Last Updated : 31 Oct, 2021 03:08 AM

 

Published : 31 Oct 2021 03:08 AM
Last Updated : 31 Oct 2021 03:08 AM

நன்மாறன்: ஏழைகளின் தோழர்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை மாநகர் மாவட்டக் குழு அலுவலகம். மறைந்த நன்மாறனின் உடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது. அரசியல் தலைவர்களும், பல்வேறு அமைப்பின் நிர்வாகிகளும் அஞ்சலி செலுத்தவந்தபோது, இந்த அமைப்பிலிருந்து இன்னார் வந்திருக்கிறார்கள் என்று ஒருவர் மைக்கில் அறிவித்துக்கொண்டிருந்தார். அப்படிப் பெயர் சொல்லி அறிவிக்க முடியாத ஆயிரக்கணக்கான சாதாரணர்களும், நாற்பது - ஐம்பது ரூபாய்க்கு மாலை வாங்கிக்கொண்டுவந்து கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தியதைப் பார்த்தபோது, பலருக்கும் புல்லரித்தது.

"ஏழைக் குடும்பத்தில் பிறந்து, ஏழை மக்களுக்காகப் பாடுபட்டு, ஏழைகளின் கூட்டத்திலேயே வாழ்ந்து, ஏழையாகவே தனது வாழ்வை முடித்துக்கொண்டார் தோழர் நன்மாறன்" என்று அந்த உணர்வை அழகாக விவரித்தார் நன்மாறனின் நண்பர் பேராசிரியர் சாலமன் பாப்பையா. அவர் ஒன்றும் அரசியலுக்காக ஏழை வேடம் போட்டவர் அல்ல. அவரது இயல்பே அதுதான். தமிழ்நாடு வணிகர் சங்கக் கூட்டத்துக்கும் போவார்... பீடி, சிகரெட், வெற்றிலை - பாக்கு வியாபாரிகள் சங்கக் கூட்டத்துக்கும் போய் அவர்களின் கோரிக்கைகளுக்குக் காது கொடுப்பார். கைநெசவுத் தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம், அரைஞாண் கயிறு தயாரிப்பவர்களுக்கு மின்சார மானியம், சாம்பிராணி தயாரிப்பவர்கள், மாவு அரைப்பவர்கள், சிறு வியாபாரிகள், குடிசைத் தொழிலாக மிட்டாய், பிஸ்கட் செய்பவர்களுக்கு வரிச்சலுகை பற்றி எல்லாம் ஒரு எம்எல்ஏ சட்டமன்றத்தில் விரிவாகப் பேசினார் என்றால், அது நன்மாறன்தான்.

எளிய நடையில், நகைச்சுவை இழையோட அழகாகப் பேசக்கூடியவர் நன்மாறன். முதல்வர் பங்கேற்கும் நிகழ்ச்சி என்றாலும் சரி, உள்ளூர் அரசு விழா என்றாலும் சரி, ஒரு பொதுக் கோரிக்கையை மேடையில் சொல்லி, இந்தக் காலக்கெடுவுக்குள் நிறைவேற்றுகிறோம் என்ற வாக்குறுதியையும் அதே மேடையில் வாங்கிவிடுவார் நன்மாறன். அவரது இந்தப் பண்பை நகைச்சுவையாகச் சுட்டிக்காட்டி, குத்திக்காட்டி கடைசியில் அந்தக் கோரிக்கையை நிறைவேற்றுவதாக அன்றைய முதல்வர் கருணாநிதி மேடையில் அறிவித்தது பத்திரிகையாளர்களுக்கு நினைவிருக்கும்.

பதவியை நாடாத மனிதர்...

2001-ல் முதல் முறையாக எம்எல்ஏ ஆனவருக்கு, 2006-ல் மீண்டும் மதுரை கிழக்குத் தொகுதியில் போட்டியிட வாய்ப்புக் கொடுத்தது மார்க்சிஸ்ட் கட்சி. அந்த முறையும் வெற்றி பெற்றார். "எவ்வளவு மக்கள் செல்வாக்கு இருந்தாலும், ஒரே நபருக்கு இரண்டு முறைக்கு மேல் எம்எல்ஏ சீட் கொடுக்க முடியாது” என்று அடுத்த முறை கட்சி மறுத்தபோதும், அதைப் புன்னகையுடன் ஏற்றுக்கொண்டவர் நன்மாறன்.

சைக்கிளிலேயே மதுரையை வலம்வந்த நன்மாறன், சட்டமன்ற உறுப்பினரான பிறகும்கூட, சொந்த வாகனம் வாங்கியதில்லை. அரசு விழாவுக்கு ஆட்டோவில் வருவதையும், விழா முடிந்ததும் யாருடைய இருசக்கர வாகனத்திலாவது லிஃப்ட் கேட்டு ஏறிச்செல்வதையும் அநேகமாக எல்லா பத்திரிகையாளர்களும் பார்த்திருப்பார்கள். ஒரு கட்டத்தில், கட்சியே அவருக்கு ஸ்கூட்டர் ஒன்றை வாங்கிக்கொடுத்தது. வாடகை வீட்டில்தான் வசிப்பார். அரசு மருத்துவமனையில், அதுவும் வரிசையில் நின்று மாத்திரை வாங்குவார். பேசும்போது அவரது முன்பக்க செயற்கைப் பற்கள் முன்னும் பின்னும் ஆடும். எம்எல்ஏவாக இருந்தவரையில் அவர் அதைச் சரிசெய்ததில்லை.

