Published : 16 Jun 2021 03:12 am

Updated : 16 Jun 2021 06:01 am

 

Published : 16 Jun 2021 03:12 AM
Last Updated : 16 Jun 2021 06:01 AM

தலைதூக்கும் போலி அறிவியல்

fake-science

கரோனா பெருந்தொற்று ஒருபுறம் மனிதகுலத்தை ஆட்டி வந்தாலும், அதற்கு இணையாகப் போலிச் செய்திகளும், அறிவியலுக்குப் புறம்பான தகவல்களும் வந்து கொட்டிக்கொண்டே இருக்கின்றன. போலி மருத்துவர்களைப் போலவே, உறுதிப்படுத்தப்பட்ட ஆதாரங்களுக்கு எதிராகப் பெருங்கதைகளைக் கட்டிவிடுவதில் ‘சமூக வலைதள நிபுணர்கள்’ சமீபத்திய ஆண்டுகளில் கைதேர்ந்தவர்களாகிவருகிறார்கள். இதைத் தகவல்தொற்று என்று உலக சுகாதார நிறுவனம் அடையாளப்படுத்துகிறது.

இதுபோன்ற அறிவியலுக்குப் புறம்பான கருத்துகளை ஆதரிப்பதுபோல் சில மதிப்புமிகு அறிவியலாளர்களும் மருத்துவர்களும் சமூக ஊடகங்கள் வழியே கருத்து தெரிவிக்கிறார்கள் அல்லது அவர்களுடைய பேச்சானது திரிபுவாதக் கருத்துகளுக்கு ஆதரவாக சமூக ஊடகங்களில் பயன்படுத்திக்கொள்ளப்படுகிறது. தங்களுடைய முந்தைய ஆய்வுகளின் அடிப்படையில் மதிப்பைப் பெற்றுள்ள இந்த அறிஞர்கள், அறிவியல் முறைசார்ந்த கருத்துகளிலிருந்து வழுவி, ஆதாரமற்றதும் ஆபத்தானதுமான கருத்துகளை முன்வைக்கிறார்கள். இவை கரோனாவை விடவும் வேகமாகப் பரவிவருகின்றன. ஒரு புதிய நோய்த்தொற்று குறித்த புரிதலானது, துறை சார்ந்தவர்களிடமும் அவர்கள் மூலமாகச் சமூகத்திலும் பரவலாவதற்கு முன்பே, இதுபோன்ற ஆதாரமற்ற கருத்துகள் காட்டுத்தீபோல் பரவிவிடுகின்றன, நம்பவும் படுகின்றன.


பிறழ்ந்த அறிவியலாளர்கள்

உலக மருத்துவர்கள் கூட்டணியைச் சேர்ந்த ஐரிஷ் அறிவியலாளர் டோலரஸ் காஹில், கரோனா நோயைச் சாதாரண பருவகாலக் காய்ச்சல் என்று முரண்பாடான கருத்தை முன்வைத்ததன் காரணமாக, ஐரோப்பாவின் பல பகுதிகளில் ஊரடங்குக்கு எதிரான போராட்டங்கள் உருவாக, கரோனா நோய் மறுப்பாளர்களும் உருவானார்கள். நோபல் பரிசு பெற்ற பிரெஞ்சு அறிவியலாளர் லூக் மான்டேனியே கரோனாவின் தோற்றம் தொடர்பாகவும், தடுப்பூசிப் பயன்பாடு தொடர்பாகவும் தொடர்ச்சியாக சதிக் கோட்பாடுரீதியிலான கருத்துகளை முன்வைத்துவருகிறார்.

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தைச் சேர்ந்த மருத்துவர் தாமஸ் கோவன், 5ஜி ரேடியோ அலைகளே கரோனா பரவலுக்குக் காரணம் என்று கடந்த ஆண்டு கூறினார். அது எந்த வகையிலும் சாத்தியமற்றது என்கிறபோதும், 5ஜி அலைக்கற்றைக்கு எதிரான இந்தப் போக்கின் காரணமாக, பிரிட்டனில் மட்டும் 87 செல்போன் கோபுரங்களுக்குத் தீ வைக்கப்பட்டுள்ளது.

