Last Updated : 04 Mar, 2016 09:43 AM

 

Published : 04 Mar 2016 09:43 AM
Last Updated : 04 Mar 2016 09:43 AM

உங்க வேட்பாளர்க இங்க, இப்பிடித் தயாராகுறாக!

நம்ம தொகுதியில எந்தெந்தக் கட்சியில, யார் யாரை நிப்பாட்டப் போறாங்கன்னு ஆர்வமா இருக்கு. தட்டுல சோறு வெக்கதுக்கு முன்னாடியே ஆர்வக்கோளாறுல சமையக்கட்ட மோப்பம் பிடிக்கது மாரி, வேட்பாளர்கள எப்பிடித் தேர்ந்தெடுக்காங்கன்னு மூக்கை நுழைச்சிப் பாத்தேன்.

செல இடத்துல உண்மையிலயே சமையல் நடக்கு. செல வீட்ல ஏற்கெனவே பார்சல் சாப்பாட்டை வாங்கியாந்து வெச்சிட்டு, சட்டிப் பானைய உருட்டி சமையல் செய்யுத மாரி பாவ்லா காட்டுதாங்க.

அதிமுக

விருப்ப மனுவ மொத ஆளா வாங்குன அதிமுக, நேர்காணல் தேதியவே இன்னும் அறிவிக்கல. ஆனா, வேட்பாளர் பட்டியல் தயாராகிடுச்சின்னு சொல்றாங்க. சசிகலா கோயிலுக்குப் போகும்போது, துருநூறு மடிக்கதுக்காக ஒரு துண்டுப் பேப்பரைக் கையில வெச்சிருந்தாலும் அதாம் வேட்பாளர் பட்டியல்னு அள்ளிவிடுதாங்க.

அதிமுகவுல விருப்ப மனுவே இருபத்தாறாயிரத்துச் சொச்சம் வந்திருக்கு. இவ்வளவு பேர்கிட்டயும் அம்மாவே நேர்காணல் நடத்துனா, அடுத்த வருஷம் ஆயிரும். அதனால கட்சியில ‘அதிகாரம்’ படைச்ச ஐவர் குழுகிட்ட இந்தப் பொறுப்பை ஒப்படைச்சிருக்காங்க.

அவங்க ஒவ்வொரு தொகுதிக்கும் தலைசிறந்த மூணு முதுகு வளையர்களை செலெக்ட் பண்ணுறாங்க. ‘அந்த மூணு பேரும் உண்மையிலயே நல்லா கூனு போடக்கூடியவங்கதானா; இல்ல நடிக்கிறாங்களா’ன்னு உளவுத் துறை ‘கிராஸ் செக்’ பண்ணும். இப்ப தெரியுதா? சென்னையில விருப்ப மனு கொடுத்த ஆளு, எதுக்குச் சம்பந்தமே இல்லாம தான் பிறந்த கிராமத்துல, ‘அம்மாவுக்காக அரசு பஸ்ஸை எரித்துச் சிறை சென்றவன்’னு ஃபிளக்ஸ் வெக்கிறார்னு?

இந்தவாட்டி இன்னும் நேர்காணல் தொடங்காததால, போன எம்பி எலெக்‌ஷன்ல வேட்பாளரான ஒருத்தர்கிட்ட நேர்காணல் எப்பிடி நடக்கும்னு விசாரிச்சேன். அவர் சொன்னாரு, “தலைமைக் கழகத்துல அதுக்குன்னு வாஸ்து சாஸ்திரப்படி வடிவமைச்ச ஒரு அறை இருக்கு. அந்த ரூமுக்குள்ள அம்மா மட்டும் உட்கார்ந்திருப்பாங்க. தொகுதிக்கு மூணு பேர்னு தேர்வான ஆட்க வெளிய வரிசையில நிப்பாங்க. உள்ள வரலாம்னு சிக்னல் வந்தாப் போதும்… என்னமோ கதவுல சாஞ்சி நின்ன ஆளு, திடீர்னு கதவைத் தொறந்ததும் பேலன்ஸ் இல்லாம விழுற மாதிரி பொத்து பொத்துன்னு வாசல்லயே விழுந்திருவாங்க. எந்திச்ச பிறவும் கோயில் கருவறைக்குள்ள நிக்கது மாரி பணிஞ்சி நிப்பாங்க. லேசா ஏறெடுத்துப் பார்த்துட்டு, உட்காரச் சொல்வாங்க அம்மா. காது கேட்காதது மாதிரியே நிப்போம். மறுவடியும் உட்காரச் சொல்வாங்க. ‘அம்மா முன்னாடி எப்பிடிம்மா’ன்னு சங்கடப்பட, ‘உட்கார்ந்தாத்தான் பேசுவேன்’னு கறாராச் சொல்லுவாங்க அம்மா.

