Published : 04 Oct 2021 03:11 AM
Last Updated : 04 Oct 2021 03:11 AM

திராவிடம் 2.0 - பரிசீலனைக்கும் நடவடிக்கைக்குமான வேளை

ஏ.கலையரசன்

தமிழகத்தை ஆளும் திமுக அரசு, பெரியார் ஈ.வெ.ராமசாமி, சி.என்.அண்ணாதுரை, மு.கருணாநிதி போன்ற திராவிட இயக்கத் திருவுருவங்களைப் புத்தூக்கத்துடன் கொண்டாடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில், தமிழ்நாடு மாநிலத்தையே மாற்றத்துக்குள்ளாக்கிய திராவிட இயக்கக் கொள்கைகளைத் திரும்பச் சென்று பார்க்கும் தேவையும் உள்ளது. ஆற்றல் மிக்க உற்பத்தித்திறன் கொண்ட பொருளாதாரமாக முன்னிறுத்துவதோடு, குடிமக்களுக்கு அருமையான நலத்திட்டங்களையும் சேர்த்துத் தமிழ்நாடு மிக முன்னேறிய நவீன மாநிலமாக இன்று திகழ்கிறது. அமைப்புரீதியாக அது அடைந்த மாறுதல் கணிசமானது. உழைப்பு ஆற்றல் சார்ந்து 30%-க்குக் குறைவானவர்களே விவசாயத்தில் இருக்க, உச்சபட்சமாக நகர்மயமான, மிகப் பெரிய தொழில்துறை உழைப்பு ஆற்றலைக் கொண்டிருக்கும் மாநிலம் இது. இந்த மாறுதல் நிச்சயமாக புதிய வாய்ப்புகளையும், குறிப்பாக அடிநிலை சாதிகள், பட்டியலினத்தோர் மற்றும் பெண்களையும் உள்ளடக்கும் விதமாக உருவாக்கப்பட்டுள்ளன. இந்த மாற்றங்கள் புதியதொரு சவால்களையும் உருவாக்கியுள்ளன. இது ‘இரண்டாம் தலைமுறை’ சந்திக்கும் சவால்கள்.

முதல் தலைமுறை திராவிடக் கொள்கைகள், அனைவருக்குமான நீதியை உறுதிப்படுத்தும் செயல்பாட்டில் காட்டிய புதுமையான அணுகுமுறையின் மூலம் அனைத்துத் தரப்பு மக்களுக்கும் கல்வி மற்றும் ஆரோக்கிய சேவைகள் சென்று சேரும் வண்ணம் அளவீட்டுரீதியான அணுகுமுறைகளைக் கையாண்டது. அத்துடன் சாதிரீதியான உழைப்பாளர்களைக் கூலிரீதியான உழைப்பாளர்களாக மாற்றியது. இரண்டாம் தலைமுறை திராவிடக் கொள்கையாளர்கள் கல்வி, ஆரோக்கியம், சாதி மற்றும் பாலினப் பிரச்சினைகள் தொடர்பில் தரம் தொடர்பான அணுகுமுறைகளைக் கையாள வேண்டியிருக்கிறது. அத்துடன் அதிகாரப்பரவலாக்கம் கொண்ட நிர்வாகத்தையும் அவர்கள் கைக்கொள்ள வேண்டும்.

ஒரு சாதியினர் இந்தத் தொழில்தான் செய்யவேண்டுமென்ற அடிப்படையை, தொழில்துறை சார்ந்து உருவான, பரவலான மாற்றம் உடைத்துவிட்டது. ஆனால், இந்த மாற்றத்தினால் தரமான வேலைகள் போதுமான அளவு உருவாகவில்லை. விவசாயத்துக்கு வெளியே நிலையில்லாத, உத்தரவாதமற்ற வேலைகள்தான் இருக்கின்றன. சமீபத்தில் வெளிவந்த பீரியாடிக் லேபர் ஃபோர்ஸ் சர்வேஸ் (2018-2019) ஆய்வு விவரங்களின் அடிப்படையில் பார்த்தால், அமைப்புசாரா துறைகளில் 62% பணியாளர்கள் இருப்பதாகவும் 82% உழைப்பாளர்கள் எந்தச் சமூகப் பாதுகாப்பும் இல்லாமல் இருப்பதாகவும் தெரிகிறது. நிலையான வேலை, நிலைத்த வருவாயில் உள்ளவர்களிலும் 75.2% பேரிடம் எழுத்துரீதியான பணி ஒப்பந்தம் இல்லை. தமிழ்நாடு கடந்த மூன்று தசாப்தங்களில் உருவாக்கிய மோசமான கல்விச்சூழலின் விளைவுதான், இந்த முறையில்லாத நிலையும் அதன் விளைவாக ஏற்பட்ட கூலி சமனின்மையும் என்றே சொல்லலாம்.