இந்திய நிலை

இந்தியாவிலும் ‘மாற்று மருத்துவ முறை’ என்று அறிவியலுக்குப் புறம்பான மருத்துவ முறையைப் பரிந்துரைக்கும் சிலர் ‘தடுப்பூசி போட்டால்தான் கரோனா வரும்’, ‘தேங்காய் எண்ணெய் மிகச் சிறந்த கிருமிநாசினி. கையில் தேங்காய் எண்ணெய் தடவிக்கொண்டால், கரோனா தொற்றாது’ என்றெல்லாம் சமூக ஊடகங்கள் வழியாகப் பரப்பிக்கொண்டிருக்கிறார்கள். கரோனா ஒரு நோயே அல்ல என்று கூறிய டான்சானியாவின் எதேச்சாதிகார அதிபர் ஜான் மகுஃபுலி, 15 நாள்களுக்குத் தலைகாட்டாமல் இருந்து, கடந்த மார்ச் மாதம் இறந்துபோனார். இதயக் கோளாறால் அவர் இறந்தார் என்று அதிகாரபூர்வத் தகவல்கள் கூறினாலும், கரோனா தொற்றுக்கு அவர் பலியானார் என்கிற தகவல்கள் கசிந்தன. ஆனால், கரோனாவுக்கு எதிராகக் கருத்து தெரிவித்ததால், மேற்கத்திய நாடுகளே மகுஃபுலியைக் கொன்றுவிட்டதாக இந்திய கரோனா மறுப்பாளர்கள் குற்றஞ்சாட்டினார்கள்.

கரோனா ஏற்படுத்தியுள்ள தாக்கத்தின் காரணமாக ஏற்பட்டுள்ள அச்சம், அவநம்பிக்கையைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ளும் இந்த ‘உதிரி அறிவியலாளர்கள்’ அல்லது போலிச் செயற்பாட்டாளர்கள் தடுப்பூசி மறுப்பு, முகக்கவச மறுப்பு போன்றவற்றை நோக்கி ஒரு பிரிவு மக்களை எளிதாக நகர்த்திவிடுகிறார்கள். “அறிவியலுக்கு எதிரான இந்த ‘உதிரி அறிவியலாளர்கள்’, அதிகார மையங்களுக்கு எதிராக உண்மை பேசுவதாக ஒரு சிறு கூட்டத்தால் கொண்டாடவும் படுகிறார்கள். பொதுவாகப் போலி அறிவியல், சதிக்கோட்பாடு அடிப்படையிலான வாதங்கள் எந்த முறைசார்ந்த தரவுகளையும் கொண்டிருப்பதில்லை. எந்த அறிவியல்பூர்வக் கருத்தும் ஒரு அறிவியலாளர் கூறுவதாலேயே உண்மையாகிவிடுவதில்லை. அந்தக் கருத்தைக் கூறும் அறிவியலாளர் எவ்வளவு மதிக்கத்தக்கவராக இருந்தாலும்கூட. ஆதாரங்களின் அடிப்படையிலேயே அறிவியல் கருத்துகள் மதிக்கப்படுகின்றன; யார் அதைச் சொல்கிறார் என்பது முக்கியமே இல்லை. அதற்கு நேர்முரணாக அறிவியல்பூர்வமாக ஏற்றுக்கொள்ளப்பட்ட உண்மைகளை, போலி அறிவியல் கணக்கில் கொள்வதில்லை. யார் அந்தக் கருத்தைச் சொல்கிறார் என்பதிலேயே கவனம் செலுத்தச் சொல்கிறது. ஒருவருடைய கல்வித் தகுதி, சமூகத்தில் பெற்றிருக்கும் மதிப்பு போன்றவற்றின் அடிப்படையில் அறிவியல் கருத்துகள் உருவாவதோ, அறிவியல் உண்மைகளாக மாறுவதோ இல்லை” என்கிறார் ஐரிஷ் அறிவியலாளரும் எழுத்தாளருமான டேவிட் ராபர்ட் கிரைம்ஸ்.

