Last Updated : 01 Oct, 2021 03:18 AM

Published : 01 Oct 2021 03:18 AM
Last Updated : 01 Oct 2021 03:18 AM

காமராஜரின் கடைசி நாட்கள்

நேருவின் அழைப்பை ஏற்று தேசிய அரசியலில் நுழைந்தவர் காமராஜர். அவர் 1964-ல் அகில இந்திய காங்கிரஸ் தலைவராகப் பொறுப்பேற்றார். இப்பொறுப்பில் 1967 வரை பதவி வகித்து, மூன்று முறை பிரதமர்களைத் தேர்வுசெய்த பெருமை இவருக்கு உண்டு. சோதனையான சூழலில் நேருவின் மறைவுக்குப் பிறகு, லால்பகதூர் சாஸ்திரியையும், அவரது மறைவுக்குப் பிறகு இந்திரா காந்தியை இருமுறையும் பிரதமராகத் தேர்வுசெய்து, தேசிய அரசியலில் செல்வாக்கு மிக்க தலைவராக விளங்கினார்.

1967 தேர்தல் தோல்வி காரணமாகத் தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சியை இழந்தது. புதிதாகத் தேர்வுசெய்யப்பட்ட திமுக ஆட்சியை ஆறு மாதங்களுக்கு விமர்சனம் செய்ய மாட்டேன் என்று பெருந்தன்மையோடு அரசியல் நாகரிகத்தை அறிமுகப்படுத்தினார். 1969-ல் காங்கிரஸ் கட்சியில் பிளவு ஏற்பட்டது. அந்தப் பிளவில் காமராஜர் ஒரு பக்கமும், இந்திரா காந்தி மற்றொரு பக்கமும் இருக்க வேண்டிய துரதிர்ஷ்டவசமான நிலை ஏற்பட்டது. அந்தப் பிளவின் காரணமாக தேசிய சக்திகளின் வலிமைக்குத் தமிழகத்தில் பின்னடைவு ஏற்பட்டது.

காமராஜர் 1967-க்குப் பிறகு கடைசியாகச் சந்தித்தது 1971-ம் ஆண்டு நடந்த தேர்தலை. அந்தத் தேர்தலில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்காத நிலையில், தொடர்ந்து ஸ்தாபன காங்கிரஸ் கட்சியை வலிமைப்படுத்தும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டார். இந்தச் சூழலில், திமுகவில் பிளவு ஏற்பட்டு, அதிமுகவை எம்ஜிஆர் தொடங்கியதால் ஸ்தாபன காங்கிரஸ் கட்சியின் முக்கியத்துவம் குறைகிற நிலை ஏற்பட்டது. திமுக எதிர்ப்பு வாக்கு வங்கியின் பெரும் பகுதியை எம்ஜிஆர் கைப்பற்றுகிற சூழல் உருவானது. அந்தப் பின்னணியில்தான் திண்டுக்கல் இடைத்தேர்தலில் அதிமுக மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது. திமுகவை ஓர் அரசியல் கட்சியாக எதிர்கொண்ட காமராஜரால், அதிமுகவுக்குத் தமிழ்நாட்டு மக்கள் அளித்த ஆதரவை மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

தமிழ்நாட்டு நலன் கருதி அதிமுகவின் வளர்ச்சியை எப்படியும் தடுக்க வேண்டுமென்ற நோக்கத்தில்தான் இரண்டு காங்கிரஸும் இணைந்து புதுச்சேரி, கோவை மக்களவை, சட்டமன்ற இடைத்தேர்தலை எதிர்கொள்ளும் வியூகத்தை காமராஜர் வகுத்தார். அதற்கு புதுச்சேரியில் வெற்றியும், கோவையில் மிகச் சொற்ப வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைகிற நிலையும், காமராஜருக்கு சற்று ஆறுதலைத் தந்தது. அந்த நம்பிக்கையின் அடிப்படையில் இரண்டு காங்கிரஸ்களும் இணைய வேண்டுமென்ற முயற்சியில் சிலர் ஈடுபட்டபோது, அதற்கு காமராஜர் மனதளவில் இசைவுடன் செயல்பட்டார்.

