Published : 08 Nov 2021 01:09 AM
Last Updated : 08 Nov 2021 01:09 AM

எல்லைப் போராட்டமா, பெயர் மாற்றமா?

சென்னை மாநிலத்துக்குத் தமிழ்நாடு என்று சட்டமன்றத்தில் பெயர்மாற்றத் தீர்மானம் நிறைவேற்றிய ஜூலை 18-ம் தேதியைத் தமிழ்நாடு தினமாகச் சமீபத்தில் அறிவித்தது திமுக அரசு. மொழிவழி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட நவம்பர் 1-ம் தேதியைக் கொண்டாடுவதுதானே முறையானது என்று வாதிடுகின்றன அதிமுகவும் அமமுகவும்.

கூட்டணிக்குள் கருத்து வேறுபாடு

அனைத்துக் கட்சித் தலைவர்களோடு தமிழறிஞர்களையும் எல்லைப் போராட்டத் தியாகிகளையும் அழைத்து ஒருமனதாக இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்க வேண்டும் என்று கூறியுள்ளார் விசிக தலைவர் தொல்.திருமாவளவன். தமிழ்நாடு தினம் மாற்றப்பட்டதை மதிமுக தலைவர் வைகோ வரவேற்றிருந்தாலும் அவர் விடுத்துள்ள விரிவான அறிக்கை எல்லைப் போராட்டத் தியாகிகளை நினைவுகூரும் வகையிலேயே அமைந்துள்ளது. நவம்பர் 1-ம் தேதியை எல்லைப் போராட்ட வீரர்கள் நினைவு தினமாகக் கொண்டாட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் நவம்பர் 1-ஐ தமிழ்நாடு தினமாக அதிமுக அறிவித்தபோது வரவேற்ற சிபிஐ கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன், அந்த நாளை திமுக அரசு ஜூலை 18-க்கு மாற்றியதையும் வரவேற்றுள்ளார். எல்லைப் போராட்டத்தை நினைவுகூரும் வகையில் நவம்பர் 1, பெயர் மாற்றத்தை நினைவுகூரும் ஜூலை 18 என்று இரண்டு நாட்களையும் கொண்டாடலாம் என்றொரு கருத்தைத் தெரிவித்துள்ளார் சிபிஐ(எம்) மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன். தமிழ்நாடு பெயர் மாற்றத்தில் கம்யூனிஸ்ட்டுகளின் பங்களிப்பு முக்கியத்துவம் வாய்ந்தது. ஆனால், அவர்களிடையே இது குறித்த கருத்தொருமிப்பு இல்லை என்று தெரிகிறது.

தமிழ்நாடு தினம் ஜூலை 18-க்கு மாற்றப்பட்டதை முழு மனதோடு ஆதரித்து நிற்பது தி.க. தலைவர் கி.வீரமணி மட்டும்தான். ‘தாம் கேட்டுக்கொண்டதைச் சிந்தித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருப்பதாகக்’ கூறுகிறது அவரின் அக்.30 தேதியிட்ட அறிக்கை. மதுரை சென்றிருந்த முதல்வரைத் தமிழ் ஆர்வலர்கள் சிலரும் சந்தித்து இதே கோரிக்கையை விடுத்தார்கள். ஆக, இது திமுக தம் விருப்பத்தின் பெயரால், தம் கட்சியின் நிறுவனரை முன்னிறுத்துவதற்காகக் கொண்டுவந்த மாற்றமல்ல; தாய்க் கழகத்தின் வேண்டுகோளை ஏற்று, தமிழறிஞர்கள் சிலரின் கோரிக்கையைப் பரிசீலித்து எடுத்த முடிவு.

கல்குளம் துப்பாக்கிச் சூடு

1967-ல் அண்ணா தலைமையிலான திமுக அரசு ‘தமிழ்நாடு’ பெயர் மாற்றத் தீர்மானத்தைக் கொண்டுவந்தது இந்திய வரலாற்றின் முக்கிய நிகழ்வு. ஆனால், எந்தவொரு மாநில அரசும் தனது பெயரைத் தன்னிச்சையாக மாற்றிக்கொள்வதற்கு இந்திய அரசமைப்பில் அதிகாரம் அளிக்கப்படவில்லை. சட்டமன்றத் தீர்மானம் நாடாளுமன்றத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டால் மட்டுமே பெயர் மாற்றம் நிகழும். அவ்வாறு நாடாளுமன்றத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டு பெயர்மாற்றம் நடைமுறைக்கு வந்த நாள் 1969 ஜனவரி 14.

தமிழ்நாடு என்ற பெயர் மாற்றத்துக்காகச் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்படுவதற்கு முன்பே 1963-ல் நாடாளுமன்றத்தில் அத்தகையதொரு பெயர் மாற்றத் தீர்மானத்தை முன்மொழிந்தவர் கம்யூனிஸ்ட் தலைவர் பூபேஷ் குப்தா. பம்பாய் மாநிலத்தை மஹாராஷ்டிரம், குஜராத் என்று பிரித்த பிறகு, அம்மாநிலத்தின் பெயரை மஹாராஷ்டிரம் என்று மாற்றிய நிலையில், சென்னையிலிருந்து ஆந்திரம் பிரிந்த பிறகு, தமிழ்நாடு என்று பெயர் சூட்டுவதுதானே முறை என்ற கேள்வியை எழுப்பினார் அவர். தமிழ்நாட்டு மக்களுக்காகப் பேசுவதற்கு உங்களுக்கு எந்த உரிமையும் இல்லை என்று தமிழ்நாட்டைச் சேர்ந்த காங்கிரஸ் உறுப்பினர் அவரது பேச்சின் இடையே குறுக்கிட்டதும் நாடாளுமன்ற விவாதங்களில் பதிவாகியுள்ளது. அப்போது நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த அண்ணா அந்தத் தீர்மானத்தை ஆதரித்துப் பேசினார். தமிழ்நாடு பெயர் மாற்றத்தை வலியுறுத்தி சென்னை சட்டமன்றத்தில் அண்ணாவுக்கு முன்பிருந்தே பொதுவுடைமை இயக்கத் தலைவர்கள் பேசியுள்ளனர்.

