Published : 22 Dec 2015 08:50 AM
Last Updated : 22 Dec 2015 08:50 AM

பேரழிவுக்குப் பின்னும் கற்காத பாடங்கள்!

இயற்கையான முறையில் தூர்வாருதல்தான் வெள்ளத்தின்போது நம்மைக் காக்கும்

எந்த மாதிரியான அபாயத்தில் இருக்கிறோம் என்று நமக்கு நினைவுபடுத்த வந்ததுபோல் இருக்கிறது. பாரிஸில் பருவநிலை தொடர்பான பேச்சுவார்த்தைகள் இருள் பாதையில் தளர் நடையாக நடந்துகொண்டிருந்தபோது, டெஸ்மாண்ட் புயல் நமது முதுகில் ஓங்கி ஒரு அறை விட்டிருக்கிறது. எனினும், இந்தத் தொடர்பை நாம் இன்னும் புரிந்துகொள்ளவில்லை.

இந்த வெள்ளம் தொடர்பான செய்திகளில் ‘100 அல்லது 200 ஆண்டுகளில் நடந்த பெரிய வெள்ளம்’ என்று குறிப்பிடப்படுகிறது. ஆனால், பிரிட்டனில் 24 மணி நேரத்தில் 30 செ.மீ. மழைப் பொழிவைச் சந்தித்த கும்ப்ரியா பகுதி, 2005-லிருந்து இது போன்ற மூன்றாவது நிகழ்வைச் சந்திக்கிறது. விதிவிலக்கான நிகழ்வுகள் என்று சொல்லப்படுபவை பெரும்பாலும் விதிவிலக்குகளாக இருப்பதில்லை.

அதிக வெப்பம் என்பது அதிக சக்தியைத் தருவது; அதேசமயம், வளிமண்டலத்தில் அதிகமான ஈரப்பதத்தைத்தான் அது ஏற்படுத்தும். லண்டன் வானிலை மையமான ‘மெட் ஆபீஸின்’ விஞ்ஞானிகள் கடந்த மாதம் வெளியிட்ட ஆய்வின்படி, புவி வெப்பமயமாதலின் பாதகங்கள் அதிகரித்திருக்கின்றன. மழைக் காலத்தின் போது எடுக்கப்படும் நடவடிக்கைகளில் உரிய கவனம் செலுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத் தக்க மற்றொரு விஷயம். “3.2 பில்லியன் யூரோவை வெள்ள மேலாண்மை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காகச் செலவிடுகிறோம். முந்தைய அரசு ஒதுக்கியதைவிடவும் அரை பில்லியன் பவுண்டுகள் அதிகம் இது” என்கிறது அரசு. எனினும், அந்தத் தொகை எல்லாம், ஆறுகளின் நீர்ப்பிடிப்பு தொடர்பான நடவடிக்கைகளுக்குப் பதிலாக, வெள்ள நிவாரண நிதிக்காகப் பயன்படுத்தப்படுகிறது. நீரைத் தேக்கி வைப்பதற்கு முன்பாகவே வெள்ளம் வருவதை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்பதை இது காட்டுகிறது.

செயற்கை முறையின் பாதகங்கள்

நன்கு திட்டமிடப்பட்ட கொள்கையின் மூலம், வெள்ளம் ஏற்படுவதைத் தடுக்க முடியும். மேய்ச்சல் நிலங்களைக்காட்டிலும் மரங்கள் அடர்ந்த பகுதியின் நிலம் மழை நீரை 67 மடங்கு அதிகம் உறிஞ்சிக்கொள்வதாக வேல்ஸின் மையப் பகுதியில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. நிலத்தால் உறிஞ்சப்படும் மழை நீர், மிக மெதுவாகத்தான் வெளியே வருகிறது. ஆனால், கும்ப்ரியாவின் குன்றுகளில் கிட்டத்தட்ட மரங்களே இல்லாமல் செய்துவிட்டார்கள்.