இத்தகைய அரசியல் சூழலில் (1975-ல்), காமராஜர் கடுமையான காய்ச்சலுக்கு உள்ளானார். தனது 73-ஆவது பிறந்தநாள் விழாவை எளிமையாகக் கொண்டாடினார். சில காலமாகவே உடல்நலம் குன்றிய நிலையில் காமராஜர் காணப்பட்டார். பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதைத் தவிர்த்துவந்தார். எனினும், அக்டோபர் 1, சிவாஜியின் பிறந்தநாள் அன்று அருகில் உள்ள அவரது வீட்டுக்கு நேரில் சென்று பிறந்தநாள் வாழ்த்து கூறிவிட்டுத் திரும்பினார்.

மறுநாள் அக்டோபர் 2, காந்தி பிறந்தநாளன்று இயல்பாகவே இருந்தார். அன்று காலை தன்னைச் சந்திக்க வந்தவர்களிடம் பேசிக்கொண்டிருந்தார். பிற்பகல் 1.30 மணிக்கு அவர் வழக்கம்போல் சாப்பிட்டுவிட்டுத் தூங்கப் போனார். மாலை சுமார் 3.05 மணி அளவில் உடம்பு முழுவதும் வியர்த்துவிட்டது. அந்த அறையில் குளிர்சாதனப் பெட்டி இயங்கிக்கொண்டிருந்த நிலையிலும் அவரது உடம்பு வியர்த்திருந்தது. காமராஜர் தமது உதவியாளர் வைரவனை அழைத்து, மருத்துவர்களைக் கூப்பிடும்படி கூறினார். உடனே, மருத்துவர் சவுரிராஜனுக்கும் மருத்துவர் ஜெயராமனுக்கும் தொலைபேசியில் விவரம் தெரிவிக்கப்பட்டது. பிறகு, காமராஜரின் உடம்பு சில்லிட்டிருந்ததால் உடம்பைத் துடைத்து, போர்வையால் போர்த்திவிட்டு, அறையிலிருந்து வைரவன் வெளியேறியபோது, டாக்டர்கள் வந்தால் தன்னை எழுப்பும்படி கூறிய காமராஜர், “விளக்கை அணைத்துவிட்டுப் போ” என்று கூறினார்.

3.15 மணிக்கு வந்த மருத்துவர் சவுரிராஜன் காமராஜரின் உடல்நிலையை அவசர அவசரமாகப் பரிசோதித்துக்கொண்டே, “ஐயோ... பெரியவர், நம்மை விட்டுப் பிரிந்துவிட்டாரே” என்று வீறிட்டு அழுதார். தொடர்ந்து வந்த மருத்துவர்கள் ஏ.எல்.அண்ணாமலையும் ஜெயராமனும் உடலைப் பரிசோதித்துப் பார்த்து, உயிர் பிரிந்ததை உறுதிப்படுத்தினார்கள். உடனே, ஆளுநர் கே.கே.ஷாவுக்கும், அப்போதைய முதல்வர் மு.கருணாநிதிக்கும் தொலைபேசி மூலம் செய்தி தெரிவித்தார் மருத்துவர் அண்ணாமலை. காமராஜர் மறைவுச் செய்தியைக் கேட்டவுடனே முதல்வர் மு.கருணாநிதி விரைந்து வந்தார். அப்போது வீட்டுக்குள் நுழைந்த சிவாஜி கணேசன் துக்கம் பெருகி, “போச்சே... போச்சே...” என்று கதறியபோது, அவரை மு.கருணாநிதி அணைத்துக்கொண்டு தேற்றினார்.

மருத்துவர்கள் வந்து தெரிவிக்கும் வரையில், காமராஜரின் உயிர் பிரிந்தது யாருக்கும் தெரியாது. காரணம், அவர் படுத்திருந்த தோற்றத்திலோ முகத்திலோ ஒரு வித்தியாசத்தையும் காண முடியவில்லை. சுகமாகத் தூங்குவதுபோலவே அவரது முகம் காணப்பட்டது.