வீடு தருமா கம்யூனிஸ்ட் கட்சி

அடிப்படையில் அவர் ஓர் எழுத்தாளர். மாணவப் பருவத்திலேயே கையெழுத்துப் பத்திரிகை நடத்தியவர். மார்க்ஸ், எங்கல்ஸ், லெனின், ஸ்டாலின் ஆகியோரின் வாழ்க்கை வரலாற்றை எளிய நடையில் புத்தகங்களாக வெளியிட்டவர். தீக்கதிரிலும் நிறைய கட்டுரைகள் எழுதியிருக்கிறார். சென்னையில் சட்டமன்றத்தில் பேச வாய்ப்புக் கிடைத்தது போக மீதிப் பிரச்சினைகளைப் பத்திரிகையாளர்களின் மூலம் வெளிக்கொண்டுவந்து தீர்வுகாண முனைவார். மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பத்திரிகையாளர் அறைக்கு வந்து, ஏதாவது ஒரு மக்கள் பிரச்சினையின் மீது செய்தியாளர்களின் கவனத்தை ஈர்ப்பார்.

ஒரு காட்சியை என்னால் மறக்கவே முடியாது. எம்எல்ஏ காலம் எல்லாம் முடிந்த பிறகு, ஏதோ ஒரு ஏழை, தன்னுடைய வேலைக்குத் துணையாக நன்மாறனை தன்னுடைய இருசக்கர வாகனத்தின் பின்சீட்டில் உட்கார வைத்து, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு அழைத்துவந்தார். நன்மாறன் எங்களிடம் வந்து, அந்த ஏழையின் கோரிக்கை மனுவைத் தந்து ‘‘பத்திரிகைச் செய்தியாக்கிடுங்க தோழர்” என்று சொல்லிக்கொண்டிருந்தபோது,, கம்யூனிஸ்ட் கட்சிக்காரர் ஒருவர், அவரது மகன் வயதுகூட இருக்காது.

‘‘யாரைக் கேட்டு கலெக்டர் ஆபீஸ் வந்தீங்க. கட்சியில அனுமதி வாங்குனீங்களா?” என்று கொஞ்சம்கூட மரியாதையே இல்லாமல் காட்டுக்கத்து கத்தினார். மெளனமாகத் தலை கவிழ்ந்தபடி அங்கிருந்து வெளியேறினார் நன்மாறன். எங்களுக்குப் பேரதிர்ச்சி. எம்எல்ஏ சம்பளத்தை மட்டுமின்றி, ஓய்வூதியத்தையும் கட்சியிடம் கொடுத்துவிட்டுக் கட்சி கொடுத்த சொற்பத் தொகையில் வாடகை வீட்டில் குடும்பத்தை ஓட்டிக்கொண்டிருந்தவர், கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் குடிசை மாற்று வாரியக் குடியிருப்பில் தங்களுக்கு வீடு ஒதுக்குமாறு மாவட்ட ஆட்சியரிடம் அவர் மனு கொடுத்தார். ‘பிறகு ஏன் வீடு கிடைக்கவில்லை?’ என்று எங்களுக்கெல்லாம் ஆச்சரியமாக இருந்தது. அதற்கான பதிலை நன்மாறனுக்கு அஞ்சலி செலுத்த வந்த முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு போட்டு உடைத்துவிட்டார்.

“நன்மாறன் தோழர், வாடகை வீட்டில் குடியிருக்கிறார் என்று சொன்னவுடன் அவரது கோரிக்கையை ஏற்று அவருக்குக் கடந்த ஆண்டே வீடு ஒதுக்க நடவடிக்கை எடுத்தோம். ஆனால், கடைசியில் அரசின் உதவி தேவையில்லை என்று கட்சி நிராகரித்துவிட்டது. அதையும் அமைதியாக ஏற்றுக்கொண்டார்” என்றார் செல்லூர் ராஜு.

“இந்த இடத்தில் வக்கீல் வேலையும் வேணாம், காலேஜ் வாத்தியார் வேலையும் வேணாம்னு சொல்லிட்டேன்” என்று பெருமையாகச் சொன்ன தா.பாண்டியனிடம், பெரியார் சொன்னது ஞாபகத்துக்கு வருகிறது: ‘‘நீ அறிவாளின்ல நினைச்சேன். உனக்கு மனைவி, ரெண்டு பிள்ளைங்க இருக்கிறாங்கல்ல. அவங்களை யார் காப்பாத்துவாங்க? நீயும் ஜீவானந்தம் மாதிரி ஏமாந்திட்டியா?” என்று. தோழர் நன்மாறனைக் கட்சி ஏமாற்றாது என்று நம்புகிறேன். அரசு கொடுப்பதைத் தடுத்த கட்சி, அவரது குடும்பத்துக்குக் கட்சி சார்பில் வீடு கொடுக்காமலா போய்விடும்?

- கே.கே. மகேஷ், தொடர்புக்கு: magesh.kk@hindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x