Published : 17 Sep 2021 03:10 am

Updated : 17 Sep 2021 04:37 am

 

Published : 17 Sep 2021 03:10 AM
Last Updated : 17 Sep 2021 04:37 AM

உருவாக வேண்டும் தமிழ்நாடு பன்னாட்டுப் பல்கலைக்கழகம்

tamilnadu-international-university

வளாகப் பல்கலைக்கழகமாக சுமார் நூறாண்டுகளுக்கு மேல் இயங்கிவந்த அண்ணாமலைப் பல்கலைக்கழகம், இணைப்புப் பல்கலைக்கழகமாக மாறிய வரலாற்றை எடுத்துக்கூறி, வளாகப் பல்கலைக்கழகமாக இயங்கியபோது, அது எப்படி அரசியல் பண்பாட்டுப் பாசறையாக விளங்கியது என்பதைப் பேராசிரியர் தங்க.ஜெயராமன் ‘அண்ணாமலைப் பல்கலைக்கழகம் இனி என்னவாகும்?’ (2021 செப்.8) கட்டுரையில் நன்கு படம்பிடித்துக் காட்டியுள்ளார்.

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவனான என்னைப் போன்றவர்களுக்கு 1960-களில் அது ஓர் உலகத் தமிழ்க் கனவாக இருந்தது. வருங்கால அரசியலின் விளைநிலமாக, நாற்றங்காலாக அன்று அது இருந்தது. காங்கிரஸ், கம்யூனிஸ்ட், திமுக, திக போன்ற அரசியல் இயக்கங்களைச் சேர்ந்த மாணவர்கள் சுறுசுறுப்பாக இயங்கிவந்தனர். பெரியார், அண்ணா, ஜீவானந்தம், ம.பொ.சி போன்ற ஆளும் கட்சியல்லாத இயக்கங்களைச் சேர்ந்த அரசியல் தலைவர்களை அழைத்துவந்து பல்கலைக்கழகத்துக்கு உள்ளேயும் வெளியேயும் மாணவர்கள் கூட்டம் நடத்துவார்கள். இந்தி எதிர்ப்புப் போராட்டம், தனித்தமிழ் இயக்கம் போன்றவை அங்கு உயிர்ப்போடு வளர்ந்துவந்தன. உண்மையில், 1967-ல் திமுக ஆட்சியைப் பிடிப்பதற்கான உலைக்களமாக அது திகழ்ந்தது.


கல்விப்புலங்களில் பத்துப் பதினைந்து துறைகளில் உலக அறிஞர்கள் வந்து உரையாற்றுவார்கள். இளைஞர்களின் அறிவுப் பசிக்கு ஒவ்வொரு நாளும் வெவ்வேறு விதமான விருந்துகள் கிடைக்கும். ஒதுக்குப்புறச் சிற்றூர்களிலிருந்து வந்து பயில்பவர்களுக்கு இவையெல்லாம் வரப்பிரசாதம். இவற்றைக் கேட்டு இளைய மாணவர்களின் அறிவும் ஆளுமையும் உலகப் பார்வையும் அற்புதமாக உருப்பெறும். அங்கு பயின்ற அன்பழகன், நெடுஞ்செழியன் போன்றவர்கள் அரசியல் தலைவர்களாக உருவானார்கள். பிற்காலத்தில் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தரான வ.ஐ.சுப்பிரமணியன், உலகத் தமிழாராய்ச்சி நிறுவன இயக்குநராக இருந்த ச.வே.சுப்பிரமணியன் போன்றோர் அங்கே உருவாகித் தமிழ்க் கல்வித் துறையில் பிற்காலத்தில் தடம்பதித்தார்கள். பல துறைகளில் இப்படிப்பட்டவர்களின் பட்டியல் நீளும். இதற்கெல்லாம் காரணம் அன்று அப்பல்கலைக்கழகம், வளாகப் பல்கலைக்கழகமாக விளங்கியதுதான். அதற்கும் மேலே அங்கு அவை நிகழ்வதற்குக் காரணமாக இருந்த சுதந்திரமான சூழல். எதிரெதிர் துருவங்களாக இருந்த துணைவேந்தர் சி.பி.இராமசாமி ஐயர் தலைமையில், அண்ணா பேசியது ஓர் எடுத்துக்காட்டு. அதற்கு வெளியே சென்னை பச்சையப்பன் கல்லூரி ஒரு வளாகக் கல்லூரியாகச் செயல்பட்டிருக்கலாம். வேறு நிறுவனங்கள் அப்படிச் செயல்பட்டதுபோல் தெரியவில்லை.

