Published : 04 Jan 2022 08:13 AM
Last Updated : 04 Jan 2022 08:13 AM

எதிர்பாராத பெருமழைகளை எதிர்கொள்ளத் தயாராவோம்

கடந்த டிசம்பர் 30 அன்று ஒரே நாளில் சென்னையில் கொட்டித் தீர்த்த மழை, பருவநிலை மாற்றத்தின் விளைவுகளை மீண்டும் ஒருமுறை நினைவூட்டிச் சென்றிருக்கிறது. வடகிழக்குப் பருவமழைக் காலம் அநேகமாக முடிந்துவிட்டது என்று எண்ணியிருந்த நிலையில், இந்தப் பெருமழையை யாரும் எதிர்பார்க்கவில்லை. ஆனால், இனிவரும் காலத்தில் இத்தகைய எதிர்பாராத பெருமழைகளை ஆண்டின் எந்த மாதத்திலும் எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்று உலகம் முழுவதும் உள்ள சுற்றுச்சூழலியர்கள் தொடர்ந்து எச்சரித்துவருகின்றனர். எனவே, தமிழ்நாடு அரசும் புயல், மழை, வெள்ளம் போன்ற இயற்கைப் பேரிடர்களை எப்போதும் எதிர்கொள்ளும் வகையில் தொலைநோக்குத் திட்டங்களை வகுத்துப் படிப்படியாக அவற்றை நிறைவேற்றிட வேண்டும்.

டிசம்பர் 30 அன்று சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள மாவட்டங்களில் மிகவும் கனமழைக்கான வாய்ப்புகள் இருப்பது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கவில்லை என்பது தமிழ்நாடு அரசை மட்டுமின்றி, பொதுமக்களையும் அதிர்ச்சிக்கு ஆளாக்கியுள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையத்தை மேம்படுத்தக் கோரி மத்திய உள்துறை அமைச்சருக்குக் கடிதம் எழுதியுள்ளார் தமிழ்நாடு முதல்வர்.

வானிலை ஆய்வு மையங்கள், உரிய நேரத்தில் எச்சரிக்கை விடுத்தாலுமே, சென்னையின் பிரதான சாலைகளிலும் தரையடிப் பாலங்களிலும் மழைநீர் தேங்கிப் போக்குவரத்து பாதிக்கப்படுவதை முழுமையாகத் தவிர்க்கவியலாத நிலையில்தான் இருக்கிறோம். தொடர்ந்து விட்டுவிட்டு மழை பெய்துவரும் நிலையில், சென்னையின் சில பகுதிகளில் இன்னமும்கூடச் சாலைகளில் நீர் தேங்கியுள்ளது. மழைநீரை வெளியேற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் இரவுபகலாகத் தொடர்ந்து ஈடுபட்டுவருகின்றனர்.

இந்திய ஆட்சிப் பணித் துறையில் பணியாற்றி ஓய்வுபெற்றவரும் பேரிடர் மேலாண்மையில் அனுபவம் வாய்ந்தவருமான வெ.திருப்புகழ் தலைமையில் கடந்த நவம்பரில் சென்னை பெருநகர வெள்ள இடர்தணிப்பு மற்றும் மேலாண்மைக்கான அறிவுரைக் குழு நியமிக்கப்பட்டிருப்பது, இது குறித்து தமிழ்நாடு அரசு எடுத்துக்கொள்ளும் சிறப்புக் கவனத்தை வெளிப்படுத்துகிறது. அதே நேரத்தில் சென்னையில் எதிர்பாராத பெருமழைகளின்போது ஏற்படும் வெள்ளப் பாதிப்புகளை இனிமேலும் இயற்கைப் பேரிடராக மட்டும் பொருள்கொள்ளக் கூடாது.

திட்டமிட்டு நிர்மாணிக்கப்படாமல் தன்போக்கில் வளர்ந்துகொண்டே இருக்கும் ஒரு நகரத்தை நோக்கி மேலும் மேலும் மக்கள்தொகை குவிவதைத் தடுப்பதற்கான திட்டங்களையும் வகுத்தாக வேண்டும். தொழில் துறையில் மாநிலம் முழுவதும் சமச்சீரான வளர்ச்சி பெறுவதற்கான வாய்ப்புகளை உருவாக்க வேண்டும். கரோனா பெருந்தொற்றின் இரண்டாண்டு கால அனுபவம், மக்கள் திரள் ஓரிடத்தில் குவிவதன் எதிர்மறை விளைவுகளை ஆழமாக உணர்த்தியுள்ளது. சென்னைப் பெருநகரின் பேரிடர் மேலாண்மை என்பது மழைக் காலத்தையும் நீர்நிலைகளையும் நிர்வகிப்பதோடு முடிந்துவிடாது. பொருளாதாரத் திட்டமிடல்களையும் உள்ளடக்கிய தொலைநோக்குப் பார்வையைக் கொண்டதாக அது அமைய வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x