Published : 17 Feb 2016 09:18 AM
Last Updated : 17 Feb 2016 09:18 AM

தேர்தல்.. கொள்கை.. கூட்டணி!- அறிமுகப் பார்வை

எம்ஜிஆர் ஆட்சிக்காலம் அது. திருச்செந்தூர் சட்டமன்றத் தொகுதிக்கு இடைத்தேர்தல் வந்திருந்தது. அதிமுகவும் திமுகவும் எதிரெதிர் முனைகளில். இரண்டுக்கும் மாற்று நாங்கள் என்று சொல்லிக் களமிறங்கியிருந்தது காங்கிரஸ். சூரபத்மன் தலை வெட்ட வெட்ட முளைப்பதுபோல அதிமுகவும் திமுகவும் திரும்பத் திரும்ப ஆட்சிக்கு வருகின்றன. இதற்கு இந்த செந்தில் ஆண்டவன்தான் வழிகாண வேண்டும் என்று பிரச்சாரம் செய்தார் மூப்பனார். ஆனால், அந்தத் தேர்தல் முடிவு அதிமுகவுக்கே சாதகமாகிப்போனது.

பிறகு, எம்ஜிஆர் மரணம் அடைந்து, அதிமுக பிரிந்துகிடந்த நிலையில் சட்டமன்றத் தேர்தல் வந்தது. அப்போது திராவிடக் கட்சிகளின் ஆட்சிக்கு மாற்றாக காமராஜர் ஆட்சி அமைப்போம் என்று சொல்லித் தேர்தலைச் சந்தித்தது காங்கிரஸ். மூப்பனாரை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தி, பதினான்கு முறை தமிழகம் வந்து பிரச்சாரம் செய்தார் பிரதமர் ராஜீவ் காந்தி. அதிமுக, திமுகவின் ஆட்சிக்காலத் தோல்விகளைச் சொல்லித் தீவிரமான பிரச்சாரத்தில் ஈடுபட்டதால், அப்போது காங்கிரஸுக்கு 26 இடங்களும் 19.83 சதவிகித வாக்குகளும் கிடைத்தன.

அப்படியொரு தீவிரமான மாற்று முயற்சி அதன்பிறகு எடுக்கப்படவே இல்லை. சற்றேறக்குறைய கால் நூற்றாண்டுக்குப் பிறகு, தற்போது அதேபோன்ற சூழல் உருவாகியுள்ளது. அதிமுக, திமுகவுக்கு மாற்று என்ற குரல் ஒலிக்கத் தொடங்கியுள்ளது, முன்பைவிடத் தீவிரமாக. அணிதிரட்டல்களும் அரங்கேறிக்கொண்டிருக்கின்றன.

உண்மையில், தமிழகத் தேர்தல் அரசியல் களம் அதிசயங்களின் அணிவகுப்பு. விநோதங்களின் விளைநிலம். அரசியல் மாற்றம், கொள்கை மாற்றம், கட்சி மாற்றம், கூட்டணி மாற்றம், ஆட்சி மாற்றம் என்று தமிழக அரசியல் களம் சந்தித்துள்ள மாற்றங்கள் அநேகம். அவை ஒவ்வொன்றையும் நுணுக்கமாகப் புலனாய்வு செய்யும்போது பல புதிய வெளிச்சங்கள் காணக்கிடைக்கின்றன.

குறிப்பாக, நம் காலத்து அரசியல் கட்சிகள் கடந்த காலங்களில் எடுத்த அரசியல், கொள்கை, கூட்டணி தொடர்பான நிலைப்பாடுகள் சில கட்சிகளை வெற்றிமுகட்டின் உச்சிக்குக் கொண்டுசென்றுள்ளன. சில கட்சிகளைத் தோல்விப் பள்ளத்தாக்கில் துவண்டுவிழச் செய்திருக்கின்றன. அதுபோலவே, வெற்றுத் தரையிலிருந்து புறப்பட்டு விண்ணைத் தொட்ட கட்சிகளும் உண்டு. பெருவீழ்ச்சிக்குப் பிறகு மீண்டு எழாமலே போன கட்சிகளும் உண்டு. அந்தக் கட்சிகளின் தேர்தல் கதைகளை எல்லாம் மறுவாசிப்பு செய்வது இப்போது அவசியம். காரணம், இது தேர்தல் காலம்! வாருங்கள், நாளை முதல் தொடர்ந்து வாசிப்போம்!

- ஆர். முத்துக்குமார், எழுத்தாளர். ‘இந்தியத் தேர்தல் வரலாறு’ முதலான நூல்களின் ஆசிரியர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x