Published : 03 Jan 2022 07:35 AM
Last Updated : 03 Jan 2022 07:35 AM

போட்டித் தேர்வுகளில் மாநில அரசின் பங்கு என்ன?

சா.கவியரசன்

ஒன்றிய அரசுப் பணியாளர் தேர்வுகளில், இந்தியைத் தாய்மொழியாகக் கொண்டிராத மற்ற மாநிலத்தவருக்கு ஒன்றிய அரசு நிகழ்த்தும் மொழிப் பாகுபாடு ஒருபக்கம் என்றால், போட்டித் தேர்வுகள் சார்ந்து மாநில அரசின் கவனத்துக்குக் கொண்டுசெல்ல வேண்டிய, மாநில அளவிலான பல பிரச்சினைகளும் இருக்கின்றன.

முதல் பிரச்சினை, பாடத்திட்டம். ஒன்றிய அரசுத் தேர்வுக்கு ஒரு பாடத்திட்டம், மாநில அரசுத் தேர்வுக்கு ஒரு பாடத்திட்டம் என ஒவ்வொரு தேர்வுக்கும் ஒவ்வொரு பாடத்திட்டம் இருப்பது மாணவர்களுக்குப் பெரும் சவாலாக இருக்கிறது. பெரும்பான்மையான ஒன்றிய அரசுத் தேர்வுக்கு இருக்கும் பாடத்திட்டத்துக்கு ஏற்ப மாநிலத் தேர்வுகளின் பாடத்திட்டம் இருக்கும் பட்சத்தில், இதற்குப் படிப்பவர்கள் அதற்கும் படிக்க அதிக வாய்ப்பு இருக்கிறது. மாநில அரசுகளின் வேலையில்லா இளைஞர்களின் சுமையும் குறையும். என்சிஇஆர்டி பாடநூல்களுக்கு இணையாக அதே நேர்த்தியில் தமிழ்நாட்டின் புதிய பாடப்புத்தகங்களும் அமைந்திருப்பது ஒரே நேரத்தில் ஒன்றிய அரசுத் தேர்வுகளுக்கும் படிப்பதற்கு நல்ல வாய்ப்பு. அதனைப் பயன்படுத்திக்கொள்ள ஒன்றிய அரசுத் தேர்வுகளுக்கு ஒத்துப்போகும் வகையில் மாநில அரசுத் தேர்வின் பாடத்திட்டத்தை அமைப்பது அவசியம்.

இரண்டாவது, எதிர்மறை மதிப்பெண் முறை (Negative mark). இன்று வரை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வு முறைகளில் எதிர்மறை மதிப்பெண் என்பது இல்லை. ஆனால், ஒன்றிய அரசு வேலைக்கு நடத்தப்படுவதாகட்டும், கல்லூரிகளில் சேருவதற்காக நடத்தப்படும் நுழைவுத் தேர்வாகட்டும் பெரும்பாலும் எதிர்மறை மதிப்பெண் முறை இல்லாத தேர்வே இல்லை. டிஎன்பிஎஸ்சி தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களிடமும் பயிற்சி மையங்களிலும் நான் விசாரித்தவரையில், ஒன்றிய அரசுத் தேர்வுகளில் மொழிப் பிரச்சினைக்கு ஈடாக அவர்கள் முன்வைக்கும் பிரச்சினை ஒன்றிய அரசுத் தேர்வுகளில் ‘எதிர்மறை மதிப்பெண்’ இருப்பது. காரணம் கேட்டால் அரசுப் பள்ளி, கல்லூரிகளில் படித்துவரும் மாணவர்களுக்கு அது சார்ந்து விழிப்புணர்வு இருக்காது என்கிறார்கள். விழிப்புணர்வு இல்லை என்றால், விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டியது அரசுடைய பொறுப்புதானே.

மூன்றாவது பிரச்சினை, நிலையில்லாத, நம்பகத்தன்மையற்ற தேர்வு நாள் அறிவிப்புகள். தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவிக்கும் நாட்கள் பெரும்பான்மையாக நம்பகத்தன்மையற்றே இருக்கின்றன. ஒன்றிய அரசு, தேர்வு நாளை ஒத்திப்போட்டாலும், ஒத்திப்போடப்பட்ட தேர்வு இன்ன நாளில் நடக்கும் என முறையான அறிவிப்புடன் நடக்கிறது. ஆனால், தமிழ்நாடு அரசு கால வரையறையற்று, நாள் குறிப்பிடாமல் ஒத்திப்போடுகிறது. இது மாணவர்கள் மத்தியில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்துகிறது. கரோனா பெருந்தொற்றுக் காலத்தில் இந்தியா முழுக்க வங்கிகள், குடிமையியல் பணித் தேர்வுகள் நடத்தப்படும்போது, தமிழ்நாட்டளவில் ஒரு தேர்வும் நடத்தப்படவில்லை. டிஎன்பிஎஸ்சி தேர்வை மட்டுமே நம்பிப் படித்துவருபவர்களுக்கு இரண்டு ஆண்டுகள் ஒரு தேர்வுமே நடத்தப்படாத நிலையைச் சிந்தித்துப் பாருங்கள்.

