Last Updated : 23 Dec, 2021 07:16 AM

 

Published : 23 Dec 2021 07:16 AM
Last Updated : 23 Dec 2021 07:16 AM

பாதுகாப்பற்ற கட்டுமானங்களைப் பலப்படுத்துவது எப்படி?

அருள்திரு சாப்டர் ஓர் ஆங்கிலேயர். ஆனால், தமிழராக வாழ்ந்தவர். நூறாண்டுகளைக் கடந்து நிற்கும் திருநெல்வேலி சாப்டர் பள்ளிக்கும் பாளையங்கோட்டை தூய யோவான் கல்லூரிக்கும் முதல்வராக இருந்தவர். கடந்த வார நிகழ்வு அந்தக் கல்வியாளருக்குப் பெருமை சேர்க்கக்கூடியதல்ல. பள்ளியின் கழிவறைச் சுவர் இடிந்து விழுந்தது. மூன்று சிறுவர்கள் பலியானார்கள். நாடே அதிர்ச்சியுற்றது. பள்ளித் தாளாளரும் தலைமை ஆசிரியரும், கழிவறையைக் கட்டியவரும் கைதானார்கள். இடிபாடுகளைப் பரிசீலித்த பொறியாளர்கள் கட்டிடத்தின் அடித்தளம் பலவீனமாக இருந்தது என்கிறார்கள். விசாரணையில் காரணங்கள் மேலும் துலக்கமாகும்.

தமிழக அரசு துரிதமாக நடவடிக்கை எடுத்தது. மாநிலம் எங்குமுள்ள பழைய, பலவீனமான பள்ளிக் கட்டிடங்களைத் தகர்த்துவிடுமாறு ஆணையிட்டது. கல்வித் துறையும், பொதுப்பணித் துறையும், வருவாய்த் துறையும் இணைந்தன. திருச்சி மாவட்டத்தில் மட்டும் 410 பள்ளிக் கட்டுமானங்கள் பாதுகாப்பற்றவை என இனங்காணப்பட்டன. அவற்றை இடிக்கிற பணியும் தொடங்கிவிட்டது. இவற்றில் வகுப்பறைகள், கழிவறைகள், அடுப்படிகள் எல்லாம் அடங்கும். மேலும் பல மாவட்டங்களில் தகர்ப்பாணை வழங்கப்பட்டது.

புதுக்கோட்டை (100), தஞ்சை (96), கரூர் (20), அரியலூர் (126) முதலான மாவட்டங்களில் தகர்க்கப்படவிருக்கும் பள்ளிக் கட்டிடங்களில் மிகுதியும் சிதிலமடைந்தவை என்று தெரிகிறது. இவை அகற்றப்பட வேண்டியவைதான். ஆனால், நெல்லை சாப்டர் பள்ளிச் சுவர் தகர்ந்து விழுந்ததற்குக் கட்டுமான விதிகள் பின்பற்றப்படாததும், அதன் தரம் குறைவாக இருந்ததும்தான் காரணம் என்று தெரிகிறது. சிதிலமடைந்த கட்டிடங்கள் மட்டுமல்ல, தரக்குறைவான கட்டிடங்களும் அகற்றப்பட வேண்டும். இந்தச் சோக நிகழ்வுக்குப் பல விதமான எதிர்வினைகள் இருந்தன.

சாப்டர் பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளி. தனியார் பள்ளிகளின் ஒரு கூட்டமைப்பு, அரசுப் பள்ளிக் கட்டிடங்களின் தரத்தை விமர்சிப்பதற்கு இதை வாய்ப்பாகப் பயன்படுத்திக்கொண்டது. பல தனியார் பள்ளிக் கட்டிடங்கள் பகட்டானவைதான். ஆனால், எல்லாவற்றையும் அப்படிச் சொல்ல முடியாது. நமது சமூகத்துக்கு நினைவாற்றல் சற்றுக் குறைவு. ஜூலை 2004-ல் கும்பகோணத்தில் ஒரு தனியார் பள்ளியில் நிகழ்ந்த தீ விபத்தில் 94 இளம் பிள்ளைகள் கருகிப் போனார்கள். நெருப்பிலிருந்து கட்டிடங்களைப் பாதுகாக்க விதி நூல்கள் இருக்கின்றன (NBC 2005, IS 14435:1997). அந்தப் பள்ளிக் கட்டிடத்தில் அவற்றிலுள்ள யாதொரு விதியும் அனுசரிக்கப்படவில்லை.

