Published : 15 Dec 2021 03:06 AM
Last Updated : 15 Dec 2021 03:06 AM

நகர்ப்புற வெள்ளத்தை எப்படிக் கட்டுப்படுத்துவது?

க.அஷோக் வர்தன் ஷெட்டி

நகர்ப்புற வெள்ளம் பெரும் பிரச்சினையாக உருவெடுத்திருக்கிறது. வேகமான, கட்டுப்பாடற்ற நகரமயமாக்கலின் விளைவாக மழைநீரை உறிஞ்சக்கூடிய மேற்பரப்புகளான விவசாய நிலங்கள், நீர்நிலைகள், சதுப்புநிலங்கள், காடுகள் போன்றவை மழைநீர் ஊடுருவ முடியாத மேற்பரப்புகளான கட்டிடங்கள், சாலைகள், நடைபாதைகள், வாகன நிறுத்துமிடங்கள் என்றெல்லாம் மாற்றப்படுகின்றன.

இம்மேற்பரப்புகளில் மழைநீர் வீணாக வழிந்தோடுகிறது. ஒரு சராசரி நகரப் பகுதியில், அப்பரப்புக்குச் சம அளவிலான மரங்கள் நிறைந்த பகுதியைவிட ஐந்தரை மடங்கு அதிகமாக மழைநீர் வழிந்தோடுகிறது. சமீபத்தில் வெளியிடப்பட்ட ஆய்வுக் கட்டுரை ஒன்றில், ஊடுருவ முடியாத மேற்பரப்பில் ஒவ்வொரு சதவீதப் புள்ளி அதிகரிப்புக்கும், ஆண்டு வெள்ளம் சராசரியாக 3.3% அதிகரிக்கிறது எனச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்தப் பிரச்சினைக்கு வழக்கமான பொறியியல் சார்ந்த தீர்வு என்னவெனில், வழிந்தோடும் வெள்ள நீரை சிமென்ட், கான்கிரீட் வடிகால் மற்றும் கால்வாய்கள் மூலம் அருகிலுள்ள ஏரி அல்லது ஆற்றுக்குச் சென்றடையச் செய்வதாகும். செல்லும் வழியிலுள்ள குப்பைகள், கழிவுப் பொருட்கள் மற்றும் பல்வேறு மாசுகளை எடுத்துச்சென்று அது நீர்நிலைகளில் கலக்கிறது.

திடீரென ஒரு மேகவெடிப்பு ஏற்பட்டாலோ, வடிகால்களிலும் கால்வாய்களிலும் தடைகள் ஏற்பட்டாலோ வெள்ள நீர் அங்குள்ள பகுதிகளை மூழ்கடிக்கிறது. மேலும், வடிவமைப்பு, கட்டுமானக் குறைபாடுகளால் சிக்கல்கள் அதிகரிக்கலாம். உதாரணத்துக்கு, சென்னையின் சில பகுதிகளில் தரை மட்டத்தைச் சரியாக அமைக்காததாலும் வடிகால்களின் தரமற்ற கட்டுமானத்தாலும் வெள்ளப் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. தொடங்கும் இடத்திலிருந்து முடிவடையும் இடம் வரையிலும் முழுமையாக இருந்து, இறுதியில் நீர்நிலைகளை அடைந்தால் மட்டுமே வெள்ள நீர் உள்கட்டமைப்பு பயனுள்ளதாக இருக்கும்.

சென்னையில், சில மழைநீர் வடிகால்கள் இணைக்கப்படாத வலையமைப்புகளாகக் கட்டப்பட்டுள்ளன; இதன் விளைவாகவும் அப்பகுதிகளில் வெள்ளப் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. நகர்ப்புற வெள்ளத்தைத் தடுப்பதில் வெள்ள நீர் உள்கட்டமைப்பு தொடர்ந்து பயனற்றதாக உள்ளது என்ற அதிருப்தி சென்னையில் மட்டுமின்றி, உலகளவிலும் நிலவுகிறது. எனவே, நகர்ப்புற வெள்ளத்தை நிர்வகிப்பதற்கான ‘பசுமை உள்கட்டமைப்புத் தொழில்நுட்பங்கள் மற்றும் நடைமுறைக’ளில் ஆர்வம் வளர்ந்துள்ளது.

