Published : 08 Mar 2016 09:20 AM
Last Updated : 08 Mar 2016 09:20 AM

தேர்தல்.. கொள்கை.. கூட்டணி! - காமராஜருக்கு பெரியார் ஆதரவு

நேர்மையான அரசை நடத்தியிருக்கிறோம், மதிய உணவுத் திட்டம் போன்ற மக்கள் நலத் திட்டங்களைக் கொண்டுவந்திருக்கிறோம் என்ற நம்பிக்கையில் 1957 பொதுத்தேர்தலை எதிர்கொண்டார் காமராஜர். மத்தியில் காங்கிரஸ் அரசே அமையும் என்பதால், மாநிலத்திலும் காங்கிரஸ் ஆட்சி அமைவதே எதிர்காலத்துக்கு நல்லது என்ற கோணத்தில் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. கடந்த தேர்தலில் கம்யூனிஸ்ட்டுகளை ஆதரித்த பெரியார், இம்முறை திமுகவுக்கு எதிராக காமராஜருக்குப் பிரச்சாரம் செய்தார்.

தேர்தலின் முடிவில் மொத்தமுள்ள 205 தொகுதிகளில் 151-ஐக் கைப்பற்றி ஆட்சியைப் பிடித்தது காங்கிரஸ். கடந்த முறை ராஜாஜி தலைமையிலான அரசு மைனாரிட்டியாக இருந்தது. ஆனால், காமராஜரோ மெஜாரிட்டி அரசை அமைத்திருந்தார். 16 இடங் களைப் பிடித்த காங்கிரஸ் சீர்திருத்தக் கமிட்டி, பிரதான எதிர்க்கட்சியானது. கன்னித் தேர்தலை எதிர்கொண்ட திமுகவுக்கு 15 இடங்கள்.

மீண்டும் முதல்வரான காமராஜருக்குச் சின்னதும் பெரியதுமாகப் பல சிக்கல்கள். முதுகுளத்தூர் இடைத்தேர்தல் தொடர்பாக முத்துராமலிங்கத் தேவர் - இம்மானுவேல் சேகரன் ஆதரவாளர்களிடையே மோதல் வெடித்தது. அப்போது அடையாளம் தெரியாத சிலரால் இம்மானுவேல் சேகரன் கொலையாகவே, சாதாரண மோதல் சாதிக் கலவரமாக உருவெடுத்தது. அப்போது ஏற்பட்ட சட்டம் ஒழுங்குச் சீர்கேடு காமராஜர் ஆட்சிக்குச் சவாலாக இருந்தது.

இதற்கிடையே காங்கிரஸ் கட்சிக்குள் ஒரு பிளவு. உபயம்: ராஜாஜி. அகில இந்திய அளவில் செல்வாக்கு பெற்றிருந்த ராஜாஜிக்கு நேருவின் கொள்கைகள் பலவற்றில் முரண்பாடுகள். அதன் முடிவாக காங்கிரஸிலிருந்து வெளியேறி சுதந்திரா கட்சியைத் தொடங்கினார் ராஜாஜி. அதன்மூலம் காங்கிரஸ் வாக்கு வங்கியில் சரிவு ஏற்படும் என்ற கருத்து எழுந்தது. ஆனால், பெரியார் தருகிற ஆதரவு காங்கிரஸின் சரிவைத் தடுத்து நிறுத்திவிடும் என்று நம்பியது காங்கிரஸ்.

மொத்தமுள்ள 206 தொகுதிகளிலும் போட்டியிட்டது காங்கிரஸ். மாறாக, முக்கியமான எதிர்க் கட்சிகள் தங்களுக்குள் சிறுசிறு தொகுதி உடன்பாடுகளைச் செய்துகொண்டன. சுதந்திரா கட்சியும் கம்யூனிஸ்ட்டுகளும் திமுகவுடன் தனித்தனியே தொகுதி உடன்பாடு கண்டன. முக்கியமாக, திருச்சி மாவட்டத்தில் கம்யூனிஸ்ட்டுகளுக்கு ஆதரவளித்தது திமுக. அதேபோல, சுதந்திராவும் தேவரின் ஃபார்வர்டு பிளாக்கும் சில தொகுதிகளில் உடன்பாடு செய்துகொண்டன.

எதிர்க்கட்சிகள் எப்படி ஒருங்கிணைந்தாலும் சரி, காங்கிரஸின் ஆட்சிக் காலச் சாதனைகளைச் சரியாக எடுத்துச் சொன்னாலே வாக்குப்பெட்டி நிரம்பிவிடும் என்றார் காமராஜர். ஆனால்,1962 தேர்தல் முடிவில் அதிர்ச்சி காத்திருந்தது. ஆம், காங்கிரஸுக்கு 139 இடங்கள் கிடைத்தன. இது கடந்த தேர்தலைவிட 12 இடங்கள் குறைவு. என்றாலும், அறுதிப் பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சியமைத்தார் காமராஜர்.

ஆட்சி காங்கிரஸின் வசம்தான் என்றாலும், 50 இடங்களைப் பிடித்த திமுக பிரதான எதிர்க்கட்சியாக மாறியது காமராஜரை யோசிக்கவைத்தது. காங்கிரஸின் வீழ்ச்சி தொடங்கிவிட்டதாகக் கணித்த அவர், அதைத் தடுத்து நிறுத்த ஓர் ஆயுதத்தை எடுத்தார். அதன் பெயர், கே பிளான் (K Plan)!

- கட்டுரையாளர் ‘கச்சத்தீவு’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர். தொடர்புக்கு: writermuthukumar@gmail.com (கோஷம் போடுவோம்)





FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x