Published : 06 Feb 2022 05:19 AM
Last Updated : 06 Feb 2022 05:19 AM

செ.வை.சண்முகம்: மொழியியல் பெருவாழ்வு

அண்மையில் தன் 91-வது பிறந்த நாளைக் கொண்டாடி மறைந்த பேராசிரியர் செ.வை.சண்முகம் (1932-2022), தன் தமிழ் மொழியியல் ஆய்வால் தன் பெயரை நிறுவிச் சென்ற புகழ் பெற்ற அறிஞர்களில் ஒருவர். முழு நேர ஆய்வாளராகச் சுமார் 70 ஆண்டுகளாக அந்தத் துறையில் இடைவிடாது தன் ஆராய்ச்சிப் பணிகளை மேற்கொண்டுவந்தவர்.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் செங்குந்தபுரத்தில் பிறந்த செ.வை.சண்முகம் கும்பகோணம் கல்லூரி, அண்ணாமலைப் பல்கலைக்கழகம் ஆகிய இடங்களில் தன் கல்வியை முடித்து பாலக்காடு விக்டோரியா கல்லூரியில் சில காலம் பணியாற்றிய பின் அண்ணாமலைப் பல்கலைக்கழக மொழியியல் துறையில் விரிவுரையாளர் முதல் இயக்குநர் வரை பதவி வகித்தவர். பேராசிரியர்கள் தெ.பொ.மீ., ச.அகத்தியலிங்கம் போன்றோருடன் பணியாற்றியவர்.

இங்கிலாந்தின் ரீடிங் பல்கலைக்கழகத்தில் சமூக மொழியில் ஆய்வு, இந்திய வருகைதரு பேராசிரியராக இந்தோனேசியப் பல்கலைக்கழகத்தில் இரண்டரை ஆண்டுகள் பணி, பிறகு வருகைதரு பேராசிரியராக மைசூர், சென்னை, புதுவை போன்ற இடங்களில் பணி என்று இவரது ஆய்வுப் பணி நீண்டு நின்றது.

தமிழ், ஆங்கிலம், மலையாளம் ஆகிய மொழிகளில் நாற்பதுக்கும் மேற்பட்ட ஆய்வு நூல்களை செ.வை.சண்முகம் வெளியிட்டுள்ளார். ஏறக்குறைய 200 ஆராய்ச்சிக் கட்டுரைகளையும் எழுதி ஆய்விதழ்களில் வெளியிட்டுள்ளார். அனைத்துலகக் கருத்தரங்குகள் பலவற்றிலும் பங்கெடுத்தவர். பல கல்விப்புலங்களில் உயர் பதவிகளில் இருந்தவர். கல்விப்புலக் கழகங்கள் பலவற்றில் உறுப்பினர். முனைவர் பட்டம் முதலிய பட்ட மாணவர்களுக்கு வழிகாட்டியாக அமைந்தவர். செம்மொழித் தமிழாய்வு நிறுவனத்தின் தொல்காப்பியர் விருது, தமிழ்நாடு அரசின் கம்பர் விருது முதலிய பல விருதுகளால் சிறப்பிக்கப்பட்டவர். மலையாள மொழியியலுக்குப் பணியாற்றிய அறிஞர்களுள் ஒருவராகக் கேரளமும் இவரைக் கொண்டாடும். செ.வை.சண்முகம் வாழ்வே ஆராய்ச்சி என்று வாழ்ந்துவந்தார். நாள்தோறும் புதியவற்றைக் கற்பதும் அதன் வழி புது அறிவைத் தேடுவதுமாக மாநிலம் பயனுறும் வாழ்வாக அவர் வாழ்ந்து, இளைய தலைமுறையினர்க்கு எடுத்துக்காட்டாக விளங்கினார்.

தமிழ் இலக்கண மரபில் முதல் நூலான தொல்காப்பியத்தைச் சுற்றியே தன் ஆய்வை அமைத்துக்கொண்டவர் செ.வை.சண்முகம். வடமொழிக்கு பாணினி போலத் தமிழின் தனித்தன்மையைப் பேணித் தொல்காப்பியத்தை உருவாக்கிய தொல்காப்பியர் இலக்கண ஆசிரியர் மட்டுமல்ல, தமிழ் அறிவியல் வளர்ச்சியின் முன்னோடி என்பது செ.வை.சண்முகத்தின் கொள்கை. எனவே, தமிழர் அறிவு மரபின் தொடர்ச்சியை இலக்கண மரபு வழியாக ஆராய்வதில் இவரது கவனம் சென்றது. தொல்காப்பியரின் இலக்கண இலக்கியக் கோட்பாடுகள் பற்றி மொழியியல் ஒளியில் இவர் எழுதி வெளியிட்டுள்ள நூல்களும் பிற்கால இலக்கணங்களையும் அவ்வாறு ஆராய்ந்திருப்பதும் நம் அறிவியல் வரலாற்றின் ஒரு பகுதியைப் பற்றி அறிந்துகொள்ளத் துணைசெய்யும்.