உட்கார்ந்த பெறகு, அம்மா அதிகமா கேள்வி கேட்கிறதில்ல. ஏன்னா, எங்களப் பத்துன சாதகமே அம்மா கையில இருக்கும். தொடர்ந்து பதவியில இருந்த ஆளுக்குத் திடீர்னு இடையில பொறுப்பு காலியாகியிருந்தா மட்டும், என்ன காரணம்னு கேட்பாங்க. ‘நான் ஒரு தப்பும் பண்ணலம்மா, தப்பா நீக்கிட்டாங்க’ன்னா சொல்ல முடியும்? ‘அம்மா, இனிமே அந்தத் தப்பு நடக்காதும்மா’ன்னு (என்ன தப்பா இருக்கும்னு யோசிச்சிக்கிட்டே) கதறுவோம். பிடிச்சிருந்தா ‘ஆல் தி பெஸ்ட்’ சொல்லி ‘வேலயப் பாருங்க. அறிவிப்பு வரும்’னு சொல்லிடுவாங்க. செலெக்ட் ஆகலன்னா பட்டுன்னு சீட் கெடையாதுன்னு சொல்லிடுவாங்க. அம்மாவுக்கு எந்தத் தயக்கமும் கெடையாது”ன்னு சொன்னாரு. கடைசியா, தம்பி! பேரைக் கீரைப் போட்டுறாதீங்கன்னு கெஞ்சிப்புட்டாரு மனுஷன்.

திமுக

திமுகவுல 5,648 பேர் விருப்ப மனு குடுத்துருக்காங்க. இதுல எங்க தொகுதியில தலைவர்தாம் போட்டியிடணும், தளபதிதாம் போட்டியிடணும்னு சும்மானாச்சுக்கும் குடுத்த மனுவப் பூராம் கழிச்சிட்டா, ஐயாயிரம் மனுதான் மிச்சமிருக்கு.

அதிமுகவுல, ‘அம்மா எங்க தொகுதியில போட்டியிடணும்’னு வந்த மனுவே 8,000. அதாம் திமுகவுக்கும் அதிமுகவுக்கும் முக்கியமான வித்தியாசம்.

கலைஞரு, அன்பழகன், ஸ்டாலின், துரைமுருகன், ஆர்.எஸ்.பாரதின்னு அஞ்சி பேரு நேர்காணல் நடத்துறாங்க. உள்ள போனதும் தலைவருக்கு நேரா உட்கார வெச்சி, “சொல்லுப்பா, கட்சிக்காக என்ன செஞ்ச? ஜெயிலுக்கு கியிலுக்குப் போயிருக்கியா? எவ்வளவு செலவழிப்பீங்க? வெற்றிவாய்ப்பு எப்பிடின்னு கேள்வி கேக்காங்க.

வழக்கமா, நேர்காணல்ல மாவட்டச் செயலாளர்களும் உட்கார்ந்திருப்பாங்க. அதனால வெளிப்படையா எதையும் சொல்ல முடியாது. இந்தவாட்டி நல்லவேள அவங்கள உள்ள விடல. அதனால, ‘தலைவரே எனக்கு சீட்டுக் கொடுக்காட்டியும் பரவால்ல. மாவட்டத்துக்கோ, அவர் பையனுக்கோ குடுத்துறாதீங்க. தொகுதி மக்கள் செம காண்டா இருக்காங்க’ன்னு தைரியமா சொல்லிட்டு சந்தோஷமா வெளியே வாராங்க தொண்டருங்க.

மொத்தத் தொகுதியில கிட்டத்தட்ட 100 தொகுதி, கூட்டணிக் கட்சிக்குப் போயிடும். அது எந்தெந்தத் தொகுதின்னு பட்டியல் கையில இருந்தாலும்கூட, அதுக்கும் சேத்து சும்மானாச்சுக்கும் நேர்காணல் நடத்துது திமுக. ஆனாக்க, ஸ்டாலின், கனிமொழி, முன்னாள் அமைச்சர்க சிபாரிசு இல்லாம, ‘ப்யூர் இன்டர்வியூ’ மூலமா பத்து பேருக்கு சீட் கெடைச்சாலே அதிசயம்தான்.

இருந்தாலும், 25 ஆயிரம் ரூவா குடுத்து சீட் கேட்ட தொண்டர்களோட மன தைரியத்தப் பாராட்டி, கலைஞரோடையும், தளபதியோடையும் அவங்க உட்கார்ந்திருக்கது மாரி போட்டோ கொரியர்ல வீட்டுக்கே அனுப்பி வைக்கப்படுது. அதுக்குத் தனியா எரநூறு ரூவா குடுக்கணும்ங்கிறத சொல்லணுமா என்ன?

