Published : 22 Apr 2016 10:10 AM
Last Updated : 22 Apr 2016 10:10 AM

பெண்களின் அரசியல் பயணம்

நமது நாட்டின் மக்களாட்சிக்கு 66 வயது. நாம் கடந்த தூரம் அதிகம். வளர்ச்சியையும் வீழ்ச்சியையும் சேர்ந்தே பார்த்தோம். இந்த மக்களாட்சியின் அரசியல் நடைமுறைகளில் மக்கள்தொகையில் சரிபாதியாக இருக்கும் பெண்களின் அரசியல் ஈடுபாடு எத்தகையது? எத்தனை பேர் அரசியல் வானில் மின்னியிருக்கிறார்கள்?

அரசியல்வாதியாக ஒரு பெண் உருவாவது அடுத்த கட்டம். ஓட்டுப் போடும் உரிமைக்கே பல நாடுகளில் பெண்கள் பெரும் போராட்டத்தை நடத்தியுள்ளனர். நமது நாட்டில் பெண்களைச் சக மனுஷியாக அங்கீகரித்ததில் மதராஸ் மாகாணம் முதலிடம் பிடித்திருக்கிறது. பிரிட்டிஷ் இந்தியாவின் கீழ் இருந்த மதராஸ் மாகாணத்தில், 1921-லேயே பெண்களும் ஓட்டளிக்கலாம் என்று சட்டம் நிறைவேற்றப்பட்டது. ஆனால், சொத்து வைத்துள்ள பெண்களுக்குத்தான் ஓட்டுரிமை. யாருக்கு குறிப்பிட்ட அளவு சொத்து இருக்கிறதோ அவர்கள் மட்டுமே ஓட்டுப் போடலாம் என்ற நிலை. ஆனால், இங்கிலாந்தில் 1928-ம் ஆண்டுதான் பெண்களுக்கு ஓட்டுரிமை அளிக்கப்பட்டது என்றால் நம்ப முடிகிறதா? 1944-ம் ஆண்டு பிரான்ஸிலும், 1945-ம் ஆண்டு இத்தாலியிலும் பெண்களுக்கு ஓட்டுரிமை அளிக்கும் மசோதா கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் நிறைவேறியிருக்கிறது.

பாதிப்பு பெண்களுக்குத்தான்

சரோஜினி நாயுடு, விஜயலட்சுமி பண்டிட் போன்ற பல பெண்கள் கவர்னர் பொறுப்பிலும், சுசேதா கிருபளானி, உத்திரபிதேசத்திலும் நந்தினி சத்பதி ஒடிசாவிலும் முதலமைச்சர்களாகவும் பணியாற்றியிருந்தாலும்கூட வாழ்க்கையின் கடை நிலையில் இருக்கும் பெண்கள் இன்றும்கூட அரசியலிலிருந்து விலகியே இருக்கின்றனர் என்பதே உண்மை. மத்திய, மாநில அரசுகளின் வரி விதிப்புகளால் நேரடியாகவும், மறைமுகமாகவும் பாதிக்கப்படுவது பெண்கள்தான். குடிப் பழக்கம் காரணமாக கணவரது வருவாய் கிடைக்காத பல பெண்கள் கடுமையாக உழைத்துக் குடும்பத்தைக் காப்பாற்றுவதை நாம் பார்க்கிறோம். அதே போல விலைவாசி உயர்வு, பால் விலை உயர்வு என்று அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வால் பாதிக்கப்படுவதும் வறுமைக் கோட்டைத் தொட்டபடி வாழும், மத்திய வர்க்க இல்லத்தரசிகள்தான். ஆனால், அவர்கள் அரசியலுக்கு வருகிறார்களா?

‘இல்லை’ என்ற பதில் முகத்தில் அடிக்கிறது. தண்ணீருக்காகப் பானைகளுடன் சாலையில் போராடும் பெண்கள், விலைவாசி உயர்வைக் கண்டிக்கும் பெண்கள் ஏன் அரசியல் மேடைக்கு வருவதை விரும்பவில்லை? இந்தக் கேள்வியுடன் சில பெண்மணிகளைச் சந்தித்தேன். சாலை ஓரம் காய்கறி விற்பவர், வீட்டு வேலை செய்பவர், பெரிய அலுவலகத்தில் நல்ல வேலையில் இருக்கும் பெண்மணி, அரசு அதிகாரி என்று அனைத்துத் தரப்பினர் சொல்லும் பதிலும் கிட்டத்தட்ட ஒரே மாதிரி இருப்பது ஆச்சரியமான ஒன்று.

எத்தனை தூரம் உண்மை

“அரசியலில் இறங்கினால் பெயர் கெட்டுவிடும். எங்கள் குடும்பத்தினரே எங்கள் ஒழுக்கம் பற்றிய பல பிரச்சினைகளை எழுப்புவார்கள், மரியாதை கிடைக்காது, அரசியலில் இறங்க பெரிய பணக்காரக் குடும்பமாக இருக்கணும்” இவைதான் பெரும்பாலும் வரும் பதில்கள். அவர்கள் சொல்வதில் எத்தனை தூரம் உண்மை இருக்கிறது? பலமான பின்புலம் இல்லாமல் பெண்களால் அரசியலில் ஈடுபட முடியாதா என்று ஆராய்ந்ததில் பல உண்மைகள் கிடைத்தன.

