Published : 22 Nov 2021 03:05 AM
Last Updated : 22 Nov 2021 03:05 AM

வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறும் முடிவு: கவனத்துக்குரிய படிப்பினைகள்

மத்திய அரசால் கடந்த ஆண்டு அவசரச் சட்டங்களாக இயற்றப்பட்டு, நாடாளுமன்றத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்ட வேளாண் சட்டங்கள் மூன்றையும் திரும்பப் பெற்றுக்கொள்வதாகப் பிரதமர் அறிவித்துள்ளது விவசாயிகளின் ஒருங்கிணைந்த போராட்டத்துக்குக் கிடைத்த வெற்றி என்பது எவ்வகையிலும் மறுக்க முடியாதது. தமிழ்நாட்டு விவசாயிகளிடத்திலும் அந்த மகிழ்ச்சியின் உற்சாகம் தெரிகிறது.

பஞ்சாப், ஹரியாணா, உத்தர பிரதேச விவசாயிகளிடத்தில் நிலவும் ஒற்றுமையின் பலம்தான் இந்தப் போராட்டத்தின் வெற்றி. சாதி, மதம், இனம் அனைத்தையும் தாண்டி விவசாயிகள் என்ற ஒற்றை அடையாளத்தின் கீழ் அவர்கள் திரண்டுநின்றார்கள். தமிழ்நாட்டில் விவசாயிகளின் ஒற்றுமை மாவட்டவாரியாக மாவட்டத்துக்குள்ளும் வட்டாரவாரியாகவும் கட்சிரீதியாகவும் பிரிந்துகிடப்பதே அவர்களது கோரிக்கைகள் உரிய கவனம் பெறாமல் போவதற்கான காரணம் என்பதை இப்போதேனும் உணர வேண்டும்.

வேளாண் சந்தையை ஒழுங்குபடுத்துவது இந்தச் சட்டங்களின் முக்கியமான நோக்கம். ஆனால், விவசாயிகளின் ஒப்புதல் இல்லாமல் அதை நிறைவேற்றுவது சிரமம் என்பதை மத்திய அரசு உணர்ந்துகொண்டுள்ளது. இந்தச் சட்டங்களால் வேளாண் சந்தையைச் சீர்திருத்த முடியும் என்று மத்திய அரசு முழுமனதாக நம்பினாலும்கூட, அதை விவசாயிகளுக்கு விளக்கிச் சொல்லவும் அவர்களின் ஒப்புதலைப் பெறவும் அவர்களின் கருத்துகளைப் பெற்று சில திருத்தங்களைச் செய்யவும் தவறிவிட்டது. வேளாண் சட்டங்கள் திரும்பப் பெறப்பட்டிருப்பதாலேயே விவசாயிகளின் பிரச்சினைகள் முடிவுக்கு வந்துவிடவில்லை.

வேளாண் சந்தைகளை ஒழுங்குபடுத்தாமல் விளைபொருட்களுக்கு நியாயமான விலை கிடைக்கவோ விவசாயிகளின் வருமானம் உயரவோ வழியில்லை. எனவே, வேளாண் சந்தைகளைச் சீர்திருத்துவதற்காகப் பலமுனைகளிலிருந்தும் பரிந்துரைகளைப் பெற்று, அவற்றின் சாதக பாதகங்களை விவாதிக்க வேண்டிய நிலையில் இருக்கிறோம். இத்தகைய விவாதங்களில் விவசாயிகளின் பிரதிநிதிகள் இடம்பெற வேண்டியதும் அவர்களின் கருத்துகளுக்கு மதிப்பளிக்க வேண்டியதும் இப்போது கட்டாயமாகியுள்ளது.

அடுத்த ஆண்டில், நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தல்களையொட்டியே வேளாண் சட்டங்களைத் திரும்பப்பெறும் முடிவை பாஜக எடுத்திருப்பதாகவும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. தேர்தல் களத்தில் பாஜகவை எதிர்த்து நிற்கும் கட்சிகள் இன்னமும்கூட வலிமையைப் பெற்றுவிடவில்லை. இது விவசாயிகளின் ஒருங்கிணைந்த போராட்டத்துக்கான வெற்றியே தவிர, அதை எதிர்க்கட்சிகள் பங்குபோட்டுக்கொள்ள விரும்புவதில் நியாயமில்லை. எதிர்க்கட்சிகள் ஆதரித்தாலும் விவசாயிகளாலேயே நடத்தப்பட்ட போராட்டம் இது.

வேளாண் சட்டங்களுக்கு எதிராக நீதிமன்றத்துக்கு வந்த பின்னும்கூட போராட்டத்தை ஏன் தொடர்கிறீர்கள் என்று ஏற்கெனவே உச்ச நீதிமன்றம் கண்டித்தது. இப்போது நாடாளுமன்றத்தில் சட்டங்கள் நீக்கப்படும் வரை போராட்டம் தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அரசின் மீதான அவநம்பிக்கையாகவும் தீராத கோபத்தின் வெளிப்பாடாகவுமே இது பார்க்கப்படும். விவசாயிகளின் கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டுவிட்ட நிலையில், அது செயல்வடிவம் பெறும்வரை அவர்கள் தங்களது போராட்டத்தை அடையாள நிமித்தமாகத் தொடர விரும்பினால், அது தலைநகரின் இயல்பு வாழ்க்கையைப் பாதிக்காதவகையில் திட்டமிடப்பட வேண்டும். போராட்டங்களின் வழியாக உரிமைகளை நிலைநாட்டலாம் என்பது மீண்டும் உறுதியாகியிருக்கிறது. பேச்சுவார்த்தைகள் மூலமாகப் போராட்டங்களையும்கூடத் தவிர்க்க முடியும். ஆனால், இருதரப்புமே அதற்குத் தயாராக இருக்க வேண்டும்.

ஆடியோ வடிவில் கேட்க:

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x