பசுமை உள்கட்டமைப்பானது மரங்கள், பூங்காக்கள், நிர்மாணிக்கப்பட்ட சதுப்புநிலங்கள், மழைத் தோட்டங்கள், சாலைகளில் செடிகள் கொண்ட தடுப்புகள், பசுமை அகழிகள் (bioswales), பசுமைக் கூரைகள், பசுமைச் சுவர்கள் ஆகியவற்றைப் பயன்படுத்துகிறது. பசுமை உள்கட்டமைப்பு மழைநீர் விழும் இடத்திலேயே வேகத்தைக் குறைக்கவும், ஊறவைக்கவும், வடிகட்டவும், சேமிக்கவும் உதவுகிறது. பெரிய அளவிலான நிர்மாணிக்கப்பட்ட சதுப்புநிலங்களெல்லாம் ஏரிகளின், ஆறுகளின் வெள்ளப் பெருக்கிலிருந்து பாதுகாக்கவும் வெள்ள நீரைச் சுத்தப்படுத்தவும் உதவும்.

ஊடுருவக்கூடிய மேற்பரப்புகள், மழை பீப்பாய்கள், தொட்டிகள், பெரிய நிலத்தடி வெள்ள நீர்ப் பெட்டகங்கள் போன்ற பசுமை தொழில்நுட்பங்களையும் பசுமை உள்கட்டமைப்பு பயன்படுத்துகிறது. ஊடுருவக்கூடிய மேற்பரப்புகள் வெள்ள நீரோட்ட அளவுகளில் 90% வரை குறைப்பை சாத்தியப்படுத்தியுள்ளன. அவை நடைபாதைகள், குறுகிய வீதிகள், வாகனங்களை நிறுத்தும் பகுதிகள் போன்ற போக்குவரத்து நெரிசல் குறைந்த பகுதிகளுக்கு ஏற்ற முறைகளாகும்.

நிலத்தடி வெள்ள நீர்ப் பெட்டகங்களெல்லாம் பூங்காக்கள், விளையாட்டு மைதானங்கள் அல்லது வாகன நிறுத்துமிடங்களின் கீழ் கட்டப்படுகின்றன. அவை பெருமளவிலான வெள்ள நீரின் ஓட்டத்தைக் கைப்பற்றி, சேமித்து, உச்ச ஓட்டத்தைக் குறைக்கின்றன. தொடர்ந்து வெள்ளப் பெருக்கு ஏற்படும் தாழ்வான பகுதிகளுக்கு இவை மிகச் சரியாகப் பொருந்தும்.

பசுமை உள்கட்டமைப்பு பல வகை நன்மைகளைக் கொண்டுள்ளது. இதனால் வழிந்தோடும் வெள்ள நீரின் அளவு குறைகிறது, நீர்நிலைகளில் போய்ச்சேரும் வெள்ள நீரின் தரம் மேம்படுகிறது, நிலத்தடி நீர்நிலைகளில் நீர் உட்புகுவது அதிகமாகிறது. இது ஆவியாதல் மூலம் நகரத்தைக் குளிர்விக்கிறது, காற்றைச் சுத்தப்படுத்துகிறது, குடிமக்களின் ஆரோக்கியத்தையும் நல்வாழ்வையும் மேம்படுத்துகிறது, விலங்குகளுக்கும் பறவைகளுக்குமான வாழ்விடங்களை வழங்குகிறது, நகரத்தை அழகுபடுத்துகிறது, இதையொட்டி சொத்து மதிப்புகளை அதிகரிக்கிறது, வெள்ளம், வறட்சி இரண்டையும் எதிர்கொள்வதற்கான நகரத்தின் முன்தயாரிப்பை மேம்படுத்துகிறது. பசுமை உள்கட்டமைப்பு அணுகுமுறை சிறிய அளவிலான, பரவலாக்கப்பட்ட தலையீடுகளை அனுமதிக்கிறது. மேலும், வீட்டு உரிமையாளர்கள், வணிக நிறுவனங்களின் பங்கேற்பை ஊக்குவிக்கிறது.