இன்றைய அரசியல் வானில் மின்னும் பல பெண்கள் பலமான பின்னணி கொண்டவர்கள்தான். செல்வாக்கு மிக்க குடும்பம், நிறையப் படிப்பு, சமூக அங்கீகாரம், போதுமான அளவு பணம் இவை அமைந்த பெண்களே அரசியலில் ஈடுபட்டு பதவிகளுக்குப் போட்டி போடுகிறார்கள். சில இடங்களில் மேயர், பஞ்சாயத்துத் தலைவர், கவுன்சிலர் போன்ற பதவிகளை ஒதுக்கீட்டின் அடிப்படையில் பெண்கள் வகிக்கிறார்கள்தான். ஆனால், அவர்கள் கணவன் அல்லது உடன் பிறந்தவர்களால் ஆட்டுவிக்கப்படும் பதுமைகளாக விளங்குகிறார்கள் என்பதை நாம் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்.

ஆணுக்கு வேறு.. பெண்ணுக்கு வேறு!

தமிழ்ப் பெண்கள் வீட்டைச் சார்ந்தே சிந்திக்கப் பழக்கப்பட்டவர்கள். ‘ஐயோ! அதெல்லாம் பெரிய சமாச்சாரம்! நான் பொம்பளை.. என்னால என்ன செய்ய முடியும்?’ என்ற மனப்பான்மை படித்த, வேலைக்குப் போகும் பெண்களிடமும் காணப்படுகிறது. பெண்ணுக்கான ஒழுக்கக் கோட்பாடுகள் வேறு, ஆண்களுக்கான ஒழுக்கக் கோட்பாடுகள் வேறு என்று இந்தச் சமூகம் நிர்ணயித்திருக்கிறது. பெண்களுக்கு மரியாதை கொடுக்கப்படுவதே இல்லை. அவர் எத்தனை பெரிய பதவியில் இருந்தாலும் சரி மரியாதை கிடைக்காது.

உதாரணமாக, ஒரு ஆண் அரசு அதிகாரியாக இருந்து நல்ல விதமாகச் செயல்படுகிறார் என்றால், “அவரு ரொம்ப நாணயமானவருங்க! லஞ்சம் வாங்க மாட்டார்” என்று பேசும் சமூகம் அதையே ஒரு பெண் செய்யும்போது, “அது ரொம்ப நல்லதுங்க! லஞ்சம் வாங்காது!” என்று அஃறிணையில்தான் குறிப்பிடுகிறார்கள். முதலமைச்சர் வரையில் இதேநிலைதான். ஏன் அப்படி? ஏன் பெண்கள் அரசியலுக்கு வந்து தங்களுக்குத் தேவையான மாற்றங்களைத் தாங்களே செய்து கொள்ளத் தயங்குகிறார்கள்?

அச்சத்தின் விளைவு

பெண்கள் அரசியல் களத்தில் நுழைந்தால் அக்கம் பக்கத்தவரால் புறக்கணிக்கப்படும் நிலை இருக்கிறது. இத்தனை பின்னடைவுகள் பெண்களுக்கு இருப்பது தெரிந்தும் 33% இடஒதுக்கீடு அளிக்க மத்திய அரசு தயங்குகிறது. காலம் காலமாகப் பெண்ணைப் பூட்டிவைத்த ஆணாதிக்க மனப்பான்மையின் வெளிப்பாடுதான் இது. பெண்ணுக்கு உரிமை அளித்தால் அவள் வீட்டை ஒதுக்கி விடுவாளோ.. தன்னைத் தாண்டிச் சென்றுவிடுவாளோ.. என்ற அச்சத்தின் விளைவே இது.

இந்த நிலை மாற வேண்டும். வாக்குரிமையின் ஆற்றலைப் பெண்கள் உணர வேண்டும். ‘என்னால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு எனக்காக இதைச் செய்ய வேண்டும்’ என்று அவர்கள் கேள்வி எழுப்பி கிடைக்கவில்லையென்றால், போராடவும் தயங்கக் கூடாது. தேவைப்பட்டால், அரசியல் களமிறங்கி தூர்வாரி சுத்தப்படுத்தவும் வேண்டும்.

இது என் நாடு. இதை வாழும் தகுதி உடையதாகச் செய்ய நானும் பங்களிக்க வேண்டும். எனது நாடு எனது மிகப் பெரிய குடும்பம். அந்தக் குடும்பத்துக்கும் நான் பொறுப்புள்ள குடிமகளாகச் செயல் பட வேண்டும் என்ற எண்ணம் அனைத்துத் தரப்புப் பெண்களிடமும் பிறக்க வேண்டும். அப்போதுதான் அரசியல்வாதிகள், அதிகாரிகள் என்று அனைவரும் பெண்களை மதிப்பார்கள். பயணம் நீண்ட தூரம், பாதையும் கரடுமுரடு. ஆனால், பயணித்தால்தான் உரிமை என்ற வீட்டை அடைய முடியும்.

- ஸ்ரீஜா வெங்கடேஷ்

தொடர்புக்கு: srijavenkatesh@gmail.com

இது என் நாடு. இதை வாழும் தகுதி உடையதாகச் செய்ய நானும் பங்களிக்க வேண்டும். எனது நாடும் எனது மிகப் பெரிய குடும்பம்தான். அந்தக் குடும்பத்துக்கும்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x