Published : 22 Jun 2021 03:11 am

Updated : 22 Jun 2021 05:34 am

 

Published : 22 Jun 2021 03:11 AM
Last Updated : 22 Jun 2021 05:34 AM

அரசு தளங்களில் தமிழின் நிலை

tamil-in-government-sites

நீச்சல்காரன்

சமீபத்தில் அரசு விருது பெற்ற தமிழக எழுத்தாளர் ஒருவர் பற்றிய கட்டுரையை, ஆங்கில விக்கிபீடியாவிலிருந்து நீக்கச் சொல்லிப் பரிந்துரை வந்தது. குறிப்பிடத்தக்கவரல்லர் என்று சொல்லப்பட்டது. காரணம், அந்த எழுத்தாளர் குறித்த தகவல்கள் இணையத்தில் கிடைக்கவில்லை என்பதுதான். குறிப்பாக, கூகுளில் தேடினால் அவரைப் பற்றி எதுவும் அதிகாரபூர்வத் தளங்களில் கிடைக்கவில்லை. தொழில்நுட்பரீதியாகப் பார்த்தால், இதுவரை அரசுச் செய்திக் குறிப்பாக வெளிவந்த அனைத்து ஆவணங்களும் ஒருங்குறியில் இல்லை; அதனால்தான், கூகுள் போன்ற தேடுதளத்தில் தேடினால், அரசு செய்திக் குறிப்புகள் எதுவும் நேரடியாகக் கிடைப்பதில்லை. இது ஒருவருக்கான பிரச்சினை இல்லை; தமிழ்ப் பயன்பாட்டுக்கான பிரச்சினை.

பொதுவாக, முக்கிய அரசுத் தளங்களையெல்லாம் தேசிய தகவலியல் மையம் நிர்வகிக்கிறது. மற்ற தளங்கள் அந்தந்தத் துறையின் கீழோ, அந்த அமைப்பினாலோ நிர்வகிக்கப்படுகின்றன. இதில் சுமார் 60% தமிழக அரசின் தளங்களுக்கு மேல் தமிழ் இடைமுகம் (interface) இல்லை. அதாவது, ஆங்கிலத்தில் மட்டுமே அந்தத் தளம் இருக்கும்; தமிழ் மட்டும் தெரிந்த ஒருவரால் அணுக இயலாமல் போகும்.


தமிழ் ஒருங்குறி

தமிழக அரசு இணையத்தில் ஆங்கிலத்தில் செய்தி வெளியிட்டுவந்தது. பின்னர் தட்டச்சுப் பலகை மூலம் தமிழில் எழுதி, அதை ஒளிப்படமாகப் பதிவேற்றினர். இதையே நெடுங்காலமாகச் செய்துவந்தனர். பின்னர், 2007 காலகட்டத்தில் ‘டேம்’, ‘வானவில்’ என்று தமிழ் எழுத்துருவில் வெளியிடத் தொடங்கினர். 2013, 2017 காலகட்டத்தில் அரசு அலுவலகத்தில் ஒருங்குறி குறித்த அரசாணைகள் வெளிவந்தன. ஒருங்குறி பயன்படுத்தச் சொல்லி வந்த செய்திக் குறிப்பே, ஒருங்குறியில் இல்லை என்பது ஒருபுறமிருக்க.. சுமார் 14 ஆண்டுகள் ஆகியும் ஒருங்குறி முறைக்கு மாற்றவில்லை. ஒன்றிய அரசின் செய்திக் குறிப்புகளே தமிழ் ஒருங்குறியில் வெளியிடப்படும் நிலையில், தமிழக அரசின் செய்திக் குறிப்புகள் அனைத்தும் தமிழ் ஒருங்குறியில் விரைவில் வெளியிட வேண்டும். இயன்றால், இதுவரை வெளிவந்த பழைய செய்திக் குறிப்புகளையும் ஒருங்குறிக்கு மாற்ற வேண்டும். இதன் மூலம், பார்வை மாற்றுத் திறனாளிகள் உட்பட அனைவராலும் எளிதில் தேடிப் படிக்க முடியும். பிடிஎஃப் கோப்பாகவே இருந்தாலும் குறியாக்கம் சிதையாமல் ‘ஐஎஸ்ஓ 19005-1’ தரத்தில் வெளியிடுவதன் மூலம், இந்தத் தரவுகளைக் கணினியாலும் எளிதாகப் புரிந்துகொள்ள முடியும்.

அண்மையில் உருவான மயிலாடுதுறை மாவட்டத்தைத் தவிர மற்ற 37 மாவட்டங்களுக்கும் டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ் தனியான இணையதளங்கள் உள்ளன. இவையெல்லாம் ஆங்கிலம், தமிழ் மொழிகளில் இடைமுகம் கொண்டவையாக உள்ளன. தமிழ்நாட்டில் உள்ள 15 மாநகராட்சிகளுள் சென்னை, மதுரை, கோவை, திருச்சி, தூத்துக்குடி, திருநெல்வேலி, சேலம் மட்டுமே தனியான இணையதளத்தைக் கொண்டுள்ளன. சென்னையைத் தவிர, அனைத்துத் தளங்களிலும் ஆங்கில இடைமுகம் மட்டுமே உள்ளன. மதுரை, கோவை மாநகராட்சி இணையதளங்களில், கூகுள் மொழிபெயர்ப்பைப் பெயரளவில் கொண்டுள்ளன. இதை மாற்றி, சென்னையைப் போல அனைத்து உள்ளாட்சி அமைப்பின் இணையதளங்களும் தமிழில் இருக்க வேண்டும்.

