Published : 22 Aug 2021 03:12 AM
Last Updated : 22 Aug 2021 03:12 AM

நகுலன் கட்டவிழ்த்த நிழல்கள்

நகுலன் எட்டு நாவல்கள் எழுதியிருக்கிறார் அல்லது எட்டுப் பெயர்களில் ஒரே நாவலின் வேறுவேறு பகுதிகளை எழுதியிருக்கிறார் என்றும் சொல்லலாம். நவீன நாவல் என்பது இரண்டாம் உலகப் போருக்குப் பின் உருவான வடிவம். அது மரபான நாவலைப் போல் கதையை வளர்த்தெடுத்து உச்சநிலைக்குக் கொண்டுபோவதைவிடவும் கதைவழியாகச் சுய அனுபவங்கள், நினைவுகள், பாலியல் இச்சைகள், அதன் பின்னுள்ள உளவியல், சமூகப் பொருளாதாரச் சிக்கல்கள், வாழ்வின் கசப்புணர்வு, வெறுமை போன்றவற்றைப் பேசுவதாக அமைந்தது. ஆகவே, பழைய பிரம்மாண்டமான நாவல்களிலிருந்து இவை உருமாறி அளவில் சிறியதாகவும், கதாபாத்திரங்களின் நினைவுகளை இசைப்பதாகவும் எழுதப்பட்டன.

தமிழ் நாவல்கள் பெரும்பாலும் சம்பிரதாயமான நாவல் வடிவத்தையே கொண்டிருக்கின்றன. கதைக் கருவிலும், கையாளும் மொழியிலும், நிகழ்வுகளின் அடுக்குமானத்திலும் புதிய மாற்றங்களை உருவாக்கியிருக்கிறார்கள். தமிழ் நாவல் வரிசையில் நகுலனின் நாவல்கள் தனியிடம் கொண்டவை. அவர் கதையில்லாத நாவல்களை எழுதினார் என்பேன்; அதாவது, சம்பிரதாயமான நாவல்களைப் போல் கதாபாத்திரங்களின் உலகை விரித்துக்கொண்டு போவதற்கு மாற்றாக, ஆழ்ந்த மனவோட்டங்களையும் சிதறலான நினைவுகளையும் தனது மரபும் நவீனமும் இணைந்த மொழிநடையில் எழுதியிருக்கிறார். அவருடைய சொற்களிலேயே சொல்வதென்றால், சிதறுண்ட சாயைகளின் உலகையே அவர் உருவாக்கியுள்ளார். வடிவக் கட்டுப்பாடுகள், வரம்புகள் எதற்குள்ளும் அடங்காதவை நகுலனின் நாவல்கள்.

தனது நாவல்களின் வழியே அவர் அனுபவங்களை வரிசைப்படுத்துகிறார் எனலாம். பொதுவாக, இந்த வரிசைப்படுத்துதலானது காலம் மற்றும் வெளியின் வழியே முன்பின்னாக அமையும். ஆனால், நகுலன் அதைக் கலைத்துக் காலவெளியின் மயக்கத்தில், நிஜத்துக்கும் புனைவுக்குமான இடைவெளியில், இருப்புக்கும் இன்மைக்குமான ஊசலாட்டத்தில் தனது கதையைக் கட்டமைக்கிறார். அது ஒருவகைக் கொந்தளிப்பு. கிளைமீறல், மொழிவழியாக மொழிக்குள் அடங்காத அனுபவங்களைப் பதிவுசெய்யும் உன்மத்தம். ‘வாழ்வின் உச்சகட்டங்கள் நாம் நினைப்பது மாதிரியில்லை. எந்த மனிதன் வாழ்விலும் உச்சகட்டங்கள் அவன் பிறப்பதும் இறப்பதும் மட்டும்தான். ஆனால், இடையில்தான் வாழ்வு சலிக்கிறது. இந்தச் சலனத்தைத்தான் ஒரு எழுத்தாளன் சித்தரிக்கிறான்’ என ரோகிகள் நாவலில் நகுலன் குறிப்பிடுவது முக்கியமானது.