பன்னாட்டு அளவிலான எடுத்துக்காட்டுகள்: நகர்ப்புற வெள்ளத்தைக் கட்டுப்படுத்த உலகின் முன்னணி நகரங்கள் பசுமை உள்கட்டமைப்பை எவ்வாறு பயன்படுத்துகின்றன என்பதை ஆராய்வோம். 2009-ல் 2,000 சதுர மீட்டருக்கும் அதிகமான கட்டிடப் பரப்பளவைக் கொண்ட அனைத்துக் கட்டிடங்களுக்கும் பசுமைக் கூரைகளைக் கட்டாயமாக்கிய முதல் நகரம் கனடாவின் டொராண்டோதான். பெர்லின் நகரத்தின் ரம்மல்ஸ்பர்க் பகுதியில் பசுமைக் கூரைகள், மழைத் தோட்டங்கள், பசுமை அகழிகள், ஊடுருவக்கூடிய மேற்பரப்புகள் போன்றவற்றை வெற்றிகரமாக அமைத்ததால் மழைநீர் வடிகால் தேவையற்றதாகிவிட்டது.

மெல்போர்ன் நகரம் அதன் மத்திய வணிக மாவட்டத்தின் வெள்ளப் பிரச்சினையை இரண்டு மில்லியன் லிட்டர் நிலத்தடி மழைநீர் பெட்டகம், பசுமை உள்கட்டமைப்பு ஆகியவற்றின் மூலம் தீர்த்தது. சீனாவின் ஜின்ஹுவா நகரத்தில் வெள்ளப் பெருக்குப் பாதுகாப்பில் யாதொரு குறைபாடும் இல்லாமல், மூன்று ஆறுகள் சங்கமிக்கும் இடத்தில் சிமென்ட் கான்கிரீட் வெள்ளத் தடுப்புச் சுவரை மாற்றி, 26 ஹெக்டேர் பரப்பளவில் நிர்மாணிக்கப்பட்ட சதுப்புநிலப் பூங்கா அமைத்துள்ளது. இப்பூங்கா ஒரு பொழுதுபோக்கு இடமாகவும் செயல்படுகிறது.

2020-ல், சிங்கப்பூர் 2030-க்குள் நகரம் முழுவதும் பத்து லட்சம் மரங்களை நடும் திட்டத்தைத் தொடங்கியது. ஆம்ஸ்டர்டாம் நகரம் சில குறுகிய வீதிகளை மூடி, பசுமையான இடங்களாக மாற்றியுள்ளது. மேலும், நகரமெங்கும் பல ‘பாக்கெட் பூங்கா’க்களை உருவாக்கியுள்ளது.

சென்னைக்கான ஒரு சிறப்புத் திட்டம்: சென்னை மாநகரமும் மேற்கூறிய சிறந்த செயல்முறைகளைப் பின்பற்றலாம். நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட வேண்டும். நிர்வாக அல்லது நீதித் துறை உத்தரவுகளின் வாயிலாக மட்டுமே புதிய ஆக்கிரமிப்புகளைக் கட்டுப்படுத்த முடியாது; ஏரிகளைச் சுற்றிலும், ஆற்றங்கரை ஓரங்களிலும் நிர்மாணிக்கப்பட்ட சதுப்புநிலப் பூங்காக்களின் மூலம் மட்டுமே இந்த ஆக்கிரமிப்புகளைத் தவிர்க்க இயலும். இவை பொது மக்களுக்குப் பொழுதுபோக்கு இடங்களாகச் செயல்பட்டால், நீர்நிலைகளை அவர்களே பாதுகாக்கவும் ஊக்கமளிக்கும்.