விதி பிறழ்ந்ததால் வீழ்பவை பள்ளிக் கட்டிடங்கள் மட்டுமல்ல. ஜூன் 2014-ல் சென்னை மெளலிவாக்கத்தில் 11 மாடிக் கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்ததையும் 61 தொழிலாளர்கள் உயிரிழந்ததையும் நாம் எளிதில் மறந்துவிட முடியாது. இந்தக் கட்டிடத்திலும் விதிகள் மீறப்பட்டிருந்தன. தரமும் மோசமாக இருந்தது. புலனாய்வுக் குழு பல போதாமைகளைப் பட்டியலிட்டிருந்தது. கான்கிரீட்டின் அடர்த்தி குறைவாக இருந்தது. இடிபாடுகளில் இருந்து எடுக்கப்பட்ட ஊடுகம்பிகள் தரம் தாழ்ந்தவையாக இருந்தன. அடித்தளம் அமைக்கப்பட்ட ஆழத்தில் மண்ணின் தாங்குதிறன் போதுமானதாக இல்லை. முக்கியமாக, கீழ்த்தளத்தில் சில தூண்கள் கட்டப்படவேயில்லை.

இந்த இடத்தில் இன்னொரு சுற்றுச்சுவரும் நினைவுக்கு வரலாம். டிசம்பர் 2019-ல் மேட்டுப்பாளையம் நடூர் பகுதியில் ஒரு மழை இரவில், மேலே இருந்த ஒரு பெரிய வீட்டின் சுற்றுச்சுவர் கீழே இருந்த பல சிறிய வீடுகளின் மீது விழுந்தது. உறக்கத்திலேயே 17 பேர் பலியானார்கள். பலரும் மழையைக் கைகாட்டினார்கள். ஆனால், அந்தச் சுவர் வெறும் சுற்றுச் சுவர் அல்ல. ஒருபுறம் உயரமாகவும் மறுபுறம் தாழ்வாகவும் இருக்கும் இரண்டு நிலப் பகுதிகளுக்கிடையே கட்டப்பட்ட தக்கவைப்புச் சுவர் (retaining wall). ஆனால், அதற்கான அடிப்படைப் பொறியியல் விதிகளைப் பின்பற்றி அந்தச் சுவர் கட்டப்படவில்லை. அரசு இப்போது சிதிலமடைந்த பள்ளிக் கட்டிடங்களை அகற்றுகிறது. இது முக்கியமானது. அக்டோபர் 2017-ல் நாகப்பட்டினம் மாவட்டம் பொறையாரில் போக்குவரத்துக் கழகத்தின் பணிமனையின் கூரை, ஓர் அதிகாலைப் பொழுதில் தகர்ந்து விழுந்தது. ஓய்வெடுத்துக்கொண்டிருந்த எட்டு ஊழியர்கள் அவர்களது உறக்கத்திலிருந்து விழிக்கவேயில்லை.

இந்த விபத்துகள் நமக்குச் சொல்வதென்ன? நெல்லையில் விழுந்தது கழிவறைச் சுவர். குடந்தையில் தீக்கிரையானது பள்ளிக் கட்டிடம். சென்னையில் தகர்ந்தது உயர்ந்துகொண்டிருந்த அடுக்ககம். மேட்டுப்பாளையத்தில் உடைந்து விழுந்தது தக்கவைப்புச் சுவர். நாகையில் விழுந்தது நாள்பட்ட கூரை. நேற்றுகூட மதுரையில் ஒரு பழைய கட்டிடம் இடிந்து விழுந்து போலீஸ்காரர் ஒருவர் உயிரிழந்திருக்கிறார்; மற்றொருவருக்குப் படுகாயம். இவற்றில் சில கட்டுமானக் காலத்திலேயே தகர்ந்தன. சில பயன்பாட்டுக் காலத்தில் வீழ்ந்தன.

சில காலாவதியான பின்பும் அகற்றப்படாததால் தகர்ந்தன. இவற்றில் அரசுக் கட்டிடங்களும் உண்டு, தனியார் கட்டிடங்களும் உண்டு. பலியானவை விலைமதிப்பற்ற மனித உயிர்கள். எல்லா விபத்துகளும் தவிர்த்திருக்கக்கூடியவை. எல்லா அசம்பாவிதங்களும் பொறியியல்ரீதியான குறைபாடுகளால் நிகழ்ந்தவை. கட்டிடங்களை எப்படி வடிவமைக்க வேண்டும், தரக் கட்டுப்பாடுடன் எப்படிக் கட்ட வேண்டும் என்பவற்றுக்கு விரிவான பொறியியல் விதிகள் உள்ளன. பயன்பாட்டுக் காலத்தில் பராமரிப்பு விதிகள் உள்ளன. ஒரு கட்டிடம் இனி பயன்பாட்டுக்கு ஒவ்வாது என்று முடிவெடுப்பதற்கும் விதிகள் உள்ளன. ஒவ்வொரு கட்டிடத்திலும் இந்த விதிகள் அனுசரிக்கப்படுகின்றனவா என்று அரசு இயந்திரம் கண்காணிக்க வேண்டும்.

