Last Updated : 03 Mar, 2022 06:24 AM

Published : 03 Mar 2022 06:24 AM
Last Updated : 03 Mar 2022 06:24 AM

போரில்லா உலகம் வேண்டும்!

போரில்லா உலகம் மானுடத்தின் நெடுங்கனவு. போரிட்டுப் போரிட்டு அழிவில் துயருற்ற மானுடம், போர் வேண்டாம் என்கின்ற குரலைக் காலந்தோறும் உயர்த்தியே வந்திருக்கிறது. ஆனாலும், போர் நிற்கவில்லை. எத்தனை முயற்சிகள் எடுத்தாலும் இதிலிருந்து விடுபட முடிவதில்லை. ரஷ்ய - உக்ரைன் போர் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும், பேச்சுவார்த்தையின் வாயிலாகத் தீர்வு காணப்பட வேண்டும் என்ற குரல் உலகம் முழுவதும் தீவிரமாக எழுந்துள்ளது. இந்தப் போர் தொடர்பான விவாதங்களில், அது தோன்றியதற்கான காரணங்களும் முக்கியமானதாகத் தோன்றுகிறது.

முதல் உலகப் போர் முடிந்த பின்னர், போர்கள் நடைபெறுவதைத் தடுக்க, உலகில் முதன்முறையாக உருவாக்கப்பட்டதுதான் உலக நாடுகள் சங்கம் (League of Nations). ஒரு கட்டத்தில் இந்த அமைப்பு, உலக ஆதிக்கச் சக்திகளால் முடமாக்கப்பட்டது. இந்த அமைப்பை நோக்கி ‘குருவிகளின் சண்டையைத் தீர்ப்பதற்கு உலக நாடுகளின் சங்கம் பயன்படலாம். தீவிரம் கொண்ட கழுகுகளைச் சங்கத்தால் என்ன செய்துவிட முடியும்’ என்று கேள்வி எழுப்பியவர்தான் இரண்டாவது உலகப் பெரும்போருக்குக் காரணமான மூன்று பேரில் ஒருவரான முசோலினி.

இரண்டாம் உலகப் பெரும்போர், உலகைத் தீப்பிடித்து எரிய வைத்தது. ஐந்து கோடிக்கும் அதிகமான மக்கள் இறந்துபோனார்கள். யாருமே நினைத்துப் பார்க்காத தீமை நிறைந்த அணுகுண்டு என்னும் பேரழிவு முதன்முறையாகப் பூமியின் மீது விழுந்தது. இப்படியொரு போர் இனி வேண்டாம் என்று மனித சமுதாயமே கதறியழுதது. முடிவில், நிலையான அமைதியை நிலைநாட்டுவதாக ஐக்கிய நாடுகள் அவையும் பிறப்பெடுத்தது.

உலகப் பெரும்போர் இல்லை என்றாலும் போர் மேகங்கள் சூழ்ந்தே இருந்தன. அது பனிப்போர் அல்லது மறைமுகக் கெடுபிடி யுத்தம் என்று அழைக்கப்பட்டது. ராணுவ வெடிப்பு, பூமியின் வெப்பத்தை அதிகரிக்கச் செய்து, பெரும் அழிவை உருவாக்கும் பருவநிலை மாற்றங்களையும் இயற்கைப் பேரிடர்களையும் நிகழ்த்தின. வழக்கம்போல் ஊர்க்குருவிகளைத்தான், ஐக்கிய நாடுகள் சபையால் கட்டுப்படுத்த முடிந்தது. கழுகுகள் தங்கள் கூரிய நகங்களைக் காட்டி தொடர்ந்து உலகத்தையும் ஐக்கிய நாடுகள் அவையையும் அச்சுறுத்தி வந்தன.

இரண்டாம் உலகப் பெரும்போருக்குப் பிந்தைய யுத்த அபாயங்களை ஆராய்ந்து பார்ப்பது இப்போது மிகவும் அவசியமாகிவிட்டது. ஆனால், இது பற்றிய விவாதங்கள் உள்நோக்கம் கொண்டவையாகவும் சில சமயங்களில் இருக்கின்றன. தற்போது நடக்கும் போருக்கு அடிப்படைக் காரணம், அமெரிக்கத் தலைமையில் இயங்கும் நேட்டோ என்னும் ராணுவக் கூட்டமைப்பு என்பதற்கு உரிய கவனம் கொடுக்கப்படுவதில்லை.

‘உக்ரைன் மக்களுக்கும் எங்களுக்கும் எந்தப் பிரச்சினையும் இல்லை. நோட்டோதான் பிரச்சினை’ என்கிறது ரஷ்யா. சோவியத் ஒன்றியம் பல கூறுகளாகப் பிரிந்து சென்றபோது, 16 நாடுகள் அதிலிருந்து வெளியேறி, சுயவிருப்பத்தோடு தங்களுக்கான தனி நாடுகளை அமைத்துக்கொண்டன. இதில் சில நாடுகள் பின்னர் நேட்டோ ஆதரவு நாடாக மாறின. அந்த நாடுகளின் மீது ரஷ்யா எந்தப் படையெடுப்பையும் நிகழ்த்தவில்லை. அதனால், தங்கள் பாதுகாப்புக்கு எந்த ஆபத்தும் இல்லை என்பதை ரஷ்யா இப்போதும் கூறுகிறது. ஆனால், உக்ரைனை அவ்வாறு பார்க்க முடியாது என்பது ரஷ்யாவின் வாதம்.