நல்ல பலன்களை விரைவாகப் பெற வேண்டுமானால், சென்னையில் தியாகராய நகர், வேளச்சேரி போன்ற அடிக்கடி வெள்ளத்தில் மூழ்கும் தாழ்வான பகுதிகளில் உள்ள பூங்காக்களின், விளையாட்டுத் திடல்களின் அடியில் பெரிய நிலத்தடி மழைநீர்ப் பெட்டகங்களை ஏற்படுத்த வேண்டும். மும்பையில், காந்தி அங்காடி பகுதியில் உள்ள தாழ்வான பகுதியில் ஒரு பெட்டகம் ஏற்படுத்தப்பட்டுவருகிறது.

ஏற்கெனவே, சிமென்ட் கான்கிரீட் அல்லது நிலக்கீல் கொண்டு கட்டப்பட்ட நடைபாதைகள், உட்புறச் சாலைகள், வாகன நிறுத்துமிடங்கள் போன்றவற்றை, ஊடுருவக்கூடிய மேற்பரப்புகளாகப் படிப்படியாக மாற்ற வேண்டும். அனைத்துத் தெருக்களிலும் உள்ள கான்கிரீட் தடுப்புகளைச் செடிகள் கொண்ட தடுப்புகளாக மாற்ற வேண்டும், அதே நேரத்தில் சாத்தியமான இடங்களில் தெரு ஓரங்களில் பசுமை அகழிகளை அமைக்க வேண்டும்.

சென்னை மாநகரத்தில், அடுத்த 10 ஆண்டுகளில் பத்து லட்சம் மரக்கன்றுகளை (7-10 அடி உயரம்) நடும் பெருந்திட்டத்தை மேற்கொள்ள வேண்டும். திறந்தவெளி ஒதுக்கீட்டுப் பகுதிகள் (OSR) உட்பட, நகரம் முழுவதும் திறந்தவெளிகளில் மழைத் தோட்டங்களையும் ‘பாக்கெட் பூங்கா’க்களையும் அமைக்க வேண்டும். 2,000 சதுர மீட்டருக்கு அதிகமான கட்டிடப் பரப்பளவு கொண்ட அனைத்து (பழைய மற்றும் புதிய) கட்டிடங்களில் பசுமைக் கூரைகள் அமைப்பது கட்டாயமாக்கப்பட வேண்டும். பசுமைச் சுவர்கள் அமைப்பதையும் ஊக்குவிக்க வேண்டும். 200 சதுர மீட்டருக்கு மேல் கட்டிடப் பரப்பளவு கொண்ட அனைத்துக் கட்டிடங்களுக்கும் தரப்படுத்தப்பட்ட வெள்ள நீர் வரி வசூலிக்க வேண்டும். தனியார் முயற்சிகளை ஈர்க்க, தகவல் மற்றும் விழிப்புணர்வுப் பரப்புரைகள், முன்னோட்ட/ செயல்முறைத் திட்டங்கள், விருதுகள், அங்கீகாரத் திட்டங்கள் போன்றவை அவசியம்.

இதுபோன்ற பசுமை முயற்சிகளுக்கு, வெளிநாட்டு உதவி முகமைகளிடமிருந்து தாராளமான நிதியுதவி கிடைக்கும். சீனாவின் நீர் உறிஞ்சும் நகரங்கள் (Sponge Cities) திட்டத்தைப் போன்று மத்திய அரசும் ஒரு தேசிய இயக்கத்தைத் தொடங்க வேண்டும். நகர்ப்புற வெள்ளத்தைக் கட்டுப்படுத்துவதற்கான நமது உத்தியை மாற்ற வேண்டியது அவசியம்.

- க.அஷோக் வர்தன் ஷெட்டி, முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி மற்றும் இந்திய கடல்சார் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர். தொடர்புக்கு: shetty25@hotmail.com

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x