Last Updated : 23 Feb, 2016 08:34 AM

 

Published : 23 Feb 2016 08:34 AM
Last Updated : 23 Feb 2016 08:34 AM

கருத்துச் சுதந்திரத்தை மறுப்பது சரியா?

கருத்துச் சுதந்திரத்துக்கும் தேச வளர்ச்சிக்கும் நேரடித் தொடர்பு இருப்பதற்கான ஆதாரங்கள் உள்ளன

பாகிஸ்தானை எடுத்துக்கொள்ளுங்கள். நோபல் பரிசு பெற்ற பாகிஸ்தானியர்கள் இருவர், நாட்டைவிட்டு வெளியேறி வெளிநாடுகளில் வாழ நேர்ந்தது. ஒருவர் அந்நாட்டின் மிகச் சிறந்த விஞ்ஞானி; தனது மதச் சுதந்திரத்தில் தலையிடும் வகையில் கொண்டுவரப்பட்ட அரசியல் சட்டத் திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் நாட்டைவிட்டு வெளியேறியவர். மற்றவர் பதின்ம வயதிலான பெண். பள்ளிக்குச் சென்றதற்காகவும் தனது உரிமைகளுக்காகப் பேசியதற்காகவும் சுடப்பட்டவர்.

அப்துஸ் சலாம் மற்றும் மலாலா யூசுப்ஸாய் எனும் அந்த இருவரின் நிலையும் பாகிஸ்தானிடம் என்ன கோளாறு இருக்கிறது என்பதைச் சொல்லிவிடும். கருத்துச் சுதந்திரமும், மாற்றுக் கருத்துகளும் அதிகாரத்தில் இருப்பவர்களாலோ அல்லது அவை தேசத்துரோகம் என்பதைப்போல் தொனித்தாலே அதற்கு வன்முறையிலான எதிர்வினை வருவதாலோ நசுக்கப் படும்போது என்ன நடக்கும் என்பதை இவர்களது வாழ்க்கை எடுத்துக்காட்டுகிறது.

வெளியேறிய குரல்கள்

பாகிஸ்தானின் குழந்தைகள், குறிப்பாக இளம் பெண்களின் சார்பாகக் குரல் கொடுத்ததால் பயங்கர வாதிகளின் துப்பாக்கிக் குண்டுகளை எதிர்கொண்டதற்காக மலாலாவுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது. அவர்களின் கல்வி மற்றும் பிற உரிமைகளுக்கு எதிராக பாகிஸ்தானில் உருவாகியிருந்த கொடூரக் கருத்துக்கு எதிராக அவர் நின்றார். அஹமதியர்கள் முஸ்லிம் அல்லாதவர்கள் என்று 1974-ல் சட்டத் திருத்தம் கொண்டுவரப்பட்ட பின்னர் அப்துஸ் சலாம் பாகிஸ்தானிலிருந்து வெளியேறினார். அஹமதி பக்தரான அவர் ஐரோப்பாவுக்குச் சென்று வாழ்ந்தார். 1996-ல் காலமானார். அவரது உடல் பாகிஸ்தானுக்குக் கொண்டுவரப்பட்டு பஞ்சாப் மாகாணம் ரப்வாஹில் புதைக்கப்பட்டது. அவரது கல்லறை வாசகத்தில் ‘நோபல் பரிசு பெற்ற முதல் முஸ்லிம்’ என்று எழுதப்பட்டது. உண்மையில், அப்துஸ் சலாம் நோபல் பரிசு பெற்ற இரண்டாவது முஸ்லிம். அவருக்கு 1979-ல் அவ்விருது வழங்கப்பட்டது. அதற்கு ஓராண்டுக்கு முன்னதாக எகிப்து அதிபர் அன்வர் சதாத், இஸ்ரேல் பிரதமர் மெனாக்கெம் பீகினுடன் இணைந்து அமைதிக்கான நோபல் பரிசைப் பெற்றிருந்தார். இன்று, அப்துஸ் சலாமின் கல்லறை வாசகத்தில் ‘முஸ்லிம்’ என்ற வார்த்தை சேதப்படுத்தப்பட்டிருக்கிறது.

முரண் என்னவென்றால், தனது அறிவியல் ஆர்வத்துக்கு குரான் ஒரு காரணம் என்று நோபல் பரிசு ஏற்புரையில் சலாம் குறிப்பிட்டார். ஸ்டாக்ஹோம் கான்செர்ட் ஹாலில் நிகழ்ந்த வித்தியாசமான தருணம் அது. அதேசமயம், ஹுதூத் அவசரச் சட்டம் மூலம் அடிப்படைவாதச் சங்கிலியில் பாகிஸ்தான் இணைந்துவிட்டதாக உலகுக்குக் கூறினார் சலாம்.

