Published : 22 Dec 2021 07:04 AM
Last Updated : 22 Dec 2021 07:04 AM

யூபிஎஸ்சி மொழிப் பிரச்சினையில் மேலும் கவனத்துக்கு

ஒன்றிய அரசுப் பணிகளுக்கான தேர்வில் இந்தியிலும் ஆங்கிலத்திலும் மட்டும் வினாத்தாள்கள் இருக்கின்றன; அக்கேள்விகள், ஏனைய பட்டியலிடப்பட்ட மொழிகளில் இல்லாதது பாரபட்சமான முறை என்பது தொடர்பான கட்டுரைகளை ‘இந்து தமிழ்’ நாளிதழில் (நவம்பர் 10 மற்றும் 30) முன்வைத்ததைத் தொடர்ந்து, டிசம்பர் 1 அன்றே தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியுள்ளார். தொடர்ச்சியாக, டிசம்பர் 16-ல் இந்தப் பிரச்சினையைப் பற்றிய மனுவை ஒன்றிய அமைச்சர் ஜிதேந்திர சிங்கிடம் சி.பி.எம். மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் நேரில் சந்தித்து அளித்துள்ளார். இது மிகவும் வரவேற்கத்தக்க முன்னெடுப்பு.

இத்தனை விரைவாக இப்பிரச்சினையை, தேசிய அளவில் முன்வைத்தது, தீர்வுக்கான நம்பிக்கையை ஏற்படுத்துகிறது. அக்கட்டுரைகளை எழுதுவதற்கு டிஎன்பிஎஸ்சி, யூபிஎஸ்சி போட்டியாளர்கள் பலரிடமும் இப்பிரச்சினையை ஏன் நீங்கள் எங்கும் முன்வைக்கவில்லை என்று கேட்டபோது, ‘‘நாம் சொல்லி யார் கேட்கப்போகிறார்கள்?’’ என்பதே அவர்களுடைய பதிலாக வந்தது. ஆனால், அந்த எண்ணம் தவறானது என்று நிரூபித்து, நேர்மறையான நிகழ்வாக கனிமொழி, சு.வெங்கடேசன் ஆகியோரின் முன்னெடுப்புகள் அமைந்தன.

பிரச்சினையை வெளியில் சொல்லவே தயக்கமாக இருந்த பல போட்டியாளர்களுக்கும், பிரச்சினை என்பதையே உணராமல் இருந்த பல போட்டியாளர்களுக்கும் ஒரு விழிப்புணர்வாக இந்த முன்னெடுப்புகள் அமைந்தன. தமிழ்நாடு மட்டுமல்லாமல் மற்ற மாநிலங்களும் இந்தப் பாகுபாட்டை உணர இது வாய்ப்பானது. இதே வேகத்தில், இந்தப் பிரச்சினைக்கு உடனடியாகத் தீர்வு காண வேண்டும் என்பதையே இந்தக் கட்டுரை வலியுறுத்துகிறது.

அடுத்து வரும் போட்டியாளர்களுக்காவது, மொழிப் பிரச்சினை முடிவுக்கு வரட்டும் என்று பொதுவாகப் பேசி இதனைக் கடந்துவிட முடியாது. வேலையில்லாத் திண்டாட்டம் நமக்கே பெரும் பிரச்சினையாக இருக்கும்போது, நம்முடைய அடுத்த தலைமுறைக்காவது கிடைக்கட்டும் என நாம் தீர்வை ஒத்திப்போட்டுவிட முடியாது.

இது வேலையில்லாப் பிரச்சினை மட்டுமில்லை. வேலையில்லாத சூழலால் போட்டியாளர்கள் தங்கள் மீதே தங்கள் நம்பிக்கையைக் குறைத்துக்கொள்ளும் உணர்வுபூர்வமான பிரச்சினை. என்சிஆர்பி (NCRB- National Crime Record Bureau) அறிக்கையின் படி 2019-ல் வேலையில்லாப் பிரச்சினையின் காரணத்தால் மட்டும் தற்கொலை செய்துகொண்டவர்கள் எண்ணிக்கையில் தமிழ்நாடு மூன்றாவது இடம், முதல் இடம் கர்நாடகம். அதுவும் நம்மைப் போன்று இந்தியைத் தாய்மொழியாகக் கொண்டிராத மாநிலம்.

யூபிஎஸ்சி (ஐ.ஏ.எஸ்) முதல் நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்றவுடன் இரண்டாம் நிலைத் தேர்வான முதன்மைத் தேர்வில் 2 மொழித்தாள் தேர்வு உள்ளது. ஒன்று ஆங்கிலம்; மற்றொன்றுக்கு, பட்டியலிடப்பட்ட 22 இந்திய மொழிகளில் ஒன்றை இந்திய மொழித் தாளாகத் தேர்வர்கள் தேர்வுசெய்ய வேண்டும். மொழிப் புலமையைச் சோதிக்கும் அவ்விரண்டிலும் தகுதித் தேர்வாகத் தேர்ச்சி அடைய வேண்டும். பெரும்பாலும் அந்த இந்திய மொழித் தாளுக்குப் போட்டியாளர்கள் தங்கள் தாய்மொழியையே தேர்வுசெய்வார்கள்.