நகுலனின் நாவல்களுக்குத் தமிழில் முன்னோடி கிடையாது. ‘நவீனன் டைரி’, ‘நாய்கள்’, ‘நினைவுப்பாதை’, ‘இவர்கள்’, ‘ரோகிகள்’, ‘வாக்குமூலம்’, ‘அந்த மஞ்சள் நிறப் பூனைக்குட்டி’ போன்ற நாவல்கள் தனித்துவமானவை. இவற்றை ஜேம்ஸ் ஜாய்ஸ், வர்ஜீனியா வுல்ஃப் நாவல்களுடன்தான் ஒப்பிட முடியும். அதுவும் நனவோடை உத்தியின் மூலம் கதை சொல்கிறார் என்பதால் மட்டுமே. வுல்ஃபிடம் இல்லாத தத்துவத் தேடலும், ஜாய்ஸிடம் இல்லாத பரிகாசமும் நகுலனிடம் உண்டு.

நகுலன் தனது புனைவுகளை வாழ்க்கை அனுபவம், வாசித்த அனுபவம் இரண்டிலிருந்தும் உருவாக்குகிறார். இரண்டுக்குமான இடைவெளியை அழித்துவிடுகிறார். வெள்ளைக் காகிதத்தில் கட்டவிழ்த்துவிடப்படும் நிழல்கள் என்று தனது எழுத்தைப் பற்றி நகுலன் குறிப்பிடுவது முக்கியமானது. மனவோட்டங்களில் சஞ்சரிப்பது, புலன் மயக்கம், போதையில் உருவாகும் தற்காலிக மகிழ்ச்சி, நினைவின் கொந்தளிப்பு, பித்துநிலை அனுபவங்கள், வாசிப்பின் வழி பெற்ற அபூர்வ தரிசனங்கள், சாவின் மீதான விசாரணை என அவரது நாவல்களின் மையப் புள்ளிகளைப் புரிந்துகொள்ளும்போதுதான் நகுலனின் தனிச்சிறப்பை உணர முடியும்.

நாய் என்று ஒரு மனிதனைக் குறிப்பிட்டால் ஏன் அதை ஒரு வசை மொழியாகக் கருதுகிறார்கள் என்று கேள்வி எழுப்பும் நகுலன், நாய் என்பதை ஒரு தத்துவக் குறியீடாக அமைத்துக்கொண்டு, அதன் பல்வேறு வடிவங்களை, அடையாளங்களை விசாரணை செய்வதாகவே ‘நாய்கள்’ நாவலை எழுதியிருக்கிறார். ‘நாய்கள்’ நாவலில் பாரதியாரைத் தேடிக்கொண்டு நவீனன் திருவல்லிக்கேணித் தெருக்களில் சுற்றுகிறான். பாரதியைப் பற்றிய நினைவுகள், வியப்புகள் இந்தத் தேடுதலில் இடம்பெறுகின்றன. தன் அறைக்குப் போகும் வரையில் தான் பேசிக்கொண்டிருந்தது சுப்ரமணிய பாரதியுடனா அல்லது தேரையுடனா என்று நிச்சயிக்க முடியாமல் நவீனன் மனம் குழம்பிப்போய்விடுகிறான். இந்த மயக்கம் காலவெளியைக் கடந்த அனுபவத்தை ஏற்படுத்துகிறது. நகுலனின் நாவல்களில் குழந்தைகள் அபூர்வமாகவே இடம்பெறுகிறார்கள். பெண்களும் குறைவே. அதிலும் அவரது அம்மாவைப் பற்றி வரும் நினைவுகளைத் தவிர்த்தால் சுசீலாதான் ஒரே நாயகி. சுசீலா ஒரு கற்பனைப் பெண். அவள் சொல்லில் பிறந்தவள். ஆகவே, அழிவற்றவள். காலவெளிகளைக் கடந்து சஞ்சாரம் செய்கிறாள். நகுலனின் படைப்புகளில் அழியாச்சுடரைப் போல ஒளிர்ந்தபடியே இருக்கிறாள் சுசீலா.