இந்தியக் கல்வி முறையில் இருந்த உயர் வர்க்கத்தினரின் ஆதிக்க நிலைமைக்குச் சவால்விடுத்து, அனைவருக்குமான பள்ளிக்கல்வியில் தமிழ்நாடு முன்னோடியாக விளங்கினாலும், அதிலும் பிரச்சினைகள் இல்லாமல் இல்லை. ஒன்றியக் கல்வி அமைச்சகம் வெளியிட்ட சமீபத்திய அறிக்கையின்படி, கற்றல்ரீதியான பலன் அடிப்படையில் ஆய்வு செய்தபோது, தென்மாநிலங்களில் கடைசி நிலையில் தமிழகம் உள்ளது. செயல்திறன் மதிப்பீட்டுக் குறியீடு - 2019-20 அறிக்கை இது. எட்டாம் வகுப்பு படிப்பவர்களில் நான்கில் ஒரு மாணாக்கருக்கு இரண்டாம் வகுப்புப் பாடப் புத்தகத்தை வாசிக்கத் தெரியவில்லை. சாதாரண வகுத்தல் கணக்கு போட 50% மாணவர்களால் இயலவில்லை. கற்றலின் தாக்கத்தின் அடிப்படையில் கல்லூரிக்குச் செல்வது நிர்ணயிக்கப்படும் நிலையில், அது வேலைச் சந்தையிலும் பிரதிபலிக்கிறது. மொத்த சேர்க்கை விகிதத்தில் உயர் கல்விக்குச் செல்லும் தமிழ்நாட்டின் சாதனை 51.4% ஆகும். அகில இந்திய சராசரி 27.1%-தான். ஆனாலும், வேலைச் சந்தையில் தரத்தை எட்டுவதற்குத் தமிழ்நாட்டின் இந்தச் சாதனை உதவவில்லை.

சமூகரீதியாக அனைத்து மக்கள் பிரிவினரையும் உள்ளடக்கிய மக்கள் பணியாளர்களைக் கொண்டதாக அறியப்பட்ட மாநிலம் தமிழ்நாடு ஆகும். தனியார் மருத்துவ சேவைகளில் தமிழ்நாடு முன்னணியில் இருப்பது பேசப்படாதது ஆகும். பெருநிறுவனமயமாக்கப்பட்ட மருத்துவ சேவைகள் சார்ந்த வரைபடத்தை இந்தியாவுக்கு வழங்கிய மாநிலம் இது. மாநிலத்தின் கணிசமான மக்கள்தொகையினர் செலவுபிடிக்கும் மருத்துவக் கவனிப்பையே நம்பியிருக்கின்றனர். தேசிய மாதிரிக் கணக்கெடுப்பு அலுவலகத்தின் 75-வது சுற்றுக் கணக்கெடுப்பின் அடிப்படையில், தமிழகத்தில் மருத்துவமனையில் ஒரு நோயாளியைச் சேர்த்துச் செலவழிக்கும் சராசரித் தொகை ரூ. 35,581 ஆகும். குஜராத், மஹாராஷ்டிரம் ஆகிய மாநிலங்களைவிட அதிகமான தொகை இது. அகில இந்திய சராசரியோ 31,845 ரூபாய் ஆகும்.

இதுபோன்ற சிக்கல்கள் கரோனா பெருந்தொற்று வந்தபோது அதை எதிர்கொண்ட மாநில அரசின் செயல்பாடுகளில் பிரதிபலித்தது. சரியாகச் செயல்படும் பொது மருத்துவ அமைப்பு இருந்தும், கரோனா வைரஸ் பரவலையும் மரணங்களையும் குறைப்பதிலும் பொதுமக்களுக்கு வேகமாகத் தடுப்பூசி செலுத்துவதிலும் அரசின் திறன் போதுமானதாக இல்லை. நோயாளி - மரண விகிதம் ஆந்திரம், கேரள மாநிலங்களைவிட அதிகம். இந்தத் தோல்விக்குக் காரணம் அதிகாரப் பரவலாக்கத்தை அரசு புறக்கணித்ததுதான். ஆனால், கேரளம் மற்றும் மஹாராஷ்டிரம் அதிகாரப் பரவலாக்கத்தின் மூலம் கூடுதலான செயல்திறனுடன் இந்த நிலைமைகளைச் சந்தித்தன. 2016-லிருந்து தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல்களைக் காணவேயில்லை.

