Published : 24 Feb 2016 09:10 AM
Last Updated : 24 Feb 2016 09:10 AM

திருநங்கைகளின் 10 பிரதான கோரிக்கைகள் என்ன?

என்ன செய்ய வேண்டும் எனக்கான அரசு?



*

1. திருநங்கைகளுக்கு வீடுகள் ஒதுக்க வேண்டும் என்று 4 ஆண்டுகளாகப் போராடிவருகிறோம். காஞ்சிபுரம், ஈரோடு, சேலம் போன்ற மாவட்டங்களில்கூட திருநங்கைகளுக்கு வீடு ஒதுக்கப்பட்டிருக்கின்றன. சென்னையில் அது இன்னும் நிறைவேறவில்லை. வீடுகள் ஒதுக்கும்பட்சத்தில் எங்களைத் தனியே பிரித்துவிடாமல், மக்களோடு இணைந்து வாழும் வாய்ப்பை அளிக்க வேண்டும்.

2. தகுதிக்கேற்ப எங்களுக்கு வேலை வேண்டும். அரசுப் பணிகளில் 2% இடஒதுக்கீடு வழங்க வேண்டும்.

3. திருநங்கைகளுக்குச் சுய தொழில் செய்ய நிதியுதவி வழங்க வேண்டும்.

4. கேலி, கிண்டல்களுக்குப் பயந்து படிப்பைப் பாதியில் விட்ட திருநங்கைகள் ஏராளம். அவர்கள் படிப்பைத் தொடர அரசு உதவ வேண்டும். கல்விக் கட்டணத்தை அரசே ஏற்க வேண்டும்.

5. திருநங்கைகள் பலர் நல்ல படைப்பாற்றல் கொண்டவர்கள். இலக்கியம், நாடகம், இசை என்று பல தளங்களில் இயங்கும் திறன் அவர்களுக்கு உண்டு. அவர்களுக்கு கலைத் துறை, ஊடகத் துறையில் வாய்ப்பளிக்க வேண்டும்.

6. குழந்தைத் தத்தெடுப்பு, சொத்துக்கள் வாங்குவது என்று பல்வேறு விஷயங்களில் நாங்கள் எதிர்கொள்ளும் தடங்கல்களை நீக்கச் சட்டம் கொண்டுவரப்பட வேண்டும்.

7. திருநங்கைகளைப் பற்றியாவது மக்களிடம் ஓரளவுக்குப் புரிதல் இருக்கிறது. திருநம்பிகள் தொடர்பான புரிதல் இன்னும் ஏற்படவில்லை. விளிம்புநிலையில் இருக்கும் அவர்களுக்கு உதவி செய்ய அரசும் சமுதாயமும் முன்வர வேண்டும்.

8. அரசின் சார்பில் மக்கள் குறைதீர்க்கும் நிகழ்ச்சிகளைப் போல் மூன்றாம் பாலினத்தவர் களுக்கும் தனியாக, குறைதீர்க்கும் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டால் எங்கள் பிரச்சினைகளை நேரடியாக அரசின் கவனத்துக்குக் கொண்டுசெல்லும் வாய்ப்பு உருவாகும்.

9. அரவாணி நலவாரியம் சார்பில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பின்படி சென்னையில் 5,000 பேரும், தமிழகம் முழுவதும் 50,000 பேரும் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. ஆனால், அந்த எண்ணிக்கை முழுமையானது அல்ல. திருநங்கைகளுக்குத் தேவையான உதவிகள் சென்று சேர வேண்டும் என்றால் முழுமையான கணக்கெடுப்பு அவசியம்.

10. குடும்ப அமைப்புதான் எங்களைக் கடைசிவரை பாதுகாக்கும் என்று உறுதியாக நம்புகிறோம். திருடர்கள், குடிகாரர்கள் என்று தவறு செய்பவர்கள்கூட குடும்பத்தில் அனுமதிக்கப்படும்போது, எங்களை மட்டும் புறக்கணிப்பதும் விரட்டியடிப்பதும் வேதனை தருகிறது. குடும்ப அமைப்பில் நாங்கள் இணைந்திருக்கும் வகையில் அரசு சட்ட ரீதியான பாதுகாப்பை வழங்க வேண்டும்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x