நாள் குறிப்பிடுவதில் இன்னொரு முக்கியப் பிரச்சினை, ஒன்றிய அரசு நடத்தும் அதே தேதியில், மாநில அரசுத் தேர்வுகளையும் நடத்துவது. இரண்டுக்கும் தயார் ஆகிய மாணவர் ஏதோ ஒன்றை இழக்கும் சூழலுக்கு அவரைத் தள்ளுவது. உதாரணமாக இந்த முறைகூட, யூபிஎஸ்சி நடத்திய இந்திய வனப் பணியாளர் (IFS) தேர்வில் மொழிப் பாகுபாடு கடந்து, முதல் நிலைத் தேர்வில் தேர்ச்சிபெற்று, முதன்மைத் தேர்வுக்குப் படித்துவரும் சூழலில் அதற்கான தேதி 27.2.2022 முதல் 8.3.2022 வரை என அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்குப் பின் அறிவித்திருக்கும் டிஎன்பிஎஸ்சி, குரூப் 1 முதல் நிலைத் தேர்வில் தகுதியானவர்களுக்கு முதன்மைத் தேர்வை 4.3.2022 முதல் 6.3.2022 வரை என அறிவித்திருக்கிறது. இரண்டிலும் முதல் நிலைத் தேர்வில் தேர்ச்சிபெற்றவர்கள், எத்தகைய வாய்ப்பை இழக்க நேரிடுகிறது என டிஎன்பிஎஸ்சி உணர வேண்டும்.

நான்காவது பிரச்சினை, அரசுப் பள்ளிகளிலும், பெரும்பாலான மற்ற தனியார் பள்ளிகளிலும் வட்டம் நிரப்பப்படும் ஓஎம்ஆர் (OMR) தாள் முறையும், கணினியில் தேர்வு எழுதும் முறையும் ஏன் இல்லை? தமிழ்நாட்டளவில், பள்ளிகளிலும், இன்னும் பல கல்லூரிகளிலும்கூட ஓஎம்ஆர் தேர்வு முறையும், கணினியில் தேர்வு எழுதும் முறையும் இன்னும் பிரபலமாகவில்லை. குறிப்பாக அரசுப் பள்ளிகள், கல்லூரிகளில் படித்துவரும் மாணவர்களுக்கு, டிஎன்பிஎஸ்சி, யூபிஎஸ்சி போன்ற வேலைவாய்ப்புக்கான போட்டித் தேர்வுகளில் உள்ள ஓஎம்ஆர் முறையும், கல்லூரிகளில் இடம் கிடைப்பதற்காக உள்ள நீட் (NEET), ஐசிஏஆர் (ICAR-Indian Council for Agriculture Research) போன்ற நுழைவுத் தேர்வுகளில் உள்ள கணினித் தேர்வு முறையும் மிகவும் வேறுபட்டதாக இருக்கின்றன. இதுவே அவர்களுக்கு ஆரம்பக் கட்டத்தில் பதற்றத்தை ஏற்படுத்திவிடுகிறது. அதனால், மாணவர்களுக்குத் தேர்வு சார்ந்து குறைந்த அளவாவது பக்குவம் ஏற்படுவதற்கு எட்டாம் வகுப்பிலிருந்தாவது ஓஎம்ஆர் தேர்வு முறையையும், கணினியில் தேர்வு எழுதும் முறையையும் பழக்கப்படுத்த வேண்டும்.

ஐந்தாவது பிரச்சினை, பெரும்பாலும் அனைத்துப் போட்டித் தேர்வுகளிலும் கணக்கு மற்றும் பகுத்தறிதல் திறன் (Aptitude and Reasoning) கேள்விகள் இருக்கின்றனவே, அதற்கும் நமது கல்லூரிப் பாடத்திட்டத்துக்கும் சம்பந்தமே இல்லாத சூழல். கல்லூரிகளில் நடத்தப்படும் துறை சார்ந்த பாடத்திட்டத்தோடு, போட்டித் தேர்வுக்கு அவசியமான கணக்கு மற்றும் பகுத்தறிதல் திறன் கேள்விக்கான பயிற்சியும் ஒரு பாடமாக அமைந்திருக்க வேண்டும். பள்ளி மற்றும் கல்லூரி முடித்துவிட்டு போட்டித் தேர்வுக்காகத் தனியாகப் பணம் கட்டி கணக்கு மற்றும் பகுத்தறிதல் திறன் கேள்விகளுக்குப் படிப்பது முற்றிலும் முரணாக இருக்கிறது. இப்போது பள்ளி, கல்லூரிகளைத் தாண்டி பல போட்டித் தேர்வு பயிற்சி மையங்கள், மாணவர்களின் நேரத்தையும் பணத்தையும் சுரண்டிவருகின்றன. அதனால், பயிற்சி மையங்களின் நடைமுறைகளிலும் அரசு தீவிர கவனம் செலுத்த வேண்டும்.

பள்ளி, கல்லூரிகள் எதற்காக? திறன் மேம்படுத்திக்கொண்டு பிடித்தமான பணிக்குச் செல்வதற்காக. இருந்தும், பள்ளி, கல்லூரி முடித்துச் சம்பந்தம் இல்லாமல் பணிக்குச் செல்வதற்காகத் தனியாகப் படிப்பது அபத்தமான நிலை. வாழ்வில் மிக முக்கியமான ஆக்கபூர்வமான வயதில் எத்தனை வருடங்கள் இதற்காகச் செலவிடப்படுகின்றன என்பதை அரசு உணர வேண்டும். பல நல்ல முன்னெடுப்புகளுக்குத் தமிழ்நாடு முதன்மை மாநிலமாக இருந்திருக்கிறது. அதே நம்பிக்கையில், போட்டித் தேர்வு சார்ந்த முன்னெடுப்புகளையும் எதிர்பார்க்கிறோம்.

- சா.கவியரசன், கழனிப்பூ மின்னிதழ் ஆசிரியர், தொடர்புக்கு: kaviyarasan411@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x