பல்கலையின் நிலை

சென்னை அண்ணா பல்கலைக்கழகம், மதுரை காமராஜர் பல்கலைக்கழகம், டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம், திருவள்ளுவர் பல்கலைக்கழகம் உட்பட ஏறக்குறைய அனைத்துப் பல்கலைக்கழகத் தளங்களிலும் தமிழ் இடைமுகம் இல்லை; தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகமும், தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகமும் மட்டும் விதிவிலக்கு. வேளாண் பல்கலைக்கழகம், மீன்வளப் பல்கலைக்கழகம் போன்ற தளங்களில் சில செய்திகள் தமிழில் இருந்தாலும் தளத்தின் இடைமுகம் ஆங்கிலத்திலேயே உள்ளது. ஐஐடி மெட்ராஸ் தளமே தமிழிலும் வேண்டும் என்று கேட்க வேண்டிய நேரத்தில், தமிழ்நாட்டுக் கல்லூரிகளே தங்கள் தளத்தைத் தமிழில் வெளியிடாமல் இருப்பது துரதிர்ஷ்டவசமானது.

தொழிலாளர் துறை, வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை இயக்குநரகம், வேலைவாய்ப்புத் தளம், சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை, கல்வி உதவித்தொகைத் தளம் என சராசரி நபர்கள் பயன்படுத்தும் தளங்களிலும் தமிழ் இடைமுகம் இல்லை. மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், தகவல் தொழில்நுட்பத் துறை போன்றவை தமிழ் இடைமுகம் வைத்திருந்தாலும், அவை முன்பக்கத்தில் இணைப்பாகக் கொடுக்கப்படவில்லை. இப்படிப்பட்ட தளங்களே நூற்றுக்கு மேல் உள்ளன. கலைப் பண்பாட்டுத் துறை, இந்து சமய அறநிலையத் துறை போன்ற சில தளங்கள் தமிழக அரசின் தளங்களிலேயே சிறப்பான வடிவமைப்பைக் கொண்டுள்ளன என்பதையும் மறுக்க முடியாது. அதுபோல மற்ற தளங்களும் தமிழில் இருப்பதை உறுதிசெய்ய வேண்டும். முன்பு, ஒவ்வொரு திருக்கோயிலுக்கும் இருந்த ஆங்கில இணையதளங்களில் சில தமிழில் மாறிவருகின்றன. இது அனைத்துக் கோயில்களுக்கும் விரிவுபடுத்தப்பட வேண்டும்

பகிர்வுரிமை வேண்டும்

வளர்ந்த நாடுகள் பலவற்றின் அரசுத் தளங்களெல்லாம் பகிர்வுரிமை கொண்டவை. அதாவது, அதன் உள்ளடக்கங்களைப் பகிர்ந்துகொள்ளலாம், பயன்படுத்தலாம் என்ற சட்டரீதியான குறிப்பு இருக்கும். ஆனால், இந்தியாவில் பொதுத் தகவல் உரிமம் (GODL) சட்டத்தில் இருந்தாலும் பெரும்பாலான தளங்களில் ‘காப்புரிமைக்கு உட்பட்டவை’ என்ற வாசகமே உள்ளது. 2016-ல் அரசாணை 105-ன்படி தமிழ் வளர்ச்சிக்கான வெளியீடுகள் அனைத்தும் படைப்பாக்கப் பொதுவுரிமத்தில் அறிவிக்கப்பட்டன. ஆனாலும், அந்தத் துறை சார்ந்த தளங்களில் காப்புரிமை இடப்பட்டுள்ளன. இதனால் விக்கிமூலம், பொதுவகம் போன்று சர்வதேசக் களஞ்சியங்களில் இவற்றைப் பயன்படுத்துவதில் சிக்கல் உள்ளது. இதைச் சரிசெய்வதோடு, பார்வை மாற்றுத் திறனாளிகள் அணுகும் வகையில், முக்கியத் தளங்களையாவது சர்வதேச வழிகாட்டல்படி அமைக்க வேண்டும்.

பெருந்தொற்றுக் காலத்தில் இணையப் பயன்பாடு அபரிமிதமாக அதிகரித்துள்ளதை முன்னிட்டும், எதிர்வரும் நவீன நுட்பங்களைக் கருத்தில் கொண்டும் தமிழ்ப் பயன்பாட்டை இணையத்தில் அரசு உறுதிசெய்ய வேண்டும். இதன் மூலம் கணித் தமிழ் சார்ந்த தொழில் வளர்ச்சியும் ஆய்வுகளும் பெருகும். ஒருங்குறி, தமிழ்ப் பயன்பாடு குறித்து அண்மையில் வெளிவரும் அறிவிப்புகள் நம்பிக்கை தருவனவாக இருந்தாலும் நிலையான அறிவிப்பாக, அனைத்து அரசுத் தளங்களும் தமிழில் இருக்க வேண்டும் என்ற அறிவிப்பும் வேண்டும்.

- நீச்சல்காரன், தொழில்நுட்ப எழுத்தாளர்.

தொடர்புக்கு: neechalkaran@gmail.com


Tamil in government sitesஅரசு தளங்களில் தமிழின் நிலைதமிழக எழுத்தாளர்தமிழ் ஒருங்குறிInterfaceதமிழ் இடைமுகம்

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x