Published : 10 Dec 2021 03:06 AM
Last Updated : 10 Dec 2021 03:06 AM

முதல்வரின் பார்வைக்கு ஏங்கும் நில நிர்வாகத் துறை

வே.முத்துராஜா

நிலத்தின் மதிப்பு நாளுக்கு நாள் தாங்க முடியாத அளவுக்கு அதிகரித்துவரும் நிலையில், ஒரு சிறு மனைப் பகுதியையாவது வாங்கி, அதில் சிறு வீட்டையாவது கட்டிக்கொள்ள வேண்டும் என்பது தனிமனிதரின் பெரும் கனவு. நிலம் என்பது இவ்வளவு அத்தியாவசியமாக இருந்தாலும், போதுமான பணியாளர்கள் இல்லாமல் தமிழ்நாட்டில் நில நிர்வாகம் பல்வேறு சிக்கல்களை எதிர்நோக்கியுள்ளது.

நாளுக்கு நாள் பெருகிவரும் மக்கள்தொகை, நகர்ப்புற வளர்ச்சி, புறநகர் விரிவாக்கம், பெருந்திட்டச் சாலைகள், மெட்ரோ ரயில், உயர் மின்கோபுரங்கள், தேசிய நெடுஞ்சாலைகள் போன்ற முன்னேற்றங்களின் விளைவுகளைப் பிரதிபலிக்கும் வகையில் நில ஆவணங்களை நாளுக்கு நாள் மேம்படுத்தி, தொடர்ந்து திறம்படப் பராமரிக்கப் போதுமான பணியாளர்கள் இல்லாமல் நில அளவைத் துறை திணறிவருகிறது.

1982-ல் 4.84 கோடியாக இருந்த தமிழ்நாட்டின் மக்கள்தொகை 2000-ல் 6.24 கோடியாகவும், 2020-ல் 7.64 கோடியாகவும் உயர்ந்து நிலத்தைப் பங்கீடு செய்யும் பணி பன்மடங்காகப் பெருகிவிட்டது. ஆனால், தேவைக்கு ஏற்ப நில அளவைப் பதிவேடுகள் துறையில் போதிய எண்ணிக்கையில் பணியாளர்களை நியமிக்காமல் இருப்பதால், நில ஆவணங்களின் பராமரிப்பும் நில நிர்வாகமும் பெரும் பின்னடைவைச் சந்தித்து, இதனால் பொதுமக்கள் அவதிப்பட்டுவருகின்றனர்.

நில ஆவணங்கள் தரமற்ற காகிதத்தில் தயாரிக்கப்பட்டுள்ளதால், அன்றாடம் கையாளப்பட்டு நைந்தும் கிழிந்தும்போய் பயனற்ற நிலையில் உள்ளன. பத்திரப் பதிவு மூலம் அரசுக்கு ஆண்டுக்குச் சராசரியாக10,000 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துவரும் நிலையில், அதில் ஒரு சிறு பகுதியையாவது நில அளவை ஆவணங்களைத் தரமான காகிதத்தில் அச்சிட்டு, முறையாகப் பராமரிக்கவும் ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறையாவது நிலையான பதிவேடுகளைப் புதுப்பிக்கவும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும்.

பத்திரப் பதிவுத் துறையில் ஆண்டுதோறும் சராசரியாக 25 லட்சம் பத்திரப் பதிவுகள் நடைபெறும் நிலையில், வருவாய்த் துறையில் சராசரியாக 10 லட்சம் பட்டா மாறுதல்கள் செய்யப்படுகின்றன. இதனால், ஆண்டுக்கு 15 லட்சம் பத்திரப் பதிவுகள், நில ஆவணங்களில் உரிமை மாற்றம் செய்யப்படாமல் விடுபடுகின்றன. கிரையப் பத்திரம் வைத்திருப்பவர் ஒருவர், பட்டா வேறு ஒருவர் பெயரில் என்று நில உரிமைகளில் பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டு, நீதிமன்றங்களில் உரிமையியல் வழக்குகள் குவிகின்றன. தேசிய நீதித் துறைத் தகவல் மையக் கணக்கெடுப்பின்படி தமிழ்நாடு கீழமை நீதிமன்றங்களில் மட்டும் 77,06,054 சிவில் வழக்குகளும், 5,53,281 கிரிமினல் வழக்குகளும் நிலுவையில் உள்ளன.

