Published : 14 Dec 2021 03:07 AM
Last Updated : 14 Dec 2021 03:07 AM

ரஷ்ய அதிபரின் இந்தியப் பயணம்: நீடிக்கும் நட்புறவு

கடந்த வாரத்தில் இந்தியாவுக்கு ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் வருகை தந்திருந்தது பல வகைகளிலும் குறிப்பிடத்தக்க நிகழ்வு. ஆப்கானிஸ்தான் பிரச்சினையைக் கையாளுவது குறித்து இந்தியாவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையில் கருத்து வேறுபாடுகள் தொடர்ந்துவரும் நிலையில், ரஷ்ய அதிபரின் இந்தப் பயணம் முக்கியத்துவம் கொண்டதாக கவனிக்கப்படுகிறது. அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையிலான வணிகப் போட்டி தீவிரம் பெற்றுள்ள நிலையில், இந்தியாவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையில் இருதரப்பு வணிக ஒப்பந்தங்கள் நிறைவேறியிருப்பது இரு நாடுகளுக்கும் இடையே நேரு காலத்திய லட்சிய உறவு இன்னும் நீடிப்பதான உணர்வையே ஏற்படுத்தியுள்ளது.

இந்திய, ரஷ்ய நாடுகளின் வெளியுறவு, பாதுகாப்புத் துறை அமைச்சர்களுக்கு இடையிலான சந்திப்புகளில் பாதுகாப்பு சார்ந்த ஒப்பந்தங்களும் முடிவாகியுள்ளன. அமெரிக்கா, பிரான்ஸ் போன்ற ஒருசில நாடுகளுடன் மட்டுமே பாதுகாப்பு சார்ந்த ஒப்பந்தங்களை இந்தியா மேற்கொண்டுள்ள நிலையில், இந்த ஒப்பந்தங்கள் முக்கியத்துவம் பெறுகின்றன. ரஷ்யாவுடன் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்புத் துறை தொடர்பிலான ஒப்பந்தங்கள் அமெரிக்கா, சீனா இரண்டு நாடுகளிடம் வியப்பையும்கூட ஏற்படுத்தக்கூடும்.

சீனாவுடனான வணிகப் போட்டிகளைத் தீவிரப்படுத்தியுள்ள அமெரிக்கா, மற்றொருபக்கம் ரஷ்யாவுடன் நட்புறவை விரும்புகிறது. தற்போதைய அமெரிக்க அதிபர் ஜோ பைடன், அமெரிக்க, ரஷ்ய நாடுகளுக்கிடையே கருத்து முரண்பாடுகளை முடிவுக்குக் கொண்டுவரும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளார். அமெரிக்காவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் குறைவது இரு நாடுகளுடனும் நல்லுறவைப் பேண விரும்பும் இந்தியாவுக்கு ஆறுதலான ஒரு அம்சம். எனினும், அமெரிக்காவுடனான உறவை இந்தியா விட்டுக்கொடுக்காது என்று ரஷ்யாவுக்கும் தெரியும். சீனாவுடனான உறவை ரஷ்யா விட்டுக்கொடுக்காது என்று இந்தியாவுக்கும் தெரியும்.

இந்தியாவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையில் வணிகரீதியான ஒப்பந்தங்களை மேற்கொள்ளவும் அவற்றை நடைமுறைப்படுத்தவும் அயலுறவுக் கொள்கை ஒரு தடையாக இல்லை. இருந்தாலும்கூட, கடந்த காலத்தில் இரண்டு நாடுகளுக்கும் இடையில் மேற்கொள்ளப்பட்ட வணிக ஒப்பந்தங்கள் பெருமளவிலான முதலீடுகளாக மாறவில்லை.

இந்திய-ரஷ்ய நாடுகளுக்கிடையிலான வணிகம் ஆண்டொன்றுக்கு 10 பில்லியன் அமெரிக்க டாலர்களாக மட்டுமே உள்ளது. ரஷ்யாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான வணிகமோ ஆண்டொன்றுக்கு 100 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உள்ளது. இந்தியாவைக் காட்டிலும் சீனாவுடனான ரஷ்ய வணிகம் பத்து மடங்கு பெரிது. அதே நேரத்தில், சீனாவுடன் நட்பு கொண்டிருந்தாலும், அதன் பொருளாதார வளர்ச்சியை ரஷ்யா தொடர்ந்து ஏற்றுக்கொள்ளுமா என்பதும் கேள்விக்குரியது.

காரணம், சீனாவின் பொருளாதாரம் அமெரிக்க டாலர் மதிப்பில் ஏறக்குறைய 15 ட்ரில்லியன் ஆக உள்ளது. இது ரஷ்யப் பொருளாதாரத்தைக் காட்டிலும் சற்றேறக்குறைய 10 மடங்கு அதிகமானதாகும். இந்நிலையில்தான், மேற்குலக நாடுகளுடனும் முரண்பட்டு நிற்கும் ரஷ்யா, இந்தியாவுடனான வணிகரீதியிலான உறவை மேலும் வலுப்படுத்திக்கொள்ள விரும்புகிறது. அமெரிக்கா, ரஷ்யா இரண்டு நாடுகளுடன் நல்லுறவைத் தொடரும்பட்சத்தில், இந்தியாவுக்குப் பக்கத்து நாடுகளுடனான முரண்பாடுகளைச் சமாளிப்பது எளிதாகக்கூடும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x