காமராஜரின் உடல், மாலை 5.30 மணிக்கு ஒரு சிறப்பு வாகனத்தில் ராஜாஜி மண்டபத்துக்குக் கொண்டுவரப்பட்டு, மறுநாள் பிற்பகல் 3.00 மணிக்கு ராஜாஜி மண்டபத்திலிருந்து அன்றைய மவுண்ட் ரோடு, மர்மலாங் பாலம் வழியாக காந்தி மண்டபத்துக்கு ஊர்வலமாகக் கொண்டுசெல்லப்பட்டு, அதற்கு இடது பக்கத்தில் தகனம் செய்வதென முடிவெடுக்கப்பட்டது. இந்த இடத்தைத் தேர்வுசெய்து தகனத்துக்கான ஏற்பாடுகளை, காங்கிரஸ் தலைவர்களோடு கலந்து மு.கருணாநிதி செய்திருந்தார்.

ராஜாஜி மண்டபத்துக்கு வெளியே, மறைந்த மாபெரும் தலைவருக்கு அஞ்சலி செலுத்தக் கடல்போல் பெரிய கூட்டம் திரண்டது. ஜன சமுத்திரத்தைச் சமாளிக்க முடியாமல் போலீஸார் திணறினார்கள். மூவர்ண தேசியக் கொடியால் காமராஜர் உடல் போர்த்தப்பட்டிருந்தது. பீரங்கி வண்டியில் காமராஜர் உடல் சென்றதைக் கண்ட ஆயிரக்கணக்கான மக்கள் மார்பிலும் தலையிலும் அடித்துக்கொண்டு கதறினார்கள். ராஜாஜி மண்டபத்திலிருந்து புறப்பட்ட இறுதி ஊர்வலம் காந்தி மண்டபத்தை அடைவதற்கு மூன்று மணி நேரம் பிடித்தது. அக்டோபர் 3, மாலை 6.35 மணிக்கு காமராஜரின் உடல் தகனம் முழு ராணுவ மரியாதையுடன் நடைபெற்றது. சிதைக்குத் தீ மூட்டும் முன்பு பீரங்கிகள் மூன்று தடவை முழங்கின. காமராஜரின் தங்கை நாகம்மாளின் பேரன் கனகவேல் சிதைக்கு எரியூட்டியபோது, அருகே இருந்த காங்கிரஸ் கட்சியினர் கதறி அழுதனர். “அமரர் காமராஜர் வாழ்க!” என்ற முழக்கம் விண்ணைப் பிளந்தது. இறுதி நிகழ்வில், அன்றைய பிரதமர் இந்திரா காந்தி கலங்கிய கண்களோடு பங்கேற்றார்.

தமிழக அரசியலிலும், தேசிய அரசியலிலும் செல்வாக்கு மிக்க அரசியல் தலைவராக விளங்கிய காமராஜர் நேர்மை, எளிமை, தூய்மை ஆகியவற்றைத் தாரக மந்திரமாகப் பின்பற்றினார். இவற்றையெல்லாம் வலியுறுத்திய காந்தியின் கொள்கைகளைப் பின்பற்றி, அவர் பிறந்தநாளில் மறைந்து அவரோடு இரண்டறக் கலந்துவிட்டார். காந்தியத்தின் கடைசித் தூண்களுள் ஒன்று சாய்ந்துவிட்டது என்று கூறுவது மிகவும் பொருத்தமாகும். வாழ்நாளில் தனக்கென்று எந்த சொத்தையும் அவர் சேர்த்ததில்லை. ஆனால், நவீனத் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காகப் பொற்கால ஆட்சி நடத்தி, அடித்தளம் அமைத்த பெருமை காமராஜருக்கு உண்டு. அதன்மூலம் தமிழ்ச் சமுதாயம் அடைந்த பயன்கள் ஏராளம். அதனால்தான், இன்றைக்கும் பெருந்தலைவர் காமராஜர் போற்றப்படுகிறார்; நினைவுகூரப்படுகிறார்.

- ஆ.கோபண்ணா, ஆசிரியர், தேசிய முரசு. தொடர்புக்கு: desiyamurasu@gmail.com

அக்டோபர் 2: காமராஜர் நினைவு நாள்

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x