விவசாய நிலங்களைப் பாதுகாப்பதற்காகத் தூர்வாரப் பட்டு, கால்வாய்கள் மூலமாகப் பராமரிக்கப்படும் ஆறுகள் வெள்ளத்தின்போது அருகில் இருக்கும் நகரங்களுக்குள் புகுந்துவிடுகின்றன. சில ஆண்டுகளுக்கு முன்னர் என்னர்டேல் பகுதியில் உள்ள லிஸா நதியில் இயந்திரங்களை வைத்துத் தூர்வாரும் முறை கைவிடப்பட்டது. மாறாக, அந்த ஆற்றில் மரக் கட்டைகளும் பாறைகளும் தேங்கிக் கிடப்பது அனுமதிக்கப்பட்டது.

கும்ப்ரியாவில் 2009-ல் பெரிய புயல் ஒன்று தாக்கியபோது, பிற நதிகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியபோதும், லிஸா நதி தெளிவாகவும் கட்டுக்குள்ளும் இருந்தது. அந்நதியில் கிடந்த மரத் துண்டுகளும் பாறைகளும் வெள்ள நீர் வேகமாக வெளியேறாமல் பார்த்துக்கொண்டன. நீரை வடிகட்டி மிக மெதுவாக வெளியேற்றின. இயற்கை முறையிலான இந்த வழிமுறை பிற நதிகளிலும் பின்பற்றப்பட்டிருந்தால் பல வெள்ள பாதிப்புகளைத் தவிர்த்திருக்க முடியும்.

காணாமல்போன அறிக்கை!

2013-14 குளிர்காலத்தின்போது ஏற்பட்ட வெள்ளத்தின் போது, அரசின் சுற்றுச்சூழல் நிறுவனம் ‘ஆறு தூர்வாருதல் மற்றும் வெள்ளத் தடுப்பு’ எனும் அறிக்கையை வெளியிட்டிருந்தது. “ஆறுகளின் கால்வாய்களில் தூர்வாருவது, ஆறுகளில் அதீதமாக நீரோட்டம் ஏற்படும்போது, வெள்ளம் உருவாவதைத் தடுப்பதில்லை” என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. வெறுமனே தூர்வாருதலை மேற்கொள்வது நதிகளை இன்னும் அபாயகரமானவையாக மாற்றுகிறது. பாலங்கள், கரைகள் மற்றும் சிறிய அணைக்கட்டுகளைப் பலவீனப்படுத்துகிறது. பராமரிப்பதற்கு அதிகச் செலவையும் ஏற்படுத்துகிறது என்றது அந்த அறிக்கை.

இந்த அறிக்கையின் எல்லா நகல்களும் வலைதளத் திலிருந்து நீக்கப்பட்டுவிட்டன. காரணம் அறிய முடியாததல்ல. விவசாயத் துறையைத் திருப்திப்படுத்து வதை முதன்மை நோக்கமாகக் கொண்ட சுற்றுச்சூழல் துறை 2014 ஜூன் மாதம், தூர்வாருதல் தொடர்பான கட்டுப்பாடுகளைத் தளர்த்தும் பரிந்துரையை முன்வைத்தது. சரளைக் கற்களை ஆற்றுப் படுகையிலிருந்து எடுத்துக் கொள்ளவும் அனுமதியளிக்கப்பட்டது. பேரழிவுக்கு இதைவிடச் சிறப்பாக வழிவகுக்க முடியாது. நதிகளில் நீர் இருந்தால், அது எங்காவது செல்ல வேண்டும் என்பது இயற்கையானது. நீரை நிலங்களில் நிறுத்திவைக் காவிட்டால், அது மக்களின் வசிப்பிடங்களை நோக்கித்தான் பாயும். எனினும், அதிகாரத்தில் இருப்பவர்கள் யாரும் காரணங்களைப் பற்றிக் கவலைப்படுவதில்லை.

வெள்ள அபாயத்தைத் தவிர்க்க ஆற்றுப்படுகைகளை நல்ல முறையில் நிர்வகிப்பது தொடர்பாகக் கோரிக்கை விடுத்தவர்களுக்கு, கும்ப்ரியாவின் முக்கியமான எம்.பி.க்களான ரோரி ஸ்டெவார்ட், டிம் ஃபேர்ரோன் ஆகிய இருவரும் கண்டனம் தெரிவித்துவந்தனர்.