யூபிஎஸ்சி வெளியிட்ட 70-ம் ஆண்டு அறிக்கைப்படி, 2019-ல் நடந்த யூபிஎஸ்சி முதல் நிலை இந்திப் பாகுபாட்டைத் தாண்டி இரண்டாம் நிலைத் தேர்வான முதன்மைத் தேர்வுக்குச் சென்ற 11,276 பேரில் வெறும் 5% (581) தமிழைத் தகுதித் தேர்வு மொழியாகக் கொண்டவர்கள், கன்னடம் 4% (441), தெலுங்கு 7% (831), மலையாளம் 4% (427), ஒரியா 0.7% (86), இதுவே மக்கள்தொகையில் 26% இந்தியைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள் 65% (7,356) பேர் முதன்மைத் தேர்வின் தகுதித் தேர்வு மொழியாக இந்தியைத் தேர்ந்தெடுத்துள்ளனர்!

இப்படி எந்தப் புள்ளிவிவரத்தை எடுத்தாலும், முதல் நிலைத் தேர்விலேயே இந்தியால் பிற மொழியினர் புறக்கணிக்கப்படுவதுதான் இந்தப் பிரச்சினைக்குக் காரணம் என்பது தெளிவாகத் தெரிகிறதே. முதன்மைத் தேர்வுகளில் கேள்விகள் ஆங்கிலத்திலும் இந்தியிலும் இருக்க, முரணாக, பதில் தாய்மொழியில் எழுதிக்கொள்ளலாம் என்ற விசித்திர வாய்ப்பு இருக்கிறதே, அதன் மூலம் 11,276 பேரில் தமிழ் வழியில் முதன்மைத் தேர்வின் பொது அறிவுப் பாடத்தாள்களை எழுதியவர்கள் வெறும் 21 பேர்தான். தோராயமாக 0.2%! இதன் மூலம், தமிழ் வழியில் பள்ளிக்கல்வி பெற்ற மாணவர்கள் ஐ.ஏ.எஸ். தேர்வில் சந்திக்க நேரிடும் பாகுபாட்டை உணரலாம்.

இந்தப் புள்ளிவிவரம், 2019-ல் மட்டுமில்லை. யுபிஎஸ்சி ஆண்டு அறிக்கையை எடுத்துப் பாருங்கள், எல்லா ஆண்டுகளும் ஏறத்தாழ இதே புள்ளிவிவரம்தான் உங்களுக்குக் கிடைக்கும். கன்னடம், தெலுங்கு, மலையாளம் எல்லாம் இதே நிலைதான். இப்போது இந்தப் பிரச்சினையை இந்தி பேசாத ஏனைய மாநிலங்களும் கையிலெடுக்க வேண்டும்.

ஒரியா மொழி வழியில் ஒருவர்கூட முதன்மைத் தேர்வு எழுதவில்லை. இந்தி மொழி ஆதிக்கம் அதிகம் இருக்கும் வடமாநிலங்களில் காஷ்மீரி, சிந்தி, மணிப்பூரி, சந்தாளி ஆகியவற்றிலிருந்து முதன்மைத் தேர்வுக்குத் தகுதியானவர்கள் எண்ணிக்கை பூஜ்ஜியம். மைதிலியிலிருந்து இரண்டே பேர்தான் தகுதி ஆகியிருக்கிறார்கள். இந்தி எத்தனை மாநில இளைஞர்களின் வேலைவாய்ப்பைச் சுரண்டிக்கொண்டிருக்கிறது என்பதை இந்தி பேசாத மாநிலங்களின் முதல்வர்கள் உணர வேண்டும்.

சமீபத்தில் மெட்ராஸ் உயர் நீதிமன்றத்தில் முன்னாள் உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜியும் நீதிபதி ஆதிகேசவலும் அளித்த தீர்ப்பைக் கவனிக்க வேண்டும். அறிவியல் துறையில் படிக்கும் மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்குவதற்காக ஒன்றிய அரசால் நடத்தப்படும் தேர்வு இந்தியிலும் ஆங்கிலத்திலும் இருப்பது மாணவர்களிடம் பாகுபாடு காட்டுகிறது; அதனால் ஏனைய அட்டவணை மொழியிலும் வினாத்தாள் அமைய வேண்டும் என அவர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

அதற்கு ஒன்றிய அரசு சார்பாகப் பேசிய கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் கேள்விகளை அட்டவணை மொழிகளில் தயார் செய்ய 4-5 மாதங்கள் வரை ஆகும் என்பதால், இந்த ஆண்டு மட்டும் கேள்விகள் இந்தியிலும் ஆங்கிலத்திலும் இருக்க அனுமதியளிக்க வேண்டும். பின் அடுத்த ஆண்டு முதல் கேள்விகள் ஏனைய அட்டவணை மொழிகளில் தயார்செய்யப்படும் என்று உறுதியளித்துள்ளார். மிக எளிமையாக இதையேதான், பிற ஒன்றிய அரசுத் தேர்வுகளுக்கும் கேட்கிறோம். இதைப் போலவே விரைவான முடிவை யூபிஎஸ்சி-யிடமிருந்து எதிர்பார்க்கிறோம்.

- சா.கவியரசன், ‘கழனிப்பூ’ மின்னிதழ் ஆசிரியர்.

தொடர்புக்கு: kaviyarasan411@gmail.com

- மு.செய்யது இப்ராகிம், போட்டித் தேர்வர்.

தொடர்புக்கு: syedtnautarcc@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x