டெல்லி எடுத்துக்காட்டு

அண்ணாமலைப் பல்கலைக்கழகம் போல 1970-களில் உருவான டெல்லி ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகம்தான் பின்னாளில் வளாகச் சூழல் அமைந்த பல்கலைக்கழகமாக இருந்தது. அங்கு பல்வேறு துறைகளில், பல்வேறு மாநிலங்களிலிருந்தும் பல நாடுகளிலிருந்தும் வந்து பயின்ற மாணவர்களின் மாணவ இயக்க நடவடிக்கைகள், குறிப்பாக இடதுசாரி இயக்கத்தைச் சேர்ந்த மாணவர்கள் செயல்பட்ட முறை அரசியல், ஆட்சித் துறை, இதழியல் முதலிய துறைகளில் சிறப்பான எதிர்காலத் தலைமைகளை உருவாக்கியது. பிரகாஷ் காரத், பிருந்தா காரத், சீதாராம் யெச்சூரி போன்றவர்களைக் குறிப்பிட்டுச் சொல்லலாம். இதழாளர் என்.ராம், தற்போது அமைச்சர்களாக உள்ள ஜெய்சங்கர், நிர்மலா சீதாராமன், தங்கம் தென்னரசு போன்றவர்கள் ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் பயின்றவர்கள்தான்.

இப்படி வளாகப் பல்கலைக்கழகங்கள் கல்வியில் மட்டுமன்றி அரசியல், பண்பாடு, மொழி முதலிய துறைகளில் தலைமைத்துவம் கொண்டவர்களை உருவாக்கு வதற்குரிய களமாகவும் செயல்படுகின்றன. இத்தகைய சூழலில் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் போன்ற நிறுவனங்களை சிதைப்பது வருத்தத்திற்குரியது. ஏற்கெனவே, அப்பல்கலைக்கழகம் இப்பண்புகளை இழந்துவிட்டிருந்தது வேறு விஷயம்.

அதற்குப் பல்கலைக்கழகம் கைக்கொண்ட பொருத்தமற்ற நடைமுறைகள், நிர்வாக மாற்றங்கள், அரசியல் தலையீடுகள் காரணமாக அமைந்தது போன்றே சமுகத்திலும் அரசியல் களத்திலும் ஏற்பட்ட மாற்றங்களையும் சுட்டிக்காட்ட வேண்டும். இது 1970-களில் எம்ஜிஆர் பிரிந்து சென்றபோது திமுக பிளவுபட்டதிலிருந்து தொடங்குகிறது.

அரசியல் மாற்றப் பின்னணி

காங்கிரஸுக்கு மாற்றாக உருவான திமுக தலைவர்களும் தொண்டர்களும் பெரும்பாலும் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் போன்ற வளாகக் கல்வி நிறுவனங்களில் உருவான மாணவர் இயக்கங்களிலிருந்து வந்த, படித்த இளைஞர்களாக இருந்தார்கள். சமூக வேறுபாடுகளைக் கடந்த கொள்கைகள் இவர்களை ஒருங்கிணைத்தன.

எழுபதுகளில் எழுச்சி பெற்ற அதிமுக, பெரும்பாலும் கிராமங்களிலும் சிறுநகரங்களிலும் இருந்த அதிகம் படிக்காத உள்ளூர் சாதி அமைப்புகளின் வலிமையை உணர்ந்த இளைஞர்கள், அரசியலில் தமக்குரிய இடத்தை அடைய விரும்பிய சிறுபான்மை சமூகத்தினர், அரசியலில் தமக்குரிய இடத்தைப் பெறுவதன் மூலம் அதிகாரம், பதவி, பணம் போன்றவற்றை ஈட்டிக்கொள்ள நினைத்த பொருள் முனைப்புடையோர் முதலியவர்களின் கூட்டணியாக இருந்தது. இவர்களைப் பணம், பதவி, ஆட்சி, தனிமனித வழிபாடு போன்றவை ஒருங்கிணைத்ததுபோலக் கொள்கை ஒன்று இணைக்கும் சக்தியாக இருந்ததில்லை. இந்த மாற்றம் கல்விப்புலங்களிலும் எதிரொலித்தது. அங்கே கொள்கைவழி ஒருங்கிணைக்கும் அரசியல் இயக்கங்களும் வலிமையாக இயங்கவில்லை. முன்பு கொள்கைவழி இயங்கிய பொதுவுடமைக் கட்சிகளும் திமுக போன்ற கட்சிகளும் இந்த விஷயத்தில் கோட்டை விட்டுவிட்டார்கள். படிப்பு வாசனையைவிட திரைப்படங்களை மையமிட்ட ஒரு சமுதாயம் ஆலமரமாக வளர்ந்து நின்றது.