நகுலன் தனது மாற்று வடிவமாக நவீனனை உருவாக்குகிறார். நவீனன் ஒரு எழுத்தாளர். அந்தப் பெயரே நவீனத்துவத்தின் அடையாளம். நவீனன் தான் படித்த புத்தகங்கள், சந்தித்த எழுத்தாளர்கள், அவர்களுடனான உறவு, அதில் ஏற்பட்ட கசப்புகளை உரையாடலின் வழியே நண்பர்களுடன் பகிர்ந்துகொள்கிறார். யாருமற்ற தருணங்களில் தனக்குத் தானும் உரையாடிக்கொள்கிறார். தேரை, நாயர், ஹரிஹர சுப்ரமணிய அய்யர், சுலோசனா, கணபதி என நீளும் அவரது கதாபாத்திரங்களுடன் தாயுமானவர், திருவள்ளுவர், பாரதி, வர்ஜீனியா வுல்ஃப், ஜேம்ஸ் ஜாய்ஸ், தெகார்த், வால்ட் விட்மன், ராமகிருஷ்ண பரமஹம்சர் என ஆளுமைகளும் கதாபாத்திரங்களாக இடம்பெறுகிறார்கள்.

திரும்பிப் பார்க்கையில் காலம் ஒரு இடமாகக் காட்சி அளிக்கிறது என்றொரு கவிதை வரியை நகுலன் எழுதியிருக்கிறார். இந்த உணர்வை அவரது நாவல்களில் அதிகமும் காண முடிகிறது. இருப்பும் இன்மையுமே அவரது கதாபாத்திரங்களின் மையப் பிரச்சினை. முன்பின்னாகச் சென்றபடியே இருக்கும் ஊஞ்சலைப் போலவே எழுத்தைக் கையாள்கிறார். அனுபவங்களில் நிலைகொள்வதும் அனுபவங்களை உதறி எழுந்து பறத்தலும் என இருநிலைகளை அவரது எழுத்தில் தொடர்ந்து காண முடிகிறது.

‘நினைவுப்பாதை’ நாவலுக்கு அசோகமித்திரன் சிறப்பான முன்னுரை எழுதியிருக்கிறார். அதில், ‘இது அசலாகச் சதையும் ரத்தமுமாக உயிர்வாழும் ஓர் எழுத்தாளனின் நினைவுப்பாதை. இதில் வேறு பல எழுத்தாளர்கள் வருகிறார்கள், நினைவுகொள்ளப்படுகிறார்கள். இலக்கியவாதிகளைப் புனைவுருக்களாக்கியது நகுலனின் சாதனை’ என்கிறார். அது உண்மையே. நவீனன் என்ற படைப்பாளிக்கும் நகுலன் என்ற புனைபெயர் கொண்ட மனிதனுக்கும் இடையில் நடைபெறும் முடிவற்ற உரையாடல்தான் ‘நினைவுப்பாதை’. இந்த நினைவுப்பாதையில் மாயாரூபிணியாக ‘சுசீலா’ வெளிப்படுகிறாள்.

நகுலனின் நாவலில் இடம்பெறும் உரையாடல்கள் அன்றாடத் தளத்திலிருந்து சட்டென ஞானநிலையை நோக்கி நகர்ந்துவிடுகின்றன. கவிதையும் தத்துவமும் இணைந்து உருவான புனைவெழுத்து இவை என்பேன். எழுத்தாளனை மையக் கதாபாத்திரமாக்கியே நகுலனின் நாவல்கள் அமைந்திருக்கின்றன. அதுவும் புறக்கணிக்கப்பட்ட, அங்கீகாரமில்லாத ஒரு எழுத்தாளனின் அகத்தையே இவை வெளிப்படுத்துகின்றன. உலகம் தன்னைக் கைவிடும்போது ஒருவன் சொற்களிடம் அடைக்கலமாகிறான். படைப்பின் வழியே தன்னை மீட்டுக்கொள்ள முயல்கிறான். ஆனால், இலக்கிய உலகமும் சண்டையும் சச்சரவுகளும் பொறாமையும் அவமதிப்பும் நிறைந்ததாக இருப்பதை அறியும்போது, தானும் தன் பூனையும் நாய்களும் போதும் என ஒதுங்கிவிடுகிறான்.

தன்னையே ஒரு கதாபாத்திரமாக உணரும் எழுத்தாளனின் அவஸ்தைகளே இந்த நாவல்கள் என்று குறிப்பிடலாம். சொல்லில் சொல்ல முடியாதவற்றைப் புனைவுகளாக எழுத முயன்றதே நகுலனின் கலை. அந்த வகையில், இன்று நாம் பேசும் நான்லீனியர் நாவல்களுக்கு நகுலனே முன்னோடி.

- எஸ்.ராமகிருஷ்ணன், ‘சஞ்சாரம்’ உள்ளிட்ட நாவல்களின் ஆசிரியர். தொடர்புக்கு: writerramki@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x