தமிழ்நாட்டில் உள்ள 388 ஊராட்சி ஒன்றியங்களுக்கும் உட்பட்ட 12,525 ஊராட்சிகளின் கட்டுப்பாட்டில் உள்ள 22,051 சிறு பாசன ஏரிகளையும் 69,768 குளங்கள் மற்றும் ஊருணிகளை நில அளவை செய்து, எல்லைகள் மறு நிர்ணயம் செய்து எல்லைக் கற்கள் நட்டு, ஆக்கிரமிப்பு ஏற்படாதபடி பராமரிக்க வேண்டியது அரசின் தலையாய பணி. மழைக் காலங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்படும்போது மட்டும், நீர்நிலை ஆக்கிரமிப்புகள் பற்றிப் பேசிவிட்டு, பின்னர் அதை மறந்துவிடுவது வாடிக்கையாக உள்ளதால், நீராதாரங்களுக்கெனத் தனியாக ஒரு நில ஆவணத்தொகுப்பு உருவாக்கிப் பராமரிக்க வேண்டும்.

தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் மற்றும் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் (தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம்) போன்ற நிறுவனங்கள் மூலம் கடந்த 10 ஆண்டுகளில் விற்பனை செய்யப்பட்ட சுமார் 20 லட்சம் வீட்டுமனைகள், ஆதிதிராவிடர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலத் துறை மூலம் கடந்த 30 ஆண்டுகளில் வழங்கப்பட்ட 30 லட்சம் வீட்டுமனைப் பட்டாக்கள், கடந்த 10 ஆண்டுகளில் வழங்கப்பட்ட 26 லட்சத்துக்கும் அதிகமான வீட்டுமனைப் பட்டாக்கள் தொடர்பான பதிவுகள் நில ஆவணங்களில் ஏற்றப்படாமல் உள்ளன. இந்தப் பதிவுகளை மேற்கொள்ள அரசு ஆணை வழங்கியும் போதிய வரைவாளர்கள் இல்லாததால், நில ஆவணங்களில் பதிவுகள் ஏற்றப்படாமல் நில ஆவணங்களின் பராமரிப்பு கேள்விக்குறியாகியுள்ளது.

நில ஆவணக் கணினித் தரவுத் தளத்தில் காணப்படும் பிழைகளைத் திருத்துவதற்கு அங்கீகாரம் வழங்க வருவாய் வட்டாட்சியர்களுக்கும் வருவாய்க் கோட்டாட்சியர்களுக்கும் அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. இவர்களெல்லாம் தேர்தல், சட்டம் ஒழுங்கு, நோய்த் தடுப்பு, வறட்சி, பெருவெள்ளம் போன்றவற்றிலும் சாதிச் சான்று, வருமானச் சான்று உள்ளிட்ட பல்வேறு சான்றிதழ்கள் வழங்குவதிலும் மட்டும் கவனம் செலுத்துவதால், நில ஆவணங்களின் பராமரிப்பில் முழுமையாக ஈடுபட இயலாத நிலை நிலவுகிறது.

நில நிர்வாகத்தின் முக்கிய அங்கமாக விளங்கும் நில அளவைத் துறையில் மாவட்ட நில அளவை உதவி இயக்குநர் நிலையில், காலிப் பணியிடங்கள் பல ஆண்டுகளாகப் பூர்த்திசெய்யப்படாமல், ஒரே உதவி இயக்குநர் பல மாவட்டங்களின் பொறுப்புகளை வகிக்கும் நிலை உள்ளது. மேலும், மொத்தம் உள்ள 312 வருவாய் வட்டங்களில் நில ஆவணங்களில் உரிய மாறுதல்களை மேற்கொண்டு முறையாகப் பராமரிக்கும் பணியை மேற்கொள்ளும் நில ஆவண வரைவாளர் மற்றும் முதுநிலை வரைவாளர் பணியிடங்கள் 172 வருவாய் வட்டங்களில் பல ஆண்டுகளாகப் பூர்த்திசெய்யப்படாமல் உள்ளன. இதேபோல் சார் ஆய்வாளர் இனத்தில் 956, உள்வட்ட நில அளவர் இனத்தில் 306, நில அளவர் இனத்தில் 547, வரைவாளர் இனத்தில் 501 பணியிடங்களும், 4 மாவட்டங்களில் தொழில்நுட்ப மேலாளர் பணியிடங்களும், 2 கூடுதல் இயக்குநர் பணியிடங்களும் நிரப்பப்படாமல் உள்ளதால், நில நிர்வாகம் கடும் நெருக்கடியைச் சந்தித்துவருகிறது.

