிறது. இரண்டிலுமே வெற்றி என்பது தீவிரவாதிகளுக்கும் கிடைக்கவில்லை, அரசின் முயற்சிகளால் அமைதியும் ஏற்படவில்லை. வன்செயல்களால் மக்கள் சுரண்டப்படுவது சிறிதளவும் குறையவில்லை, பாரபட்சமாக நடத்தப்படுவதும் மாறவில்லை. தங்களுடைய வழிமுறையைப் போராளிகள் மாற்றிக்கொள்வதற்கான நேரம் இதுவே. காந்தியின் எழுத்துக்களைப் படிப்பது அவர்களுக்கு உதவக்கூடும். காந்தியின் தொகுப்பு நூல்கள் அனைத்தையுமே அவர்கள் படிக்க வேண்டிய அவசியம் இல்லை. அகிம்சை தொடர்பாக தத்துவார்த்தமாகவும் அரசியல்ரீதியிலும் அவர் அணுகிய கட்டுரைகளை மட்டும் படித்தால்கூடப் போதுமானது. ‘வெடிகுண்டுக் கலாச்சாரம்’ என்ற கட்டுரையிலிருந்து தொடங்குவது நல்லது.

தமிழில்: சாரி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x