ரஷ்யாவின் தலைநகர் மாஸ்கோ, உக்ரைன் தலைநகர் கீவ் ஆகிய இரண்டுக்கும் இடையில் உள்ள தொலைவு 700 கிமீ. உக்ரைன் எல்லையில் அணு ஆயுதம் உள்ளிட்ட ராணுவ தளத்தை அமைத்தால், அது ரஷ்யாவுக்கு நிரந்தர அச்சுறுத்தலாக அமையும். அதனால்தான், ‘எங்கள் கழுத்துக்கு அருகில் கத்தி தொங்கிக்கொண்டிருக்கிறது’ என்கிறது ரஷ்யா.

உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலென்ஸ்கி நேட்டோவின் கைப்பாவையாகிவிட்டார் என்பதுதான் ரஷ்யாவின் குற்றச்சாட்டு. இவர் தொடர்ந்து அரசியலில் செயல்பட்டவர் அல்லர். ஒரு நகைச்சுவை நடிகராகப் புகழ்பெற்றிருந்த இவரை, உள்நாட்டில் ஒரு குழப்பத்தை உருவாக்கி, அமெரிக்க ஆதரவு அதிபராகத் தேர்ந்தெடுத்துக்கொண்டார்கள். உக்ரைனில் ரஷ்ய மொழி பேசும் மக்கள் பெரும் எண்ணிக்கையில் வாழ்ந்துவருகிறார்கள். இவர்களில், 15 ஆயிரம் பேர் இவரது ஆட்சிக்காலத்தில் கொல்லப்பட்டதாகவும் இவர் மீது ஒரு குற்றசாட்டு வைக்கப்பட்டுள்ளது.

மற்றொன்றையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். ஐக்கிய நாடுகள் அவையில் ரஷ்யாவுக்கு எதிராகக் கண்டனத் தீர்மானம் வந்தபோது சீனா, இந்தியா, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகள் ஆதரவு தெரிவிக்காமல் நடுநிலை வகுத்தன. இதற்கான காரணங்களையும் ஆராய்ந்து பார்க்க வேண்டும். காகசஸஸ் மலையும், கருங்கடலும் இணைந்த இந்தப் பிரதேசம், ஆசிய-ஐரோப்பிய நாடுகளில் ராணுவ முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாகக் கருதப்படுகிறது. நேட்டோவின் அதாவது அமெரிக்காவின் ஆயுதத் தளமாக இது மாறுவது தங்களுக்குப் பெரும் ஆபத்து என்று சீனாவும், ஐக்கிய அரபு அமீரகமும் நினைக்கிறது. இந்தியாவுக்கு வேறு காரணங்களும் இருக்கலாம்.

நேட்டோ என்பது என்ன, அதன் இன்றைய தேவைதான் என்ன என்ற கேள்வி ரஷ்ய-உக்ரைன் போர்ப் பின்னணியில் தீவிரமாக எழுந்துள்ளது. ஒரு காலத்தில், சோஷலிஸ நாடுகளின் கூட்டணியாக வார்சா இருப்பதால் நாங்கள் செயல்படுகிறோம் என்று பதிலளித்தது நேட்டோ. 1990-க்கு பின், வார்சா செயல்படவில்லை. பிறகு, ‘நேட்டோ’ ஏன் இன்னும் தொடர வேண்டும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

அமெரிக்கா தனது ராணுவ மேலாதிக்கத்தை உலகெங்கும் நிறுவிக்கொள்வதற்கு நேட்டோ ஒவ்வொரு நாட்டிலும் மறைவிடங்களை உருவாக்கித்தருகிறது. இதைப் போலவே, அதன் துணையோடு மிகப் பெரிய அளவில் ஆயுத வியாபாரமும் நடைபெறுகிறது. உலகின் மறுபுறத்தில் பசியாலும் நோயாலும் மக்கள் துயரத்தின் எல்லைக்கே சென்றுகொண்டிருக்கிறார்கள். இந்நிலையிலும், உள்நாட்டுப் பிரச்சினைகளில் தலையிட்டு, அங்கு அமைதியை ஏற்படுத்துவதாகக் கூறித் தனது ராணுவ அதிகாரத்தை நிறுவ முயலும் எந்தவொரு ராணுவக் கூட்டணியும் இனியும் தொடரக் கூடாது. ஐக்கிய நாடுகள் அவையே போதுமானது. அதை இன்னும் பலப்படுத்தினாலே போதுமானது.

உக்ரைன் மீதான போரை ரஷ்யா உடனடியாக நிறுத்த வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுக்கொண்டுள்ளது. உக்ரைனின் இறையாண்மைக்கும் எல்லைப் பாதுகாப்புக்கும் மதிப்பளித்து, இரண்டு நாடுகளும் பரஸ்பர நம்பிக்கையின் அடிப்படையில் பேச்சுவார்த்தைகளைத் தொடங்க வேண்டும்.

- சி.மகேந்திரன், மூத்த தலைவர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, தொடர்புக்கு: singaram.mahendran@gmail.com

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x