Last Updated : 18 Mar, 2016 09:24 AM

 

Published : 18 Mar 2016 09:24 AM
Last Updated : 18 Mar 2016 09:24 AM

அந்தக் காலம்: தேர்தல் ஞாபகங்கள்- காலம் மட்டும் மாறவில்லை!

அப்போது எனக்கு 18 வயது. கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தேன். எனது முழுக் கவனத்தையும் ஈர்த்த முதல் தேர்தல் அதுதான்! இந்தி மொழித் திணிப்புக்கு எதிராக மாணவ சமுதாயம் போர்க்கோலம் பூண்டு போராடி முடித்திருந்த காலம். ரேஷன் கடைகளில் அரிசிக்கு நீண்ட வரிசையில் நின்று, பல வண்ணங்களில் அரிசியை வாங்கி வந்த பொதுமக்களின் அதிருப்தி பின்னணியில் இருந்தது. ராஜாஜியும் அண்ணாவும் ஒரு மகா கூட்டணியை உருவாக்கினர். 7 கட்சிகளைக் கொண்ட அக்கூட்டணியைக் கிண்டலடித்து, 7 தலைவர்கள் கழுதை மீது ஏறிப் பயணம் போவது போன்று தர் வரைந்த கேலிச்சித்திரம் அப்போது மிகவும் பிரபலம்.

தேர்தலுக்கு முந்தைய இரண்டு மாதங்களுமே விழாக்கோலம் பூண்டுவிட்டது. இரவு 12 மணிக்கு மேலும் தேர்தல் பிரச்சாரத்துக்குச் செவிமடுக்க ஆயிரக்கணக்கில் மக்கள் காத்திருப்பார்கள். சிவகங்கை சேதுராஜன் கலைக் குழு விலைவாசி உயர்வை முன்வைத்து வறுத்து எடுத்துக்கொண்டிருக்கும்.

“வெள்ளக்காரன் காலத்திலெ ஒரு அணா கடைக்காரன்ட குடுத்தா காமராஜர் மண்டை அளவுக்குப் புளி குடுப்பான். இப்ப காமராசர் ஆட்சியிலெ ஒரணாவுக்குப் புளியை நம்ம நாக்கில தடவிருதான் கடைக்காரன்” - எதிர்க்கட்சிகளின் கூட்டங்கள் முழுக்க காமராஜரின் தலை உருட்டப்படும். காங்கிரஸ் கூட்டங்களில் திமுகவுக்குச் சவால் விட்டுப் பேச ஆள் கிடையாது. வருகிற கூட்டத்தையும் பேசியே கலைத்துவிடுவார்கள் பெரும்பாலான பேச்சாளர்கள்.

தேர்தல் காய்ச்சல் தீவிரமானபோது, சொந்த ஊரான அம்பாசமுத்திரத்துக்கு வந்தேன். அங்கு மும்முனைப் போட்டி. முந்தைய இரு தேர்தல்களில் வென்றிருந்த ஜி.கோமதிசங்கர தீட்சிதர்தான் காங்கிரஸ் வேட்பாளர். காந்தியவாதி. காமராஜருக்கு நெருக்கமானவர். ஊரில் தாத்தா என்பார்கள் எல்லோரும். காந்தி குல்லாவுடன் கதராடையில் எளிமையாகக் காணப்படும் தியாகி தீட்சிதர் எளியவர் மட்டும் அல்ல. எல்லோருக்கும் இனியவர். தன்னைப் பார்க்க சின்ன பையன்கள் வந்தாலும் எழுந்து நின்று மரியாதையாகப் பேசக் கூடியவர். சட்டமன்றத்தில் வாதாடிப் பேசக் கூடியவர். கல்லிடைக்குறிச்சியில் பிறந்த தீட்சிதர் சேரன்மாதேவியில் வசித்துவந்தார். சேரன்மாதேவிப் பாலம் அவர் காலத்தில் கட்டப்பட்டது.

மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் நிறுத்தப்பட்டிருந்தவர் ஏ. நல்லசிவன். ஹார்வி பஞ்சாலைத் தொழிலாளர் மத்தியில் செல்வாக்கு பெற்ற தலைவர். பிரம்மதேசத்தைச் சேர்ந்தவர். கம்யூனிஸ்ட் என்றாலும் காந்தியவாதி. சர்வோதயா இயக்கத்தில் ஈடுபாடு கொண்டவர். ரயிலில் பாதியும் ஜெயிலில் மீதியுமாக மக்கள் சேவையில் தன்னைக் கரைத்துக்கொண்டவர். திமுக கூட்டணியின் ஆதரவில் நின்றார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தனித்து நின்றது. அக்கட்சியும் சாமானியமான ஆளை நிறுத்தவில்லை. விவசாயிகள் மத்தியில் அன்றைக்கு எழுச்சி மிக்க தலைவராக உருவெடுத்திருந்தவரை நிறுத்தியது. அவரும் காந்தியவாதிதான். அப்பழுக்கற்ற பொதுவாழ்க்கைக்குப் பேர்போனவர்தான். நல்லகண்ணு.

பொதுவாழ்வில் எளிமை, தூய்மை, நேர்மை என்றெல்லாம் சொல்கிறார்களே, அதற்கு இலக்கணமாகத் திகழ்ந்த மூவர் நிற்கிறார்கள். எதிரெதிரே. மக்கள் என்ன முடிவெடுப்பார்கள்? ஒரே குழப்பம்தான்.

தேர்தலில் தமிழகம் முழுவதும் வீசிய எதிர்ப்பலையில் காங்கிரஸ் சின்னாபின்னமானது. பெருந்தலைவர் காமராஜரே தோற்றார். ஆனால், அம்பாசமுத்திரத்தில் தீட்சிதர் வென்றார், மூன்றாவது முறையாக. அப்போது, என்னுடைய பேராசிரியர் கல்லிடைக்குறிச்சி மீனாட்சி சுந்தரத்திடம் பேசிக்கொண்டிருந்தபோது அவர் சொன்னார், “மூணு பேருமே அநியாயத்துக்கு எளிமையான ஆளுங்க. ஆனாலும், தீட்சிதரை அடிச்சுக்க முடியாதப்பா. தீட்சிதர் ஜெயிச்ச பின்னால அவருக்கு வெற்றி ஊர்வலம் நடத்தினாங்க. நான் பார்க்கப் போயிருந்தேன். யானை மேலே ஏத்தி தீட்சிதரை மக்கள் அழைச்சுக்கிட்டு வந்தாங்க. வாங்கிக் குடுத்த புதுச் சட்டையைக்கூடப் போட்டுக்காம, வெட்கத்தோடு சட்டையைக் கக்கத்தில இடுக்கிக்கிட்டு ஏறினவரு நாலே எட்டுல இறங்கிட்டாரு. மக்கள் அம்பாரில ஏத்துனாலும், நாம கீழதான் நடக்கணும்னு தெரிஞ்சவங்கதான் நல்ல தலைவருங்க. அதை நல்லா உணர்ந்தவரு தீட்சிதரு. எங்க காலத்துல இவ்ளோ வேட்பாளருங்க இவ்வளவு நல்லவங்களா இருக்குறாங்க. அதனால, நல்லவங்களுக்கான போட்டியில நல்லசிவனும் நல்லகண்ணுவும் பின்தங்கிட்டாங்க. ஆனா, உங்களுக்கு இன்னும் நெறையக் காலம் இருக்கு. நல்லசிவனையும் நல்லகண்ணுவையும் தீட்சிதர் போக முடியாத உயரத்துக் கொண்டுபோயிடுங்க” என்றார்.

காலம் மாறிவிட்டது. வேட்பாளர்களில் நல்லவர்கள் இல்லை என்று நொந்துகொள்வதில் அர்த்தம் இல்லை. நல்லவர்களை நாமேதான் பார்த்தும் பார்க்காமல் கடந்துகொண்டிருக்கிறோம்!

தொடர்புக்கு: chidambaralatha@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x