கல்வி வளாகங்கள் அரசியல் தலைமைகள் உருவாகும் களங்களாக இல்லாமல் போனதற்கு இன்னொரு காரணம், ஆளும் வர்க்கத்தினர் வளாக மாணவர் அரசியலை முடக்கிப்போட்ட முயற்சிகள். டெல்லி ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் மிகவும் உயிர்ப்போடு இருந்த வளாக மாணவர் அரசியலை, அண்மைக் காலத்தில் அரசு தலையிட்டு பெரும்பாலும் முடக்கிவிட்டது. அது மட்டுமல்ல, புதிதாக பல்கலைக்கழக நல்கைக் குழு இயற்றியுள்ள சட்டங்களின் மூலம் வளாக அரசியல் செயல்பாடுகள், மாணவர் இயக்கங்கள் முதலியன தன்னியல்பாகச் செயல்படுவது இயலாமல் போயிற்று. பல்கலைக்கழகச் செயல்பாடுகளில் மாணவர் பங்கை இவை முற்றாக இல்லாமல் செய்துவிட்டன.

தேவை ஒரு முன்மாதிரி

1980-களில் உருவான தமிழ்ப் பல்கலைக்கழகம் இத்தகைய வளாகச் சூழலை வளர்த்து, தமிழகத்தின் சிந்தனைப் பள்ளியாகப் பல்துறைத் தலைவர்களை உருவாக்கும் பண்ணையாக உருவாகும் என்று கண்ட கனவு பொய்த்துப் போனது. பெரிய கனவுகளோடு உருவான திருவாரூர் நடுவண் பல்கலைக்கழகத்தின் தலைவிதியும் அதுதான். ஆனால், கேரளத்தின் அனுபவம் வேறு. அங்கு வளாகப் பல்கலைக்கழகம் இல்லை எனினும் கல்லூரி வளாகங்கள் அந்தக் குறையைத் தீர்த்தன. மாணவர் அரசியல் செயல்பாடுகள் ஊக்குவிக்கப்பட்டன. கல்வி அமைப்புகளின் நிர்வாகம் முதலியவற்றில் மாணவர்களுக்கு நல்ல பங்கு கொடுத்து, இளைய தலைமை உருவாக வாய்ப்பு ஏற்படுத்தினார்கள். இதனால் உருவான அரசியல் பயிற்சியால், இன்று கேரள அரசியலில் எல்லாக் கட்சிகளிலும் படித்த ஒரு இளைய தலைமுறை அரசியல் அரங்கில் வலம்வருகிறது.

தமிழ்நாட்டில் இழந்தவற்றை மீட்டெடுக்க வேறு சில தேவைகளையும் ஒருங்கிணைத்து ஒரு முயற்சி செய்து பார்க்கலாம். டெல்லியிலுள்ள ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகம் போன்ற ஒரு வளாகப் பல்கலைக்கழகத்தை இங்கு உருவாக்கலாம். அங்கு உள்ளதுபோல உலக மொழிகளையும் உலக நாடுகள் பற்றிய விவகாரங்களையும் இந்திய மாநில விவகாரங்களையும் கற்பிக்கும் பிரதேச வாரியான துறைகளை உருவாக்கி, ஒரு சமூக மானிடவியல் பல்கலைக்கழகத்தை அந்தந்த நாடுகள் அல்லது மாநிலங்கள் ஒத்துழைப்புடன் உருவாக்கலாம். அங்கு மாணவர் அரசியல் பங்களிப்புகளுக்குத் தாராளமாக இடம்கொடுக்கலாம். இத்தகைய ஒரு நிறுவனத்தில் பயிலும் தமிழ் இளைஞர்கள் உள்நாட்டு அரசியலிலும் நிர்வாகத்திலும் பன்னாட்டு விவகாரங்களிலும் தேர்ச்சிபெற்று, அந்தந்தத் துறைகளில் எதிர்காலத் தலைவர்களாக உருவாவார்கள். அவர்கள் தமிழகத்திற்கு மட்டுமின்றி, இந்தியாவிற்கும் உலகத்திற்கும் தலைமையை நல்குவார்கள். அந்த வகையில், இன்றைய தமிழ்நாடு அரசு, தமிழ்நாடு பன்னாட்டுப் பல்கலைக்கழகம் (Tamilnadu International University) ஒன்றை அமைக்க முயற்சி எடுக்க வேண்டும்.

- கி.நாச்சிமுத்து, புதுச்சேரி பிரெஞ்சு ஆசியவியல் நிறுவன முதுநிலை ஆய்வாளர்

தொடர்புக்கு: nachimuthutamizhkina@gmail.com
தமிழ்நாடு பன்னாட்டுப் பல்கலைக்கழகம்அண்ணாமலைப் பல்கலைக்கழகம்பேராசிரியர் தங்க.ஜெயராமன்பெரியார் அண்ணா ஜீவானந்தம் ம.பொ.சிடெல்லி ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகம்தமிழ்ப் பல்கலைக்கழகம்Tamilnadu International University

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x