Published : 07 Sep 2021 03:13 AM
Last Updated : 07 Sep 2021 03:13 AM

விளம்பரங்களைத் தவிர்க்கும் தமிழ்நாடு முதல்வர்: முன்னுதாரணங்கள் தொடரட்டும்!

ஆசிரியர் தினத்தையொட்டி மொத்தம் 389 ஆசிரியர்களின் கல்விப் பணிகளைப் பாராட்டி, மாநில அரசால் வழங்கப்பட்டுள்ள நல்லாசிரியர் விருதுக்கான பாராட்டுச் சான்றிதழ், முதல்வர் மு.க.ஸ்டாலினுக்குப் புகழ்சேர்க்கும் வகையில் அமைந்துள்ளது. கடந்த ஆண்டுகளில், நல்லாசிரியர் விருதுக்கான பாராட்டுச் சான்றிதழில், முன்னாள் குடியரசுத் தலைவர் எஸ்.ராதாகிருஷ்ணனின் படத்துடன் தமிழ்நாடு முதல்வரின் படமும் இடம்பெற்றிருக்கும். இந்த ஆண்டு தமிழ்நாடு அரசின் முத்திரையுடன் எஸ்.ராதாகிருஷ்ணனின் படம் மட்டுமே இடம்பெற்றுள்ளது. சான்றிதழில் முதல்வரின் படம் தவிர்க்கப்பட்டிருப்பது ஆசிரியர்கள் மட்டுமின்றி அனைத்துத் தரப்பினரிடமிருந்தும் பாராட்டுகளைக் குவித்துவருகிறது. அரசியல் சார்புநிலைகள் இன்றி ஆற்றப்பட்ட சேவைப் பணிகளுக்கான சான்றிதழில் அரசியல் கட்சித் தலைவர்களாக இருக்கும் முதல்வர்களின் படங்கள் இடம்பெறும்போது, அது அரசியல் அடையாளம் ஒன்றையும் உருவாக்கிவிடுகிறது. நல்லாசிரியர் சான்றிதழில் முதல்வர் படம் தவிர்க்கப்பட்டிருப்பதன் தொடர்ச்சியாக மாநில அரசால் வழங்கப்படும் அனைத்து விருதுகளுக்குமான பாராட்டுச் சான்றிதழ்களும் அரசு முத்திரையுடன் மட்டுமே அளிக்கப்படும் ஒரு புதிய மரபு உருவாக வேண்டும்.

நடப்புக் கல்வியாண்டில், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இலவசப் பாட நூல்கள் வழங்கப்பட்டபோது, கூடவே புத்தகப் பைகளும் வழங்கப்பட்டன. அவற்றில் முன்னாள் முதல்வர்கள் ஜெ.ஜெயலலிதா, கே.பழனிசாமி ஆகியோரின் படங்கள் இடம்பெற்றிருந்தன. முன்னாள் முதல்வர்களின் படங்களை நீக்குவதற்காக ரூ.13 கோடியைச் செலவிட வேண்டாம், அந்தச் செலவை வேறு நலத் திட்டங்களுக்குப் பயன்படுத்திக்கொள்ளலாம் என்று மு.க.ஸ்டாலின் கூறியதாகக் கல்வித் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின்போது பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் தெரிவித்தபோதும் முதல்வரை நோக்கி இதே விதமான பாராட்டுகள் குவிந்தன. பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு அரசால் வழங்கப்படும் விலையில்லாப் பொருட்களில் அப்போதைய முதல்வர்களின் படங்களைப் பொறிப்பதும் அச்சிடுவதும் இனிவரும் காலங்களிலாவது தவிர்க்கப்பட வேண்டும். முடியாட்சிக் காலத்தின் மிச்ச சொச்சங்களாக இத்தகைய வழக்கங்கள் மக்களாட்சிக் காலத்திலும் தொடர்வது நிறுத்திக்கொள்ளப்பட வேண்டும்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் படம் இடம்பெற்ற புத்தகப் பைகளுக்கு அனுமதியளித்த முதல்வர் மு.க.ஸ்டாலின், விழுப்புரத்தில் ஜெயலலிதா பெயரில் தொடங்கப்பட்ட பல்கலைக்கழகம் அதே பெயரில் தொடர்ந்து இயங்க ஏன் அனுமதிக்கவில்லை என்பது ஆச்சரியம். ஜெயலலிதா பல்கலைக்கழகச் சட்டத்தை நீக்கம் செய்வதற்கு முன்பாகவே அப்பல்கலைக்கழகத்தின் வரம்புக்குள் திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் சார்பில் மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்பு வெளியிடுவதில் அவசரம் காட்டப்பட்டுள்ளது. பள்ளிக் கல்வித் துறைக்கும் உயர் கல்வித் துறைக்கும் இடையிலான முதல்வரின் இருவேறு நிலைப்பாடுகள் கேள்வியை எழுப்புகின்றன. எதுவாக இருந்தபோதும், ஆட்சியாளர்கள் தங்களது காலங்களில் செய்த நற்பணிகளால்தான் வரலாறு அவர்களை நினைவுகொள்கிறதேயொழிய, நலத்திட்ட உதவிகளில் தங்களின் படங்களை விளம்பரப்படுத்திக்கொள்வதால் அல்ல.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x