இன்றைக்கு, தமிழ்நாடு பெயர் மாற்றத்துக்கான சட்டமன்றத் தீர்மானத்தை மட்டுமே முதன்மையெனக் கொள்ளும்பட்சத்தில், வரலாற்றின் ஒரு பக்கத்தை மட்டும் முன்னிறுத்துபவர்கள் ஆவோம். சென்னைத் தலைநகரத்தையும் வடக்கு, தெற்கு எல்லைகளையும் காத்து நின்ற தலைவர்கள் பலரையும் நாம் நினைவுகூரத் தவறியவர் ஆகிவிடுவோம்.

ஆந்திரம் தவிர்த்த சென்னை மாநிலத்துக்குச் சென்னையே தலைநகராக இருக்க வேண்டும் என்று போராடியவர் ம.பொ.சிவஞானம். அதற்கு ஆதரவாக அன்றைய முதல்வர் ராஜாஜியும் உறுதியாக நின்றார். ஆந்திரம் பிரிக்கப்பட்டபோது திருத்தணியை மீட்கக் காரணமாக அமைந்ததும் ம.பொ.சி. முன்னெடுத்த போராட்டங்கள்தான். திமுகவும் அவரோடு களத்தில் கைகோத்து நின்றது. அதைப் போலவே, தெற்கே திருவிதாங்கூருடன் சேர்ந்திருந்த தமிழ் பேசும் பகுதிகளைத் தமிழ்நாட்டுடன் இணைக்க வேண்டும் என்ற போராட்டம் 1954-ல் தீவிரமடைந்தது. அதிலும் திமுக பங்கேற்றது. தெற்கெல்லைப் போராட்டத்தை பி.எஸ்.மணியும் மார்ஷல் நேசமணியும் வழிநடத்தினார்கள். அப்போது, கல்குளத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர் என்பதையும் மறந்துவிடக் கூடாது.

சங்கரலிங்கனாரின் உயிர்த் தியாகம்

ஜவாஹர்லால் நேரு முன்மொழிந்த தட்சிணப் பிரதேசத் திட்டத்தை 1956-ல் திமுக மட்டுமே எதிர்க்கவில்லை. தமிழரசுக் கழகம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, பிரஜா சோஷலிஸ்ட் கட்சி ஆகியவை ஒன்றிணைந்து எதிர்த்தன. அப்போதே தமிழ்நாடு என்ற பெயர் மாற்றத்தை ஒரே குரலில் முன்வைத்தன. தமிழ்நாடு என்ற வார்த்தையை உச்சரிக்கும்தோறும் தியாகி சங்கரலிங்கனாரை நினைவுகூர வேண்டும். தமிழ்நாடு என்ற பெயர் மாற்றம் உள்ளிட்ட 12 கோரிக்கைகளுக்காக, 1956 ஜூலை 27-ல் விருதுநகர் குளக்கரை மேட்டில் தனது 61-வது வயதில் உண்ணாவிரதத்தைத் தொடங்கினார் அவர். கம்யூனிஸ்ட் கட்சியின் விருதுநகர் கமிட்டி அவரைத் தேசபந்து மைதானத்துக்கு அழைத்துவந்தது. அண்ணாவும் ம.பொ.சி.யும் அந்தத் தியாகியைச் சந்தித்து, அவரது போராட்டத்துக்குத் தங்கள் ஆதரவைத் தெரிவித்தனர். உடல்நிலை மோசமான நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சங்கரலிங்கனார் அங்கேயே இறந்தார். அவரையடுத்து தமிழ்நாடு பெயர் மாற்ற முழக்கத்தை ம.பொ.சி. இன்னும் தீவிரப்படுத்தினார். அண்ணா அந்த விருப்பத்தைத் தனது ஆட்சிக் காலத்தில் நிறைவேற்றினார்.

சென்னையைத் தலைநகராகக் கொண்டு ஆந்திர மாநிலம் பிரிக்கப்பட வேண்டும் என்று 1952-ல் 58 நாட்கள் உண்ணாவிரதமிருந்து உயிர்துறந்த பொட்டி ஸ்ரீராமுலுவை ஆந்திரம் இன்றும் நினைவில் வைத்திருக்கிறது. சென்னை மாநிலத்துக்குத் தமிழ்நாடு என்று பெயர் சூட்டுவதற்காக 76 நாட்கள் பட்டினி கிடந்து, உயிர்துறந்த சங்கரலிங்கனாரை நாம் மறந்துவிட்டோம். எத்தனை உயிரிழப்புகள்... எத்தனை கைதுகள்... எத்தனை தடியடிகள்... அந்த நீண்ட நெடிய போராட்டத்தின் உச்சம்தான் தமிழ்நாடு எனும் பெயர் மாற்றம். இதை நடைமுறை சாத்தியமாக ஆக்கியது அண்ணாதான் என்பது வரலாறு.

- செல்வ புவியரசன், தொடர்புக்கு: puviyarasan.s@hindutamil.co.in

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x