பொருளாதாரத்தில் சாதிய சமத்துவமின்மை நீடிக்கும் நிலையில், அனைத்துச் சாதியிலிருந்தும் அர்ச்சகர்களைப் பணியமர்த்தும் தமிழக அரசின் சமீபத்திய திட்டம் ஆதரிக்க வேண்டியது. கிராமப்புறப் பகுதிகளில் சமத்துவமின்மை மங்கிவரும் வேளையில், நகர்புறப் பகுதிகளுக்கு சாதி அடிப்படையிலான சமத்துவமின்மை ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. உயர் கல்வியைப் பெறுவதில் ஏற்ற இறக்கம் இருப்பதோடு, உயர் வர்க்கத்தினர் வாய்ப்புகளைத் தங்களுக்கென்று பதுக்கும் புதிய செயல்முறையைத் தங்களது சாதி வலைப்பின்னல்கள் வழியாகச் செயல்படுத்தி, சாதிய சமத்துவமின்மையை நிலைநிறுத்தி வருகின்றனர். ஒப்பிடத்தக்க அளவில் சமூகப் பொருளாதார நிலையிலும் அரசியல்ரீதியாகவும் பட்டியலினத்தோர் எழுச்சியடைந்திருந்தாலும் அதன் விளைவாக வன்முறையையும் அவர்கள் எதிர்கொள்கின்றனர்.

அத்துடன் பெண்களின் தன்னிறைவென்று வரும்போது தமிழ்நாடு வித்தியாசமான வரலாற்றைக் கொண்டிருக்கிறது. 15 முதல் 59 வயதிலான பெண்கள் உழைப்பு சக்தியில் 42% பங்கெடுக்கும் வகையில் வேலையில் பெண்களின் பரவலான பங்கேற்பு தமிழ்நாட்டில் அதிகரித்துள்ளது. இது குஜராத்தில் 34%, மஹாராஷ்டிரத்தில் 31% ஆக உள்ளது. வேளாண்மை அல்லாத துறைகளிலும் பெண்களின் சதவீதம் தமிழ்நாட்டில் 61% ஆகும். இது குஜராத்தில் 34% ஆகவும், மஹாராஷ்டிரத்தில் 35% ஆகவும் உள்ளது. அதே நேரத்தில், பெண்களுக்கு எதிரான வன்முறையும் தமிழ்நாட்டில் அதிகமாக உள்ளது. பெண் விடுதலையில் திராவிட இயக்கத்தின் பங்கைப் பற்றி பெருமைகொள்ளும் தமிழ்நாடு, சமீபத்தில் நடந்த சட்டமன்றத் தேர்தல்களில் வெறுமனே 12 உறுப்பினர்களையே சட்டமன்றத்துக்கு அனுப்பியுள்ளது.

தாமஸ் பிக்கெட்டி பயன்படுத்தும் பதத்தின் அடிப்படையில் பார்த்தால் ‘நிதிரீதியான நீதி’யிலும் தமிழ்நாடு சரியாகச் செயல்படவில்லை. வரி - ஜிடிபி விகிதத்தில் நாட்டிலேயே - 8.7% இல் இருப்பது மட்டுமல்லாமல், டாஸ்மாக் தொடர்ந்து கணிசமான வருவாய் மூலமாக இருந்துவருகிறது. தமிழ்நாட்டின் அரசியல் எந்திரம் ஊழலுக்கும், தனியார் நிறுவனங்கள் அதிகப்படியான மானியங்கள், சலுகைகளைக் கோருவதற்கும் பெயர்பெற்றது. ‘நெருங்கியவர்களுக்கு ஆதாயம் காட்டும் பாப்புலிசம்’ என்பதற்குச் சரியான உதாரணமாக மைக்கேல் வால்டனும் ஜேம்ஸ் க்ராப்ட்ரீயும் இதைச் சொல்கிறார்கள். திராவிடக் கட்சிகள் இந்தச் சலுகைகளைக் கொடுத்து, தேர்தல் நிதி இயந்திரத்தை வளப்படுத்திக்கொள்ளும் நடைமுறையை உருவாக்கியிருக்கிறார்கள்.

பாஜக ஆளும் மாநிலங்களை எண்ணிக்கை, அளவீடுரீதியாக ஒப்பிட்டுத் தமிழ்நாட்டின் வெற்றியை ஆராதிக்கும் புகழ்ச்சியிலிருந்து விலகி, சமூகக் கொள்கை மற்றும் நிர்வாகத்தில் தரத்தின் அடிப்படையிலான அம்சங்களில் மாநில அரசு புதுப்பிக்கப்பட்ட அணுகுமுறையைக் கையாள வேண்டிய அவசியம் உள்ளது. திராவிட இயக்கத்தின் முன்னோடித் தலைவர்கள் அவர்கள் காலத்தின் சவால்களை அடையாளம் கண்டு, புரிந்துகொண்டு, எதிர்கொண்டதைப் போல, புதியதொரு நம்பிக்கையைக் கொடுத்திருக்கும் தமிழ்நாட்டின் புதிய அரசு, இங்கே இப்போது இருக்கும் புதிய சவால்கள் குறித்து முழுமையாகக் கவனம் செலுத்த வேண்டும்.

- ஏ.கலையரசன், பொருளியல் ஆய்வு அறிஞர்,

‘தி இந்து’, தமிழில் : ஷங்கர்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x