இன்றைய மொழி இலக்கிய ஆராய்ச்சியும் மொழி வளர்ச்சியும் மொழியியலால் அன்றி நிகழாது என்ற நிலைப்பாட்டை உடைய தெ.பொ.மீனாட்சிசுந்தரனார், வ.அய்.சுப்ரமணியம் போன்றோர் மரபில் வந்தவர்தான் செ.வை.சண்முகம். இவரது பணிகளில் தலையாயது, மரபு இலக்கணத்திலுள்ள எழுத்து, சொல் இலக்கணத்தை மொழியியல் ஒளியில் விளக்கி, அவற்றில் புதைந்து கிடக்கும் முறையியல், பகுப்பாய்வு நெறிமுறைகள், அவற்றுக்கு அடிப்படையான கோட்பாடுகள் முதலியவற்றை வரலாற்று இலக்கண ஆய்வு, மாற்றிலக்கண ஆய்வு போன்றவற்றின் மூலம் இனம்கண்டு விளக்கியிருப்பது.

இரண்டாவதாக, திராவிடப் பெயர்ச் சொல்லமைப்பு, தமிழ்க் கல்வெட்டு மொழி அமைப்பு, நச்சினார்க்கினியர் ஒலியியல் கோட்பாடு, கிறிஸ்தவ தமிழ் இலக்கண அறிஞர் பணிகள், மலையாளத்தில் முதல் இலக்கண நூலாகிய லீலாதிலகம் பற்றிய ஆராய்ச்சிகள், இலக்கண உருவாக்கம் பற்றிய ஆய்வுகள் என்று ஒப்பிலக்கணம், இலக்கண வரலாறு முதலிய துறைகளில் இயற்றிய நூல்கள் முற்றிலும் புதிய ஆய்வுகள் ஆகும். மூன்றாவதாக, ‘மொழியும் மொழி உணர்வும்’ என்ற தலைப்பில் செ.வை.சண்முகம் எழுதியுள்ள நூல் சமூக மொழியியல் நோக்கில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய ஒன்று. நான்காவதாக, இவர் லண்டன் சென்றிருந்தபோது ‘சுவாமிநாதம்’ என்ற இலக்கண நூலின் முழு வடிவத்தையும் மீட்டெடுத்துச் செவ்வையாகப் பதிப்பித்து, இலக்கண நூற்பதிப்புத் துறையிலும் தன் சுவட்டைப் பதித்திருக்கிறார்.

ஐந்தாவதாக, தமிழ் எழுத்துச் சீர்திருத்தம், கலைச்சொல்லாக்கம், தமிழில் புதுமையாக்கம் முதலியன பற்றிய ஆய்வுகள் மொழித் திட்டமிடல் துறையில் குறிப்பிடத்தக்க பணி. ஆறாவதாக, இந்தோனேசிய மொழியில் தமிழ்த் தொடர்புகள் பற்றிய இவரது ஆய்வு இன்னொரு புதுத் துறை. ஏழாவதாக, அவர் அண்மைக் காலத்தில் மொழியியல் நோக்கில் இலக்கியத் திறனாய்வை மேற்கொண்டு தமிழில் சங்க இலக்கியம் முதல் அண்மைக் கால இலக்கியம் வரை ஆராய்ந்து எழுதியுள்ளது, தமிழில் மொழியியல் இலக்கியத் திறனாய்வு வளர்ச்சிக்கு உரமூட்டுவதாகும். பிணை என்ற உறுப்பை (சீருக்கும் அடிக்கும் இடைப்பட்டது) விரிவுபடுத்தி விளக்கியிருப்பது, வாசிப்புக் கோட்பாட்டை மேற்கொண்டு குறள், சங்க இலக்கியம், தற்கால இலக்கியம் என்று அவர் நிகழ்த்தியுள்ள ஆய்வுகள் என்று செ.வை.சண்முகம் மேற்கொண்ட ஆய்வுகளின் சிறப்பை நாம் சொல்லிக்கொண்டே போகலாம்.

‘பேராசிரியர் செ.வை.சண்முகம் வாழ்வும் பணியும்’ என்ற நூலை துரையும், ‘மொழியியல் ஆய்வு வரலாற்றுப் பேராசிரியர் செ.வை.சண்முகம் பங்களிப்புகள்’ என்ற நூலை ச.பாரதியும் வெளியிட்டுள்ளனர். செ.வை.சண்முகம் இயற்றிய நூல்கள், முன்னுரைகள், மதிப்புரைகள் முதலியவற்றின் பொருள் விளக்க நூலடைவு, அவருடைய நூல்களுக்கு ஆன்றோர் நல்கிய முன்னுரைகள் போன்றவற்றைத் தொகுத்து வெளியிட வேண்டும்.

செ.வை.சண்முகம், நிறைந்த நன்னம்பிக்கையாளர். எதிர்காலத் தலைமுறை மொழியியல் புலமையை வளர்த்தெடுக்கும் என்று உறுதிபட நம்புவார். அவருடைய மறைவு ஒரு வெற்றிடத்தை ஏற்படுத்திவிட்டது. அவருடைய நம்பிக்கையை மெய்ப்பிப்பது இளைய தலைமுறையினர் அவருக்குச் செலுத்தும் நன்றியும் கடமையும் ஆகும்.

- கி.நாச்சிமுத்து, பேராசிரியர், புதுச்சேரி பிரெஞ்சு ஆசியவியல் நிறுவன முதுநிலை ஆய்வாளர், தொடர்புக்கு: nachimuthutamizhkina@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x