2013-ல் “சுற்றுச்சூழல் நிறுவனத்தின் அறிவுரையின் படி நேஷனல் டிரஸ்ட் நிறுவனம், சிறிய வாடகை விளைநிலங்களின் தாழ்நிலை மேய்ச்சல் நிலங்களில் தண்ணீர் புக அனுமதித்துவிட்டது” என்று அந்நிறுவனத்தைக் கடுமையாக விமர்சித்தார் ரோரி ஸ்டீவார்ட். 2014-ல் மேம்பட்ட பல்லுயிர்ப் பெருக்கம், வெள்ளம் குறைப்பு, கார்பன் டை ஆக்ஸைடைச் சேமித்து வேறு வகைகளில் பயன்படுத்தும் தொழில்நுட்பம் ஆகியவற்றில் திறம்படச் செயல்பட்ட ‘ராயல் சொசைட்டி ஃபார் தி ப்ரொடெக்‌ஷன் ஆஃப் பேர்ட்ஸ்’ எனும் அமைப்பையும், ‘யுனைட்டட் யுட்டிலிட்டீஸ்’ எனும் குடிநீர் நிறுவனத்தையும் குறை கூறியிருந்தார்.

2013-ல் ‘வைட்டல் அப்லேண்ட்ஸ்’எனும் பெயரில் முன்வைக்கப்பட்ட திட்டத்தை ‘நேச்சுரல் இங்கிலாந்து’ நிறுவனம் கைவிட்டது தனக்குப் பெரிதும் உவப்பளித்ததாக டிம் ஃபேர்ரன் கூறினார். குன்றுகளில் அதிகம் தாவரங்களை வளர்ப்பதன் மூலம், குன்றுகளுக்குக் கீழே உள்ள பகுதிகளுக்கு வெள்ளம் பாய்வதைத் தடுக்க முடியும் என்று பரிந்துரைத்த திட்டம் அது. கால்நடைகளால் அதிகமாக மேய்ச்சலுக்கு உட்படுத்தப்படுவதால், மண் அரிப்பு உள்ளிட்ட பிரச்சினைகள் ஏற்படும் என்றும் அத்திட்டம் எச்சரித்திருந்தது.

இயற்கை சொன்ன நீதி

தற்போது திருவாளர்கள் ஸ்டீவர்ட்டும் ஃபேர்ரனும் ‘கடவுளின் செய’லை நினைத்து வருந்தி, கையைப் பிசைந்துகொண்டு நிற்கிறார்கள். சமீபத்திய வெள்ளத்தின் போது காரில் வந்துகொண்டிருந்த டிம் ஃபேர்ரன் வெள்ளத்தில் மாட்டிக்கொண்டார். அவரைப் பெரும் பாடுபட்டு வெள்ளத்திலிருந்து மீட்க வேண்டியிருந்தது. இந்நிகழ்வு அவரைப் போன்றவர்களுக்குப் படிப்பினையைத் தந்திருக்கும்.

இதற்கிடையில், பருவநிலை குறித்த பாரிஸ் மாநாடு வெற்று அடையாளங்களின் திருவிழாவாக நடந்து முடிந்திருக்கிறது. இம்மாநாட்டில் பங்கேற்ற நாடுகள் முன்வைத்திருக்கும் வாக்குறுதிகள், பேரழிவு நிகழ்வுகளைத் தடுப்பதற்குத் தேவையான எந்த நம்பிக்கையும் தரவில்லை. புதைபடிவ எரிமத்தை பூமிக்கடியிலேயே விட்டுவைப்பது தொடர்பான கோரிக்கையை ஏற்க மறுத்திருப்பதுதான் இன்னும் கொடுமை. பாடம் எதுவும் கற்கப்படவில்லை. முக்கியமான விவாதங்கள் தவிர்க்கப்பட்டன அல்லது குழிதோண்டிப் புதைக்கப்பட்டன. நாம் அறியாமையில் மூழ்கிக் கிடக்கிறோம். நுண்ணுணர்வற்ற ஊடகமும் மோசமான அரசும் உருவாக்கிய அறியாமை அது.

ஒவ்வொரு பேரழிவு நிகழ்வையும் நாம் குழப்பத்துட னேயே எதிர்கொள்கிறோம். நம்மை அச்சுறுத்துவது எது என்பதைப் புரிந்துகொள்ளும் திறன் நம்மிடம் இன்னும் வளரவேயில்லை.

‘தி கார்டியன்’

தமிழில் சுருக்கமாக: வெ. சந்திரமோகன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x