நவீன பாகிஸ்தானைப் பற்றிய ஆய்விலிருந்து அரசியல் விஞ்ஞானிகளுக்குக் கிடைத்திருக்கும் முக்கியப் பாடங்களில் ஒன்று அந்நாட்டின் ஜனநாயக அமைப்புகள் தகர்க்கப்பட்டு வந்ததுதான். அந்நாட்டின் நிறுவனங்களுக்கு இடையே இருந்த வேறுபாடுகள் காலப்போக்கில் மறைந்து, நாட்டை நிர்வகிக்கும் திறன் பெற்ற ஒரே தேசிய நிறுவனமாக பாகிஸ்தான் ராணுவம் உருவானது. பாகிஸ்தான் ராணுவம் சமூக ரீதியான இடப்பெயர்வுக்கும் வாய்ப்பு வழங்குகிறது. அதன் மூலம், திறமையானவர்களைத் தன் பக்கம் ஈர்த்துக்கொள்கிறது.

ஆனால், ஆரோக்கியமான ஜனநாயகம் என்பது வெவ்வேறு நிறுவனங்களுக்கு இடையே ஆரோக்கியமான போட்டியைக் கொண்டதாக இருக்க வேண்டும். ஆரோக்கியமான அந்தப் போட்டியை உருவாக்க கருத்துச் சுதந்திரம் மற்றும் மாற்றுக் கருத்துகளைக் கொண்ட உறுதியான அஸ்திவாரம் ஜனநாயகத்துக்குத் தேவை. அந்த இரண்டும் இல்லாதபட்சத்தில், நிறுவனம் சார்ந்த மற்றும் முற்போக்கான போட்டிகள் காணாமல்போய்விடும். அப்படி நிகழ்ந்தால், மிச்சம் நிலைத்திருக்கப்போகும் ஒரே நிறுவனம் ராணுவம் மட்டுமே. இதற்கு வரலாற்றுபூர்வமான காரணங்கள் உண்டு. நவீன அரசுகள் ராணுவத்தைத் தொடர்ந்துப் பேணி வளர்த்து வருகின்றன. ஏனெனில், ஒரு நாட்டின் பாதுகாப்பை உறுதிசெய்யும் அடிப்படைக் கடமையை ராணுவம்தான் செய்கிறது. பாகிஸ்தானும் இதற்கு விதிவிலக்கு அல்ல.

முன்னேற்றத்தின் அடிப்படை

சமூகங்களின் அறிவியல் முன்னேற்றத்துக்கு மாற்றுக் கருத்துகள் மற்றும் கருத்துச் சுதந்திரத்துடன் நேரடித் தொடர்பு உண்டு என்பதும் கவனிக்க வேண்டிய விஷயம். எனவேதான், நவீன யுகத்தில் மேற்கு ஐரோப்பாவும் அமெரிக்காவும் கண்டுபிடிப்புகளில் தொடர்ந்து முன்னேறி வருகின்றன. அறிவியல் முன்னேற்றம் என்பது கலப்பில்லாத மாற்றுக் கருத்துகள் (தேசவிரோதக் கருத்துகள் என்று பலருக்குத் தோன்றினாலும்கூட) அனுமதிக்கப்படும் வளாகங்களிலேயே வளர்ச்சி பெறுகிறது. 1960-களில் அமெரிக்க கல்வி நிறுவன வளாகங்களில், வியத்நாம் போருக்கு எதிரான போராட்டங்களும் சம உரிமை இயக்கங்களும் செயல்படத் தொடங்கிய அதேகால கட்டத்தில் பல அறிவியல் கண்டுபிடிப்புகளும் வரத் தொடங்கியது தற்செயல் நிகழ்வு மட்டுமல்ல. அதுதான் வரலாறானது. எதிர்காலத்திலும் அதுவே நிலைத்திருக்கும்.

கேள்வி என்னவென்றால், இவற்றிலிருந்தெல்லாம் இந்தியா ஏதேனும் பாடத்தைக் கற்றுக்கொண்டிருக்கிறதா என்பதுதான். உயர் கல்வி நிறுவன வளாகங்களில் மாற்றுக் கருத்துகள், கிட்டத்தட்ட தேசவிரோதக் கருத்துகள் அனுமதிக்கப்படுவது என்ற விஷயத்தைப் பார்க்கும்போதுதான், உலகின் சிறந்த கல்வி நிறுவனங்களில் முஸ்லிம் உலக நாடுகளைச் சேர்ந்த ஒரு பல்கலைக்கழகம்கூட இடம்பெறுவதில்லை என்பது புரியும். முஸ்லிம்களில் மிகச் சிறந்த அறிவாளிகள் உண்டு. ஆனால், அதிகாரத்தில் இருக்கும் அரசியல் இஸ்லாம், மாற்றுக் கருத்துகள் மற்றும் கருத்துச் சுதந்திரம் தொடர்பாகத் தவறான கண்ணோட்டம் கொண்டிருப்பதால், புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் உயர் கல்விக்கு எதிராகச் செயல்படுகிறது.

