Published : 26 Aug 2021 06:38 AM
Last Updated : 26 Aug 2021 06:38 AM

போரால் பாதிக்கப்பட்டவர்களின் கண்ணியமான வாழ்க்கைக்கு உலக நாடுகள் உதவுமா?

ஆப்கானிஸ்தானைத் தாலிபான்கள் கைப்பற்றியதை அடுத்து பெரும் எண்ணிக்கையிலான மக்கள் அங்கிருந்து வெளியேறத் தவித்துக்கொண்டிருக் கிறார்கள். சில நாடுகள் ஆப்கானியர்களை அகதிகளாக ஏற்றுக்கொள்ள முன்வந்துள்ளபோதிலும், சில நாடுகள் தங்கள் முடிவைத் தள்ளிப்போடவும் அகதிகளுக்கான தங்களது திட்டங்களை விஸ்தரிக்க விரும்பாமலும் உள்ளன. ரஷ்யாவும் ஆஸ்திரியாவும் ஆப்கன் அகதிகளை ஏற்றுக்கொள்ள விருப்பமில்லை என்பதைத் தெளிவுபடுத்தியுள்ளன. இதற்கிடையில், ஆப்கன் குடிமக்கள், காபூல் சர்வதேச விமான நிலையத்துக்கான சாலைகளில் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று தாலிபான்கள் தெரிவித்துள்ளனர். எனினும், நாட்டைவிட்டு வெளியேறும் வாய்ப்பு கிடைக்குமா என்ற கவலையோடு இன்னமும் ஆயிரக்கணக்கான ஆப்கானியர்கள் விமான நிலையத்தின் வெளியே முகாமிட்டுத் தங்கியுள்ளனர்.

ஏற்கெனவே ஆப்கானிலிருந்து வெளியேறி மற்ற நாடுகளில் அகதிகளாக இருப்பவர்களின் எண்ணிக்கை சுமார் 22 லட்சமாக இருக்கக்கூடும் என்று மதிப்பிடப்படுகிறது. தற்போது தாலிபான்களின் பிடியில் ஆப்கானிஸ்தான் மீண்டும் சிக்கிக்கொண்டதையடுத்து சுமார் 35 லட்சம் பேர் தங்களது வீடுகளை விட்டுவிட்டு எல்லைப் பகுதிகளில் காத்திருக்கின்றனர். பயங்கரவாதத்தால் மட்டுமின்றி வறட்சியை அடுத்த கடுமையான உணவுப் பற்றாக்குறையாலும் அவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 2020-ல் ஆப்கனிலிருந்து புகலிடம் தேடிச் சென்றவர்களுக்கு பாகிஸ்தானும் ஈரானும் அதிக அளவில் இடமளித்தன. ஈரானில் தற்போது ஆப்கானிஸ்தானை ஒட்டியுள்ள எல்லைப் பகுதிகளில் அகதிகளுக்கான தற்காலிக முகாம்கள் அமைக்கப்பட்டுவருகின்றன. பாகிஸ்தான் ஆப்கனுடனான தனது எல்லையை மூடிவைத்திருந்தாலும் அங்கிருந்து அபயம் தேடி வருபவர்களைத் தடுத்துநிறுத்தவில்லை.

ஆப்கன் அரசில் பணியாற்றியவர்களை மட்டுமே அகதிகளாக ஏற்றுக்கொள்ள அமெரிக்கா முன்வந்துள்ளது. பிரிட்டன் 20,000 அகதிகள் வரையில் ஏற்றுக்கொள்ளத் தயாராக இருந்தாலும் பெண்கள், குழந்தைகளுக்கு முன்னுரிமை கொடுக்கிறது. இந்தியாவைப் பொறுத்தவரை, இந்தியாவுக்கு வர விரும்பும் அங்குள்ள இந்துக்கள், சீக்கியர்கள் அனைவரையும் ஏற்றுக்கொள்ளத் தயாராக இருக்கிறது. அதற்கு வாய்ப்பாக ஆறு மாதங்களுக்கு மட்டும் செல்லுபடியாகும் இ-விசா திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

போரால் பாதிக்கப்பட்டவர்களை மற்ற நாடுகள் அகதிகளாக ஏற்றுக்கொள்ள முன்வந்தாலும் நிரந்தரக் குடியுரிமைக்கான வாய்ப்பு என்பது கேள்விக்குறியாகவே நீடித்துவருகிறது. சில சமயங்களில், சட்டவிரோதமாகக் குடியேறியவர்கள் என்ற அடையாளமும்கூட அவர்கள் மீது சுமத்தப்படுகிறது. 1951-ம் ஆண்டின் ஐநா அகதிகள் தொடர்பான உடன்பாட்டின்படி, ஒரு நாடு அனுமதித்தால் மட்டுமே அகதிகளால் அந்நாட்டின் குடியுரிமையைப் பெற முடியும். இல்லையென்றால், சொந்த நாட்டுக்குத் திரும்பியாக வேண்டும். அதுவும் இல்லையென்றால், இன்னொரு நாட்டுக்குச் சென்று அகதி என்ற நிலையிலேயே அலைந்துழல வேண்டும். குடியுரிமையைப் பெறாதவர், அந்நாட்டின் சட்டரீதியான உரிமைகளைப் பெற முடியாது. அகதிகள் தொடர்பிலான சர்வதேச உடன்பாடு, குடியுரிமைக் கோட்பாட்டை மட்டுமே அடிப்படையாகக் கொண்டது. அது, அனைத்துலக மனிதர்களின் கண்ணியமான வாழ்வுக்கானதாக மாற வேண்டும். போரின் பாதிப்புகளால் புகலிடம் தேடுபவர்களுக்கு நிரந்தரக் குடியுரிமையை வழங்க முன்வரும் நாடுகள் தமக்குள் ஒன்றிணைந்து புதிய உடன்பாடுகளை எட்ட வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x