Published : 07 Jul 2021 03:12 AM
Last Updated : 07 Jul 2021 03:12 AM

மின்விநியோகத்தில் எதிர்நோக்கியிருக்கும் மிகப் பெரும் சவால்கள்

கடந்த சில மாதங்களாகத் தேங்கிக்கிடந்த மின்பராமரிப்புப் பணிகளைப் பத்து நாட்கள் அவகாசத்தில் செய்து முடித்திருப்பதோடு, மண்டல வாரியாகத் தொடர்ந்து ஆய்வுக் கூட்டங்களை நடத்திவரும் தமிழக மின்சாரத் துறை அமைச்சரின் நடவடிக்கைகள் வரவேற்கத்தக்கவை. கடந்த இரண்டு மாதங்களில் நிலவிய அறிவிக்கப்படாத மின்வெட்டானது, மக்களிடம் வருத்தத்தை உருவாக்கியிருந்த நிலையில், இந்தப் பராமரிப்புப் பணிகள் அதற்கு முடிவுகட்டும் வகையில் அமைந்துள்ளன. கடந்த ஆட்சியில் துணை மின்நிலையங்களைத் தனியாரிடம் ஒப்படைக்கும் திட்டமொன்று பரிசோதிக்கப்பட்ட நிலையில், தற்போதைய அரசு அத்திட்டத்தை ரத்துசெய்து, புதிய பணியாளர்களை நியமித்திருப்பதும் பாராட்டுக்குரியது.

மின்உற்பத்திக்கும் மின்பயன்பாட்டுக்கும் இடையிலான வேறுபாடுகளின் காரணமாக ரூ.900 கோடி வரையில் இழப்பு ஏற்படுவதாகவும், அதைச் சரிசெய்ய மின்கணக்கீட்டுக்கு ஸ்மார்ட் மீட்டர்களைப் பொருத்தவிருப்பதாகவும் மின்சாரத் துறை அமைச்சர் தெரிவித்திருக்கிறார். வீடு, தொழில், வணிகம் ஆகியவற்றில் மின்பயன்பாடு கணக்கில் கொள்ளப்படுவதையும் விவசாயத்தில் அது தவிர்க்கப்படுவதையும் அவர் சுட்டிக்காட்டியிருப்பது கவனத்திற்குரியது. இது ஏழை விவசாயிகளுக்கு மின்மோட்டார் வாங்க மானியம் வழங்குவதாகத் திமுக தனது தேர்தல் அறிக்கையில் தெரிவித்ததற்கு மாறான அணுகுமுறையோ என்ற கேள்வியும் எழுகிறது. கடந்த ஆட்சியில் மின்வாரியத்துக்கு ஏற்பட்ட ரூ.1.59 லட்சம் இழப்பின் காரணமாக ஆண்டுக்கு ரூ.15 ஆயிரம் கோடி வரையில் தமிழ்நாடு மின்வாரியம் வட்டி செலுத்த வேண்டியிருப்பதையும் அவர் குறிப்பிட்டுள்ளார். மின்வாரியத்துக்கு வட்டிக்குக் கடன் வழங்கும் நிதி நிறுவனங்களில் முதலீடு செய்வதைப் பாதுகாப்பானதாகவும் லாபகரமானதாகவும் நிதி ஆலோசகர்கள் பரிந்துரைக்கின்றனர் என்பதையும் கணக்கில்கொண்டால், இது நீண்ட நெடுங்காலமாகச் சரிசெய்யப்படாமல் இருக்கும் பிரச்சினை என்பதைப் புரிந்துகொள்ளலாம்.

கடந்த ஆட்சிக் காலத்தில் அறிவிக்கப்பட்ட மின்திட்டங்கள் சிலவற்றை உரிய கால அளவுக்குள் செய்துமுடிக்கவில்லை என்பதையும், தமிழ்நாட்டின் மின்தேவையில் மூன்றில் ஒரு பங்கைத் தனியாரிடமிருந்து வாங்க வேண்டியிருக்கிறது என்பதையும் மின்சாரத் துறை அமைச்சர் கூறியிருக்கிறார். தமிழ்நாட்டில் அடுத்தடுத்து ஆட்சிக்கு வரும் திமுகவும் அதிமுகவும் முந்தைய ஆட்சியில் தொடங்கப்பட்ட மின்உற்பத்தித் திட்டங்களை நிறைவேற்றுவதில் பொதுவாகக் கட்சி சார்புநிலைகளைக் கடைப்பிடிப்பதில்லை. தமிழகத்தின் தொழில் துறை வளர்ச்சிக்கு இந்த அணுகுமுறையும் ஒரு முக்கியமான காரணம். அந்நிலை முன்புபோலவே தொடர வேண்டும்.

மின்விநியோகத்தில் பாதிப்புகள் ஏற்பட்டால், தொழில் துறை மற்றும் வேளாண் துறை உற்பத்தி குறைந்து, மாநிலத்தின் பொருளாதார நிலை பாதிப்புகளைச் சந்திக்கக்கூடும். தமிழ்நாட்டின் மின்தேவை தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. பின்தங்கிய பகுதிகளில் புதிய தொழிற்பேட்டைகளை உருவாக்கி குறு, சிறு, நடுத்தரத் தொழில் துறையை வளர்த்தெடுக்கத் தமிழக முதல்வர் முயற்சிகளை எடுத்துவருகிறார். அம்முயற்சிகள் உரிய பலனளிக்க வேண்டுமென்றால், தொழில் துறைக்குத் தடையற்ற மின்விநியோகத்தை உறுதிப்படுத்த வேண்டியதும் அவசியம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x