Published : 27 Jul 2021 03:13 AM
Last Updated : 27 Jul 2021 03:13 AM

நீர்நிலைகள் பாதுகாப்பில் அரசின் அக்கறை செயல்வடிவம் பெற வேண்டும்

சென்னைப் பெருநகரின் குடிநீர் ஆதாரங்களில் ஒன்றான போரூர் ஏரியைச் சமீபத்தில் ஆய்வுசெய்த தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், ஏரியிலிருந்து மருத்துவக் கழிவுகள், கருவேல மரங்கள், குப்பைகள் அகற்றப்பட்டு, சுற்றுச்சுவர் எழுப்பப்படும் என்று அறிவித்திருப்பது பாராட்டுக்குரியது. மேலும், ஏரியில் குப்பைகளையும் மருத்துவக் கழிவுகளையும் கொட்டுவோர் மீது நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார். 252 ஏக்கர் கொண்ட போரூர் ஏரியில், தற்போது 50 ஏக்கர் அளவுக்கு மட்டுமே நீர்நிலை உள்ளது. ஏறக்குறைய 200 ஏக்கர் அளவுக்கு அந்த ஏரியில் கருவேல மரங்களும் குப்பைகளுமே ஆக்கிரமித்துள்ளன. போரூர் ஏரியில் மருத்துவக் கழிவுகள் கொட்டப்படுவதாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்ததையடுத்து, அரசு மேற்கொண்டுள்ள இந்தத் துரித நடவடிக்கையானது சென்னையின் போரூர் ஏரிக்கானதாக மட்டும் முடிந்துவிடாமல், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நீர்நிலைகளின் பாதுகாப்பையும் உறுதிசெய்யும் வகையில் விரிவுபெற வேண்டும்.

ஏரி, குளங்களில் மட்டுமின்றிப் புறநகர்ப் பகுதிகளில் உள்ள பாசனக் கால்வாய்களிலும் பிளாஸ்டிக் மற்றும் மருத்துவக் கழிவுகள் கொட்டப்படுவதைப் பார்க்க முடிகிறது. பாசனத்துக்காகத் தண்ணீர் திறந்துவிடப்படும்போது அந்தக் கழிவுகளும் தண்ணீரோடு சேர்ந்துவிடுகின்றன. இதனால், விளைநிலங்களுக்குப் பாதிப்பு உருவாகும் சூழலும் அதிகரித்துவருகிறது. எனவே, நீர்நிலைகள் பாதுகாப்பு என்பது பாசன வாய்க்கால்களையும் உள்ளடக்கியதாக அமைய வேண்டும். இதே வேளையில், நீர்நிலையை ஆக்கிரமித்துக் கட்டப்பட்ட செம்மஞ்சேரி காவல் நிலையம், தொடர்ந்து அங்கு செயல்படுவதற்குத் தடைவிதித்து சென்னை உயர் நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டுள்ளதோடு, அப்பகுதியில் நடந்துவரும் புதிய கட்டுமானப் பணிகளுக்குத் தடைவிதித்துள்ளதும் கருத்தில் கொள்ளப்பட வேண்டும். ஒருபக்கம் நீர்நிலைகளைச் சூழலியல் மாசுபாட்டிலிருந்து பாதுகாக்க வேண்டியிருக்கையில், இன்னொரு பக்கம் அவற்றை ஆக்கிரமிப்புகளிலிருந்தும் காப்பாற்ற வேண்டியிருக்கிறது.

மாநிலத்தின் மொத்த நீர்ப் பாசனப் பரப்பளவில், தமிழ்நாடு கடந்த சில தசாப்தங்களில் வளர்ச்சிபெறாத நிலை வேளாண் துறை அறிஞர்களால் தொடர்ந்து சுட்டிக்காட்டப்பட்டுவருகிறது. இந்நிலையில், நீர் வளங்களைப் பாதுகாப்பதிலும் அவற்றின் கொள்ளளவை அதிகப்படுத்துவதிலும் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள திமுக அரசு சிறப்புக் கவனம் காட்டுவதைப் புரிந்துகொள்ள முடிகிறது. சமீபத்தில் நடந்த நீர்வளத் துறை ஆய்வுக் கூட்டத்தில் நீராதாரங்களை அதிகரிக்கவும் புதிய நீர்நிலைகளை உருவாக்கவும் முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். மழைக்காலத்தில் கிடைக்கும் நீரை முழுமையாகப் பயன்படுத்தும் வகையில், அணைகள் இல்லாத மாவட்டங்களில் புதிய நீர் சேமிப்புக் கட்டுமானங்களை அமைத்திடவும் அவர் அறிவுறுத்தியுள்ளார். எனினும், நிதிநிலை அறிக்கையில் பாசனத் திட்டங்களை மேம்படுத்துவதற்குத் தேவையான நிதியை ஒதுக்கீடு செய்யும்போதே, இந்த அறிவிப்புகள் செயல்வடிவம் பெறுவதற்கான வழிவகைகளை உருவாக்க முடியும். இல்லாவிட்டால், துறைசார் ஆய்வுக் கூட்டங்களைக் குறித்த செய்தி அறிக்கைகளில் ஒன்றாகவே அது முடிந்துவிடக்கூடும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x