பொருளாதார வளர்ச்சி

மாற்றுக் கருத்துகள் மற்றும் கருத்துச் சுதந்திரத்தை அடிப்படையாகக் கொண்ட ஆரோக்கியமான ஜனநாயகத்துக்கும் பொருளாதார வளர்ச்சிக்கும்கூட நேரடித் தொடர்பு உண்டு. கடந்த 60 ஆண்டுகளில் 150 நாடுகளை ஆய்வுசெய்த ரஷ்ய முதலீட்டு வங்கியான ரெனசான்ஸ் கேபிடல், ஜனநாயகத்தைக் கடைபிடித்த நாடுகளின் வருமானம் அதிகரித்ததைக் கண்டுபிடித்தது. அத்துடன், 10,000 டாலருக்கு மேல் நபர்வாரி மொத்த உள்நாட்டு உற்பத்தி அதிகரிக்கும்போது, அந்நாடுகளில் ஜனநாயகம் மேலும் நிலைப்பெற்றதையும் ரென்சான்ஸ் கேபிடல் கண்டறிந்தது.

வருமானத்துக்கு இயற்கை வளங்களை நம்பியிருக்கும் நாடுகள் மற்றும் சிங்கப்பூரைத் தவிர, நபர்வாரி வருமானம் அதிகமாகக் கொண்டிருக்கும் எல்லா நாடுகளுமே ஆரோக்கியமான ஜனநாயக நாடுகள்தான். அதனால்தான், சீனா அரசியல் மாற்றத்தை நோக்கி நகர்கிறது என்று பலரும் கருதுகிறார்கள். காரணம், அந்நாட்டின் நபர்வாரி வருமானம் உயர்ந்துவருகிறது.

யாரை உருவாக்குகிறோம்?

விஷயம் மிகவும் எளிதானது. முதிர்ந்த ஜனநாயக நாடாக உருவாவது, புதிய கண்டுபிடிப்பு களுக்கான மையமாக இருப்பது, கோடிக்கணக்கானோரை ஏழ்மையிலிருந்து விடுவிப்பது, உலக அளவில் முக்கியப் பங்காற்றுவது என்று இந்தியாவின் லட்சியங்கள் எல்லாமே மாற்றுக் கருத்தை அனுமதிக்கும் உறுதியான அதன் திறனைச் சார்ந்தே இருக்கின்றன. கல்வி நிறுவன வளாகங்களின்மீது தேச விரோதக் குற்றச்சாட்டின் அச்சுறுத்தல் தொங்கிக்கொண்டிருந்தால், அக்கல்வி நிறுவனங்களிலிருந்து வெளிவருபவர்கள் நடைப்பிணங் களாகத்தான் இருப்பார்கள்; புத்தாக்கம் செய்பவர்களாக அல்ல. புதுமை எண்ணம் படைத்தவர்கள், சுதந்திரச் சிந்தனையாளர்களுக்குப் பதிலாக இணையக் கூலிகளும், சித்தாந்த அடிமைகளும்தான் கல்வி நிறுவனங்களிலிருந்து வெளிவருவார்கள்.

ஒருபுறம் உச்ச நீதிமன்றம் தலையிட்ட பின்னரும், தொடர்ந்து இரண்டாவது நாளாக டெல்லி நீதிமன்றத்தில் பத்திரிகையாளர்களையும் மாணவர்களையும் தாக்கிய கும்பலை வழிநடத்திய வழக்கறிஞர் விக்ரம் சிங் சவுஹான்; மறுபுறம் விவாதத்துக்கு வருமாறு தனது எதிராளிகளை அழைத்த ஜவாஹர்லால் பல்கலைக்கழக மாணவர் கன்னையா குமார். இருவரில் யார் நமக்குத் தேவை என்பதைத் தேர்ந்தெடுத்துக்கொள்ளுங்கள். கல்வியாளர்கள் காலம்காலமாகச் சொல்லிவரும் விஷயங்களைப் புரிந்து கொள்ள நீங்கள் பாகிஸ்தானுக்கு அப்பால் போக வேண்டியதில்லை!

© ‘தி இந்து’ ஆங்கிலம்,

தமிழில்: வெ. சந்திரமோகன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x