தேமுதிக

விஜயகாந்த் கட்சியில, திமுக மாரியே போன மாசம் 23-ம் தேதியில இருந்து நேர்காணல் நடக்கு. அது என்ன திராவிட சென்டிமெண்டோ தெரியல, விஜயகாந்த், சுதீஷ், இளங்கோவன், பார்த்தசாரதி, சந்திரகுமார்னு இங்கேயும் ஐவர் குழுதான் நேர்காணலை நடத்துதாங்க. சுதீஷ்தான் பெரும்பாலும் கேள்வி கேட்காராம். கேப்டனும் நடு நடுவுல ஏதாவது குழந்தைத்தனமா கேள்வி கேட்காரு. அவர் சந்தோஷப்படுற மாரி பதில் சொன்னாலே ‘பாஸ்’தான். ‘கிங்கா, கிங் மேக்ரா?’ன்னு கேட்டா, ‘கிங்’குன்னுதான் சொல்லணும். ‘கூட்டணி வேணுமா, வேணாமா’ன்னு கேட்டா, தலைவர் முடிவுக்குக் கட்டுப்படுறோம்னு சொல்லணும்னு வீட்லயே தயாராகிட்டுப் போயிடுறாங்க மனுதாரர்கள்.

காங்கிரஸ்

உண்மையிலயே ஜனநாயக இயக்கம்னா அது காங்கிரஸ்தாம். அந்தந்த மாவட்டத்துலயே நேர்காணலை நடத்திடுங்கன்னு அதிகாரத்தைப் பகிர்ந்து குடுத்துட்டாங்க. ரெண்டே நாள்ல நேர்காணலும் முடிஞ்சிருச்சி. சத்தியமூர்த்தி பவன்ல வேட்டி சட்டை கிழியுற வன்முறையும் ராஜதந்திரத்தோட தவிர்க்கப்பட்டிருச்சி.

ஜெயலலிதாவும் கருணாநிதியும் எங்க தொகுதியில போட்டியிடணும்னு அந்தக் கட்சிக்காரங்க விருப்ப மனு குடுத்த மாதிரி, காங்கிரஸ்லயும் நடந்திருக்கு. ‘ஈவிகேஎஸ் இளங்கோவன் எங்க தொகுதியில போட்டியிடணும்’னு யாரும் மனு குடுத்த மாதிரி தெரியல. ஆனா, குஷ்பு போட்டியிடணும்னு நிறைய விருப்ப மனு வந்திருக்கு. கீழக்கரைக்காரர் ஒருத்தரு, ராமநாதபுரம் ஆபீஸ்ல குஷ்பு சார்புல நேர்காணல்லயும் கலந்துக்கிட்டாரு. ‘அந்தம்மா பிறப்பால இஸ்லாமியர். அதனால ராமநாதபுரம் தொகுதியில போட்டியிட்டா கண்டிப்பா ஜெயிப்பாங்க’ன்னு சொல்லியிருக்காராம்.

பாமக, மநகூ

பாமகவுல முதல்வர் வேட்பாளரை ஒரு வருஷத்துக்கு முன்னாடியே முடிவு பண்ணுன மாரி, தொகுதி வேட்பாளர்களையும் எப்பவோ முடிவுபண்ணிட்டாங்க. பிரச்சார ஜீப்ல கலர்கலரா நிறைய கொடி கட்டியே ஓட்டுக் கேட்டுப் பழகுனவங்களுக்கு, திடீர்னு தனியாப் போனா கூச்சமா இருக்கும்ல. அதனால, யாராச்சும் கூட்டணிக்கு வரட்டும்னு காத்துட்டு இருக்காங்க.

சீமானுக்கும், தமிழருவி மணியனுக்கும் அந்த மாதிரி எந்தக் கூச்சமும் இருக்கிற மாதிரி தெரியல. நிறைய பேர் சீட் கேட்டாத்தான, நேர்காணல் தொந்தரவு எல்லாம். ‘தம்பி! எனக்காக நீ போட்டியிடு, ப்ளீஸ்’னு கேட்குற இடத்துல நேர்காணல் என்னத்துக்கு? போன் கால் போதாதா? வேட்பாளர்களோட சின்னத்தையும் அறிவிச்சிட்டாரு சீமான்!

மக்கள் நலக் கூட்டணி?! தமிழ்நாட்ல இன்னைக்கு ஒருத்தன் முற்போக்குவாதின்னு பேர் வாங்கணும்னா, இந்தக் கூட்டணியைக் கண்ணை மூடிக்கிட்டு ஆதரிக்கணும். எந்த விமர்சனத்தையும் வெக்கக் கூடாது. எனக்கும் அப்பிடியொரு ஆசை இருக்கதால, இத்துடன் முடிச்சுக்கிறேன்… நன்றி வணக்கம்!

- கே.கே.மகேஷ், தொடர்புக்கு: magesh.kk@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x