இப்போது தனியார் கட்டுமானங்களின் வரைபடங்களை நகராட்சிகளோ ஊராட்சிகளோ அங்கீகரிக்கும் நடைமுறை இருக்கிறது. அதற்காக அடிப்படையான கட்டிடவியல் வரைபடங்களைச் சமர்ப்பித்தால் போதுமானது. பொறியியல் வரைபடங்களைச் சமர்ப்பிக்க வேண்டாம். மேலும், கட்டிடம் முறையாகக் கட்டப்படுகிறதா என்று அரசின் சார்பாக யாரும் ஆய்வு செய்வதில்லை. எல்லாப் பொறுப்பும் கட்டிட உடைமையாளருக்கே என்கிற இப்போதைய நடைமுறை பல விபத்துகளுக்கு வழி வகுக்கிறது. இந்த முறை மாற வேண்டும். தகுதி வாய்ந்த கட்டிடக் கலைஞர்களும், கட்டிடவியல் பொறியாளர்களும் அங்கீகரிக்கப்பட்டு, வடிவமைப்புக்கும் கட்டுமானக் காலத்தில் மேற்பார்ப்பதற்கும் அவர்கள் பொறுப்பாக்கப்பட வேண்டும்.

அரசுக் கட்டிடங்களுக்குப் பொதுப்பணித் துறைப் பொறியாளர்கள் பொறுப்பாக்கப்பட வேண்டும். அடுத்து, பயன்பாட்டில் இருக்கும் கட்டிடங்களை ஆண்டுதோறும் பரிசோதிக்க வேண்டும். சில அரசுக் கட்டிடங்களை அந்தந்தத் துறைகளே பரிசோதிக்கின்றன. இது தவறு. கட்டுமானத் துறையில் அனுபவம் மிக்க ஒரு துறைதான் அரசுக் கட்டிடங்களை மேற்பார்த்து தகுதிச் சான்றிதழ் வழங்க வேண்டும். பொதுமக்கள் பயன்படுத்தும் தனியார் கட்டிடங்களுக்குத் தகுதிச் சான்றிதழ் வழங்குகிற பணியை அங்கீகரிக்கப்பட்ட கட்டிடவியல் பொறியாளர்களுக்கு வழங்கலாம். தாங்கள் வழங்குகிற சான்றிதழுக்கு அவர்கள் பொறுப்பானவர்களாக இருக்க வேண்டும். அதாவது, தவறிழைத்தால் தண்டனை இருக்க வேண்டும்.

விபத்து நடந்த சாப்டர் பள்ளிக் கட்டிடத்துக்கு யாரால் பொறியியல் அனுமதி வழங்கப்பட்டது, கட்டப்படும்போது யார் மேற்பார்த்தது, கடைசியாக எப்போது, யாரால் பரிசோதிக்கப்பட்டது முதலான வினாக்களுக்கு விசாரணையில் விடை கிடைக்கும். அரசுக் கட்டிடங்கள், தனியார் கட்டிடங்கள் அனைத்தும் பொறியியல் விதிகளுக்கு உட்பட்டு வடிவமைக்கப்பட வேண்டும். அவை அரசின் கட்டுமானத் துறையால் அங்கீகரிக்கப்பட வேண்டும். கட்டுமானக் காலத்தில் மேற்பார்க்கப்பட வேண்டும். பயன்பாட்டுக் காலத்தில் பராமரிக்கப்பட வேண்டும்.

ஆண்டுதோறும் பரிசோதித்துத் தகுதிச் சான்றிதழ் வழங்கப்பட வேண்டும். காலாவதியானால் தகர்க்கப்பட வேண்டும். இவையெல்லாம் பல வளர்ந்த நாடுகளில் நடப்பவைதான். தமிழ்நாடும் வளர்ந்துவரும் மாநிலம்தான். நாமும் இதற்கான உள்கட்டமைப்பை உருவாக்க வேண்டும். அதற்குக் காலமும் பொருளும் வேண்டிவரும். நமது கட்டிடங்கள் பாதுகாப்பானதாக விளங்க நாம் இவற்றைச் செய்தாக வேண்டும். அதுவே நெல்லைப் பள்ளியிலும் இன்னும் பல்வேறு விபத்துகளிலும் பலியானவர்களுக்கு நாம் செலுத்தும் அஞ்சலியாக அமையும். அதுவே சாப்டர் முதலான கல்வியாளர்களின் தொண்டுக்கு நாம் செலுத்தும் மரியாதையாக இருக்கும்.

- மு.இராமனாதன், எழுத்தாளர், பொறியாளர்.

தொடர்புக்கு: mu.ramanathan@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x