Published : 26 Apr 2021 03:17 AM
Last Updated : 26 Apr 2021 03:17 AM

மருத்துவ ஆக்சிஜன் உற்பத்தி ஓரிடம், தேவை வேறிடம்

பெரிய மருத்துவமனைகள் தங்களிடம் மருத்துவ ஆக்சிஜன் தயாரிக்கும் அமைப்பு இல்லை என்றால், திரவமாகப்பட்ட ஆக்சிஜனை குளிரூட்டப்பட்ட பெரிய உருளைகளில் வாங்கி அல்லது வாயு நிலையில் சிலிண்டர்களை வாங்கி குழாய் மூலம் நோயாளியின் படுக்கைவரை எடுத்துச் செல்கின்றன. சிறிய மருத்துவமனைகள் சிலிண்டர்களை வாங்கி, வாயு நிலை ஆக்சிஜனை நோயாளியின் படுக்கைக்கு அருகே வைத்து ஆக்சிஜனை வழங்குகின்றன.

கரோனா பெருந் தொற்று காலத்தில் குழாய் வழியே ஆக்சிஜன் அளிக்கும் வசதி இருந்தாலும் நோயாளிகள் வந்து குவிவதால் பெரிய மருத்துவமனைகளில் சிலிண்டர் வைத்து ஆக்சிஜன் தர வேண்டி வருகிறது. எல்லா சிலிண்டர்களிலும் மருத்துவ ஆக்சிஜனை நிரப்பக் கூடாது. இதன் காரணமாக சிலிண்டர் தட்டுப்பாடு சில இடங்களில் ஏற்படுகிறது.

தேவை, உற்பத்தி, கையிருப்பு

சாதாரணமாக இந்தியாவில் நாளொன்றுக்கு சுமார் 700 டன் மருத்துவ ஆக்சிஜன் தேவை இருந்து வந்தது. கரோனா முதல் அலையின் உச்சகட்டத்தின்போது இது 2,800 என மும்மடங்கு உயர்ந்தது. ஏப்ரல் முதல் வாரத்தில் நாளொன்றுக்கு 3,842 மெட்ரிக் டன் ஆக இருந்த தேவை, கிடுகிடு என உயர்ந்து இரண்டாம் அலை கூடுதல் வேகத்தில் இருக்கும் இந்த நிலையில், சுமார் 6,600 மெட்ரிக் டன் ஆக்சிஜன் நாள்தோறும் மருத்துவமனைகளில் பயன்படுத்தப்படுகிறது. இன்னும் சில நாட்களில் இது 8,000 மெட்ரிக் டன் என்ற அளவில் உயரலாமென மதிப்பிடப்படுகிறது.

இந்தியாவில் ஒரு நாளில் 7,287 மெட்ரிக் டன் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய முடியும். இதில் சுமார் 15% முதல் 20% மட்டுமே மருத்துவ ஆக்சிஜன் தயாரிப்பு. மருந்துக் குமிழ் உற்பத்தி, பெட்ரோலிய உற்பத்தி, உணவு பதன தயாரிப்பு போன்ற அத்தியாவசிய தொழில் தேவைகளுக்கு சுமார் 2,000 மெட்ரிக் டன் ஆக்சிஜன் நாள்தோறும் தேவை என மதிப்பிடுகின்றனர். மேலும் ஏப்ரல் முதல் வாரத்தில் சுமார் 50,000 மெட்ரிக் டன் ஆக்சிஜன் சேமிப்பு இருந்தது. இவை அனைத்தும் மருத்துவ தர ஆக்சிஜன் இல்லை.

தொழிற்சாலைகளுக்கு தயார் ஆகும் ஆக்சிஜனை மேலும் சுத்தம் செய்து மருத்துவ தர ஆக்சிஜன் உற்பத்தி செய்கிறார்கள். ஒவ்வொரு டன் எஃகு தயரிக்க சுமார் இரண்டு டன் ஆக்சிஜன் தேவை. இன்று ஏற்பட்டிருக்கும் அவரச தேவையை சமாளிக்க எஃகு ஆலைகள் போன்ற தொழிற்சாலைகளில் அவர்களது தேவைக்காக ஏற்படுத்தப்பட்ட 28 ஆக்சிஜன் தொழிற்சாலைகளை மடைமாற்றி சுமார் 1,500 மெட்ரிக் டன் மருத்துவ ஆக்சிஜன் தயாரிக்கப்படுகிறது. மேலும் அவசர தேவையைப் பூர்த்தி செய்ய சுமார் 50,000 மெட்ரிக் டன் மருத்துவ ஆக்சிஜனை இறக்குமதி செய்ய மத்திய அரசு முடிவெடுத்துள்ளது.