பொதுமக்கள், விவசாயிகள் ஆகியோரின் நிலங்களை நில அளவை செய்வதும் நில ஆவணங்கள் பராமரிப்பதும் ஒன்றுக்கொன்று பிரிக்க இயலாதவை. எனினும் இருவேறு பணியாளர்களால் தனித்தனியான விதிமுறைகளின்படி மேற்கொள்ளப்பட வேண்டிய முக்கியமான பணிகளாகும். இந்தத் தொடர் பணியாளர் அமைப்பைச் சமச்சீராகப் பேணுவதால் மட்டுமே நில ஆவணங்கள் பராமரிப்பு மேம்படும். ஆனால், இதை உணராமல் நில அளவர் பற்றாக்குறையாக இருப்பதாகக் கருதி, நில ஆவணங்கள் தயாரித்துப் பராமரிக்கும் வரைவாளர் பணியிடங்களை நில அளவர்களாக மாற்றம் செய்வதும், வரைவாளர் எண்ணிக்கையைக் குறைப்பதும் நில ஆவணங்களின் பராமரிப்பை முற்றிலும் சீர்குலைத்துவிடும்.

பட்டா மாறுதல், நிலம் தொடர்பான கோரிக்கைகளுக்காக வட்டாட்சியர், கோட்டாட்சியர், மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களுக்கு அன்றாடம் அலைந்து திரியும் பொதுமக்களின் இன்னல்களுக்குக் காலதாமதம் இன்றித் தீர்வுகாண வேண்டும். ஆனால், நில அளவை மற்றும் நிலவரித் திட்ட இயக்ககத்துக்கு இந்தத் துறையின் பணிகள் குறித்து எந்த விதமான புரிதலும், எதிர்காலச் செயல்திட்டமும் இல்லை. பணியாளர் எண்ணிக்கையைக் குறைக்கவும், 170 வரைவாளர் பணியிடங்களை நில அளவர்களாக மாற்றவும் நில நிர்வாகத்தைச் சீரழிக்கும் வகையில் ஒரு செயற்குறிப்பை அனுப்பியதன் மூலம் இது தெளிவாகத் தெரிகிறது. ஆகவே, ஒரு காலத்தில் நிர்வாகத்தில் சிறந்து விளங்கிய தமிழ்நாடு இப்போது பின்தங்கிவிட்டதாக மதுரை உயர் நீதிமன்றம் WP.7746/2020 தீர்ப்பில் சுட்டிக்காட்டியது உண்மை என நிரூபணம் ஆகியுள்ளது.

நிலத்தையும் மனிதர்களையும் பிரிக்க முடியாது. அவர்களின் வாழ்வும் இறப்பும் மண்ணில்தான். நிலம் மனித குலத்தின் வாழ்வோடு பின்னிப் பிணைந்த வாழ்க்கைக்கான ஆதாரம்; மேலும், உணர்வுபூர்வமான தொடர்பைக் கொண்ட மாபெரும் பொருளியல் மூலதனம். எனவே, அரசின் அனைத்துத் துறைகளுக்கும் பயன்தருமாறு நில ஆவணங்களை முறையாகப் பராமரிக்கும் வகையில், நில நிர்வாகத்தை முற்றிலும் சீரமைக்க வேண்டியது அவசியம். தமிழ்நாட்டு முதல்வரின் கவனம் இந்தத் துறையின் மீது திரும்பும் என்றால் மாபெரும் மாற்றங்கள் ஏற்படும்.

- வே.முத்துராஜா, மாநிலத் தலைவர், தமிழ்நாடு நிலஅளவை கணிக வரைவாளர் ஒன்றிப்பு. தொடர்புக்கு: muthuvel64@gmail.com

பட்டா மாறுதல், நிலம் தொடர்பான கோரிக்கைகளுக்காக வட்டாட்சியர், கோட்டாட்சியர், மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களுக்கு அன்றாடம் அலைந்து திரியும் பொதுமக்களின் இன்னல்களுக்குக் காலதாமதம் இன்றித் தீர்வுகாண வேண்டும்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x