உண்மையும் அபிப்பிராயமும்

பெருந்தொற்று உலகை ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கும்போது, மனித குலத்தைக் காப்பதற்கு மக்கள் கூடுதல் அறிவியல் புரிதலைப் பெற்றிருக்க வேண்டியது அவசியம். அரசும் அறிவியலாளர்களும் அந்தப் புரிதலை அதிகரிப்பதற்கான வேலையைச் செய்துகொண்டிருக்கும்போது, போலி அறிவியல் இடையில் புகுந்து தேவையற்ற குழப்பத்தை ஏற்படுத்திக்கொண்டிருக்கிறது.

இதுபோல் போலி நிபுணர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதற்கு ஒரு செய்தியையோ தகவலையோ நாம் எப்படிப் பெறுகிறோம் என்பதும் முக்கியப் பங்களிக்கிறது. இன்றைய சமூக ஊடக உலகில் யார் வேண்டுமானாலும் ஊடகராகிவிட முடிகிறது. தகவல்களைச் சரிபார்க்கும், சர்ச்சைக்குரிய அல்லது தவறான தகவல்களை முளையிலேயே கிள்ளி எறியும் மரபார்ந்த ஊடக உலகத்தினர் விளிம்புக்குத் தள்ளப்பட்டுவிட்டார்கள். இந்தப் பின்னணியில் உண்மைத் தகவல்களுக்கும் ஒருவருடைய அபிப்பிராயத்துக்கும் இடையிலான வேறுபாட்டைக் கண்டறிவது சிக்கலாகிறது. இதன் காரணமாக, நாம் நம்ப விரும்பும் அல்லது மனச்சாய்வு கொள்ள விரும்பும் வாதங்களை நோக்கி நாம் அதிகம் ஈர்க்கப்படுகிறோம்; பிறகு, அவையே உண்மை என்று நம்ப முயல்கிறோம்.

ஆதாரங்களே அடிப்படை

முறைசார்ந்த ஆய்வு, அதன் மூலமாகக் கிடைக்கும் ஆதாரங்களே அறிவியலுக்கு அடிப்படை. எத்தனை கருதுகோள்களை வேண்டுமானாலும் முன்வைக்கலாம்; ஏற்கெனவே நிறுவப்பட்ட உண்மைகளை மறுக்கலாம்; அதற்கு எதிரான கருத்துகளையும் அறிவியலில் முன்வைக்கலாம். அந்தக் கருதுகோள்கள், புதிய கருத்துகளுக்கான ஆதாரங்களை முன்வைத்தவரோ, அவர் கூறியதை ஏற்றுக்கொள்பவர்களோ சமர்ப்பிக்க வேண்டும். அந்த வகையில், அறிவியல் உண்மைகள் என்று கூறப்படுபவை யார் வேண்டுமானாலும் பரிசோதித்துப் பார்க்கக்கூடியவையாக இருக்க வேண்டும். அந்த விசாரணையில் தோற்பவை எல்லாமே அறிவியல் உலகத்தில் கைவிடப்பட்டுவிடும்.

மருத்துவ-அறிவியல் வரலாற்றில் தவறாக வழிநடத்தப்படுதல், புகழ்பெற்ற அறிவியலாளர்களின் பெயர்கள் போன்றவற்றுக்கெல்லாம் எந்த மதிப்பும் இல்லை. இவ்வளவு காலமும் வலுவான ஆதாரங்களே அந்த வரலாற்றைக் கட்டமைத்துவந்துள்ளன. எதிர்காலமும் அப்படித்தான் இருக்கப் போகிறது. ஆதாரமற்ற எதுவும் அறிவியல் உலகில் நிலைப்பதோ நீடிப்பதோ சாத்தியமில்லை.

- ஆதி வள்ளியப்பன்,

தொடர்புக்கு: valliappan.k@hindutamil.co.inFake scienceதலைதூக்கும் போலி அறிவியல்கரோனா பெருந்தொற்றுபோலிச் செய்திதடுப்பூசி வதந்திகள்Vaccine rumorsFake news about corona

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x