கரோனா தொற்று ஏற்பட்ட பின்னர்மருத்துவ ஆக்சிஜன் விநியோகத்தை மார்ச் 2020 முதல் மத்திய அரசு தனதுகட்டுபாட்டுக்குள் வைத்துக்கொண்டுள்ளது. தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக துறை சார்ந்த அரசு செயலர் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டு ஒழுங்குபடுத்தப்படுகிறது.

உற்பத்தி ஓரிடம், தேவை வேறிடம்

மார்ச், ஏப்ரல் மாதங்களில் அதிக அளவு மருத்துவ ஆக்சிஜன் செலவு செய்த மாநிலங்கள் முறையே மகாராஷ்டிரா, குஜராத், மத்திய பிரதேசம், உத்தரப்பிரதேசம், கர்நாடகா, தமிழ்நாடு, டெல்லி, சத்தீஸ்கர், பஞ்சாப், ராஜஸ்தான் ஆகும். ஆனால் இந்தியாவில் தயார் ஆகும் மொத்த மருத்துவ ஆக்சிஜனில் சுமார் 80 சதவீதம் மகாராஷ்டிரா, குஜராத், ஜார்க்கண்ட், ஒடிசா, தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, மேற்கு வங்கம் ஆகிய 8 மாநிலங்களைச் சேர்ந்தது. கேரளா, தமிழ்நாடு, ஒடிசா ஆகிய மாநிலங்கள் தங்கள் தேவைக்கும் அதிகமாக மருத்துவ ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் திறன் கொண்ட மாநிலங்கள். எனவே, மருத்துவ ஆக்சிஜன் உள்ள இடங்களிலிருந்து தேவை அதிகரித்துள்ள இடங்களுக்கு எடுத்துச்செல்லவது சவாலாக உள்ளது.

திரவநிலையில் குளிருட்டப்பட்ட உருளைகள் அல்லது வாயு நிலையில் சிலிண்டர்களில் அடைத்து இந்த ஆக்சிஜனை மருத்துவமனைகள் அல்லது தொழிற்சாலைகளுக்கு எடுத்துச் செல்லவேண்டும். ஆக்சிஜன் எளிதில் தீப்பற்றி வெடிக்கும் தன்மை கொண்ட பொருள். எனவே ஆக்சிஜன் ஏற்றிச் செல்லும் லாரிகள் மிதமான வேகத்தில், பொதுவாக இரவில் மட்டுமே செல்ல வேண்டும் என்றெல்லாம் பாதுகாப்பு விதிகள் உள்ளன.

தமிழ்நாட்டில்…

மருத்துவ ஆக்சிஜனை பொறுத்தவரை தமிழ்நாடு தன்னிறைவு பெற்றுள்ளது. தமிழ்நாட்டில் நாள்தோறும் சுமார் 400 டன்மருத்துவ ஆக்சிஜன் தயார் செய்யப்படுகிறது. இப்போது நாள்தோறும் தேவை சுமார் 240 டன். மேலும் சுமார் 1,200 டன் ஆக்சிஜன் கையிருப்பில் உள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள நேஷனல் ஆக்சிஜன் லிமிடெட் போன்ற தனியார் நிறுவனங்கள் ஆக்சிஜன் தயாரிப்பில் ஈடுபட்டுவருகின்றன. மருத்துவ ஆக்சிஜன் தயாரிப்பில் இந்தியாவிலும் தமிழகத்திலும் முன்னிலையில் உள்ளது ஐனாக்ஸ் நிறுவனம் (INOX Air Products). இயல்பு நிலையில் இந்தியாவின் 60 சதவீத மருத்துவ ஆக்சிஜனை தயார் செய்வது இந்த நிறுவனமே. கரோனா தொற்றுக்கு பிறகு இந்த நிறுவனம் மருத்துவ ஆக்சிஜன் உற்பத்தித் திறனை அதிகரித்தது. 25 ஆலைகள் மூலம் நாள்தோறும் சுமார் 2,000 மெட்ரிக் டன் மருத்துவ ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் திறன் இந்நிறுவனத்திடம் உள்ளது. இந்த நிறுவனம்தான் தமிழகத்திலும் மருத்துவ ஆக்சிஜன் தயாரிப்பில் முக்கிய பங்கு வகிக்கிறது.

கட்டுரையாளர்: விஞ்ஞானி, விக்யான் பிரச்சார், அறிவியல் தொழில்நுட்பத் துறை, புதுடெல்லி
தொடர்புக்கு: tvv123@gmail.comவிஞ்ஞானி ஜோசப் பிரீஸ்ட்லிமருத்துவ ஆக்சிஜன் சிலிண்டர்கள்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x